வைகுந்தசாமி பக்தி இயக்கம்

 1809-ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் சாஸ்தா கோவில் விளையில் பிறந்த வைகுந்தசாமி வைணவக் குடும்பத்தில் பிறந்ததால் அவருக்கு முடிசூடும் பெருமாள் என்ற பெயர் சூட்டப்பட்டது. ஆனால் பெருமாள் என்ற பெயர் மேல் சாதி மக்களுக்குத்தான் இட வேண்டும் என்பதால் அவரது பெயர் முத்துக்குட்டி என்று மாற்றியிடப்பட்டது.

ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த முத்துக்குட்டி தேவாரம், திருவாசகம், வைணவப் பாசுரங்கள் அனைத்தையும் கற்றார். 22 வயது இளைஞராக இருந்தபோது அவருக்கு ஆன்மீகப் பண்புகளால் தன்னுடைய பெயரை ஸ்ரீவைகுந்தர் என மாற்றிக்கொண்டார். திருவிதாங்கூர் மன்னரின், மேல்சாதியினரின் ஆதிக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தைத் துவக்கினார்.

ஒடுக்கப்பட்ட மக்களை வாட்டி வரி வசூலிப்பதைக் கண்டித்தார். சுசீந்திரத்துக்கு வந்திருந்த வஞ்சி பலராமவர்ம மன்னரிடம் மேல்சாதி மக்கள் இவரைப் பற்றிப் புகார் செய்தார்கள். வைகுந்தசாமி நடத்தி வரும் சமபந்தி விருந்துகளைப் பற்றியும் அவர்கள் குறை கூறினார்கள். வைகுந்தசாமியைக் கைது செய்து திருவிதாங்கூர் அழைத்து வர மன்னர் ஆணையிட்டார். அவர் கைது செய்யப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டபோது மேல்சாதியினர் கூடி அவர் மீது அவதூறுகளைக் கூறி, கற்களை எறிந்தார்கள். எதையும் கண்டு அஞ்சாமல், கவலை இல்லாமல் இருந்த வைகுந்தசாமியை மன்னர் முன்னால் நிறுத்தினர். மன்னர் கேட்ட கேள்வி எதற்கும் வைகுந்தசாமி பதில் சொல்லவில்லை. திருவிதாங்கூர் பத்மநாப சுவாமி கோவில் பக்கத்தில் சிங்காரத் தோப்பு என்ற இடத்தில் அவர் சிறை வைக்கப்பட்டார். நாஞ்சில் நாட்டுப் பகுதியில் இருந்த அவருடைய பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திருவிதாங்கூரில் திரண்டனர்.

சிறையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானபோதிலும் அவர் கவலைப்படவில்லை. தமிழர்களின் கிளர்ச்சியைக் கண்டு பயந்த திருவிதாங்கூர் மன்னர். அவரை எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லும்படி உத்தரவிட்டார். ஆனால் அதற்கும் அவர் மறுத்துவிட்டார். இதன் பிறகு 1838-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாள் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அவரை மன்னர் விடுதலை செய்தார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் அவரைப் பல்லக்கில் தூக்கிக்கொண்டு சுவாமித் தோப்புக்குக் கொண்டுசென்றார்கள். அதன் பின் 12 ஆண்டுகள் வரை வாழ்ந்து 1851-ம் ஆண்டு அவர் காலமானார். அதுவரை மக்களுக்குப் பணி செய்தார். சமத்துவ நிலையம் என்ற பெயரில் ஒரு அமைப்பை நிறுவி சாதி மத வேறுபாடுகளுக்கு எதிராகக் கடும் பணியை மேற்கொண்டார். சமூக நீதிக் காவலராகவும் தன் பணியைச் செய்து வந்தார். இன்றும் அவரது வைகுந்தசாமி இயக்கம் திறம்பட பணி செய்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் ஊதியம் இல்லாமல் ஊழியம் செய்யும்படி வற்புறுத்தப்பட்டதையும் கண்டித்துப் போராடினார். திருவிதாங்கூர் மன்னரை நீசன் என்றும் வெள்ளை அதிகாரிகளை வெண்ணீசர்கள் என்றும் அவர் அழைத்தார்.

தமிழ்ப் பெண்களை மேலாடைகளை அணியவும், ஆண்களைத் தலையில் தலைப்பாகை அணிந்து கொள்ளும்படியும் அவர் வற்புறுத்தினார். அதுவரை சும்மாடு மட்டும் தரித்து வந்த தமிழர்கள் கம்பீரமாகத் தலைப்பாகை அணிந்துகொள்ளத் துவங்கினார்கள். அவர் சொந்த ஊரான சுவாமித் தோப்பில் முந்திரிக்கிணறு என்ற பெயரில் ஒரு சமுதாயக் கிணறு வெட்டினார். ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி கிணறுகள் இருந்த காலகட்டத்தில் பொதுக் கிணறுகளை வெட்டுவிக்கும் பழக்கத்தை அவர் துவக்கினார். இதனால் இந்து நாடார்கள் என்றும் கிறித்துவ நாடார்கள் என்றும் பிரிந்து கிடந்த தமிழர்கள் ஒன்றுபட்டு மலையாளிகளுக்கு எதிராகப் போராடினார்கள். வைகுந்தசாமி இயக்கம் ஆன்மீக இயக்கமாக மட்டும் இருக்கவில்லை. மாறாக, சாதிக் கொடுமைகளுக்கு எதிரான இயக்கமாகவும் மலையாள ஆதிக்கத்துக்கு எதிரான இயக்கமாகவும் விளங்கியது. நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள், மலையாள ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட வைகுந்தசாமி இயக்கம் வழிகாட்டியாகத் திகழ்ந்தது.

‘துவையல் பந்தி’ என்பது ‘சம பந்தி’ எனப்படும் வேற்றுமை இல்லாமல் 700 குடும்பத்தார் வழிபாட்டு முறை சீர் செய்தனர். கணவன் இறந்தால் மனைவி தாலியைக் கழற்றக் கூடாது எனப் பலவற்றை நடைமுறைப் படுத்தினார். ‘அகிலத்திரட்டு அம்மானை’ என்ற இலக்கியம் வைகுண்டசாமி வழிபாட்டின் ஆவணமாகத் திகழ்கிறது. இந்த வழிபாட்டின் அடையாளம் நாமம்தான். பொட்டு இடுவது இல்லை.

செல்லவடிவு அடிகளார் காலத்தில் வழிபாடுகளை ஒழுங்கு செய்தார். அகஸ்தீஸ்வரத்தில், ஒரு கிறிஸ்தவ சான்றோர் ‘சான்றோர் குலச் சந்திரிகை’ என்ற நூல் வெளியிட உறுதுணையாக இருந்துள்ளார். குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணை கட்ட திருவிதாங்கூர் ராஜாவிடம் செல்லவடிவு அடிகளார் கோரினார். 1948-இல் பிறந்த மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் வைகுண்டசாமியின் ஆறாவது வம்ச குருவாகத் தமிழ் உணர்வோடு ஆன்மீகத்தில் ஈடுபடுகிறார். பாலபிரஜாபதி அடிகளார் அவர்கள் மண்டக்காடு மத மோதல் என்ற கொடிய, தமிழகம் தவித்த நிகழ்வுகளில் குன்றக்குடி அடிகளாரோடு இணைந்து ஆற்றிய அமைதிப் பணிகள் இன்றும் நினைவில் உள்ளது. எளிய வாழ்க்கை மக்கள் நலம், தனது நிலைப்பாட்டில் உறுதி என்ற நிலையில் தமிழக அரசும் கௌரவித்தது.

மதனபள்ளியில், தாகூர் ‘ஷன கண மன’வை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த நிகழ்வுகள்.

நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர் 1911-இல் வங்க மொழியில் எழுதிய நாட்டுப் பண் (தேசிய கீதம்-) ஆங்கிலத்தில் சென்னை ராஜதானியில் இருந்த மதனபள்ளியில் 1919இல் மொழியாக்கம் செய்தார். மதனபள்ளி மலைகள் சூழ்ந்த, நல்ல ரம்மியமான இயற்கை அமைப்பையும் சற்று வறட்சியும் கொண்ட இடமாகும். இவ்வூரில் அன்னி பெசன்ட், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் 1915-இல் பிரம்மஞான சபையின் கல்லூரியைத் துவக்கினர். இக்கல்லூரியின் வேந்தராக தாகூர் நியமிக்கப்பட்டார்.

1919-இல் தாகூர் தென் இந்திய சுற்றுப்பயணம் வந்தபோது சற்று உடல்நிலை பாதிப்பால் ஒரு வார காலம் மதனப்பள்ளி கல்லூரி வளாகத்தில் தங்கினார். 28.02.1919 அன்று மாலை கல்லூரி முதல்வர் ஜேம்ஸ் எச்.கவுசன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தடியில் தாகூர் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து முதல்வர் கவுசன், மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது வங்க மொழியில் இருந்த நாட்டுப் பண் ஆங்கிலத்தில் வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியபோது தாகூர் நாட்டுப் பண்ணை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அதை இனிமையாக வடித்தார். அப்போது முதல்வர் கவுசன் நிச்சயம் இந்த முயற்சிக்கு வரவேற்பும், வரலாற்றில் முக்கிய இடமும் கிடைக்கும் என்று கூறினார். இந்தச் சங்கதிகள் யாவும் மதனப்பள்ளி பிரம்மஞான கல்லூரியின் 75-ஆம் ஆண்டு நிறைவு விழா மலரில் இடம்பெற்றுள்ளது.

இதன் நினைவாக தாகூர் தனது இலக்கியப் படைப்புகளுக்கு, ஜப்பான் பதிப்பகம் வழங்கிய தொகையை மதனப்பள்ளி அருகேயுள்ள இப்பிலி என்ற கிராமத்திலுள்ள வீடுகளற்ற ஏழைகளுக்கு அப்படியே வழங்கினார். மதனபள்ளியில் கி.ரா. அவர்கள் 1950-இல் 3 மாதம் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். கோவில்பட்டி அருகேயுள்ள குருமலை போன்று இதமான மலைக் காற்று போன்ற சூழல் மதனப்பள்ளியில் உள்ளது. இந்த மதனப்பள்ளி ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் தர்மாபுரம் செல்லும் இரயில் பாதையில் உள்ளது.

(ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா - டில்லி பதிப்பு, 16 ஆகஸ்ட் 2006)

கோக், பெப்சிக்குத் தடை

கோககோலா, பெப்சி போன்ற 11 வகை குளிர்பானங்களில் நச்சுப் பொருள்கள் கலந்துள்ளன என்றும் அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டது. நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து பேசப்பட்டது. கர்நாடகம், கேரளா மாநிலங்களில் இதற்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. 24%-க்கு மேல் பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளதால் இதை அருந்துவது ஆபத்தானது என்று மத்திய சுகாதார அறிவியல் ஆய்வு மையத்தின் அறிக்கை கூறுகின்றது.

பள்ளி, கல்லூரி, திரை அரங்குகளில் இம்மாதிரி பானங்கள் அதிகமாக விற்கப்படுகின்றன. குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், இராஜஸ்தான் அரசுகள் கல்வி நிலையங்களில் இதை விற்பதற்குத் தடை செய்தன. கோககோலா, கேரள பிளாச்சிமடாவிலிருந்து விரட்டப்பட்டு, ஆதியில், நாகரிகத் தொட்டிலாகத் திகழ்ந்த பொருநை ஆற்றை - சத்தான நீரைக் கபளீகரம் செய்து, கங்கை கொண்டானில் கோககோலா உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. குடிநீருக்கு மக்கள் அவதிப்படும்பொழுது அயல்நாட்டு நிறுவனத்திற்குப் பொருநை நீரைக் காசுக்குத் தாரை வார்ப்பது கண்டனத்துக்குரியது.

தாமிரபரணியிலிருந்து 45 இலட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சிக்கொள்ள, சிப்காட்டிற்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அதில் தினசரி 9 லட்சம் லிட்டர் தண்ணீர் கோக் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு சிப்காட் உடன்பாடு செய்துள்ளது. இது தவிர, நிலத்தடி நீர் எதையும் எடுக்கக் கூடாது என்ற நிபந்தனையும் உள்ளது. (ஆனால் பிரிவு 10-ன் உட்பிரிவுகள், தேவைப்பட்டால் அனுமதி பெற்று போர்வெல் அமைக்க அனுமதிக்கிறது.)

கோக் நிறுவனத்தின் கழிவு ஆபத்தானது என்பது பிளாச்சிமடாவில் நிரூபிக்கப்பட்டது. குடிநீர் சீர்கெட்டுப்போய், அந்தப் பகுதிக்கு கோக் நிறுவனமே பல கி.மீ. தொலைவிலிருந்து குடிநீரைக் கொண்டுவந்து சப்ளை செய்தது. சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் வெறும் 15 நாட்கள் மாதிரி ஓட்டம் நடத்தியது கோக் நிறுவனம். அப்போது அங்கு வெளியான கழிவு நீர், அருகிலிருந்த குட்டையில் கலக்க, அங்கு நீர் அருந்திய சுமார் 40 ஆடுகள், இரு மாடுகள் இறந்துபோய்விட்டன. அந்தப் பகுதி மக்கள் வெகுண்டு எழுந்ததையடுத்து அங்கு நிறுவனம் மூடப்பட்டுவிட்டது.

கோக், கங்கைகொண்டானில் வந்து வீம்பு செய்கிறது. கங்கைகொண்டானில் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே ஏராளமான ஏக்கர் காலியிடம் இருந்தும், ஒதுக்குப்புறமாக 3 கி.மீ. தள்ளி ஆள் அரவமற்ற பகுதியில் இடத்தைப் பெற்றுள்ளது. மிகவும் கொடிய நாற்றமுள்ள கழிவுகள் அங்கு உருவாகின்றது.

கோகோகோலா மற்றும் பெப்ஸி ஆகியவற்றின் வருட விற்பனை 24 பாட்டில்கள் கொண்ட 50 கோடி பெட்டிகள் என்று தெரிகிறது. அதாவது 1,200 கோடி பாட்டில்கள். வருட வியாபாரம் 7,000 கோடி ரூபாய். இதில் கோகோ கோலாவின் பங்கு 60 சதவிகிதம்; பெப்ஸியின் பங்கு 40 சதவிகிதம்.

கோககோலா நமது உரிமையான தாமிரபரணித் தண்ணீரை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு நமக்கே விற்கிறது என்றால் இந்த வேதனையை எங்கு சொல்வது? பொருநை நதி ஒன்றுதான் தமிழகத்தில் (பொதிகையில்) உற்பத்தி ஆகி தமிழகத்தில் (புன்னக்காயல்) கலக்கிறது. நமது கலாச்சாரத்தின் அடையாளமான நதி நீர் நமது கண்முன் பறிபோகிறது. இதற்கு தொடர் போராட்டங்கள் தொடர்கின்றன. ஆனால், செவிடன் காதில் சங்கு ஊதிய கதை. என்ன செய்ய?

தாமரபரணி மேதஸ்ய முகதாசாரம் மகோததோ
_ காளிதாசர், ரகுவம்சம்
தண் பொருநைப் புனல் நாடு - சேக்கிழார்
பொன் திணிந்த புனல் பொருநைத் திருநதி - கம்பர்
குளிர்நீர்ப் பொருநை சுழி பலவாய் - சடகோபர் அந்தாதி

என்று பல இலக்கியங்களில் போற்றப்பட்ட தென்பாண்டி நாட்டின் செல்வி, பொன் நிறத்துப் புனல் பெருகும் பொருநை, 150 கி.மீட்டர் வரை ஓடும் பொருநைக்கு இன்று ஆபத்து. பாரதி பாடிய பொருநை, வான்மீகி குறிப்பிட்ட பொருநை என்ற மகாநதி, வீரத்தின் பிறப்பிடமான செம்பு சத்து கொண்ட பொருநை என்று பாராட்டினார் கல்கி என்ற பெருமை கொண்ட பொருநையைப் பாதுகாக்கச் சம்பந்தப்பட்டவர்களுக்கு மனது வரவில்லை என்பதுதான் நமது வருத்தம். நமது ஆழ்ந்த சிந்தனை.

மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து இறக்கப்பட்ட இந்தக் குளிர்பானங்களில் நமது மக்களுக்கு ஏன் இந்த மோகம் என்பதும் புரியவில்லை.

நமது சீதனங்களான பதநீர், இளநீர், நுங்கு, பானக்காரம், கூழ் போன்ற பானங்கள், நீர் ஆகாரங்கள் உடம்புக்குத் தெம்பையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்போது, நச்சு கலந்த - உடம்பை அழிக்கும் பானங்கள் நமக்கு அவசியம்தானா?

நெல்லைச் சீமையின் தேரி காடுகளில் உள்ள பனைத் தொழில் பாதிக்கப்படுகின்றது. அதே மண்ணில் இன்னொரு புறத்தில் பன்னாட்டு நிறுவனத்தின் கோககோலா நிறுவனம் உயரமான கட்டிடங்கள் கட்டி நம்மை அழிக்க வளர்கின்றது. இதைக் கவனிக்கும்பொழுது கவிராஜன் பாரதியின் சில கவிதைகளில் ஏற்படும் கோப ஜுவாலைகள் நமக்கும் ஏற்படுகின்றது.

ஈழத் தமிழ் அகதிகளின் முகாம்

ஈழத்தில் போர்; யாழ்ப்பாணத்திலிருந்து தமிழர்கள் பாதுகாப்புக்காகக் காடுகளை நோக்கிச் செல்கின்றனர். கிளிநொச்சி அருகேயுள்ள செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தின் மீது இலங்கை இராணுவம் குண்டு மழை பொழிந்து 70 பச்சிளங் குழந்தைகள் மடிந்துள்ளனர். சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக சற்றும் இரக்கமற்ற முறையில் கொடுமையாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதையும் இலங்கை அரசு நியாயப்படுத்துகின்ற அலங்கோலத்தை உலகம் பார்க்கின்றது.

ஈழத்தில் போர் முனையில் தமிழ்ச் சகோதர - சகோதரிகள் தாய்நாடான தமிழகத்திற்குத் தஞ்சம் என வருகின்றனர். அவர்கள் தங்குகின்ற முகாம்கள் மிகவும் மோசமான முறையில் உள்ளன. ஆனால் தாளவாடியில் உள்ள திபெத்து அகதிகள் முகாமில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஈழ அகதிகள் முகாம்களைவிடப் பன்மடங்கு திருப்திகரமாக திபெத்து அகதிகளுக்கு அடிப்படை வசதிகள், உணவுகள் வழங்கப்படுகின்றன. ஏன் இந்த பாரபட்சம்? திபெத்து அகதிகளைக் காட்டிலும் ஈழத் தமிழ்ச் சகோதரர்கள் நமது தொப்புள்கொடி உறவு உள்ளவர்கள். இந்தியாவை விசுவாசமாக தமிழ் ஈழ மக்கள் நேசிக்கின்றனர். ஆனால் தமிழனின் குரல் நாதியற்ற நிலையில்தான் உள்ளது.

ஈழத் தமிழர் 103 முகாம்களில் கிட்டத்தட்ட 75,000 உடமைகளை இழந்த ஈழத் தமிழ் அகதிகளாக இங்கே உள்ளனர். திபெத் அகதிகள் முகாம் கர்நாடகம் சாம்ராஜ் மாவட்டத்தில் உள்ளது.

பண உதவி: 15 நாள்களுக்கு ஒருமுறை ஈழத் தமிழர் குடும்பத் தலைவர் ரூ. 72/- பெண்ணுக்கு ரூ. 50/- உறுப்பினருக்கு ரூ. 45/- குழந்தைக்கு ரூ. 1250 வழங்கப்படுகிறது. ஆனால் திபெத் அகதிகளின் குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு மொத்தமாக ரூ.5,000/- வழங்கப்படுகிறது.

இருப்பிட வசதி: ஈழ அகதிகளுக்கு மருத்துவ வசதி. கல்வி வசதி, தொலைபேசி வசதி, மின் வசதி, குடிநீர் வசதி, இருப்பிட வசதிகள் யாவும் மிகவும் மோசமாக உள்ளன. ஆனால், திபெத் அகதிகளுக்குத் தனியாக வீடு கட்டிக்கொள்ள வசதி மற்றும் 5 மருத்துவர்கள், 15 செவிலியர்களுடன் கூடிய தரமான மருத்துவமனைகள்.

கல்வி வசதி: திபெத் அகதிகளுக்குப் புத்தமதக் கலாச்சாரத்துடன் கூடிய வாழ்க்கை முறை. உயர்ந்த சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்துடன் கூடிய கல்வி வசதிகள், சிறந்த பள்ளிகள், தொழிற்கல்வியில் கல்லூரிகளில் படிக்க உதவிகள் எனப் பல சலுகைகள். ஆனால் ஈழத் தமிழ் அகதிகளின் குழந்தைகள் பள்ளிகளில் சேர உரிய அனுமதி வழங்குவது இல்லை.

திபெத் அகதிகளுக்கு விவசாய நிலங்கள், தொழில் செய்ய வசதி, வங்கி வசதிகள், செல்போன், தொலைபேசி வசதிகள் என சலுகைகள் கைமேல் கிடைக்கின்றது.

ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் பிரச்சினையில் மட்டும் ஏன் இந்த நிலைப்பாடு என்று தெரியவில்லை.

வெள்ளித்திரை நாயகி பத்மினி:

நடிகைக்கு இலக்கணமான நாட்டியப் பேரொளி பத்மினி திரைவானில் ஜொலித்த திரைதாரகை. அவர் இன்று நம்மிடையே இல்லை. அவரின் நடனத் திறன், விழிகளினுடைய பேச்சு, அபிநய அணுகுமுறை போன்ற கொடைகள் சாகாவரம் பெற்றவை.

படித்தவரில் இருந்து பாமரர் வரை அனைவரையும் நடிப்பால் ஈர்த்த அவரின் கலைப்பணி இன்றும் நம் நினைவில்நிற்கிறது. திருவாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்பட்ட சகோதரிகள் லலிதா, ராகினி, பத்மினி ஆவர்.

பத்மினி திருவனந்தபுரம் அருகில் உள்ள பூஜாபுரத்தில் 1932ம் ஆண்டு ஜுன் 12ம் தேதி பிறந்தார். பரதம் கற்று 1941ல் சென்னைக்கு வந்து தன்னுடைய அரங்கேற்றத்தை நடத்தினார். “டான்சர் ஆப் இந்தியா” என்ற குழுவில் இடம்பெற்றார். தனது 17வது வயதில் கல்பனா என்ற இந்தி திரைப்படம் மூலமாகத் தன் வரவை திரை உலகத்தில் பதிவு செய்தார்.

1951ல் வெளியான ஏழை படும் பாடு என்ற தமிழ் படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின் மணமகள், தூக்குத்தூக்கி, புதையல், உத்தமபுத்திரன், இரு மலர்கள் போன்ற படங்களில் நடித்தார். பணம் என்ற படத்தில் சிவாஜி கணேசனோடு இணைந்து நடித்தார். 1956ல் வெளியான அமரதீபம், 1959ல் வெளியான வீரபாண்டிய கட்டபொம்மன் 1970ல் வெளியான பெண் தெய்வம், 1970ல் வெளியான வியட்நாம் வீடு போன்ற அரிய திரைப்படங்கள் நாட்டியப் பேரொளியின் நடிப்பாற்றலை உலகுக்குப் பறைசாற்றின. சிவாஜி - பத்மினி ஜோடி மக்களால் வரவேற்கப்பட்டது. 59 படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்தனர். அதே போல எம்.ஜி.ஆருடன் மதுரை வீரன், மன்னாதி மன்னன், என்று 13 படங்களில் நடித்தார். ஜெமினி கணேசனுடன் சித்தியில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பூவே பூச்சூடவா என்ற படத்திலும் நடித்து தமிழக ரசிகப் பெருமக்களை மகிழச் செய்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 250 படங்களில் நடித்துள்ளார். 1957ம் ஆண்டில் மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் விழாவில் பங்கேற்று விருதைப் பெற்றார். அன்றைய சோவியத் அரசு இவருடைய தபால் தலையை வெளியிட்டது. 1958ல் தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார். பண்டித ஜவஹர்லால் நேருவின் பாராட்டுதல்களையும் பெற்றார்.

கொத்தமங்கலம் சுப்புவின், தில்லானா மோகனாம்பாள் என்ற பாத்திரத்திற்கு பத்மினி தன் நடிப்பாற்றலால் உயிர் கொடுத்தார். அதேபோன்று வை.மு. கோதைநாயகியின் படைப்பு பத்மினியின் சித்தி என்ற உருவத்தில் இன்றைக்கும் பேசப்படுகிறது.

வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினியும், வைஜெயந்தி மாலாவும் ஆடும் “சாதுர்யம் பேசாதடி என் சலங்கைக்குப் பதில் சொல்லடி” என்ற போட்டா போட்டி நாட்டியம் இன்றும் பலரின் நினைவுகளில் இருக்கின்றது.

பத்மினி இந்திப் பட உலகிலும் கொடிகட்டிப் பறந்தார். 1970ல் வெளியான மேரா நாம் ஜோக்கர் போன்ற படங்கள் இந்தி ரசிகர்களையும் கவர்ந்தன.

இவ்வளவு கலைச் சிகரங்களைத் தொட்ட பத்மினி அவர்கள் டாக்டர் கே. டி. ராமச்சந்திரனை 1961ல் கரம் தொட்டு அமெரிக்கா சென்று நியூஜெர்சியில் நடனப் பள்ளியை நடத்தினார். அவருடைய புதல்வர் பிரேம் ஆனந்த்தோடு அங்கு வாழ்ந்துவிட்டு இறுதிக் காலத்தில் சென்னை மண்ணில் வாழ வேண்டும் என்று வந்தவரை இயற்கை தன் பக்கம் அழைத்துக் கொண்டது. பத்மினியின் புகழ் வாழ அவர் குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது இன்றைய கலை உலகப் பிரமுகர்களுக்கு உதவியாக இருக்கும்.

அவருடைய ஓய்வில்லாத நிகழ்ச்சிகளும், உணவுக் கட்டுப்பாடு இல்லாமையும் பத்மினியைத் தமிழ் மண்ணிலிருந்து இயற்கை பிரித்துவிட்டது.

 அமைதியாக துயரச் சுமைகளைச் சுமந்த நாயகி ஸ்ரீவித்யா

எழுபதுகளில் திரைப்படத் துறையில் நுழைந்து தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்துச் சென்றுள்ளார் ஸ்ரீவித்யா. தனது சொந்த வாழ்க்கையைச் சோகங்கள் பல கவ்வினாலும் திரையில் சோபித்தார்.

ஒவ்வொரு பாத்திரத்திலும் மிடுக்கோடும் அந்தப் பாத்திரத்தின் குணத்தோடு ஒட்டி தத்ரூபமாக நடித்து திரைப்பட ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார்.

தமிழகத்தில் இசையில் தடம் பதித்த எம்.எல். வசந்தகுமாரியின் புதல்வி என்ற நிலையில், பாட்டிலும், பரதத்திலும் திறமை பெற்றவராக விளங்கினார். அறிவு, அழகு, திறமை, புகழ், வசதி என இருந்தும் துயரத்தை அமைதியாக சுமந்தவர்தான் ஸ்ரீவித்யா. சம்பள விஷயங்களில் திரைத்துறையிலும், சின்னத்துறையிலும் மற்றவர்களைப் போல கறார் காட்டமாட்டார். 200 தமிழ்ப் படங்களிலும், 400 மலையாளப் படங்களிலும் நடித்தவர். கேள்வியின் நாயகனே என்ற திரையிசைப் பாடலில் ‘பயணத்தை நடத்திவிடு’ என்ற வரிக்கேற்றவாறு துயரத்தை சுமந்துகொண்டு தன்னுடைய அமைதியான வாழ்கையை இளமையிலேயே சுமந்து பயணத்தை நடத்திவிட்டார். ஏழு சுரங்களுக்குள் எத்தனை ராகம் என்றும், அபூர்வ ராகங்கள் போட்ட முடிச்சைப் போன்று அவருடைய கவலைகளும், பிரச்னைகளும் ரகசியமாகவே நெஞ்சுக்குள் மூடி வைத்துக் கொண்டார். இயற்கைத் தாயினுடைய கருணையில்லாமல் அவர் இவ்வுலகைவிட்டு சென்றாலும், சொல்லத்தான் நினைக்கிறேன், அபூர்வ ராகங்கள் என்ற பல திரைப்படங்கள் மூலம் இன்றும் அவர் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆன்மீகத்தில் பற்று இருந்தாலும், தமிழ் இலக்கியங்கள் மீது அவருக்கு பார்வை உண்டு என்பதை நான் அறிந்தவன்.

சந்திக்கும்போது சார், அரசியல் எப்படி இருக்குது? எனக்கு அரசியலைப் பற்றி தெரியாது. உங்க தலைவர் வைகோ போல நல்லவர்கள் நாட்டுக்குத் தேவை என்பார். பிரபல சிவில் வழக்கறிஞர் பிச்சை அவர்கள் ஸ்ரீவித்யாவினுடைய வழக்குகளை நடத்தினார்.

மலையாள பூமியில் பிறந்த நடிகை பத்மினி தமிழ் மண்ணில் மறைந்தார். தமிழ் மண்ணில் பிறந்த நடிகை ஸ்ரீவித்யா மலையாள பூமியில் மறைந்தார். இவ்வளவு திறமை வாய்ந்த இருபெரும் நடிகைகளுக்கும் தமிழக அரசின் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்படவில்லை என்பது சோகத்திலும் சோகம். ஆனால் நாட்டியப் பேரொளி பத்மினிக்கு கேரள அரசு இரங்கல் கூட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டன் பாலசிங்கம்

ஆண்டன் பாலசிங்கம் 1983 ஆகஸ்டில் சென்னைக்கு வந்தபோது அவரை அழைத்துக்கொண்டு நியூ உட்லண்ட் ஹோட்டலில் தங்க செல்லும்போது முதலில் பேபி சுப்ரமணியத்துடன் சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர் ஏற்கனவே இரண்டு முறை தமிழகம் வந்துள்ளார் எனவும் அச்சமயம் சொன்னார். அவருடைய துணைவியார் அடேல் பாலசிங்கமும் உடன் வந்தார். அப்பொழுதே அவர் இன்சுலின் போடுவது வாடிக்கையாக இருந்தது. அங்கு சில நாட்கள் இருந்துவிட்டு சாந்தோமில் ஒரு பிளாட்டில் குடியேறினார். அப்போது பேபி சுப்ரமணியம் என்னுடைய இருப்பிடத்தில் 39 சாலைத் தெரு, மயிலாப்பூரில் தங்குவார். அவர் மட்டுமல்லாமல் ஈழவேந்தன், மாவை சேனாதிராஜா (இருவரும் இன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள்), செல்லக்கிளி, நேசன், ரகு போன்ற பலரும் இங்கு தங்கியிருந்தது பசுமை நினைவுகளாகும்.

அந்த எண். 39, சாலைத் தெரு, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்தபோதுதான், பாண்டிபஜாரில், கீதா கபே முன், முகுந்தனுக்கும், அவருக்கும் நடந்த பிரச்னையில் இருவருமே கைது செய்யப்பட்டனர். அப்பொழுது போலீஸ் துறையில் மோகன்தாஸ் பொறுப்பில் இருந்தபோது நான் தங்கியிருந்த அந்த வீட்டில் சோதனை நடத்தி பிரபாகரன் பொருட்களையும், என்னுடைய பொருட்களையும் போலீசார் கொண்டுசென்றனர். வழக்குக் கட்டுகளையும் தூக்கிச் சென்றுவிட்டனர். அதைப் பெறுவதற்கு அன்றைய உள்துறைச் செயலாளராக இருந்த டி.வி. வெங்கட்ராமனைச் சந்திக்கவே தினமும் கோட்டைக்கு சென்று போராட வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அப்போது காமராஜர், இந்திராகாந்தி, கவிஞர் கண்ணதாசன், தேவராஜ் அர்ஸ், பழ. நெடுமாறன் என்ற பல தலைவர்களுடன் எடுத்த அரிய புகைப்படங்களும் கைக்கு வராமலே போனது என் வாழ்க்கையில் நான் தொலைத்த பொக்கிஷங்களாகும்.

அது இன்றும் என் மனதை வருத்திக் கொண்டிருக்கிறது. அந்த சாலைத் தெரு வீடு, நெடுமாறன் அவர்கள் நான் தங்க வசதி செய்து தந்தார். அதேபோல அடுத்த தெருவான சுந்தரேஸ்வரர் தெருவில் தங்கியிருந்த பழ. நெடுமாறன் வீட்டிலும் எப்போதும் விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் இருப்பார்கள்.

திரு. பழ. நெடுமாறனின் சுந்தரேஸ்வரர் தெரு உள்ள இல்லத்திற்கு வரும்போது பாலசிங்கம் மயிலாப்பூர் ராயர் கபே இட்லியை விரும்பி சாப்பிடுவது உண்டு. எப்போதும் பேபி சுப்ரமணியம் உடனிருப்பார். அதன்பின் பெசன்ட் நகர் வேளாங்கன்னி தேவாலயம் அருகே ஒரு வீட்டில் குடியேறும்பொழுதுதான் அந்த வீட்டின்மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டு அந்த வீடு சேதாரம் ஏற்பட்டபோது சற்றும் அதைப்பற்றி கவலைப்படாமல் கலகலப்பாக நகைச்சுவை ததும்ப கிண்டல் செய்தபடி எங்களோடு பேசினார். திம்பு பேச்சுவார்த்தைக்கு சென்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அளப்பரிய போராட்டத்திற்கு ஒரு உந்துசக்தியாக திகழ்ந்தவர். ஆயுதம் தாங்கிய இயக்கத்திற்கு அரசியல் போராளியாக விளங்கினார். மார்க்சிய தத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர். உலக தத்துவங்கள் அனைத்தையும் விரல் நுனியில் வைத்துக்கொண்டவர். யாழ்ப்பாணத்தில் பிறந்து, கொழும்பு நகரில் ஒரு நாளிதழில் பணியாற்றி, பின் பிரிட்டனில் இலங்கை தூதரகத்தின் மொழிபெயர்ப்பாளராகப் பணியில் சேர்ந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். தமிழீழத்தின் கொள்கைகளைப் பன்னாட்டு அளவில் கொண்டுசென்றவர். விடுதலைப் புலி இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு உடன்பிறவா அண்ணனாக விளங்கினார். மனித உரிமைகள், சர்வதேச சட்டங்களை நன்கு அறிந்தவர்.

அவர் சென்னையில் இருந்தபோது ‘புதுயுகம் பிறக்கிறது’ என்ற இதழை நடத்தினார். பல பத்திரிகையாளர்களும், படைப்பாளிகளும் அவருக்கு நண்பர்களாயினர். அனிதா பிரதாப், விகடன் ராவ், படைப்பாளிகள் தமிழினி வசந்தகுமார், பஷீர் போன்ற பல படைப்பாளிகள் அவர் சென்னையில் இருக்கும்போது நண்பர்களாயினர். 1984ல் கவிஞர் மீராவின் அன்னம் வெளியிட்ட கி.ரா.வின் கரிசல் கதைகள் என்ற நூலினை அவரிடம் நான் வழங்கிய அடுத்த நாளே அதைப்பற்றி சிறப்பாக சிலாகித்தார். அடேல் பாலசிங்கம், தமிழகத்தில் இருந்தபோது பெண் புலிகளைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் எழுதி வெளியிட்டார்.

ஒரு சமயம் என்னிடம் ஆர்.கே., வைகோ, நெடுமாறன் போன்ற தலைவர்களுடைய ஆதரவு எங்களுக்கு இருந்தாலே போதும். எங்களுடைய ஈழப் பயணத்தில் வெற்றிபெறுவோம் என்று சொன்ன வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ரீங்காரமிடுகின்றன. என்னை அன்பாக ஆர்.கே. என்றுதான் அவர் அழைப்பார்.

மும்பை டப்பாவாலாக்கள்:

காந்தி குல்லாவுடன் மும்பையில் டப்பாவாலாக்கள் மும்பை பரபரப்பில் தவிர்க்க முடியாத முக்கிய மனிதர்கள் ஆவார்கள். அலுவலகத்தில் பணியாற்றும் மும்பை மக்களுக்கு உணவு வழங்கும் அட்சய பாத்திரங்களாக திகழ்கின்றனர் இந்த டப்பாவாலாக்கள். இவர்கள் 70,000 பேர் பணியில் உள்ளனர். மாதம் ஒன்றுக்கு வீட்டிலிருந்து சம்பந்தப்பட்டவர் பணியாற்றும் தூரம் எவ்வளவு என கணக்கிட்டு ரூ. 300லிருந்து ரூ. 500 வரை ஊதியத் தொகையாகப் பெறுகின்றனர். சரியாக காலை 10.00 மணியளவில் உணவுப் பாத்திரத்தைப் பெற்றுக்கொண்டு, மதியம் 1.00 மணிக்கு சம்பந்தப்பட்டவர்க்கு தாமதம் இல்லாமலும், பாத்திரங்களை மாறாமலும் ஒப்படைத்து விடுவார்கள். இதில் 3 பகுதியாக பணியைப் பிரித்துள்ளனர்; அவை முதல் டீம் வீடுகளில் இருந்து உணவுப் பாத்திரங்கள் பெறுவது, இரண்டாவது டீம் பெருநகர் ரயில்வே மூலம் எடுத்துச் செல்வது, மூன்றாவது டீம் குறிப்பிட்ட அப்பகுதியின் பொறுப்பாளர் பெற்று அதை விநியோகம் செய்வது.

டப்பாவாலாக்கள் இதுவரை வேலைநிறுத்தம் செய்யவில்லை. டப்பா வாலாக்கள் சுறுசுறுப்பு, காலதாமதம் இல்லாமல் பணியாற்றுவது, சேவை அர்ப்பணிப்பு என்ற பெருங்குணங் கொண்ட இவர்கள் பாராட்டப்பட வேண்டும். நூற்றாண்டுகளாக இப்பணி தொடர்கிறது.

முதல் இந்திப் போர் நெல்லை மண்ணில்!

முதல் இந்திப் போர் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டம் திருச்செந்தூர் குலசேகரன்பட்டணம் அருகேயுள்ள செட்டிகுளம் செ. தெய்வநாயகம் 3.6.1938இல் ஆதிக்க இந்தியை எதிர்த்து குரல் எழுப்பி போராட்டத்தில் பங்கேற்ற முதல் சர்வாதிகாரி. ஒரு மாத காலம் சிறைத் தண்டனையும், ரூ. 300 அபராதமும் விதிக்கப்பட்டது. அதன் பின்னும் சாத்தான்குளம் வி. ஞானமுத்து, தூத்துக்குடி ஏ.எம்.எஸ். அண்ணாமலை, எம். வைகுண்டம், பி.வி. பொன்னுசாமி பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இராஷராஷன் காலத்தில் பொருள் மதிப்பும், பண்டமாற்று முறையும்:

சோழர் ஆட்சி காலத்தில் இராஜராஜ மன்னன் காலத்தில் பண்டமாற்றம் முறை இருந்தது; அதன் அளவு, மதிப்பு தெரிய வந்துள்ளது.

அவை:

1 நாழி பருப்பு = 3 நாழி நெல்
1 ஆழாக்கு மிளகு = 4 நாழி நெல்
1 நாழி நெய் = 1 துணி நெல்
1 நாழி தயிர் = 2 அரை நாழி நெல்
1 வாழைப்பழம் = 1/2 நாழி நெல்
1 நாழி எண்ணெய் = 1 துணி நெல்
1 பலம் மஞ்சள் = 2 நாழி நெல்
1 காசு = 8 கலம் நெல்
1 காசு = 60 பலம் சந்தனம்

இப்படி அளவுகள் வைத்து பொருட்கள் விற்கப்பட்டன.

எப்படி கோவை தென்னகத்தின் மான்செஸ்டரானது?

கோவை விடுதலை வீரர், காங்கிரஸ் பிரமுகர் சே.ப. நரசிம்மலு நாயுடு கல்கத்தா மாநாடு சென்றுவிட்டு கோவை, திரும்பியவுடன் கல்கத்தா போன்று கோவை தொழில் நகரமாக வேண்டும் என்று திருவேங்கடசாமி முதலியாருடன் முயற்சிகள் மேற்கொண்டார். கோவையில் விளையும் பருத்தியைக் கொண்டு தைரியமாகப் பலர் தடுத்தும் நூற்பாலைகளை 6 இலட்ச ரூபாய்க்கு தொடங்கினார். இதுகுறித்து பேசி சௌகார் சதாசிவ முதலியார் வீட்டு மாடியில் முடிவு செய்யப்பட்டது. நரசிம்மலு நாயுடு, திருவேங்கடசாமி முதலியார் ஆகியோர் செயலாளர்களாகப் பொறுப்பு ஏற்று முதலில் 10,000 பங்குகளுக்கு கையப்பமிட்டனர். பின் சென்னை சென்று மாதவராவ், ரகுநாதராயர், பாஷியம் அய்யங்காரைச் சந்தித்து அவர்களிடம் பங்குக்கு நிகராக ரூ. 50,000 பெற்று இங்கிலாந்து சென்று இயந்திரங்களை வாங்கி வந்தார்.

இந்த முயற்சியில் ஸ்டேன்ஸ் என்பவர் ஈடுபட விரும்பினார். காலப்போக்கில் ஆங்கிலேயரின் தூண்டுதல், சுயநல சக்திகள் ஆதிக்கத்தில் இரவும் பகலும் உழைத்த நரசிம்மலுவை ஓரங்கட்டினர். இருப்பினும், பொறுமையாக நூற்பாலை வேலை செய்ய ஆரம்பிக்கும்வரை அனைத்துப் பணிகளையும் செய்தார். பின் தன்னுடைய சுயமரியாதைக்கு பங்கம் வராதவாறு வேதனையுடன் வெளியேறினார். நரசிம்மலு நாயுடு முயற்சியில் முதலில் 1200 தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்தது. நரசிம்மலு நாயுடு நன்றி அற்ற முறையில் அவரோடு இணைந்தவர்களுக்குச் செய்தது அறிந்து தொழிலாளர்கள் வேதனை அடைந்தனர். இதுதான் கோவையில் துவங்கப்பட்ட முதல் நூற்பாலையின் வரலாறு.

நாயுடு வெளிவந்தது அறிந்து சில செட்டிநாட்டு பிரமுகர்கள் அவரைச் சந்தித்து காளேஸ்வரா நூற்பாலையைத் துவங்கினர். இது இரண்டாவது நூற்பாலை. இந்த நூற்பாலையும் பலருக்கு வேலையைத் தந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் சு.ப.கோ. நாராயணசாமி

சு.ப.கோ. என்று அன்புடன் அழைக்கப்படும் சுப.கோ. நாராயணசாமி ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் உள்ள நாச்சியார்பட்டி கிராமத்தில் பிறந்தவர். பழம்பெரும் எழுத்தாளர்கள் கு. அழகிரிசாமி, சி.சு. செல்லப்பா, லா.ச.ரா., தி. ஜானகிராமன், வல்லிக்கண்ணன், கி. ராஜநாராயணன், ந. சிதம்பர-சுப்பிரமணியன், தீபம் நா. பார்த்தசாரதி, அகிலன், தி.க.சி., தீப. நடராஜன், தனுஷ்கோடி இராமசாமி, சுந்தரராமசாமி ஆகியோரிடம் நல்ல நட்பும் தொடர்போடு பழகினார். சிறுகதை எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர். கர்நாடக இசையில் ஆர்வமும், திருவையாறு தியாகராஜர் இசை விழாவில் ஆண்டுதோறும் கலந்து கொள்வார். எம்.ஏ., பி.எட்., பட்டம் பெற்று ஆசிரியர் பணியிலும் இருந்தார். நா. பார்த்தசாரதி, கு. அழகிரிசாமி, கி.ரா., ஜெயகாந்தன் ஆகியோரோடு நெருங்கிய நட்பு பாராட்டியவர். தீபம், திராவிட நாடு, சர்வோதயம், தினமணி, விகடன் போன்ற இதழ்களில் இவரின் படைப்புகள் இடம்பெற்றன. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பென்டிங்டன் நூல்நிலையம் சிறப்பாக நடைபெற இவர் உதவியாக இருந்தார். கி.ரா. மற்றும் என்னிடமிருந்து கிட்டத்தட்ட ஆயிரம் நூல்கள் வரை அந்த நூல் நிலையத்திற்கு வாங்கிச் சென்று அளித்தார். கதை சொல்லிக்கு ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், கதை சொல்லி சிறக்கவும் அரிய பணிகள் ஆற்றினார். என்றென்றும் நினைவில் இருப்பார்.