இந்திய நாடாளுமன்றத்தின் அவை கொந்தளிக்கிறது. சசிதரூர் பதவி விலக வேண்டும் என்று மாநிலங்களவையும் சேர்ந்து குரல் எழுப்புகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராக சசிதரூர் ஏதும் செய்துவிட்டாரா? என்று நாம் நினைக்கலாம். இல்லையெனில், வாழும் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் ஆதிவாசி மக்களுக்கு ஆதரவாக, சிதம்பரத்திற்கு எதிராக குரல் கொடுத்தாரா? இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிராக நடந்து கொண்டாரா? பயங்கரவாத ஆற்றலோடு உறவு கொண்டாரா? என்றெல்லாம் நாம் யோசித்தோமென்றால் நாம் இன்னும் இந்திய அரசியலிலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறோம் என்றுதான் அர்த்தமாகும். சசிதரூரை பதவி விலகச் சொல்லி, ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் ஓங்கி குரல் எழுப்ப காரணம், அவர் ஐபிஎல் என்று சொல்லப்படும் வட்டார மட்டைப்பந்து விளையாட்டில் கொச்சி அணியை ஏலமெடுத்ததில் தமது தோழிக்கு துணை புரிந்து, ரூபாய் 70 கோடிக்கு இலவசமாக பங்குகளை வழங்க வேண்டுமென இந்த போட்டியை நடத்தும் நிறுவனத்தின் தலைவர் லலித் மோடிக்கு நெருக்கடி கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு.

இந்த குற்றத்திற்காகத்தான் லலித் மோடியை பதவியை விட்டு விலகச் சொல்லி எதிர்கட்சிகள் பெரும் எழுச்சியோடு களத்தில் இருக்கின்றன. இந்தியாவின் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, கல்வியின்மை, பசி, சுகாதாரமற்ற வாழ்வு என்பவைகளைத் தாண்டி, சசிதரூரின் பிரச்சனை முன்னுக்கு வந்திருக்கிறது. நாடாளுமன்ற அவை கூடும்போது விலைவாசி உயர்வுக்கு எதிராக வெட்டுத்தீர்மானம் வரும் என்றெல்லாம் ஊடகங்களில் செய்திகள் ஊதி பெரிதாகி வரும்போது, அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி சசிதரூரின் பிரச்சனை முன்னுக்கு வந்துவிட்டது. சில நாட்களுக்கு முன் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் சசிதரூரை மிரட்டியதாக வந்த செய்தியும், சசிதரூருக்கு அளிக்கப்பட்ட கூடுதலான பாதுகாப்பும் நாம் வாசித்து அறிந்தவை தான். மேலோட்டமாக பார்த்தோம் என்றால், சசிதரூர் மட்டும்தான் இந்த பிரச்சனையில் தெரிவார்.

ஆனால் உள்ளுக்குள் ஆராய்ந்தோம் என்றால் இதில் எத்தனை பெரும் அரசியல் தலைவர்கள் அடங்கி இருக்கிறார்கள் என்பது வெளிப்படலாம். ஏன் இந்த அளவிற்கு இது இவ்வளவு பெரிய பிரச்சனையாக வந்தது என்று நாம் சிந்தித்தோம் என்றால், விளையாட்டு என்பது விளையாட்டு என்ற நிலையைத் தாண்டி, அது முழுக்க முழுக்க வணிகமாக்கப்பட்டு, கோடிகளில் நிர்ணயிக்கப்படும் கேடு நிறைந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. ஆகவே இப்போது அந்த விளையாட்டு நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்கப்பட்டு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, இந்தியாவின் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வரும் அளவிற்கு முன்னணி பெற்றிருக்கின்றன. ஒரு காலத்திலே அமெரிக்கா வீதிகளில் கருப்பின மக்களை மேடைகளில் ஏற்றி, அவர்களின் உடல் திறனை ஆய்வு செய்து, தலையை தட்டிப் பார்த்து, பல்லை பிடித்துப் பார்த்து, கையை முறுக்கிப் பார்த்து இவன் நல்ல அடிமையாக நமது பண்ணையில் பணியாற்றுவான் என்று முடிவு செய்து அந்த கருப்பின அடிமையை ஏலத்தில் எடுப்பார்களே! அப்படிப்பட்ட அவலத்தின் வரலாறு கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் வாழ்விலே திரும்பி இருக்கிறது.

அடிமைகளை ஏலம்விட்டது அந்த காலம். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் போவது இந்தக்காலம். இதில் பெரும் கொடுமை என்னதென்றால் அடிமைகளையாவது ஆள் பார்த்து இவன்தான் என் அடிமை எனச் சொல்லித்தான் ஏலத்தில் எடுப்பார்கள். ஆனால் இங்கே எந்த அடிமை ஏலத்தில் எடுக்கப்படுகிறார் என்பது அந்த அடிமைக்கே தெரியாது. ஊடகங்கள் சொல்லும் இவர் எதிர்பார்த்ததை விட கூடுதலான விலைக்கு ஏலம் போனார். அது அவருக்கே தெரியாது என. இந்த கூடுதலான விலைப்போன நிகழ்வை பாராட்டி, பக்கம் பக்கமாய் செய்திகள் வரும். அதற்கு பல்லிலித்துக் கொண்டு வீரரும் காட்டி தருவார். இப்படி ஒரு விளையாட்டின் மீது அப்பட்டமான வணிக முத்திரை குத்தப்பட்டு, அது விளையாட்டு என்ற நிலையை கடந்து, லாபம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

எப்போது லாபம் என்கின்ற நிலை உயர்கிறதோ, அப்போதே தவறுகள் அங்கே வளரத் தொடங்கிவிடும். இப்படி சந்தை படுத்தும் போக்கு, விளையாட்டைச் சார்ந்து நிற்கும் அனைவரையும் பெரும் வியப்புக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது. கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு மானமும், மரியாதையும் குறைந்து, பணமும் வருமானமும்தான் அவர்களின் வாழ்வாக மாறிப்போனது. கிரிக்கெட் வீரர்கள் அணியும் உடையிலிருந்து விளையாடும் மட்டை வரை ஒரு நிறுவனத்தின் சந்தைக்கு விளம்பரமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில்தான் அதையெல்லாம் தாண்டி இன்று ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்களுக்கான தொகை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் ஐந்து நாட்கள், ஒரு நாள் என முழுக்க முழுக்க மன உளைச்சலோடு, சலிப்போடு பார்த்துக் கொண்டிருந்த இந்த விளையாட்டு, மனச்சோர்வையும் சோம்பேறித் தனத்தையும் உண்டாக்கியது.

ஆனால் மிக்க் குறைந்த நேரத்தில் திறன் கொண்ட ஆற்றலை வெளிப்படுத்தும் குழுத் தன்மையை மேம்படுத்தும் விளையாட்டான கால்பந்து, கபடி, ஹாக்கி போன்ற விளையாட்டுக்கள் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, கிரிக்கெட் முன்னிலைப்படுத்தப்பட்ட காலத்தை நாம் கணித்தோமென்றால் அது அன்றையிலிருந்து மிகப்பெரிய வர்த்தக தன்மையை உள்ளடக்கியதாகவே இருப்பதை நம்மால் கண்டுணர முடியும். வெறும் 11 வேலைக்காரர்களை வைத்துக் கொண்டு கோடிக் கோடியாய் பணம்புரட்டல் மாபெரும் நிறுவன சந்தை இந்த விளையாட்டில் நிலைத்திருப்பதைக் கண்டால் வியப்பாகத்தான் இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்களை வைத்துக் கொண்டு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் செய்ய முடியாத பண உற்பத்தியை வெறும் 11 ஊழியர்களால் உண்டாக்க முடிகிறது என்றால் இதன் உள்ளடக்கத்தை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த பிரீமியர் லீக் என்று சொல்லக்கூடிய போட்டியை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் துவங்கும்போது, கிரிக்கெட்டை வட்டார விளையாட்டாக மேம்படுத்தப்போவதாக அறிவித்தது.

ஆனால் அவை ரஞ்சிக் கோப்பை போட்டியைத் தவிர, வேறு எந்த போட்டியையும் இதுவரை நடத்தியதாக நாம் அறியவில்லை. அப்படி ரஞ்சிக்கோப்பை விளையாட்டிலும்கூட, குடிசைப்பகுதிகளிலும் மற்றும் ஒதுக்குப்புறத்திலும் வசிக்கும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இளைஞர்களில் எத்தனைபேர் இதில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று நாம் எண்ணிப் பார்த்தோம் என்றால், இந்த விளையாட்டைக் குறித்து நமக்குள் எழும் கேள்விக்கு விடைகாணாமல் போய்விடும். இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தியா முழுக்க கிரிக்கெட் விளையாட்டை நடத்தி, அதை பரவலாக்க போவதாக அறிவித்து, இந்தியன் பிரீமியர் லீக் என்ற பெயரில் போட்டிகள் நடத்தி, நாடு முழுக்க பெரும் விளையாட்டு ரசணையை உண்டாக்கப்போவதாக அறிவித்தார்கள். அதற்கு அவர்கள் செய்த முதல் தொண்டு மாநில வாரியாக போட்டியார்களை ஏலத்தில் விட்டதுதான்.

இந்த அணியை வாங்கியவர்கள் ஏதோ காசிமேட்டில் வசிக்கும் அந்தோணி குருசோ, அல்லது அரக்கோணத்தில் வசிக்கும் ஆறுமுகமோ இல்லை. மாறாக, சென்னை அணியை இந்திய சிமெண்ட் நிறுவனமும், பெங்களூர் அணியை சாராய ஆலை முதலாளி விஜயமல்லைய்யாவும், டெல்லி அணியை நிலத்தரகர்களான ஜி.எம்.ஆர்.ரியல் எஸ்டேட் கம்பெனியும், கொல்கத்தா அணியை ஹாக்கியை முன்னிலைப்படுத்தி, கோடிக் கணக்கில் பயனடைந்த நடிகர் ஷாருக்கானும், மும்பை அணியை முகேஷ் அம்பானியும், ஐதராபாத் அணியை டெக்கன் கிரானிக்கல் பத்திரிக்கையும், மொஹாலி அணியை ஜவுளி அதிபர் வாடியாவும், ஜெய்பூர் அணியை கிரிக்கெட்டை சந்தையாக வைத்து நடத்தும் காட்பிரோ சிகரெட் கம்பெனியின் அதிபரும் ஏலத்தில் எடுத்தார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் கொச்சி அணி பிரச்சனையில் சசிதரூர் சிக்கி தவிக்கிறார்.

இந்த மோசடியான சந்தையில், புரளும் தொகை சற்றேறக்குறைய எட்டாயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இது அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது? இது யாருடைய பணம்? முழுக்க முழுக்க நம்முடைய பையிலிருந்து கொள்ளையடிக்கப்படும் பணம்தான். இந்த கேடுகெட்ட விளையாட்டை நாம் தொலைக்காட்சியில் உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கும்போது இடைஇடையே வரும் சந்தை விளம்பரத்தில் கிடைக்கும் பணம்தான் இவர்களின் ஏகபோக வாழ்விற்கு உறுதுணை புரிகிறது. இவர்கள் வட்டார விளையாட்டாக கிரிக்கெட்டை உயர்த்தப்போவதாக அறிவித்தார்கள். சென்னை அணியில் விளையாட இவர்கள் தேர்வு செய்தது, சென்னையில் உள்ள குடிசை பகுதியில் வாழும் இளைஞர்களில் யாரோ ஒருவரை அல்ல. அல்லது தெருவோரங்களில் எப்போதுமே கையில் மட்டையுடன் அடித்து ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்களில் யாரோ ஒருவரை அல்ல.

இந்த அணியின் தலைவர் மகேந்திரசிங் தோணி. அணியில் விளையாடும் வீரர்கள் ஜோஹிந்தர் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஜேக்கப் ஓராம் போன்ற சென்னையிலே குடிசை பகுதியில் பிறந்து வளர்ந்த அப்பாவி ஏழை பிள்ளைகள் தான் சென்னை அணியின் வீரர்கள்?  நிலை இப்படி இருக்க,  இதில் நமது வீட்டு பிள்ளைகளின் பங்கு என்ன என்பதை இந்த நேரத்தில் நாம் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். இவர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாட்டுவதற்கு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா வீரர்களை ஏலம் எடுக்கிறார்கள். ஒருவேளை இந்திய விளையாட்டு வீரர்கள் சோரம்போகும் நிலை ஏற்படுமாயின், இந்திய அணிக்கு பாகிஸ்தான் வீரர்களையோ, இலங்கை வீரர்களையோ ஏலத்தில் எடுத்து விளையாட வைத்தாலும், வியப்பதற்கு இல்லை. இப்படி கோடிக் கணக்கில் பணம் புரளும் குதிரையின்மேல் பணம் கட்டுவதைப்போல, நடைபெறும் இந்த கேவலப்போக்கை மாற்றப்போவது யார் என்று தெரியவில்லை.

உலகளாவிய விளையாட்டு வீரர்களின் திறமைகளை சோதித்தறியும் ஒலிம்பிக் போட்டியில், பதக்கங்களை அள்ளிக்குவிக்கும் சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் கிரிக்கெட்டின் பதிவோ அல்லது அதன் தாக்கமோ சிறிதும் இல்லை. ஆனால் இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின்போதும் பதக்கப்பட்டியலில் நமது இந்தியாவை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவல நிலையில்தான் நாம் இருக்கிறோம். 100 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நமது நாடு, ஒலிம்பிக் போட்டியிலே 10 பதக்கங்களைக்கூட பெறமுடியாத பரிதாபமான நிலை நீடிக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு முன்னரே வீரர்களை மிக நுட்பமாக தேர்வு செய்து, அவர்களின் வெற்றியை தீர்மானித்து, வெற்றி அடைய வேண்டிய ஒலிவட்டத்தோடு மற்ற நாடுகள் நின்று கொண்டிருக்கும்போது, ஒலிம்பிக் போட்டிக்கு யாரை அனுப்புவது என தேடிக் கொண்டிருக்கும் நிலையே இதுவரை இந்தியாவில் நீடிக்கிறது.

இந்த பிரீமியர் லீக் போட்டி தொடங்கிய காலக்கட்டத்தில் திரைப்பட நடிகரும், விளையாட்டு வியாபாரியுமான ஷாருக்கான் கீழ்க்கண்டவாறு கூறினார். வர்த்தக ரீதியில் லாபம் அடைவதற்கு மற்ற விளையாட்டுக்களை காட்டிலும், அதிக உதவியாக இருக்கும் என்பதாலேயே கிரிக்கெட்டில் நுழைந்தேன். இன்றைய உலகில் வணிகமும், கொடுக்கல் வாங்கல் தொழிலும் மிக முக்கியமானவை. அதற்கு விளையாட்டு ரீதியாக இந்தியாவில் பார்க்கப்போனால், கிரிக்கெட்டில் மட்டுமே முடியும் என்பது உண்மை. அவரின் கூற்று உண்மையிலும் உண்மையாகத்தான் இருக்கிறது. இந்த அவலநிலை நீடிக்குமேயானால் வருங்காலத்தில் கபடி, கால்பந்து போன்ற விளையாட்டுகளோடு நமது பாரம்பரிய விளையாட்டும் இருந்ததற்கான அடையாளம் இல்லாமல் அழிக்கப்பட்டுவிடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இது மாஃபியாக்களை உருவாக்கவும், சந்தையில் வெற்றி தோல்விகளுக்காக எந்த தீங்கையும் செய்யும் மனப்போக்கை தக்க வைக்கவும் பெரும் காரணியாக அமைந்துவிடும். இப்படிப்பட்ட இந்த கீழ்நிலைப்போக்கு மாறுவதற்கு நாம் சமூக அக்கறையோடு என்ன பங்காற்றலாம் என்பதை சிந்திப்பதற்கான காலமாகத்தான் இந்த பிரீமியர் லீக் போட்டியும், அது இந்திய மக்களவையில் பட்ட அசிங்கமும் தெரிவிக்கிறது.

-கண்மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It