காலம் :

சர்வதாரி வருடம் தை 30. ஹிஜ்ரி 1430 ஸபர் ரபிஉல் அவ்வல். பிப்ரவரி 2009. நேரம் இரவு. 10.37 சென்னை. (பழைய பெயர் மதராஸ் அதற்கு முந்திய பெயர் மதராபட்டினம்) தமிழ்நாடு. பழைய பெயர் (சென்னை ராஜஸ்தானி) தென்னிந்தியா. இந்தியா.

(சரித்திர நாவலை விமர்சனம் பண்ண வேண்டும் என்பதால் இவ்வளவு துல்லியமாக நாள் நேரம் போன்ற விபரங்களை எழுதித் தொலைக்க வேண்டியுள்ளது.)

பூர்வாங்கம்

சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் என்ற ஆயிரத்து நாற்பத்தியேழு பக்கமே உள்ள சிறிய நாவலை பனிரெண்டு நாட்கள் தொடர்ச்சியாக வாசித்தேன். இருபத்தி மூணு வருட அனுபவத்தில் ஒரு நாவலை வாசித்து முடிப்பதற்கு இவ்வளவு சிரமமும் அலுப்பும் அடைந்தது இந்த நாவலில் மட்டும் தான்.

சாலையோரம் சவுக்கால் தன்னைத் தானே அடித்துக் கொள்பவனைப் பார்த்திருக்கிறீர்களா. சுளீர் சுளீர் என சாட்டை உடலில் பட்டாலும் விடாமல் அடித்து கொள்வானே கிட்டதட்ட அப்படியொரு தண்டனை போலத்தானிருந்தது இந்த நாவலை வாசித்தது. இவ்வளவு மெனக்கெட்டு எதற்காக படிக்க வேண்டும் என்று கேள்வி எழலாம்.

நாவலைப் பற்றிய பேசுவதாக ஏதோவொரு குருட்டு தைரியத்தில் ஒத்துக் கொண்டுவிட்டேன். படிக்க ஆரம்பித்த பிறகு தான் அதன் வண்டவாளம் தெரிய ஆரம்பித்தது. என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது என்னுடன் கூட்டத்தில் பேச வேண்டிய இன்னொரு நண்பர் போன் செய்து படித்துவிட்டீர்களா என்று துக்கம் விசாரிப்பது போலக் கேட்டார்.

நீங்கள் என்று எதிர்க் கேள்வி போட்டதும் பரிட்சைக்குக் கூட இப்படி படிச்சதில்லை சார். எப்படிப் படித்தாலும் நகர மாட்டேன் என்கிறது, ரோடு ரோலர் மாதிரி என்றார். எனக்கு அவரது உவமை பிடித்திருந்தது. மெதுவாக நகட்டி நகட்டி படித்துவிடுங்கள். நாவலைப் பற்றி பேச வேண்டும் அல்லவா என்று சொன்னேன். உடனே அவர் இப்படிப் போய் மாட்டிக்கிட்டேனே என்று புலம்பிக் கொண்டு போனைத் துண்டித்தார்.

அது இன்னமும் நாவலைப் படிக்க விடாமல் தடுக்க ஆரம்பித்தது. மனதைரியத்துடன் இதைப் படித்தவர் எவராவது இருப்பார்களா என்று நண்பர்கள் வட்டாரத்தில் தேடத் துவங்கினேன். பெயரைக் கேட்டவுடன் மௌனமாகி விட்டார்கள்.

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் இந்த நாவலை மூன்று முறை படித்துவிட்டார் என்றார்கள். அவர் மிலிட்டரியில் வேலை செய்த அனுபவம் உள்ளவர், அதனால் எவ்வளவு கடினமான வேலையும் செய்துவிட முடியும், நிச்சயம் அவர் படித்திருப்பார் என்று தோன்றியது. சாமான்ய மனுசன் எவராவது படித்திருக்கிறார்களா என்று கேட்டேன். பதிலே இல்லை.

சரி விதி வலியது, எப்படியாவது படித்து முடித்துவிடலாம் என்று நாளைக்கு மூணு நாலுமணி நேரம் வீதம் படித்து ஒருவழியாக நாவலை முடித்து கீழே வைத்தபோது நூற்றாண்டுகளாக ஒரே புத்தகத்தைப் படித்தால் ஒருவன் எவ்வளவு அலுப்பும் சலிப்பும் அடைவானோ அப்படியொரு சோர்வு பற்றிக் கொண்டது. இந்த லட்சணத்தில் காய்ச்சலும் சேர்ந்து கொள்ள நாலைந்து நாள் படுக்கையிலே கிடந்தேன். தூக்கத்தில் கூட நாவலின் பக்கங்கள் புரண்டு கொண்டேயிருந்தன. புதைச்சேறில் மாட்டிக் கொண்டது போன்ற அனுபவம். நல்லவேளையாக வெளியீட்டு விழாவிற்குப் போகவில்லை. சென்றவர்கள் அங்கு பாடப்பட்ட புகழாரங்களைக் கண்டு தலைகவிழ்ந்து வந்தார்கள் என்று கேள்விபட்டேன்.

ஒரு மனிதனைத் தண்டிக்க வேண்டும் என்று விரும்பினால் எளிய வழி அவனுக்கு ஒரு காவல் கோட்டம் நாவலை வாங்கித் தந்துவிட வேண்டியது தான். புத்தக சைஸ் பார்த்தால் போதும் சப்தநாடியும் அடங்கிவிடுவான்.

மதுரையில் சில கடைகளில் விளம்பரங்களுக்காக ஆள் உயர சைஸ் பனியன் அல்லது மிகப்பெரிய செருப்பை வைத்திருப்பார்கள். இதை எல்லாம் யார் போடுவார்கள் என்று பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறேன். இந்த நாவலை படிக்க ஆரம்பித்தவுடன் அந்த எக்ஸ்ட்ரா லார்ஜ் XXXX சைஸ் சு. வெங்கடேசன் போன்றவர்களுக்காக மட்டுமே தயாரிக்கிறார்கள் போலும் என்பதை உணர்ந்தேன். இவ்வளவு பெரிய எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ் நாவலை எழுதுவது என்றால் சாமான்ய வேலையா என்ன?

டால்ஸ்டாய் ஆயிரம் பக்கத்திற்கு மேல் எழுத வில்லையா என்று கேட்கலாம். உண்மை தான் ஆனால் டால்ஸ்டாய் ஒன்றும் பந்தல் போடும் வேலை செய்யவில்லையே. சின்னஞ்சிறிய வீடு கட்டுவதற்கு ஆறு மாசமாகிறது. ஆனால் ஊரையே வளைத்து கீற்றுப் பந்தல் போடுவதற்கு இரண்டு நாள் போதும், சர்வ அலங்காரத்துடன் போட்டுவிடலாம். பந்தலைக் காட்டி இதுவும் பல்லாயிரம் பேர் தங்கும்படியாகத் தானே அமைக்கபட்டிருக்கிறது அதை ஏன் கட்டிடக்கலையின் உச்சம் என்று ஒத்துக் கொள்ள மறுக்கிறீர்கள் என்று கேட்க முடியாது இல்லையா? அப்படி இந்த நாவலும் ஒரு பெரிய மாநாட்டு பந்தல் தான். கீற்று தெரியாமல் வேஷ்டி விரித்து ஒப்பனை செய்யப்பட்டிருக்கிறது, மற்றபடி உள்ளே அத்தனையும் பொத்தல்.

காவல்கோட்டம் நாவல் வெளியான சில தினங்களில் ஆண்டின் சிறந்த நாவல் என்று விருதுக்கு அடையாளம் காட்டப்படுவதும். வெளியான நாளில் இருந்து சென்னை, மதுரை, பாண்டிச்சேரி, கோவை என்று ஒவ்வொரு ஊரிலும் அவர்களாகவே வெளியீட்டு விழா நடத்தி அரசு உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்களின் புகழாரங்களை அவசர அவசரமாக சூட்டிக் கொள்வதும் எதற்காக என்று தான் புரியவில்லை.

ஒரு நாவலுக்கு ஒரு வெளியீட்டுவிழா நடத்ததுவது தான் மரபு. ஆனால் வெங்கடேசன் ஊருக்கு ஒரு வெளியீட்டு விழா செய்வதை காணும்போது நாவல் விற்றுத் தீருமளவு தொடர்ந்து பல நூறு வெளியீட்டு விழா நடந்தாலும் ஆச்சரியப்படப் போவதில்லை.

தமிழ் இலக்கியச் சூழலில் என்ன அபத்தம் வேண்டுமானலும் நடக்கலாம். அதை யார் தடுக்க முடியும்.

**

நாவலை முன் வைத்து சில பார்வைகள்:

இதை ஒரு சரித்திர நாவல் என்கிறார்கள். ஆனால் நாவலில் சரித்திரமும் இல்லை நாவலும் இல்லை. இரண்டும் கெட்டான் வகை. முதல் பகுதி நாயக்க மன்னர்களின் வரலாறு இரண்டாம் பகுதி கள்ளர் சீமை. இரண்டுக்கும் உள்ள ஒரே சம்பந்தம் கள்ளர்கள் மதுரையை காவல் செய்தார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமேயில்லை.

சரி, இதில் எதற்கு நாயக்கர் வரலாறு?

நேரடியாக கள்ளர்கள் மதுரை காவலுக்கு நியமிக்கப்பட்டதில் இருந்து நாவலைத் துவக்கினால் எப்படி ஆயிரம் பக்கத்திற்கு இழுப்பது? இவ்வளவு நீட்டி முழக்கி சொல்லும் நாயக்கர் வரலாற்றில் அப்படி என்ன புதிய விஷயமிருக்கிறது? கம்மவாருகளை விடவும் கொல்லவாருகளே வீரமானவர்கள். கம்மவார்கள் ஒன்றும் பெரிய வீரர்கள் இல்லை என்று ஜாதிஉட்பிரிவு குழப்பத்தை உருவாக்கும் முயற்சியைத் தவிர பெரிதாக நாயக்கர் வரலாற்றில் எந்த வெளிச்சத்தையும் நாவல் உருவாக்கி சாதித்துவிடவில்லை.

மதுரையின் வரலாற்றை எதற்காக நாயக்கர் காலத்திலிருந்து எழுதத் துவங்க வேண்டும். அது சங்க காலத்திலிருந்து இருக்கிறதே என்றால் நாயக்கர் காலத்தில் இருந்து தான் ரிக்கார்ட்ஸ் கிடைக்கிறது. அதற்கு முன்பு உள்ளதை எழுத கற்பனை வேண்டுமே என்று வெங்கடேசன் சொல்லக்கூடும்.

நாவலின் முதல் பகுதி முடிஅரசு. இரண்டாம் பகுதி குடிமக்கள். முதல் பகுதி 376 பக்கம். மாலிக்கபூர் மதுரைக்கு படை எடுத்து வருவதில் துவங்கி மதுரை கலெக்டராக பிளாக்பெர்ன் வந்து சேர்ந்து மதுரையின் சுற்றுக் கோட்டையை இடிப்பது வரையிலான சரித்திர காலம். அதன் பிறகு மதுரையைச் சுற்றிய கள்ளர்களைப் பற்றியது. குறிப்பாக தாதனூர் என்ற ஊரில் வாழும் கள்ளர்களைப் பற்றிய எண்ணிக்கையற்ற தகவல்கள் உதிரி சம்பவங்கள் போன்றவற்றால் நிரப்பட்டுள்ளது. ஹிண்டு பேப்பர் செய்தி முதல் பழைய சர்வே ரிக்கார்டு, போலீஸ் எப்ஐஆர் வரையான ஆயிரக்கணக்கான தகவல்கள் ஒன்றோடு ஒன்று திணிக்கப்பட்டு மாபெரும் வைக்கோல் போர் போல நாவல் காட்சியளிக்கிறது.

சரித்திரம் என்பதே பெரிதும் கற்பனையானது. அது அதிகாரத்தில் இருப்பவன் தன்னைக் காத்து கொள்ள உருவாக்கிய ஒரு புனைகட்டு. மன்னர்களின் வாழ்க்கையும் அதிகார கைமாறுதல்களும் மட்டுமே சரித்திரமில்லை. மக்கள் வாழ்வு, சமூக கலாச்சார அரசியல் தளங்களில் ஏற்படும் மாறுதல்களும் நெருக்கடியும் விடுபடலும் மோதுதலும் புதுவரவும் இணைந்ததே சரித்திரம். பாடப்புத்தங்களுக்கு வெளியில் தான் சரித்திரம் ஒரளவு உண்மையாக இருக்கிறது என்கிறார்கள் இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள்.

நாவல் போன்ற இலக்கிய வடிவங்கள் சரித்திரத்தை அணுகும் போது முதலாக கவனிக்கவேண்டியது, சரித்திரத்தை எப்படி உள்வாங்கியிருக்கிறோம், எப்படி கற்பனை செய்கிறோம் என்பதே. முன்பு எழுதப்பட்ட சரித்திரக் குப்பைகளை விலக்கி உண்மையை அறிய முயற்சிப்பதே இலக்கியத்தின் பிரதான நோக்கம். சரித்திரம் என்பது முடிந்து போன கடந்தகாலமல்ல. அது முடிவில்லாத காலத்தொடர்ச்சி என்ற பிரக்ஞையே இலக்கியத்தின் பிரதான பணி.

வரலாற்றை மீள் ஆய்வு செய்யும் வரலாற்று அறிஞர்கள் சரித்திரச் சான்றுகள், கல்வெட்டுகள், ஆவணக்காப்பகத் தகவல்கள், நேரடி ஆய்வுகள் போன்றவற்றின் வழியே சரித்திரம் உருவான சரித்திரத்தை ஆராய்கிறார்கள். அதில் மறைக்கப்பட்டதும் தவிர்க்கப்பட்டதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்கள். அத்துடன் சரித்திரத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற புதிய பார்வையை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் நாவலாசிரியன் சரித்திரத்தின் ஒற்றை வரியிலிருந்து தன் கற்பனையை உருவாக்கத் துவங்குகிறான். அவன் வரலாற்றை அதன் பெருமிதங்களுக்காக இன்றி சிதைவுகளுக்காக வாசிக்கிறான். வரலாற்றில் மறைக்ககபட்ட பகுதிகளை, இடைவெளிகளை அடையாளம் கண்டு கொள்கிறான்.

நாவல் எழுதுவதற்கு களஆய்வு செய்வது அவசியம் தான். ஆனால் அப்படி எவரெவரோ தந்த செய்திகள், தகவல்கள், சம்பவங்கள், ஆய்வை அப்படியோ போட்டு நிரப்பி அதற்கு நாவல் என்று பெயர் சூட்டினால் என்ன செய்வது. அந்தக் கொடுமை தான் காவல்கோட்டமாக உருக் கொண்டிருக்கிறது.

டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர் கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். அவர் சிறப்புநிதி நல்கை பெற்று கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். அவரது கட்டுரைகளும் ஆய்வும் உலக அரங்கில் மிகுந்த கவனம் பெற்றவை. குறிப்பாக Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, "An Ode to an Engineer" in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.

வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் பெரும்பான்மை இவரது ஆய்வின் ஆதார தரவுகளே. ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம். லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont - A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலைக் கள்ளர்களைப் பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் முத்துசாமி தேவர் என்பவரைப் பற்றி குறிப்பிட்டு, அவர் இந்த நூலின் இணையாசிரியர் போன்றவர் என்று நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார். காரணம் உள்ளுர் தரவிபரங்கள் அறிந்தவர்கள் உதவியால் மட்டுமே ஒரு ஆய்வு முழுமையடைகிறது. வெங்கடேசன் லூயிஸ் டுமாண்டிலிருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.

டால்ஸ்டாய் போரும் வாழ்வும் எழுதும்போது நெப்போலியன் படையெடுப்பை தன் நாவலின் பின்புலமாக கொண்டிருக்கிறார். ஆனால் எந்த சரித்திர புத்தகத்திலிருந்தும் நெப்போலியன் பற்றிய சரித்திர விபரங்களை தொகுத்து தன் நாவலுக்கு எடையை அதிகமாக்கவில்லை. மாறாக அவர் படைகள் வருவதை மிகுந்த கற்பனை உணர்வோடு காட்சிப்படுத்தியிருக்கிறார். நெப்போலியன் வருகை என்பது அவருக்கு ஒரு குறியீடு. நாவலின் கதையோட்டத்திலிருந்து சரித்திரத்தை தனித்துப் பிரித்து எடுத்துவிட முடியாது.

சரித்திர பிரக்ஞை ஒரு நாவலில் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு சிறந்த உதாரணங்களைத் தர முடியும். ஒன்று குர்அதுல்துன் ஹைதர் எழுதி அக்னி நதி என்ற நாவல். இது இந்திய சமூகத்தின் புத்தர் காலம் துவங்கி சுதந்திர போராட்ட காலம் வரையான பல நூறு வருட வாழ்க்கையை விவரிக்கிறது. ஆனால் ஒரு இடத்தில் கூட சரித்திரம் அப்படியே நகலெடுக்கப்படவில்லை. மாறாக வற்றாது ஒடும் ஆறென காலம் ஒடிக் கொண்டேயிருக்கிறது. அதன் சுழிப்பில் மனிதர்கள் தோன்றுகிறார்கள், மறைகிறார்கள்.

இன்னொரு நாவல் அதின் பந்தோபாத்யாயா எழுதிய நீலகண்ட பறவையைத்தேடி. இதுவும் சுதந்திரப் போராட்ட காலத்து நாவல் தான். ஆனால் ஒரு இடத்தில் கூட ஆவணக்காப்பகத்தில் இருந்த தகவல்களை தொகுத்து பண்டல் கட்ட முயற்சிக்கவேயில்லை. இரண்டுமே தமிழில் வெளியாகி உள்ளது.

குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக காவல் கோட்டம் மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறதே என்று ஒரு கேள்வி எழுகிறது. அதுவும் பொய்யே. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, நான் உள்ளிட்ட பலரும் குற்றப்பரம்பரை பற்றி அவரவர் அளவில் எழுதியிருக்கிறோம்.

வழிப்பறி கள்ளர்கள் குறித்து பஞ்சாபி மொழியில் வெளியாகி உள்ள சோரட் உனது பெருகும் வெள்ளம் மற்றும் சமீபத்தில் மராத்தியில் வெளியான உபரா, உச்சாலியா போன்ற நாவல்களைப் படித்த எவருக்கும் இந்த நாவல் எவ்வளவு அபத்தம் என்று சொல்லாமலே புரிந்துவிடும். நான் குறிப்பிட்ட இந்த நாவல்கள் அத்தனையும் தமிழிலே வாசிக்க கிடைக்கின்றது. பொன்னியின் செல்வன், யவனராணி போன்ற சரித்திரக் கதைகளில் படிக்க சுவாரஸ்யமான கற்பனையாவது இருக்கும். இதில் அதுவும் கிடையாது என்றால் இந்த நாவல் எப்படி இவ்வளவு பெரிசாக உருண்டு திரண்டிருக்கிறது. அங்கே தான் இருக்கிறது வெங்கடேசனின் சாமர்த்தியம்.

நாலு பக்கம் கள்ளர் கதை, அடுத்து நாற்பது பக்கம் நாயக்கர் வரலாறு என்று டிவி சீரியல் போல இழுத்திருக்கிறார். ஒருவேளை நாயக்கர் வரலாறும் உபரித் தகவல்களும் நீக்கப்பட்டால் நாவல் இருநூறு பக்கத்திற்குள் முடிந்து போயிருக்கும்.

குளறுபடி 1:

நாவலின் ஆரம்பம் மதுரையைத் தாக்க மாலிக்கபூர் வருவதை எழுதிவிட்டால் ஒரு நூற்று ஐம்பது வருசங்களை முன்னாடி சேர்த்துக் கொள்ளலாமே என்று வெங்கடேசன் நினைத்திருக்க்க் கூடும். ஆகவே முதல் இரண்டு பக்கங்கள் மாலிக்கபூருக்கு. சரித்திரத்தை மீள்வாசிப்பு செய்கின்ற எவருக்கும் தெரியும் மாலிக்கபூர் என்பது ஒரு அரவாணி. அவனது பெயர் ஹசர் தினார் என்றால் ஆயிரம் தினார் கொடுத்து வாங்கப்பட்டவன் என்று பொருள். கில்ஜியின் பாலுறவு துணையாக இருந்தவன். அதனால் அதிகாரம் வழங்கபட்டு மற்றவர்கள் கேலி செய்யப்படக்கூடாதே என்று எஜமானனுக்கு உரியவர் என்ற பெயரில் மாலிக்கபூர் என்று அடையாளம் தரப்பட்டவன்.

மாலிக்கபூர் தமிழகத்திற்கு படையெடுத்து வந்தது குறித்து இன்றுவரை தெளிவான காரணங்கள் இல்லை. அவன் உட்பகையைப் பயன்படுத்தியே உள்ளே நுழைந்தான் என்று வரலாற்றுப் புத்தகங்கள் கூறுகின்றன. இந்த நாவல் திரும்பவும் பழைய குருடி போலவே மதுரையைத் தாக்க வந்தான் மாலிக்கபூர். தங்கம் வைரம் வெள்ளி என எண்ணிக்கையற்ற பொருட்களை கொள்ளையடித்தான் என்று அரைத்த வரலாற்று ரிக்கார்ட்டையே அரைக்கத் துவங்குகிறது.

ஒரு லட்சம் வீரர்களுடன் வந்தான் என்று மிகையாக உருவாக்கபடும் மாலிக்கபூர் படையெடுப்பையாவது எழுத்தாளரால் கற்பனை செய்ய முடிகிறதா என்றால் அதுவும் இயலவில்லை.

குளறுபடி 2:

இந்த நாவலின் முதல் முந்நூறு பக்கங்கள் நாயக்க மன்னர்கள் வரலாற்றை விவரிக்கிறது. இந்த வரலாற்றை பாடப்புத்தகங்களில் உள்ளதிலிருந்து ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே நகலெடுத்திருக்கிறது நாவல்.

குறிப்பாக 1) Edgar Thurston, "The castes and Tribes of south India, 2) The Madura Country - A manual - J..H..Nelson, Asian Educational Services New Delhi, Madras. 3) History Of The Nayaks Of Madura- R Sathianathaier, 4) The History of Tinnevelly by Rev R Caldwell, 5) History of Military transactions - R Orme இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.

குறிப்பாக சத்தியநாத ஐயரின் மதுரை நாயக்கர் வரலாறு புத்தகத்தின் பல பக்கங்கள் தமிழாக்கப்பட்டு அப்படியே முழுமையாக நாவலில் கோர்க்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு சத்தியநாத ஐயரின் புத்தகத்தில் மதுரையை ஆண்ட ராணி மீனாட்சி பற்றிய பகுதியிது.

Minakshi negotiated with the latter with a view to nullifying the arrangements agreed upon, in return for, it is said, one crore of rupees. Chanda Sahib consented to her terms, and is said to have sworn by the Koran to safeguard her interests at any cost. He did not scruple to break his solemn vow, and imprison Mlnakshi in her palace. The latter's miseries overwhelmed her, and she put an end to her own life by taking poison.

Page 254

வெங்கடேசன் நாவலின் முப்பதாவது அத்யாயம் பக்கம் 255ல் இதே விஷயம் எப்படியிருக்கிறது பாருங்கள்

மீனாட்சி ஒப்புக் கொண்டாள். ஆனால் பங்காரு ஒப்புக் கொள்ளாமல் திருச்சியின் மீது படை எடுத்தார். சாந்தா சாகிப்பின் உதவியை நாடி பணம் கொடுத்தார். அதை விட அதிகமான பணத்தை மீனாட்சி தந்தபோது மீனாட்சியை அரசியாக ஏற்பதாகவும் படை உதவி செய்வதாகவும் குரானின் மீது சத்தியம் செய்துதந்தார். 1736ல் சந்தா சாகிப் தனது படையை வலிமை படுத்திக் கொண்டு மீண்டும் திருச்சி வந்தார். நேசசக்தி என்பதால் வழிவிட்ட கோட்டைக்குள் புகுந்தபின்பு அரசி மீனாட்சியை சிறைப்படுத்திவிட்டு நிர்வாகத்தை கவனிக்கத் துவங்கினார். மீனாட்சி நஞ்சுக் குப்பியை எடுத்து திறந்து அப்படியே வாயில் கவிழ்த்துவிட்டாள். (பக்கம் 255.)

வரலாற்று பாடப்புத்தகத்தில் உள்ளதை நகல் எடுத்திருப்பதைத் தவிர இந்த நாவலில் புதிதாக என்ன மாற்றத்தை எழுத்தாளர் உருவாக்கியிருக்கிறார் என்று புரியவில்லை.

ராணி மீனாட்சி விஷம் குடித்த நெருக்கடியை, என்ன விஷம் அது, அப்போது அவளுடன் யார் இருந்தார்கள், அவளுக்கு என்ன வயதானது, சாவு ஏன் தவிர்க்கப்படவில்லை, சாந்தா சாகிப் எதற்காக துரோகம் செய்தான் என்று கற்பனை செய்ய, செய்ய சாதாரண மனிதன் கூட ஒரு கதையைப் புனைந்துவிடுவானே, ஏன் ஆயிரம் பக்கம் எழுத முடிந்த ஆளால் இது சாத்தியமாகமல் போனது? ஒரே காரணம், சரித்திரப் புத்தகத்தில் இருக்கிறது அப்படியே எடுத்து பைண்டிங் செய்துவிடலாம் என்று ஆசை மட்டும் தான். மீனாட்சி ஊர்வலம் போனதை எழுதியவர் அவள் சிறைப்பட்ட நெருக்கடியான மனநிலையை ஏன் கவனம் கொள்ள இயலவில்லை?

உப்புசப்பற்ற தகவல்களைத் தானே இத்தனை வருசமாக சரித்திரம் என்ற பெயரில் நாம் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறோம். நாவலும் அதே குப்பையை அழகாக பாலீதின் பையில் அடைத்து கையில் கொடுப்பது தான் சாதனையா? இப்படியான தகவல்கள் பக்கம் 36, 37, 39, 47, 89,140,152, 213, 215, 218, 229, 246, 256, 259, 314, 279 பக்கங்களில் சரித்திர பாட புத்தகங்களில் இருந்து கட்டிங் பேஸ்டிங் வேலைகள் செய்து நிரப்பட்டுள்ளன. அதை விரிவாக எழுதினால் விமர்சனம் நூறு பக்கம் மேலாகிவிடும் அபாயமிருக்கிறது.

குளறுபடி 3 :

திருமலை நாயக்கர் ஒரு இத்தாலிய பொறியாளரின் உதவியால் நாயக்கர் மஹாலைக் கட்டினார் என்ற தகவலை பல காலமாக கேட்டு வருகிறோம். அந்த இத்தாலியர் யார், அவர் எதற்காக மதுரைக்கு வந்தார், எப்படி இது போன்ற கட்டிட வடிவம் ஒன்றைத் தேர்வு செய்தார், அதை எப்படி திருமலை நாயக்கர் ஒத்துக் கொண்டார்? இப்படி எண்ணிக்கையற்ற கேள்விகள் அதன் பின்னால் இருக்கின்றன. பிரிட்டீஷ் ரிக்கார்டு வரை தேடிய ஆள் ஆயிற்றே என்று இவரது நாவலில் தேடினால் அவரும் நாயக்கர் ஒரு இத்தாலியரின் உதவியால் மஹாலைக் கட்டினார் என்று பள்ளிபாடப்புத்தக வரிகளையே திரும்பவும் ஒப்பிக்கிறார். யார் அந்த இத்தாலியர் என்பதைப் பற்றிய துளி விபரமும் இல்லை. இது தான் பத்தாண்டு ஆய்வு செய்து எழுதியவரின் லட்சணம்.

குளறுபடி 4:

பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றாற்போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு அத்தியாயம் 36 பக்கம் 280யை படித்துப் பார்க்கவும்.

இது போலவே இரவெல்லாம் மழை பெய்யும் நாளில் குளிர் இருக்காது என்று கிராமத்து மனிதர்கள் கூட அறிவார்கள். வெங்கடேசனோ ஒரு வாரமாக பகலும் இரவும் விடாத மழை. உயிரை உறைய வைக்கும் குளிர் – (பக் 210) என்று எழுதியிருக்கிறார். இதே போல இயற்கையின் எளிய நுட்பமறியாத வரிகள் நாவலில் நிறைய இடங்களில் துருத்திக் கொண்டு நிற்கின்றன.

குளறுபடி 5 :

நாவலில் மருந்துக்குக் கூட கதைசொல்லும் போக்கிலோ, உரையாடல்களிலோ சரித்திர பிரக்ஞையே கிடையாது. மதுரை ரீகல் தியேட்டர் முன்புள்ள இட்லிக் கடையில் கேட்கக் கூடிய சரளமான மதுரை தமிழ் தான் முந்நூறு வருசத்தின் முன்னுள்ள நாயக்கர் காலத்திலும் ஒலிக்கிறது. ஒன்றிரண்டு உதாரணங்கள்:

பிறகு தம்மையாவை பார்த்து நாகம்மா நாயக்கர் வாடா என்று சொல்லிவிட்டு திருநீற்றை எடுத்துப் பூசினார். எங்கே வந்த என்று கடுத்த குரலில் கேட்டார். (பக் 43)

ஏண்டா இப்போ தான் வழி தெரிஞ்சதாக்கும். இத்தனை வருசமா எங்கடா போய் தொலைஞ்சே

அக்கா நல்ல பசி சோத்தைப் போடு பக்.195

விடு மாப்ள, உள்ளபடி நடக்கட்டும். பக்.201

எவன்டி அந்த எடுபட்ட பய பக் 221

ஙோத்தாலோக்க.. எழவுவிழுந்துருச்சிடா..

குளறுபடி 6 :

நாவலில் பழமையான மதுரை நகரின் முழுமையான தோற்றம் வரவேயில்லை. திருப்பரங்குன்றமும் மீனாட்சி கோவிலும் அதைச் சுற்றிய சாவடி தெருக்களும் நாயக்கர் மண்டபமும், புது மண்படமும் வருகின்றதேயன்றி முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மதுரையின் பகலிரவுகள், அங்கு வந்து போன வணிகர்கள், ஊரின் செம்மையான பழஞ்சடங்குகள், விழாக்கள், குடியிருப்புகள், மின்சாரம் வந்து சேராத நாட்களில் பந்த வெளிச்சத்தில் பாதி இருளில் அவிழ்ந்த இரவுப் பொழுதுகள் எதுவும் நாவலில் தெளிவாக இல்லை.

சிலப்பதிகாரத்தில் மதுரை விவரிக்கப்படுகிறது. கோவலன் மதுரையை காண்பதைப் பற்றிய பகுதியது. எவ்வளவு துல்லியமாகவும், விரிவாகவும் அது மதுரையைக் காட்டுகிறது. பரிபாடல் ஒரு மதுரையை நமக்கு காட்டுகிறது. வைகை ஆற்றின் வெள்ளமும் நகரமும் வியப்பாக காட்சி தருகின்றன. நெல்சன் தனது மதுரை பற்றிய நூலில் எவ்வளவு விபரங்களைத் தொகுத்திருக்கிறார்.

வெங்கடேசன் மனதில் மதுரையின் பழமையான பிம்பம் எதுவுமில்லை. அவர் திரும்பத் திரும்ப இன்றைய வாழ்க்கையிலிருந்து கடந்த காலத்தை கட்ட முயற்சிக்கிறார். அதுவும் அவருக்கு பழக்கமான வீதிகள், இடங்கள், அதில் மட்டுமே அவரது கவனம் குவிந்திருக்கிறது.

அல்லி அரசாணி மாலை, மதுரைவீரன் கதை பாடல் போன்ற பெரிய எழுத்துக்கதைகளில் கூட மதுரையைப் பற்றிய விசித்திரமான சித்திரங்கள் விவரிக்கப்படுகின்றன. இந்த நாவலில் மதுரை என்பது பெயராக வருகின்றதேயன்றி அதன் சொல்லித் தீராத நினைவுகள் பகிர்ந்து கொள்ளப்படவேயில்லை.

ஒரேயொரு சம்பவம், மதுரை கோட்டை கட்டப்பட்டதும் அது இடிக்கப்பட்டதும் அலுப்பூட்டும் அளவு திரும்பத் திரும்ப சொல்லப்படுவதை தவிர்த்து மதுரையின் ஏதாவது ஒரு வீதியின் நூற்றாண்டு நினைவு இதில் விவரிக்கபட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்வேன்.

கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கரதாஸ் நாட்குறிப்பிலும் மதுரையைப் பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை. மாறாக தொ.பரமசிவத்தின் நுட்பமான பதிவுகள் அப்படியே உருமாற்றம் பெற்று நாவலில் ஆங்காங்கே பொருத்தபட்டிருக்கின்றன என்பது தான் கொடுமை.

குளறுபடி 7:

மனோகரா படத்தில் ஆண்வேடம் இட்டு வரும் சோழ நாட்டு ராஜகுமாரி மனோகராவோடு சண்டை போடுவாள். முடிவில் அவள் வேஷம் கலைந்து போகும். அவள் தன்னோடு சண்டை போடும்படியாக வாளை உயர்த்தும் போது என் வாள் பெண்களுடன் சண்டையிடாது என்று காதல் மொழி பேசுவான் மனோகரா. இந்தக் காட்சி அப்படியே சற்று உல்டா செய்யப்பட்டு பக்கம் 62ல் விஸ்வநாத நாயக்கருக்கும் துக்காதேவிக்குமாக நடக்கிறது.

இப்படி முடி அரசு பகுதி முழுவதும் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஒடிய அரசகட்டளை, அரசிங்குளமரி, மனோகரா, மகாதேவி, வீரபாண்டிய கட்டபொம்மன், சிவகங்கை சீமை, நீரும் நெருப்பும் போன்ற படங்களின் சரித்திர காட்சிகளை நினைவூட்டும் அத்யாயங்கள் நிரம்பி வழிகின்றன.

குளறுபடி 8 :

மதுரைக்கு கோட்டை கட்டியதால் மதுரை வாழ் மக்களுக்கு என்ன நல்லது கிடைத்தது? கோட்டைகள் அரசர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு ஏற்படுத்திக் கொண்ட கவசம். அது மக்கள் வரிப்பணத்தில் தங்களைப் பாதுகாக்க செய்து கொண்ட ஏற்பாடு. அப்படித்தான் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் மதுரையைச் சுற்றி கோட்டை கட்டப்படுகிறது.

சிலப்பதிகார காலத்தில் இருந்த மதுரையிலும் சுற்றுக் கோட்டையிருந்தது. மதுரை நகரம் தாமரைப்பூ வடிவத்தில் இருப்பதாகவும் அதற்கு உள்கோட்டை வெளிக்கோட்டை உண்டு என்று சாமிசிதம்பரானர் தன் நூலில் குறிப்பிடுகிறார். ஆகவே விஸ்வநாதன் கோட்டை கட்டியதில் ஒரு பெருமையும் இல்லை.

பராமரிக்கப்படாத மதுரை கோட்டையை மாவட்ட கலெக்டர் பிளாக்பெர்ன் இடிக்க முடிவு செய்தவுடன் கோட்டை சுவரில் இருந்த 21 துடியான சாமிகளையும் வெளியேற்ற முயற்சிப்பதாக மக்கள் கொதித்து எழுந்தார்கள். அதற்கு பரிகார பூஜை நடந்தது என்று விரிவாக வெங்கடேசன் எழுதிப் போகிறார்

சமகாலத்தில் நடக்கும் சேது பாலம் விஷயத்தில் இப்படியான கடவுளின் சக்தி தான் தடையாக உள்ளது. அதை எதிர்த்து இடது சாரிகள் சுப்ரிம் கோர்ட் வரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இடதுசாரி எழுத்தாளரோ மதவாத சக்திகளை விடவும் மோசமாகப் போய் கோட்டை சுவரில் உள்ள மொட்டை கோபுர முனியை இறக்கினால் நகரம் அழிந்துவிடும் என்பதற்கு வக்காலத்து வாங்கி முப்பது பக்கம் எழுதியிருக்கிறார். இது இடதுசாரி எண்ணங்களுக்கு எதிரானது மட்டுமில்லாது. பச்சையான மதவாதம்.

செவ்வியல் தெய்வங்களை உயர்த்திப் பிடித்து உருவாகும் மதவாதம் எவ்வளவு மோசமானதோ அதே அளவே நாட்டார் தெய்வங்களை முன்னிறுத்தி அதன் நம்பிக்கைகளைக் கொண்டாடும் தெய்வப்பற்றும் கண்டிக்க வேண்டியதே. நாட்டார் தெய்வங்களின் பின்னால் தான் சாதியின் வேர் ஆழமாக புதையுண்டிருக்கிறது. சாதியைக் காப்பாற்றி வைத்திருக்கும் பெரும்பலம் நாட்டார் கடவுள்களே. கவனிப்பார் இல்லாமல் கிடக்கும் காட்டுக் கோவில் தானே என்று கூட ஒரு சாதி வழிபடும் சாமியை இன்னொரு சாதியினர் கும்பிட்டுவிட முடியாது என்பது தான் தென்தமிழ்நாடு அறிந்த உண்மை.

வெங்கடேசனின் துடியான தெய்வங்கள் வெறும் தெய்வங்கள் மட்டுமில்லை, அவை சாதியின் பாதுகாவலர்கள். அதன் வழியே தான் சாதி ஒன்றிணைக்கப்படுகிறது. இதை விமர்சகர்கள் எப்படி சுலபமாக மறந்து வெங்கடேசனைப் பாராட்டுகிறார்கள் என்று தான் புரியவில்லை.

குளறுபடி 9:

இன்னொரு பக்கம் பிளாக்பெர்ன் மதுரை கோட்டையை இடிப்பதற்கு முடிவு எடுத்த நாட்களில் மதுரை கோட்டை எப்படியிருந்தது?

Madura town, they found it to be rectangular in outline with its sides presented to the cardinal points. Its fortifications, which were formerly extensive, were then much dilapidated ; but it was still defended by a fort, and surrounded by a broad ditch, and a double wall that originally had 72 bastions. Each side was about three-quarters of a mile in length,

The streets were narrow, irregular, and dirty, and the houses of the most miserable description. Large herds of cattle were often found within the precincts of the town, and mephitic miasmata were exhaled from the stagnant basins in the vicinity of the fort.

Fullarton s Gazetteer

அதாவது இடிந்து குப்பையாக இருந்தது. இந்த நிலையில் காலரா நோய் வேறு மதுரையில் பரவத் துவங்கவே பிளாக்பெர்ன். கோட்டை வாசலை ஆறு இடங்களில் இடித்துவிட முடிவு செய்கிறார். இந்த வேலைக்கு குற்றவாளிகளை பயன்படுத்திக் கொள்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்கிறார். மக்கள் காலராவிற்கு மருத்துவம் பார்க்க மறுத்து குலசாமிகளுக்கு வேண்டுதல் போடுகிறார்கள். இந்த நிலையில் அவர் மதுரை வீதிகளில் பாதி ஆக்ரமிப்பிற்கு உள்ளாகி இருப்பதைக் காண்கிறார். அதன்பிறகே கோட்டையை இடிப்பது என்று முடிவு செய்கிறார்.

கோட்டையை இடிப்பதற்கு முன்பு முப்பத்தியெட்டாயிரம் மக்கள் மதுரை நகரினுள் இருந்தார்கள். கோட்டையை இடித்த பிறகு எட்டாயிரம் பேர் புதிதாக நகரினுள் வசிக்க வந்திருந்தார்கள். இதில் 1200 பேர் குயவர்கள் மற்றும் நெசவாளிகள், சாயம் போடுகின்றவர்கள் என்று ராயல் ஆசியாடிக் சொசைட்டியின் ரிக்கார்ட் வால்யூம் மூன்று கூறுகிறது.

இன்னொரு பக்கம் கோட்டை இடித்த நாட்களில் கிழக்கிந்திய கம்பெனி அதுவரை இந்துக் கோவில்களுக்கு அளித்து வந்த மான்யத்தை நிறுத்தி கொண்டதாக அறிவித்தது. அதை கோட்டை இடிந்ததோடு சேர்ந்து கலெக்டர் இந்துகளின் மனதைப் புண்படுத்திவிட்டார் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளபட்டது. அதனால் பிளாக்பெர்ன் சில நாட்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். பின்பு அவர் மீதான குற்றம் நிருபிக்கப்படவில்லை என்றும் மதுரை மாவட்ட மிஷினரி வரலாறு கூறுகிறது.

வெங்கடேசனின் நாவல் இந்த வெள்ளை அதிகார சரித்திரத்தின் பின் உள்ள உண்மைகளை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை. மாறாக கோட்டையில் இருந்த முனிகள், காவல் தெய்வங்களை எப்படி சாந்தி படுத்தினார்கள், எப்படி உடுக்கு அடித்தார்கள், என்ன பலி கொடுத்தார்கள் என்று உணர்ச்சிப் பெருக்கெடுத்து எழுதுகிறார்.

சுயலாபங்களை நோக்கி வெள்ளை அதிகாரத்தின் சூழ்ச்சிகளை அவர் வெளிச்சமிட்டுக் காட்டவேயில்லை. அதே நேரம் கோட்டை இடிக்கப்பட்டதன் வழியே மதுரைக்குள் வசிக்கத் துவங்கிய அடித்தட்டு மக்களின் புது வாழ்க்கையைப் பற்றிய எவ்விதமான தெளிவும் அக்கறையும் வெங்கடேசனுக்கு இல்லை.

குளறுபடி 10 :

நாவலின் உப தலைப்புகளாக முதல் அத்யாயம் மதுரா விஜயம், ஆறாவது அத்யாயம் பாளையப்பட்டு அப்புறம் 37 வது அத்யாயம் யூனியக் ஜாக் என்று முதல் பகுதி பிரிக்கபட்டிருக்கிறது. இந்த தலைப்புகளுக்கும் உள்ளே உள்ள விஷயங்களுக்கும் ஒரு சம்பந்தமில்லை. எந்த எடிட்டர் இப்படி பகுப்பு செய்தது என்று தெரியவில்லை.

இதில் குடிமக்கள் பகுதி துவங்கியதும் உள்ள இருளெனும் கருநாகம் என்ற தலைப்பு காணப்படுகிறது. இது பி.டி.சாமி எழுதிய பேய்க்கதையின் தலைப்பு. அதனால் என்ன? சரித்திரம் எதையும் தாங்கும் தானே.

நாவலின் பிரதான கதைக்குள் போவதற்கு முந்தைய சரித்திரத்திலே இவ்வளவு தடுமாற்றங்கள், தள்ளாட்டங்கள். இதைத் தாண்டி நாவலின் கதை எதைச் சொல்கிறது என்பதை அறிந்து கொள்வது அடுத்த பகிரதப் பிரயத்தனம்.

நாயக்கர் வரலாற்றை முந்நூற்றி ஐம்பது பக்கம் எழுதத் தெரிந்த வெங்கடேசனுக்கு கள்ளர் வரலாற்றினை பூர்வீகத்திலிருந்து எழுத பத்து பக்கம் ஒதுக்கக் கூட முடியவில்லை.

நாயக்கர்களின் பூர்வீகம் பற்றி இத்தனை விபரமாக பெருமையுடன் சொல்ல முடிந்தவர் மதுரையைச் சுற்றியும் தமிழகம் எங்கும் உள்ள கள்ளர்களின் தாய்நிலம் எது, வறண்ட பகுதிகளில் ஏன் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள், சங்க இலக்கியத்தில் வரும் ஆறலை கள்ளர்களும் இன்றுள்ள கள்ளர்களும் ஒன்றா, கள்ளர்களின் பூர்வீகத் தொழில் திருடுதல் என்பது எவ்வளவு பெரிய பொய், ஏன் கள்ளர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மைகளின் மீது அக்கறை கொள்ளவேயில்லை

அவருக்கு கள்ளர்களின் வாழ்க்கை அவலங்களை விடவும் அவர்கள் இரவில் களவு செய்யப்போவதில் தான் அதிகமான சுவராஸ்யமிருக்கிறது. இதைத்தான் காலம்காலமாக தமிழ் சினிமா காட்டி வருகிறது. திருடன் எப்பேர்பட்ட காவலையும் மீறி திருடிவிடுவான். அவனை போலீஸ் ஒருநாளும் பிடிக்கவே முடியாது. திருடன் அதி புத்திசாலி. இருட்டிலும் அவனுக்கு கண் தெரியும், அவன் ஒரு மாயாவி என்று தமிழ் சினிமா கட்டிய பிம்பத்திற்கும் அசலான கள்ளர்களின் வாழ்க்கைக்கும் எவ்வளவோ வேறுபாடு இருக்கிறது.

மதுரையைச் சுற்றிய கள்ளர் கிராமங்களில் வாழ்ந்து வருபவர்களிடம் பேசிப்பாருங்கள். எவ்வளவு வாழ்க்கை அவலங்களை அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள், எத்தனை ரணங்கள், வலிகள் அவர்களிடம் மறைந்திருக்கின்றன என்று புரியும். வெங்கடேசன் கள்ளர்களின் அந்த வலியை வாசகனுக்குப் பகிர்ந்து தரவில்லை தகவலாக திரட்டி நிரப்பியிருக்கிறார். வேல ராமமூர்த்தியின் எழுத்தில் வெளிப்படும் கள்ளர் வாழ்க்கையின் ரணமும் ஆற்றாமையும் உக்கிரமான கோபமும் வெங்கடேசனின் நாவலில் துளியுமில்லை.

கள்ளர் வாழ்வியல் பகுதி முழுவதும் திருடன் என்ற சினிமா பிம்பத்தை இன்னும் ஊதி பெருக்கியிருக்கிறார். மாடு திருடுதல், தானியக்கொள்ளைக்காக ரயிலில் திருடுவது. வீடு புகுந்து கன்னம் வைப்பது என்று களவினைக் கொண்டாடுகிறார். ஜல்லிகட்டில் மாடு பிடிப்பதையும், பார வண்டி திருட்டையும் சிலாக்கிறார். இந்தக் கொண்டாட்டத்தில் அடிபட்டு போய்விடுவது அவர்களின் நிம்மதியற்ற அன்றாட வாழ்க்கை மற்றும் கள்ளர் குடும்ப்ப் பெண்களின் அல்லல்படும் பிழைப்பு. குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு சிறை சென்று திரும்பியவர்களை சமூகம் நடத்தும் புறக்கணிப்பு போன்றவை இந்த நாவலில் விரிவாக அடையாளம் காட்டப்படவேயில்லை.

கள்ளர் வீடுகளுக்கும் கதவிருக்கிறது, அதைப் பூட்டிக் கொண்டு தான் உறங்குகிறார்கள், கள்ளர் வீட்டுப் பெண்களின் தாலியும் தங்கம் தான் என்ற உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. வாழ்க்கை நெருக்கடி தான் மனிதனைத் திருடனாக்குகிறது. எவனும் பிறப்பால் திருடன் இல்லை.

பழங்கதைகளில் வரும் திருடர்களைப் போல மதுரைக் கள்ளர்கள் எப்படி திருடப் போனார்கள், எப்படி கன்னம் வைத்தார்கள், அதில் எந்த கோஷ்டி பிரபலமானது என்பதை இருநூறு பக்கங்களுக்கு விளக்கியிருக்கிறார். அதிலாவது ஏதாவது புதிய விஷயங்கள் இருக்கிறதா என்றால் அதுவுமில்லை.

சிறுவயதில் கால் திருடன் அரை திருடன் முக்கால் திருடன் முழு திருடன் என்று நாலு திருடர்களைப் பற்றிய கதை ஒன்றை கேட்டிருக்கிறேன். இதில் முழுதிருடன் அப்பா, மற்ற மூவரும் பிள்ளைகள். கால் திருடன் உடைந்த மண்பானை, ஒட்டை காலணா என நம்ப வைத்து ஏமாற்றுவான். அரை திருடன் ஒரு ஆளை துணைக்கு கூட்டி போய் ஜவுளிகடையில் உட்கார வைத்துவிட்டு தேவையான பொருளை வாங்கி வந்துவிடுவான். திருடன் கூட்டிப் போன ஆள் மாட்டிக் கொள்வான்.

முக்கால் திருடன் இதில் என்ன சவால் இருக்கிறது என்று அரண்மனைக்குள் உடும்பைப் போட்டு ஏறி அத்தனை காவலையும் மீறி ராணியின் கழுத்து மாலையை திருடி வருவான். இது எல்லாம் திருட்டா என்று முழுத்திருடன் திருடர்களை பிடிக்க மாறுவேஷத்தில் வந்த ராஜாவை மடக்கி, தான் உதவி செய்தவாக அவர் முத்திரை மோதிரத்தை வாங்கி கொண்டு அவரை ஒரு சாக்கில் கட்டி வைத்துவிட்டு அரண்மனைக்குப் போய் முத்திரை மோதிரத்தை காட்டி வேண்டிய தங்கம் அள்ளிக் கொண்டு வந்துவிடுவான்.

இந்தக் கதை வேடிக்கைக்காக சொல்லப்படுகிறது. இதை சரித்திர உண்மையாக்கியிருக்கிறார் வெங்கடேசன்.

யாரும் நுழைய முடியாத திருமலை நாயக்க மன்னரின் அரண்மனைக்குள் இரண்டு கள்ளர்கள் கன்னம் வைத்துப் போய் ராஜ முத்திரையை திருடி வந்த காரணத்தால் அவர்களைப் பிடித்து வர ஆணையிட்டு சபைக்கு கொண்டு வந்ததும் திருடியவனுக்கு மூன்று சவுக்கடி தந்து இனிமேல் நீங்கள் தான் மதுரை நகரை காவல் காக்க வேண்டும் என்று பட்டயம் தருகிறார். திருடனை அரசன் முன் கொண்டுவந்தவனுக்கு கள்ளநாட்டில் நீதி பரிபாலனம் செய்யும் உரிமை தருகிறார்.

திருடனும் தான் அரண்மனையில் கன்னம் வைத்த ஒட்டை அப்படியே இருக்கட்டும் என்று பணிவாக வேண்டுகோள் விடுக்கிறான். திருமலை நாயக்கரும் அதற்கும் சம்மதிக்கிறார். எவ்வளவு அப்பாவியான ராஜா. எவ்வளவு அப்பாவியான மக்கள். திருடன் கையில் கஜானா சாவியை ஒப்படைத்து விடுவது என்பது எவ்வளவு பெரிய ராஜதந்திரம். இதுதான் கள்ளர்களின் வீரப்பரம்பரை சான்று என்று நாவலின் இரண்டாம் பகுதி கூறுகிறது.

கள்ளர்கள் மதுரையை காவல் புரிந்தார்கள் என்று புகழாரம் சூட்டுகிறது. சரி காவல் புரிந்தார்கள். யாருக்கு, எதற்காக, யாரிடமிருந்து? சம்பளத்திற்காக செய்த வேலை தானே அது. அவர்கள் வாழ்க்கை அப்போது எப்படியிருந்தது? மதுரை நகரையே காவல் காக்கின்றவன் என்பதற்காக மாநகரில் அவர்கள் தங்கிக் கொள்ள வசதி செய்யப்பட்டிருந்தா? இல்லை அவர்கள் மனைவி மக்கள் அரசு அதிகாரத்தில் பங்கு பெற அனுமதிக்கப்பட்டார்களா, இல்லையே? மீனாட்சி அம்மன் கோவிலில் கள்ளர்களுக்கு என்ன மரியாதை தரப்பட்டது? கள்ளழகர் உருவான கதை அறிந்தவர்கள் அதன் பின் உள்ள புறக்கணிப்பின் வலியை அறியாமலா இருப்பார்கள்?

கள்ளர்களை ஒடுக்குவதற்கு நாயக்கர் செய்த தந்திரமே இந்தக் காவல் முறை. தன் கையை வைத்து தன் கண்ணைக் குத்தி கொள்ள வைப்பது போன்றது. மதுரை வீரன் கதையில் கள்ளர்கூட்டத்தை ஒடுக்குவதற்காக மதுரை வீரன் வந்தான், ஒடுக்கினான் என்று நாட்டார் கதை பேசுகிறதே. அது நாயக்கர் காலத்தில் தானே நடந்தது. ராமேஸ்வரம் போகின்ற யாத்ரீகர்களைக் கொன்று வழிப்பறி செய்தார்கள் என்ற குற்றசாட்டுகள் லண்டன் நீதிமன்றம் வரை சென்ற வழக்குகளை இன்றைக்கும் வாசிக்க முடிகிறதே?

கள்ளர்கள் கிராமங்களில் காவல் பணி புரிவதும், வரி வசூலில் ஈடுபட்டு வந்ததிற்கும் நாயக்கர் காலத்திற்கு முன்பே நிறைய சான்றுகள் இருக்கின்றன. வெங்கடேசன் நாயக்கர்களால் தான் கள்ளர்கள் நல்வாழ்வு பெற்றார்கள் என்று நாயக்கர் பெருமையை உயர்த்திப் பிடிக்கவே மறைமுகமாக முயற்சித்திருக்கிறார்.

மதுரை மாநகர் காவல் தான் கள்ளர்களுக்கு கிடைத்த பெரிய பேறு என்று வைத்துக் கொண்டாலும் காவல் பணிக்கு எத்தனை பேர் போயிருப்பார்கள்? அதிகம் சென்றால் நூறு பேர் போயிருக்கக் கூடும். மற்றவர்கள்? தாதனூரைத் தவிர மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்த கள்ளர்கள் எதை நம்பி வாழ்ந்தார்கள்? மதுரை ஏன் அவர்களை உள்வாங்கிக் கொள்ளவில்லை? எது அவர்களைத் தொடர்ந்து இருண்ட மூலைகளில் குற்றச்சமூகமாகவே வைத்திருந்தது?

மதுரையின் மேற்கில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்தைத் தான் வெங்கடேசன் உருமாற்றி புனைஉருவம் தந்திருக்கிறார். இந்த கிராமம் குற்றப்பரம்பரைச் சட்டத்தில் பாதிப்பு அடைந்த கிராமம். ஊரின் வடபுறத்தில் சமண மலை ஒன்றும் சமண பிரதிமைகளும் காணப்படுகின்றன. மலையின் உச்சியில் ஆடுஉறிச்சான் பாறை என்று ஒன்று காணப்படுகிறது. அங்கே திருடிக் கொண்டு போன ஆட்டை உறிப்பார்கள். இந்த ஊர் பற்றிய ரிக்காடுகளே அவரது நாவலின் முக்கிய அம்சம்.

அந்த ஊரின் துயர்படிந்த வரலாற்றையாவது முழுமையாக சித்திரிக்க முடிந்திருக்கிறதா என்றால் அதிலும் தோல்வியே. தரவுகள், தகவல்கள் கையில் இருந்தபோதும் கதையாக்க முடியாத அவரது எழுத்துத் தோல்வியே பக்கம் பக்கமாக பிரசங்கம் போல நீட்டிச் செல்கிறது. திருடுவது, பிடிபடுவது, விசாரணை, தண்டனை, மறுபடியும் அதன் தொடர்ச்சியான வன்கொலை என்று சலிப்பூட்டுகின்றன சம்பவங்கள். அதை தினுசு தினுசாக மாற்றி சொல்லிப் பார்த்திருக்கிறார்.

தேர்தல் சுற்றுபயணம் போகின்றவர்கள் ஒரு நாளில் எண்பது கிராமங்களை வட்டமடித்து வருவதைப் போலத் தான் நாவலும் மாறிமாறி வட்டமடிக்கிறது. தாதனூர், பிறகு உசிலம்பட்டி, பிறகு கம்பம், அதற்குள் பெரியார் அணைகட்டு, இடையிடையில் மதுரை.

பெரியார் அணை கட்டுவதில் ஈடுபட்ட கள்ளர் இன மக்களின் வம்பாடுகளை, உயிரிழப்பைப் பற்றி நானே நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அணைக்கட்டு வேலையில் இறந்து போனவர்களின் கல்லறைகளை நேரில் பார்த்திருக்கிறேன். கொட்டும் மழையும் நோயும் விஷக்கொசுக்கடியும் உள்ள சூழலில் அவர்கள் ஒன்றிணைந்து அணையை உருவாக்கிய அந்த பிரம்மாண்ட கனவு நாவலில் காற்றில் பறக்கும் இலவம்பஞ்சு போல போய்விடுகிறது. பென்னி குக்கின் வருகையும் அவரது அணைக்கட்டு முயற்சிகளும் தனித்து விரிவாக எழுதப்பட வேண்டிய நாவலது.

பெரியார் அணை முடிந்தவுடன் நீர்ப்பங்கீடு அடுத்தது சிடி ஆக்ட் எனப்படும் குற்றப்பரம்பரை சட்டத்திற்கு தாவிச் செல்கிறார். குற்றப்பரம்பரை சட்டம் கள்ளர்களை ஒடுக்குவதற்காக மட்டும் போடப்பட்ட சட்டமல்ல. மாறாக இந்த சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் உப்புக் குறவர்கள். அவர்கள் ஊர் ஊராகப் போய் உப்பு விற்றார்கள். வெள்ளை அரசாங்கம் உப்பை தாங்களே வாங்கி விற்கத் துவங்கிய பிறகு இவர்களை ஒடுக்க நினைத்தது. ஆனால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்த நேரம் இந்தியாவில் ரயில் போக்குவரத்து துவங்கவே உப்புக் குறவர்களை ஒடுக்குவதற்காக அந்த இனமே திருடர்கள் என்று அறிவித்து அவர்களை குற்றவாளிகள் ஆக்கியது. அப்போது தான் இந்த சட்டம் மறுஉயிர்ப்பு பெற்றது. உடனே இந்த சட்டத்தைப் பயன்படுத்தி தொல்லை தரும் நபர்களை ஒடுக்கிவிடலாம் என்று காவல் உயரதிகாரிகள் சொன்ன ஆலோசனை படியே பல்வேறு மாநிலங்களிலும் உள்ள ஆதிவாசிகள், அடித்தட்டு இனங்களை, குற்றக்குழுக்களை ஒன்றிணைத்து குற்றப்பரம்பரை சட்டம் (The Criminal Tribes Act) 1871 அமுலுக்கு வந்தது. அதன் திருத்தபட்ட வடிவம் 1911ல் ஏற்றுக் கொள்ளபட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நடைமுறைப்படுத்தலுக்கான வழிகாட்டும் குழுவில் ராமானுஜம் அய்யங்கார் என்ற தமிழ் காவல்துறை அதிகாரி செயல்பட்டிருக்கிறார். வங்காளத்தில் இருந்த நதிக் கொள்ளையர்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்த நாடோடி வழிப்பறி கொள்ளைகளையும் தடுக்க இந்த முயற்சி தீவிரப்படுத்தபட்டது. இந்தியா முழுவதும் 160 சாதிகளின் மீது இந்த சட்டம் பாய்ந்திருக்கிறது. இதில் சில இன்றும் நடைமுறையில் இருக்கிறது. வங்காள எழுத்தாளர் மகேஸ்வதா தேவி குற்றப்பரம்பரையான ஆதிவாசிகளின் உரிமைக்காக இன்றும் போராடி வருகிறார்.

தமிழ்நாட்டில் இந்த சட்டம் பெரிதும் அதிகார வர்க்கத்தின் நலனுக்ககாவே நடைமுறைபடுத்தபட்டது. அதை எதிர்த்து பெருங்காமநல்லூரில் போலீஸூடன் துப்பாக்கிச் சூடு நடந்து பலர் உயிர்ப்பலியானர்கள். எதிர்ப்பு வலுத்தது. முத்துராமலிங்கத் தேவருடன் பி. ராமமூர்த்தி, ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் போராடி அந்த சட்டத்தை ரத்து செய்தார்கள் என்பதே வரலாறு.

குற்றப்பரம்பரை சட்டம் பற்றி பேசும்போது அதில் விவசாய நிலம் கொண்டவர்கள், நிலவரி கட்டுபவர் விதி விலக்கு பெற்றதும், தஞ்சாவூர் பகுதியில் வாழ்ந்த கள்ளர் இன மக்கள் மீது இந்த சட்டம் தீவிரமாகப் பாயவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏன் மதுரையின் மேற்கில் உள்ள கள்ளர் கிராமங்கள் அடைந்த பாதிப்பை ஆற்றுப் பாசனம் சார்ந்த கிராமம் அடையவில்லை, கிழக்கே ராமநாதபுர பகுதி அதிகம் பாதிப்பு கொள்ளவில்லை? ஆகவே இது முழுமையான அரசு அதிகாரத்தின் ஒடுக்குமுறை சட்டமாகவே அமுல்படுத்தப்பட்டிருக்கிறது

வெங்கடேசன் மேடைப் பேச்சை போல குற்றப்பரம்பரை தரவுகளை அடுக்கி கட்டியிருக்கிறார். சிடி ஆக்டின் பாதிப்போ. மறுவாழ்வு தருகிறோம் என்ற பெயரில் நடைபெற்ற அதிகார கூத்துகளோ மனதை பாதிப்பதாக அமையவில்லை. குற்றப்பரம்பரை சட்டம் ஒழிக்கப்படுவதன் முன்பே நாவல் முடிந்து போய்விடுகிறது. எப்படி இதிலிருந்து மக்கள் விடுதலை ஆனார்கள் என்பதில் தான் ஒன்றுபட்ட மக்களின் முயற்சியும் ஆவேசமும் உள்ளது. அதை நாவல் கவனம் கொள்ளவேயில்லை.

அதே நேரம் இவ்வளவு அரும்பாடுபட்டு தங்கள் உரிமைகளை பாதுகாத்துக்கொண்ட மக்கள் இன்று தனது சகமனிதர்களான தலித் மக்களை தேர்தலில் நிற்கவிடாமல் தடுப்பதும் அவர்கள் அடிப்படை உரிமையைப் பறித்து வன்கொலை செய்வதும் அதே மதுரை பகுதியில் தான் நடந்து வருகிறது என்ற சமூக உண்மையை மறந்து இந்த நாவலை வாசிக்க முடியவில்லை.

நாவல் சிடி ஆக்ட் பற்றிய நிறைய ஆவணங்களை ஒன்று சேர்த்திருக்கிறது. அவை எல்லாம் கீழக்குயில் குடி ஆவணங்கள் தான். அந்த ஆவணங்களின் உதவியால் மட்டும் மனித அவமானத்தின் வலியை எழுத்தில் கொண்டுவர இயலவில்லை.

ரயில் வருகை, பள்ளிகளின் வருகை, போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது என்று தனித்தனி அத்தியாயம் போட்டு பிரித்து எழுதிய வெங்கடேசன் கண்டு கொள்ளாமல் விட்டுப் போன முக்கிய விஷயம் கிறிஸ்துவத்தின் வருகையும். அது மதுரைச் சீமையில் ஏற்படுத்திய உள்ளார்ந்த கொந்தளிப்பும். பசுமலையில் உள்ள மதுரை மிஷினரி பற்றியும், பள்ளி, போதகர்கள் சேவை பற்றியும் போகிற போக்கில் சொல்லி போகத் தெரிந்தவருக்கு மதுரை மிஷனரியின் 75 ஆண்டுகால வரலாற்றின் இருண்ட பக்கங்களை புரட்டி எழுத வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?

நாயக்க மன்னர்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது கிறிஸ்துவரின் வருகையும் அதைத் தொடர்ந்த மதமாற்றங்களும். அவர்களை ஏற்றுக் கொள்வதா அல்லது ஒதுக்கி வைப்பதா என்று தெரியாத குழப்பம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மறவர் நாட்டில் கிறிஸ்துவம் நுழைவதற்கு வெளிப்படையான எதிர்ப்பு இருந்தது. பிரசங்கிகள் தாக்கப்பட்டார்கள். அடித்து காயப்படுத்தபட்டார்கள்.

ஜெசுவிட் பாதிரி ஒருவர் தனது சபைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் பிரசங்கம் செய்யப் போகின்றவர்களின் பல்லை உடைக்கிறார்கள். அதையும் மீறிச் சென்றால் பிடித்து சிறையில் இடுகிறார்கள். திரும்பவும் அந்தப் பகுதிக்கு போனால் தலையைத் துண்டித்துவிடுகிறார்கள் என்று புகார் சொல்கிறார். உடனே திருச்சபை வெளிநாட்டிலிருந்து வரும் பாதிரிகள் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இதற்காக இன்றுள்ள களியக்காவிளை பகுதியில் தமிழ் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்கிறது. அங்கே பயின்று பிரசங்கத்திற்கு வந்தவர்கள் தங்களை ஐயர் என்று சொல்லிக் கொண்டு வேஷ்டி அணிந்திருந்தார்கள். சைவம் மட்டுமே சாப்பிட்டார்கள். அப்படியும் அவர்களால் தங்கள் மத நம்பிக்கையை மக்களிடம் சுலபமாக கொண்டு போக முடியவில்லை என்று ஜெசுவிட் மிஷனரி ஏடுகள் தெரிவிக்கின்றன.

இன்னொரு பக்கம் கடற்கரை பகுதியில் உள்ள மீனவ மக்கள் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டனர். போர்த்துகீசியர் அதற்கு நிதி நல்கை தந்தனர் என்பதால் போர்த்துகீசிய வணிகர்கள் அந்தப் பகுதிகளில் வரிவிலக்கோடு வணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அது நிர்வாக குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு நாயக்க மன்னிரின் முன்னாலும் இருந்த முக்கிய கேள்வி கிறிஸ்துவ போதகர்களை என்ன செய்வது, எப்படி நடத்துவது என்பதே. ஆராய்ந்து பார்த்தால் பல அரசியல் மாற்றங்களின் பின்னே இந்தக் காரணம் ஆழமாக வேரோடியிருக்கிறது.

ராணி மங்கம்மாளைக் காண்பதற்காக லிஸ்பனில் இருந்து வந்த கிறிஸ்துவ மிஷனரியைச் சேர்ந்த மூத்த பாதிரி முதன்முறையாக ஒரு உலக உருண்டை ஒன்றை அவளுக்குப் பரிசளிக்கிறார். அதுவரை அவள் உலக உருண்டை பற்றி கேள்விப்பட்டது கூட கிடையாது. வியப்போடு பார்க்கிறாள். அந்த உலக உருண்டையில் தங்கப் பிடி உள்ளது. ஊர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் இவ்வளவு தானா என்று பிரமிப்பதாக இருக்கிறது.

அத்தோடு இரண்டு லென்சுகளை பரிசாகத் தருகிறார். ஒன்று தூரத்தில் உள்ளதை அருகில் காட்டுகிறது. மற்றது அருகில் உள்ளதை தூரத்தில் காட்டுகிறது. இது எப்படி என ராணி வியக்கும் போது இது தேவனின் மகிமை என்கிறார் மிஷனரி.

அவள் மிஷனரியைப் பாராட்டி தன் எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்ல அனுமதித்து தன் சார்பில் பரிசுகள் தருகிறாள். ஆனால் அன்றிரவே மனம்மாறி அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து தன் எல்லைக்குள் அவர் நடமாட கூடாது என்று வெளியேற்றினாள் என்றும் மிஷனரி ரிக்காடுகள் கூறுகின்றன.

இப்படி தோண்ட தோண்ட பூதம் கிளம்பும் விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் ஏன் விலக்கி போனார்? ஒரே காரணம் இந்தத் தகவல்கள் எளிதில் கிடைக்க கூடியதில்லை. இதற்காக பாரீஸில் உள்ள ஆவணக்காப்பகத்தை நாட வேண்டியதிருக்கும். தேடி அலைவது பெரிய சவாலாக இருந்திருக்கும். இன்னொன்று அதைக் கற்பனை செய்து ஆழமாக எழுதுவது மிகப்பெரிய வேலை.

வெங்கடேசன் நாவலில் வரும் மிஷனரி போதகரின் கடிதங்கள் யாவும் வெற்று தகவல்கள் மட்டுமே.

நாவல் பெருங்காம நல்லூர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டோடு நிறைவு பெறுகிறது. நாளிதழ் செய்தி வரை எத்தனையோ தகவல்கள் கிடைப்பதால் அதை எளிதாக நிரப்ப முடிந்திருக்கிறது.

நாவலைப் படித்து முடித்த பிறகு ஒவ்வொரு அத்தியாயத்திலும் வந்து போகும் பத்து பதினைந்து பெயர்கள், சம்பவங்கள் எதுவும் நினைவில் இருப்பதில்லை. எண்ணிக்கையற்ற கதாபாத்திரங்கள். துண்டு துண்டான அத்தியாயங்கள்.

கதை என்று இந்த நாவலில் எதுவுமில்லை. தலைமுறை தலைமுறையாக வளர்ந்து செல்லும் கதைப் போக்கு கூட இல்லை. சர்வே ரிக்கார்ட் அல்லது சென்சஸ் ரிக்கார்ட் ஒன்றை எடுத்து அதில் வரும் பெயர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு அத்தியாயம் தகவல்களை நிரப்பி எழுதினால் எப்படியிருக்குமோ அந்த சோர்வு தான் மிஞ்சுகிறது.

நாவல் முழுவதும் ஆங்காங்கே சமணர்களைப் பற்றிய விஷயங்கள் லேசாக தூவப்பட்டிருக்கின்றன. ஒன்றிரண்டு இடங்களில் புத்த பிரதிமை வருகிறது. அது எதற்கு என்று நாவல் முடிந்தபிறகும் புரியவேயில்லை. ஒரு வேளை இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் இருக்கிறது சமணமும் பௌத்தமும் போட்டுவிட்டால் மத ஒற்றுமையைப் பற்றி எழுதியதாக சொல்லலாம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ?

மிதமிஞ்சிய தகவல் சேகரிப்பும், தான்சேர்த்து வைத்த தகவல்களை மொத்தமாகக் கொட்டி வாசகனை திணறடிக்க வேண்டும் என்ற முனைப்பும், கற்பனையே இல்லாத வறட்டு விவரணைகளும், கோணங்கியின் மொழியிலிருந்து உருவி எடுக்கபட்ட இருளைப் பற்றிய, நிசப்தம் பற்றிய, ஊரைப் பற்றிய, களவு, வேட்டை குறித்த வர்ணனைகளும், முழுமையற்ற கதாபாத்திரங்களும், தொடர்ந்து வெங்கடசனே நாவலில் நுழைந்து செய்யும் பிரசங்கங்களும் நாவலை மிகப் பலவீனமானதாக ஆக்குகின்றன.

காவல் கோட்டம் மதுரையை பற்றிய வெறும் கட்அவுட் சித்திரம் மட்டுமே.

காவல் கோட்டத்தில் பாராட்டும்படியாக எதுவும் இல்லையா என்று கேட்பது புரிகிறது. உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள் காவல்கோட்டம் போன்ற நாவலைக் கூட விபரம் தெரியாமல் படித்துவிடக்கூடிய வாசகர்கள் தான். (நான் இதற்கு பலியாக்கபட்டவன். ஆகவே என்னை சேர்க்க முடியாது)

அதிலும் வெளியான நாலு நாளில் அதைப் படித்து விகடன் விருதுக்குத் தேர்வு செய்த அந்த மகானுக்கு இந்த ஆண்டின் சிறந்த வாசகர் விருது தரலாம்.

பின்குறிப்புகள்

என்னிடம் உள்ள பிரதியில் கடைசி அத்யாயம் இரண்டு தடவை அச்சாகி வேறு இருக்கிறது. அதையும் சேர்த்துப் படித்து வைக்கவேண்டிய இம்சை ஏற்பட்டது.

நாவலை இரண்டு ஆண்டுகாலம் மூன்று பேர் எடிட் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன். எடிட்செய்ததே இப்படியிருக்கிறது என்றால் இதை எடிட் செய்யாமல் படித்திருந்தால்? நினைக்கவே பயமாக இருக்கிறது. இது வெங்கடேசனின் முதல் நாவல் என்கிறார்கள். அது இன்னமும் பயத்தை அதிகப்படுத்துகிறது.

- எஸ்.ராமகிருஷ்ணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It