திருவிழாக்களுக்கு பல முகங்கள் உண்டு. பல்வேறு கலப்பட மனித கூட்டத்தையும் வாடையையும் புதிய இணக்கத்தையும் பகையையும் ஏமாற்றத்தையும் வலியையும் விதைத்துவிட்டு சென்றுவிடும். தேடித்தேடி செல்வதில்லை என்றாலும் வில்லியனூரில் இருந்தபோது அங்கு திருவிழா நடந்தால் தோழிகளுடன் சென்றதுண்டு. மகிழ்ச்சியுடன் ஆரம்பித்து சோகத்தில் முடியும் ஒரே திருவிழா என்பதால் போக வேண்டும் என நினைத்திருந்தேன். ஒவ்வொரு சித்திரைமாதமும் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவுக்குப் போவது தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. தனியே செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, பலத்தடங்கலுக்குப் பின் செல்வக்குமாரியின் முனைவர் ஆய்வுக்காக கூவாகம் புனிதப் பயணம்(?!) செய்யும் பெரும்பேறு கிட்டியது. இந்த பாவபுண்ணியத்திற்கு செல்வக்குமாரிக்கும் சரிபங்குண்டு. காரில் போகலாமா பஸ்ஸில் போகலாமா, இரண்டுபேர் மட்டும் போகக்கூடாது, வேறுசில நண்பர்களை அழைக்கலாமா இப்படியான குழப்பங்களுக்கு மத்தியில் தாமதமாகி 5.30க்கு பேருந்து பிடித்து விழுப்புரம் போய் இரவு 7.00 மணிக்கு சேர்ந்தோம்.

நாங்கள் பயணம் செய்த பேருந்திலேயே புதுவை ‘சகோதரன்’ அமைப்பைச் சேர்ந்த ஐந்து அரவானிகளும் அவர்களுடன் இரண்டு ஆண்களும் வந்திருந்தனர். அங்கேயே தமிழ்க் கலாச்சார நாடகம் அரங்கேறத் தொடங் கியது. ஐந்தாறு கல்லூரி மாணவர்கள் அரவானிகளை கேலிசெய்தபடி வந்தனர். நான் கடைசி இருக்கையில் இருந்தேன். கூட்ட நெரிசலில் சிரிப்பொலி மாத்திரம் அவர்களிடமிருந்து வந்துகொண்டி யிருந்தது. செல்வக்குமாரி அரவானிகளுடன் அமர்ந்திருந்தார், அம்மாணவர்களிடம் பேசவும் அவர்களின் சீண்டல் குறைந்தது. தான் எழுதியுள்ள ஆய்வுக்கான குறிப்பைக் கொடுத்து படிக்க வைத்தார். பிறகு சத்தத்தைக் காணோம். விழுப்புரம் பழைய பேருந்து நிறுத்தத்தில் அவர்களும் மாணவர்களும் இறங்கிக் கொண்டனர். மாறி மாறி பறக்கும் முத்தங்களைக் கொடுத்துக் கொண்டனர். அதில் ஒருவன் பணத்தை அள்ளிகொடுக்க ஒருத்தி கட்டிபிடித்து முத்தம் தந்தாள். அவன் புதுவையில் ஏறியதிலிருந்தே தனது இளித்தவாயை மூடாமல் வந்தான்.

விழுப்புரம் பேருந்து நிறுத்தத்தில் ‘கூவாகம் பஸ் எங்க நிக்கும்’ என்று கேட்டதற்கு எல்லோரும் எங்களை வேற்றுக் கிரகவாசிகளைப் போல் பார்த்தனர். பின்னிருக்கையில் இருந்த அரவானிகளிடமிருந்து கைகொட்டலும் பாட்டொலியும் அந்த இறுக்கத்திலும் புழுக்கத்திலும் களைகட்டியது. பாட்டப் பாடு என்று ஆண்கள் அவர்களை வளைத்துக்கொண்டு கத்திக் கொண்டிருந்தனர். பணத்த கொடு பாடறேன் என்றனர். மீண்டும் பாடத் தொடங்கினர். புளி பானை மாதிரி அடைத்துகொண்டு 8.30 மணிக்கு கூவாகம் சேர்ந்தது. கூத்தாண்டவர் கோயில் திருவிழா அதன் சடங்குகள் பற்றி பொதுவாக எல்லோரும் அறித்த ஒன்றுதான். தமிழ் சமுக ஒழுக்கத்தைப் பற்றியும் புனித குடும்ப உறவைப்பற்றியும் வெளி உலகில் மார்த்தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் ஒருபுறம் அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரத்தை அத்திருவிழாவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வயது வித்தியாசமின்றி நம் குடும்பத்து ஆண்கள் எதிர்படும் அரவானிகளை, பெண்களை சீண்டிக்கொண்டும் பொதுவாக முலைகளை பிடித்திழுக்க, ஆபாச வக்கிர வெறிப்பிடித்த மிருகமென அலைந்தனர். அரவானிகள் தங்கள் விருப்பமின்றி தொடமுயலும் ஆண்களை ஆபாசமாகத்திட்டி ரகளை செய்தனர். நம் குடும்பத்து ஆண்கள் சிலர் அவர்களிடம் உதைவாங்கிக் கொண்டும் ஓட்டமெடுத்தனர். பேரம் படிந்த நம் குடும்ப ஆண்கள் புதுமாப்பிளைப்போல் கொஞ்சிக்கொண்டு அரவானிகளை அணைத்தபடி திரிந்தனர். கோயிலைச் சுற்றியுள்ள வயல் இருளில் ஜோடி ஜோடியாக பதுங்கினர். வசதி படைத்தோர் தங்கள் கார்களில் ஏற்றிக்கொண்டு மறைந்தனர்.

எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் திரையிலும் துண்டுபிரசுரமுமமாக ஆங்காங்கே வினியோகிக்கப்பட்டன. தமிழகம், புதுவையைச் சேர்ந்த மனித உரிமை கழகம் மற்றும் சில தன்னார்வத் தொண்டுநிறுவனம் சேர்ந்து நடத்திய அரங்கில் இலவச ஆணுறை வழங்கப்பட்டது. ஒரு மர ஆண்குறி மாதிரியை வைத்து ஆணுறைகளை பயன்படுத்தும் செயல்முறை விளக்கமும் கொடுக்கப்பட்டது. பால்வினை நோய்குறித்த வண்ணப்படங்களின் மூலம் பாலுறுப்புகளில் ஏற்படும் நோய்குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பதினைந்து வயது சிறுவனிலிருந்து ஐம்பதைத்தாண்டிய ஆண்கள்வரை குழுக்குழுவாக வந்து ஆணுறைகளை வாங்கிச் சென்றனர். பெங்களுர் சங்கமத்தை சேர்த்தவர்களுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு தாலிகட்டும் நிகழ்ச்சியையும் அரவான் முன் நிகழ்ந்த கும்மிக்கொட்டும் ஆட்டத்தையும் பார்த்துவிட்டு ஆஷா பாரதியுடன் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். “சிறுவயதிலேயே குடும்பத்தைவிட்டு துரத்தப்படுவதால் இவர்களுக்கு கல்வியறிவும் தொழிலறிவும் கிடைக்காமல் போகிறது.

படிப்பறிவும் சமூக அங்கீகாரம் அற்ற எங்கள் சமூகத்தினர் 90% பேர் பாலியல் தொழிலையே நம்பி வாழவேண்டியுள்ளது. இவர்களுக்கும் தங்களை இதிலிருந்து விடுத்துகொள்ள போதிய விழிப்புணர்வு இல்லை” எனக் குறிப்பிட்டார். “பத்து மணிக்குமேல் இங்கு தங்க முடியாது. இங்க நடக்கற அநியாயத்தை இதுக்குமேல பாக்க முடியாது” என எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார். இவர்களை இப்படியே இந்நிலையிலேயே வைத்திருப்பதுதான் ஆண்களுக்காக சமூகம் வழங்கியுள்ள சலுகை. வீட்டில் மனைவி என்ற பாலியல் அடிமை. திரும்பிய பக்கமெல்லாம் பணத்தை வீசியெறிந்து அவர்களின் வக்கிரத்தைத் தீர்த்துக்கொள்ள பாலியல் தொழிலாளிகளை உருவாக்கி வைத்துக்கொள்வதுடன், கூடுதலாக அரவானி சமூகத்தையும் ஆண்களின் பாலியல் வக்கிரத்துக்கு பலியாக்கிக் கொண்டிருக்கிறது நமது சமூகம். இந்தச் சமூகம் ஆண்களுக்கு கட்டுத்தளையற்ற பாலியல் சந்தையை திறந்து வைத்துக்கொண்டு பெண்களின் கற்பைப் பற்றி மூச்சுமுட்ட பேசுவதன் போலித்தனம் சகிக்க முடியவில்லை.

இரவு பத்துமணியளவிலேயே நிற்க இடமில்லாமல் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் நீர்த்தேடி நாடுவிட்டு நாடு செல்லும் பெரும்திரளான மிருகங்களைகாட்டி மிரட்சியூட்டுவார்கள். அதுபோல பத்துமணிக்கு மேல் ஆண்கள் மந்தைமந்தையாய் தள்ளிக்கொண்டும் முட்டி மோதிக்கொண்டும் வரத்தொடங்கினர். நாங்கள் பதினொரு மணியளவில் அங்கிருந்து கிளம்பினோம். பேருந்து நிற்குமிடத்துக்கு வருவதற்குள் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலால் அடித்துக்கொண்டுதான் வர முடிந்தது. போதையில் அடியைவாங்கிக்கொண்டு மிரண்டு விலகினர். வயதுவித்தியாமின்றி எல்லோரும் போதையிலிருந்தனர். மனித உரிமை கழகத்தைச் சேர்ந்த நண்பர்கள் பேருந்துவரை வந்து வழியனுப்பி உதவினர். பேருந்து முக்கி முனகி நகர்ந்து அரை பர்லாங்கிலேயே இரண்டுமணிநேரம் நின்றுவிட்டது. அவரவர்களுக்கு வசதிபட்ட வாகனங்களில் இரவு ஒருமணிவரை கூட்டம் வந்துக் கொண்டேயிருந்தது. ஒரு மணிக்குப் பிறகு தான் எதிர்வரும் கூட்டம் சற்று குறைந்தது. அதன்பிறகு எல்லாப்பேருந்துகளும் நகர்ந்தன.

திருவிழாவுக்கு வருகிறவர்களை வரவேற்க பா.ம.கட்சியும் விடுதலை சிறுத்தை கட்சியினரும் வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர். அழகிப் போட்டிக்கு பரிசளிக்க வந்த ‘பெண்ணே நீ’ ஆசிரியர் கவிதாவை வரவேற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு லட்சம் பேர் இத்திருவிழாவுக்கு வந்திருப்பர். நூற்றுக்கும் குறைவான காவலர்களே பாதுகாப்புப்பணியில் இருந்தனர். இதில் நேர்த்திக்கடன் செய்யக் குடும்பத்துடன் குழந்தைகளுடன் வந்தவர்களும் உண்டு. சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் ஆண்களுக்கும் எளிதாக உடலுறவு கிடைக்கும் சந்தையாகவும், சிறுவர்கள் ஆண்களின் வரைமுறையற்ற வக்கிரத்தையும் அத்துமீறலையும் பார்த்து பழகிக்கொள்ளும் சமூக செயல்முறை பயிற்சிப் பட்டறையாகவும் இத்திருவிழா இருந்தது. குடும்பத்தினருடன் வந்த குழந்தைகள் இந்த காட்சிகளை எப்படி எதிர்க்கொண்டு எதிர்காலத்தில் என்ன முன்மாதிரியுடன் ஆரோக்கியமாக வளரமுடியும். ஆனால் பள்ளிகளில் முறைப்படி பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த மதவாதிகளும் அரசியல்வாதிகளும் விடுவதில்லை.

ஏனெனில் குழந்தைகளும் பெண்களும் பாலியல் விழிப்புணர்வு அடைந்தால் ஆண்களின் வக்கிரத்துக்கு பலியாவதும் பாலியல் சுரண்டலுக்குள்ளாவதும் சில சதவீதம் குறைந்து போய்விடுமல்லவா? இந்த கூட்டத்தில் சமூகத்தின் அனைத்து வகுப்பினரும் இருந்ததில், தேசிய ஒருமைப்பட்டையும் சமூக இடஒதுக்கீடு பிரதிநிதித்துவத்தையும் காணமுடிந்தது. ஆண்களின் கற்பைப் பற்றி எந்த அரசியல்வாதிகளுக்கும் குடும்ப பெண்களுக்கும் சந்தேகமோ கேள்வியோ கிடையாது. இவர்கள் குடும்பத்துக்குள் கொண்டுவருவது பால்வினைநோய் மட்டுமில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நமது பண்பாட்டு முழக்கத்தை மட்டுமில்லை. ஆணாதிக்க வக்கிரசீழ்பிடித்த இந்த கலாச்சாரத்தை முளைப்பாரி மாதிரி காலங்காலமாக பெண்கள் தலையில் சுமக்கவைக்கும் திறமையையும்தான். இப்படிப்பட்ட ஆண்களை ஏற்றுக்கொண்டு சகித்துவாழும் பெண்களின் அடிமை மனோவியலை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.

Pin It