தேர்தல் பிரச்சினையில் தமிழ் ஈழப் பிரச்சினையைப் பேசக் கூடாது என்கிறது கலைஞர் கருணாநிதியின் தி.மு.க. ஆட்சி. போரை நடத்தும் இத்தாலி சோனியாவை தலைமீது தூக்கி வைத்து ஆடுகிறது. போரை நிறுத்து என்று ஒரு வார்த்தைகூட கூற முன்வராத சோனியா உண்ணாவிரதம் இருந்த கலைஞர் கருணாநிதியைக்கூட மதித்து ஒரு வார்த்தை பேசவில்லை. இதே போல் 1956 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் நடந்த வரலாற்றை நினைவு கூர்கிறோம். அன்று தி.மு.க. அண்ணாவின் தலைமையில் கொள்கை அடையாளத்துடன் செயல்பட்ட காலம். அப்போது அண்ணா ‘திராவிட நாடு’ இதழில் ‘அந்தோ தமிழா’ எனும் தலைப்பில் எழுதிய கட்டுரை இது:
“எலெக்ஷன்! எலக்ஷன்!! என்று அலையும் அமைச்சர்களின் பார்வையிலாவது படாதா எனும் ஆசையுடன், இலங்கை வாழ் தமிழர்களின் இன்னல் குறித்து, நாடெங்கும் ஒட்டினோம், இது போன்ற சுவரொட்டிகளை. நம்பிக்கை வீண் போகவில்லையெனக் கண்டோம். நம்மையாளும் பாக்கியம் பெற்ற டி.டி.கிருஷ்ணாமாச்சாரியார், குடியாத்தம் சென்று கோலோச்சும் பெருமை குறித்துப் பேசிய நாளில், இது பற்றியும் பேசினாரெனக் கேட்டபோது, குருதி கொட்டிடும் கோரத்தை விளக்கி, அமைச்சர்களின் கவனத்தை இழுத்து, அல்லலுறும் தமிழினத்துக்கு ஆதரவு கிடைக்கச் செய்வோம் என்று நாம் எடுத்துக் கொண்ட இம் முயற்சியினை எள்ளி நகையாடினார் கிருஷ்ணர்! ‘என்னமோ, நாடக போஸ்டாராக்கும் என்று பார்த்தேன்’ என்றார்!!”.................................. “இதோ, தகவல் தருகிறார், இலங்கையை ஆளும் பண்டார நாயகா! இந்தியப் பிரதமர் நேரு கூறிவிட்டாராம், “தமிழையும், இலங்கை அரசாங்க மொழியாக்க வேண்டும் என்கிற இயக்கத்துக்கு எமது ஆதரவு கிடையாது” என்று. இருபது பேருக்கு மேல் செத்தனர் தமிழர்கள்! ஏராளமான சொத்துக்களுக்குச் சேதம்! எரிமலை மேலிருப்பது போலிருக்கிறது இலங்கை வாழ் தமிழர்தம் நிலை! எனினும், நேரு பண்டிதர் இவ்வண்ணம் அறிவித்து விட்டார். அவர், பிறகென்ன செய்ய முடியும்? இது, இலங்கையின் உள்நாட்டு விஷயம். அதில் போய், நேரு தலையிட முடியுமோ! என்று கேட்கலாம். தோழர்கள்.
இப்படிக் கேட்போருக்கு மதுரைத் ‘தமிழ்நாடு’ (நாளேடு), ஒரு எதிர் வினா எழுப்புகிறது. தென்னாப்பிரிக்காவில், ஐரோப்பியர்களுடைய நிற வேற்றுமைக் கொள்கையினால் பாதிக்கப்பட்டு வருந்தும் இந்தியர்களுடைய கோரிக்கைகளை இந்திய அரசாங்கம் ஆதரிக்கவில்லையா? அப்படியிருக்கும் போது, இலங்கையிலுள்ள தமிழர்களின் நேர்மையான உரிமைகளுக்கு ஏன் ஆதரவளிக்கக் கூடாது? சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் வாழ்கிறார்கள். மொழிக்கு அரசாங்கத்தில் மதிப்பு அளிக்க வேண்டுமெனக் கோரினார்கள். சிங்கை அரசு மறுக்கவில்லை. ஏற்றுக் கொண்டுவிட்டது. சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென ஒரு தனி இடம் அமைத்து, பேராசிரியராகப் பணியாற்றும்படி இங்குள்ள தமிழறிஞர் அரசங்கண்ணனாரையும் அழைத்துள்ளது, சிங்கை சர்க்கார். அதனால், இப்படி தமிழுக்கு ஒரு இடம் வேண்டும் என்று அயல்நாடு சென்று வாழும் தமிழர்கள் கேட்பது அநீதியல்ல! அதனை மறுக்க வேண்டும் என்பதும் அவசியமல்ல! ஆயினும், இலங்கை சர்க்கார், ஏதோ ஒரு துவேஷம் கொண்டு இப்படியெல்லாம் செய்கிறது. அதனை, ஏன் நேரு பண்டிதர், எடுத்துணர்த்தலாகாது? இஸ்ரேல் எப்படி அரபு நாடுகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று போதிக்கிறார். இந்தியர்களுக்குப் பாகிஸ்தானில் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது என்று கர்ச்சிக்கிறார், கடல் கடந்தும் இந்தி மொழி பரவ வேண்டுமென்பதில் ஆசை காட்டுகிறார். தகராறுள்ள இடங்களுக்குப் பறந்து சென்று ‘பாலம்’ போட கிருஷ்ணமேனன் (அன்றைய மத்திய அமைச்சர்) வேறு உள்ளார்! இவ்வளவு சக்தியைப் பெற்றுள்ள பண்டித நேருவுக்குப் பண்டார நாயகாவிடம் சம்மதம் பெற்றுத் தருவதா, கடினம்? ஒரு போதும் இல்லை!
இலங்கை மொழிப் பிரச்சினையில் மட்டுமல்ல, பர்மாவிலிருந்து பல தமிழர்கள் தமது சொத்து சுகத்தை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாகித் தத்தளிக்கிறார்களே, ஏதாவது கவனம் சென்றதுண்டோ? அப்படிப்பட்ட பர்மாவுக்குத்தான் கடன் கடனாக தருகிறார்! கடன்களை அடக்கத் துப்பாக்கியும், குண்டுகளும் அனுப்புகிறார்! நேருவுக்கு அலட்சியம் இருக்கிறது. அப்படி அலட்சியம் ஏற்படுவதும் விந்தையல்ல. ஏனெனில் அவர் நம்மவரல்ல!” - ‘திராவிட நாடு’ 12.8.1956
அன்று அண்ணா எழுதியது - இன்று அப்படியே பொருந்தி வருகிறது. வடநாட்டுக்காரர்கள் நம்மவரல்ல என்று - அன்று அண்ணா சொன்னார். இன்று கலைஞர் வடநாட்டுக்காரர்களை, இத்தாலிக்காரர்களை திருப்திப்படுத்த - அவர்களின் துரோகங்களுக்கு நடை பாவாடை விரித்து மரியாதை தருகிறார். சொக்கத் தங்கம் சோனியா என்று வர்ணிக்கிறார். சோனியாவை விமர்சித்தால் ஆள் தூக்கி சட்டத்தை ஏவுகிறார். இதுதான் அண்ணா கண்ட தி.மு.க.வா? கொள்கை உணர்வுள்ள தி.மு.க. தோழர்களே சிந்தியுங்கள்!
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்ணா கண்ட தி.மு.க.வும் இன்றைய தி.மு.க.வும்
- விவரங்கள்
- பெரியார் முழக்கம் செய்தியாளர்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009