தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத் திராவிட இயக்கங்கள் ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வருகின்றன. 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நமது தமிழ்நாட்டிற்குச் சொந்தமான பெரும்பான்மையான பகுதிகளை இழந்தோம்.

திமுக 1967 இல் காங்கிரசை வீழ்த்தி பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சியமைத்த பின்னர்தான் தமிழ்நாட்டின் உரிமைகள் உயிர்ப்பிக்கத் தொடங்கின.

இராஜமன்னார் குழு

அறிஞர் அண்ணா மறைவுக்குப் பின் கலைஞர் 1969 இல் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார். இதே ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பி. வி. இராஜமன்னார் தலைமையில் மாநில சுயாட்சி உரிமைகள் குறித்து ஆய்வு செய்ய ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு. இலட்சுமணசாமி, ஆந்திர மாநில முன்னாள் தலைமை நீதிபதி நீதியரசர் பி. சந்திராரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசிடம் கையளித்தது.

இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள்

  1. இந்திய அரசியல் அமைப்புச் சட்ட உறுப்பு 263 இன் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையிலான மன்றம் அமைக்க வேண்டும். தேசிய அளவிலான முடிவுகள் எடுக்கும்போது இம்மன்றத்தைக் கட்டாயம் கலந்தாலோசிக்க வேண்டும்.
  2. மாநில அரசின் ஆலோசனையுடனேயே ஆளுநரை நியமிக்க வேண்டும்.
  3. மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.
  4. மாநில அரசைக் கலைக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்குத் தரும் அரசியல் சட்டத்தின் உறுப்பு 356 நீக்கப்பட வேண்டும்.
  5. அரசியல் சட்டத்தின் ஒன்றியப் பட்டியலில் உள்ள சில அதிகாரங்களையும், பொதுப் பட்டியலில் உள்ள பல அதிகாரங்களையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
  6. எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

இவையே இராஜமன்னார் குழுவின் முதன்மையான பரிந்துரைகளாகும்.

எனினும் ஒன்றிய அரசு தொடர்ந்து மாநில அதிகாரங்களைப் பறிப்பது தொடர்கதையாகவே உள்ளது.

நீட் தேர்வு

அவசரநிலை 1975 இல் வந்தபோது மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்குக் காங்கிரஸ் அரசால் மாற்றப்பட்டது. இதுபோல தொடர்ந்து மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன.

நீட் நுழைவுத் தேர்வின் மூலம் மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்க்கும் மாநில உரிமை பறிக்கப்பட்டுவிட்டது.

அதேபோல சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை; நீண்ட காலம் தாமதம் செய்யப்படுகிறது. இதற்காக மாநில அரசு நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

ஆளுநர் மாநிலத்தில் மற்றுமொரு அதிகார மையமாக மாறி, மாநில அரசை மிரட்டுகிற நிலை உருவாகிறது.

பிற ஆணையங்கள்

இந்த நிலை இன்னும் தொடர்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு செய்து இடஒதுக்கீட்டை ஒழுங்கு செய்யும் நோக்குடன் ஏ. குலசேகரன் ஆணையம் 2020 இல் அமைக்கப்பட்டது. நீட் தேர்வு தொடர்பாக ஏ. கே. ராஜன் ஆணையம் 2021 இல் அமைக்கப்பட்டது.

கேள்விக்குறியான மாநில உரிமைகள்

தொடர்ச்சியாக மாநில உரிமைகளைப் பறித்து ஒன்றிய அரசின் ஆதிக்கத்தை அதிகரிப்பதே ஒன்றிய அரசுகளின் ஒருவகை ஆதிக்க அடக்குமுறையாக இருந்து வருகிறது. 1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோதே இன்றைய பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அதனைக் கடுமையாக எதிர்த்தது.

ஜி.எஸ்.டி மூலம் மாநில அரசுகளின் நிதி அதிகாரம் பறிக்கப்பட்டது. நீட் தேர்வு மூலம் கல்வி உரிமை காவு கொடுக்கப்பட்டது. இந்தித் திணிப்பு, சட்டங்கள் மற்றும் திட்டங்களின் பெயர்களாக வந்தது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள் ஆளுநரால் கேலிக்கூத்தாக்கப்பட்டன. சட்டமன்றத்தில் மாநில அரசின் உரையை வாசிக்க மறுத்து ஆளுநர் சட்டமன்றத்தை அவமதிப்பது தொடர்கதையானது.

ஜோசப் குரியன் ஆணையம்

ஆளுநர் மாநில அரசை நடத்த முடியாத வகையில் பெரும் அச்சுறுத்தலாக இருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அன்றைய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் ஜோசப் குரியன் ஆணையம் அமைக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களைத் தலைவராகவும், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் திரு. அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் முன்னாள் மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் பொருளாதார நிபுணர் பேராசிரியர் எம். நாகநாதன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு இவ்வாணையம் 17.09.2025 அன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.

ஜோசப் குரியன் ஆணையத்தின் நோக்கங்கள்

இந்த ஆணையத்தின் நோக்கங்களாவன:

  • மாநிலத்திற்கான ஜிஎஸ்டி உள்ளிட்ட நிதிப் பங்கீட்டில் மாநிலங்களுக்கு உரிய பங்கு வழங்குதல்
  • கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாத்தல்
  • சட்டமன்ற உரிமைகளை நிலைநாட்டுதல்
  • அரசியல் சட்டத்தின் பொதுப் பட்டியல் மற்றும் அதிகாரங்களில் மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களைப் பெறுதல்

என்பன உள்ளிட்ட மாநில அரசின் உரிமைகள் தொடர்பானவை குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை வழங்குவதே இவ்வாணையத்தின் நோக்கமும் பணியுமாகும்.

ஜோசப் குரியன் ஆணையத்தின் முதற்கட்ட அறிக்கை

ஜோசப் குரியன் ஆணையத்தின் முதற்கட்ட அறிக்கை 16.02.2026 அன்று தமிழ்நாடு அரசிடம் கையளிக்கப்பட்டது.

பரிந்துரைகள்

ஜோசப் குரியன் ஆணையத்தின் முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள்:

  1. சட்டப்பேரவையால் பரிந்துரை செய்யப்படும் மூன்று பேரில் ஒருவரையே ஆளுநராக நியமிக்க வேண்டும்.
  2. ஆளுநரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
  3. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மூலம் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்யலாம்.
  4. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் 15 நாட்களில் ஒப்புதல் தரவேண்டும்; இல்லையென்றால் மசோதா சட்டமாகிவிடும்.
  5. பல்கலைக்கழகங்களின் வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருக்க வேண்டும்.
  6. ஆளுநருக்குச் சிறப்புரிமை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 176 நீக்கப்பட வேண்டும்.
  7. கல்வி மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
  8. தேசிய தேர்வுகள் முகமை (NTA) கலைக்கப்பட வேண்டும்; நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்.
  9. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் என்பன கைவிடப்பட வேண்டும்.
  10. உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அந்தந்த மாநில மொழிகளே இருக்க வேண்டும்; இது குறித்துக் குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெறுவது நீக்கப்பட வேண்டும்.
  11. மாநில சட்டமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு அல்லது 75 சதவீத உறுப்பினர்களின் ஆதரவுடனேயே மாநில எல்லைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
  12. யூனியன் பிரதேசங்கள் அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.
  13. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் போது அந்த மாநிலத்தின் எல்லையை மாற்றியமைக்கக் கூடாது.
  14. நாடாளுமன்றத் தொகுதிகளை வரையறை செய்வது 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே செய்யப்பட வேண்டும்.
  15. மாநில சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல்களை மாநிலத் தேர்தல் ஆணையமே நடத்த வேண்டும்.
  16. அரசியல் சட்டத்தின் உறுப்பு 368 மாநில அரசுகளின் ஒப்புதலுடனேயே மாற்றப்பட வேண்டும்.

ஆணையம் கலைப்பு

இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில் 'மத்திய அரசு' என்று அழைக்கப்பட்டு வந்ததை 'ஒன்றிய அரசு' என்று அழைக்கின்ற நிலையை அன்றைய முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியது. அதேபோல மாநில உரிமைகளை நிலைநாட்ட ஜோசப் குரியன் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தின் முதற்கட்ட அறிக்கையும் வழங்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், திடீரென தற்போதைய அரசு இந்த ஆணையத்தைக் கலைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநில சட்ட ஆணையத்தின் பணிகளும் ஜோசப் குரியன் ஆணையத்தின் பணிகளும் ஒன்றாக இருப்பதால் இந்த ஆணையம் கலைக்கப்படுகிறது என்கின்ற காரணத்தைத் தற்போதைய அரசு தெரிவித்துள்ளது.

பாஜகவின் உள்ளடி வேலை

எப்படியாவது திராவிட இயக்கங்களை, குறிப்பாக திமுகவை ஒழித்துவிட வேண்டும் என்பதே மதவாத ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் நீண்டகாலத் திட்டமாகும். காங்கிரசும் கூட மாநில உரிமைகளுக்கு எதிரானதே.

பாஜகவின் ஆலோசனைப்படி ஜோசப் குரியன் ஆணையத்தைக் கலைத்து இன்றைய அரசு மாநில உரிமைகளைக் காவு கொடுத்துள்ளது.

அவசரமும் அவசியமும்

மாநில உரிமைகளை மட்டுமல்ல, மாநிலங்களையே ஒழித்துவிடுவதுதான் பாசிச பாஜகவின் திட்டம். இதற்கு எதிராக நீண்டகாலமாகவே திராவிட இயக்கங்களும் அனைத்து முற்போக்குச் சக்திகளும் தமிழ்நாட்டில் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிபோகும் நிலைக்குத் தற்போதைய அரசு தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்யும் அரசு பாஜகவின் செயல்திட்டங்களை எந்த மறுப்புமின்றி நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் விளைவு தமிழ்நாட்டை இருளில் தள்ளிவிடும். எனவே மாநில உரிமைகளுக்கான குரலை ஓங்கி ஒலிக்க வேண்டியது அவசர, அவசியக் கடமையாகும். ஜோசப் குரியன் ஆணையத்தை மீண்டும் செயல்முறைக்குக் கொண்டுவந்து, இவ்வாணையத்தின் இறுதி அறிக்கையைப் பெற்று தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் வெளியிட வலியுறுத்தி அனைவரும் ஓரணியாகத் திரண்டு குரல் கொடுப்போம்; போராடுவோம்.

- வழக்கறிஞர் தமிழகன், திருச்சிராப்பள்ளி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.