மையக் கருத்து: தொழிலாளர்களின் அறியாமையையும் உணர்ச்சியையும் அமைப்பும் அதன் பொறுப்பாளர்களும் தங்களின் அரசியல் விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதையும்; கோட்பாட்டு வறட்டுத்தனத்தினால் (Ultra-left dogmatism) ஆலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் வேலை வாய்ப்பிலும் தோழர்கள் வாழ்விலும் ஏற்பட்ட துயரங்களையும் பேரழிவுகளையும் வரலாற்றுப் பூர்வமாகப் பதிவு செய்து உணர்த்தும் ஆவணம்.
---
பகுதி 1: சங்கம் கடந்து வந்த பாதை! (நிகழ்வுகளின் முழுமையான காலவரிசை)
* 2001: ஒசூரில் மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தமிழ்நாடு என்ற பேனரில் அரசியல் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் 5 பேர் கொண்ட குழு மூலம் மேற்கொள்ளப்பட்டன.
* 2005 & 2007: அசோக் லேலண்ட் தொழிற்சங்கத்தேர்தல்களில் தோழர் பரசுராமன் தலைமையில் 4 தோழர்கள் இரண்டுமுறை போட்டியிட்டனர்.
* 2007: தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் ஒசூர் என்பதால், ஆர்வமுடன் பேசும் தொழிலாளர்களைச் சங்கம் என்ற வடிவத்திற்குள் கொண்டு வந்தால் வர்க்க உணர்வை வளர்த்தெடுக்க எளிதாக இருக்கும் என உணரப்பட்டது. அதனடிப்படையில் 2007 ஆம் ஆண்டு உடனிருந்த தோழர்களில் எழுத்தாற்றல் கொண்ட ஆலைத் தொழிலாளியுமான பரசுராமன் அவர்கள் ஆவணங்களைத் தயார் செய்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சங்கம் தொடங்கிப் பதிவு செய்தார் (Reg No: 24/KRI). பல ஆலைத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து பிரசுரம், சுவரொட்டி வெளியிட்டு பிரச்சாரம் செய்து கவனம் ஈர்க்கப்பட்டது.
* 2009: கமாஸ் ஆலையில் 15 ஆண்டுகளாக வேலை செய்து வந்த நிரந்தரத் தொழிலாளர்களின் பணி நிரந்தர உரிமைகள் நிர்வாகத்தால் திட்டமிட்டுப் பறிக்கப்பட்டன. பிற தொழிற்சங்கங்களாலும் கைவிடப்பட்டு, 45,000 ரூபாய் இழப்பீடு பெற்று வெளியேற வேண்டிய இக்கட்டான சூழல் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் புஜதொமு கிளைச் சங்கம் தொடங்கப்பட்டது.
* 2010: கமாஸில் அமைப்பு வழிகாட்டிய விடாப்பிடியான தொடர் போராட்டத்தால் ஓசூர் நகரம் திரும்பிப் பார்த்தது. கிளைச் சங்கம் நிலைநிறுத்தப்பட்டு, பணி நிரந்தர உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. பரசுராமனின் 15 ஆண்டு கால தொழிற்சங்க அனுபவக் கடிதம், வாதத்தின் மூலம் ஆட்டோமொபைல் நிறுவன வரலாற்றில் அது வரை பெறாத Rs 11,000-க்கு மேல் ஊதிய உயர்வு ஒப்பந்தமும் பேசி முடித்தார். இது பிற ஆலைத் தொழிலாளர்கள் கவனத்தை ஈர்த்தது.
* 2011: மாதாந்திர கமாஸ் கிளைக் கூட்டத்தில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பிரச்சாரத்திற்கான அரசியல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. ஆலையில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு அணுகப்பட்டு வந்தன.
* 2012 (கமாஸ் ஆலை பின்னடைவு): ஆலைத் தொழிலாளர்களுக்கே தெரியாமல் திடீரென அமைப்பின் பகுதி பொறுப்பாளர் வழிகாட்டியபடி, "டிரான்ஸ்ஃபர்” என்ற பெயரில் பாதிக்கப்பட்ட 15 கமாஸ் தொழிலாளர்களைக் கொண்டு நிர்வாக அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. சங்க நிர்வாகிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். "தற்போது போராட்டத்தை வாபஸ் பெற்று சட்டபூர்வமான வழியில் அணுகலாம்" என்ற சங்கச் சிறப்புத் தலைவர் பரசுராமனின் ஆலோசனையை அமைப்பின் பொறுப்பாளர் ஏற்கவில்லை. இதனால் சங்க நிர்வாகிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட சங்க நிர்வாகிகளுக்குச் சக தொழிலாளர்கள் மாதாந்திர உதவித்தொகை வழங்கி வந்தனர்.
* 2012 (குளோபல் பார்மா டெக் போராட்டம்): தொடர்ச்சியான களப்பணிகள் மூலம் குளோபல் பார்மா டெக் (மைவா) ஆலைத் தொழிற்சங்க நிர்வாகிகள் அறிமுகம் தோழர் பரசுராமன் அவர்களுக்கு ஏற்பட்டது. தொழிலாளர் வீடுகளுக்குச் சென்று அந்த ஆலையின் முழுமையான பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அற்பக் கூலி மற்றும் அடக்குமுறையை எதிர்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. தொழிற்சங்க அணுகுமுறையால் தோழர் பரசுராமன் தோழமையை வலுப்படுத்தினார்.
* AE ஆலையில் மேலாளரைத் தாக்கியதாகப் பெண் தொழிலாளி கைது செய்யப்படுவதைத் தடுக்கச் சென்றதால் தோழர் பரசுராமன் சிறைப்படுத்தப்பட்டார். அது ஒசூர் நகர கேபிள் டிவியில் ஒலிபரப்பானது. இதனை நோட்டீஸ், போஸ்டர், பிரச்சாரங்கள் செய்ததில் குளோபல் ஆலை பெண் தொழிலாளர்களுக்குச் சங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தின.
* குளோபல் நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்கொள்ள வரிசையாகத் தொழிலாளர் துறையில் தொழிற்தகராறு வழக்குகள் பதிவு செய்ய சட்டப்பாதையை மாநில நிர்வாகி ஒருவர் வழிகாட்டினார். ஒருகட்டத்தில் இணைப்புச் சங்கமாக அறிவித்துக் கொடியேற்றப்பட்டது.
* தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் மீதான அடக்குமுறை தீவிரமானது. வேலைநிறுத்தம், சாலை மறியல், கைது-சிறை எனப் போராட்டங்கள் நடந்தன. ஓசூர் முழுவதும் நிர்வாகத்தின் அடக்குமுறைகளைப் பட்டியலிட்டு, 75 தொழிலாளர்களை 10 குழுக்களாகப் பிரித்து விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
* போராட்ட நடைமுறையைப் புரிய வைக்க, சீனாவில் ஏழை விவசாயிகள் நிலப்பிரபுக்களைச் சூழ்ந்து அம்பலப்படுத்தும் “ஹூனான் விவசாயிகள் அறிக்கை" என்ற புத்தகம் 200 பிரதிகள் வாங்கப்பட்டு தொழிலாளர்களைப் படிக்க வைக்கும் வேலை நடந்தது.
* பிப்ரவரியில் தொடங்கி ஜூலை வரை 6 மாதத்திற்கு மேல் போராட்டம் நீடித்ததால், தீர்வை எதிர்பார்த்த தொழிலாளர்கள் சோர்வடைந்தனர்.
* ஆகஸ்ட் 4 அன்று நடைபெற்ற குளோபல் சங்கப் பொதுக்குழுவில் கலந்து கொள்ளச் சென்ற சங்க சிறப்புத் தலைவர் பரசுராமன் அவர்களை அமைப்பின் பொறுப்பாளர் தடுத்தார். மேலும் “குளோபல் ஆலையில் ஆகஸ்ட் 15 முற்றுகைப் போராட்டம் அறிவிக்கலாம் என்ற பரசுராமனின் ஆலோசனையை மறுத்து விட்டு, மாதாந்திர அமைப்புக் கூட்டம்தான் முக்கியம் என அமைப்பின் பொறுப்பாளர் அழைத்துச் சென்றதால், குளோபல் பொதுக்குழுவினர் இணைப்புச் சங்கம் என்ற நிலையிலிருந்து விலகினர்.
* தொழிலாளர் வர்க்க வாழ்நிலையைக் கணக்கில் கொள்ளாமல் "கறார், கட்டுப்பாடு, நம்பிக்கை, பணிவு" என்ற அமைப்பின் பொறுப்பாளரது அணுகுமுறையால் 172 தொழிலாளர்களைக் கொண்ட சங்கம் வெளியேறியது. இதன் விளைவாக INTUC உள்ளே நுழைந்து, 42 தொழிலாளர்களை VRS மூலம் வெளியேற்றி ஒப்பந்தம் போட்டது. பொறுப்பாளரின் தவறான வழிகாட்டுதலால் அமைப்புக்கு சம்மட்டி அடி விழுந்தது.
* 2014: ஜனவரியில் 10 அமைப்புக் குழு கட்டியாச்சு என்ற பொறுப்பாளரை நம்பி பரவசமாக வெக் இந்தியா ஆலையில் கிளைச் சங்கம் தொடங்கப்பட்டது. அடக்குமுறைகளை எதிர்கொள்ள தொழிற்தகராறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தன. ஒருகட்டத்தில் அமைப்பின் பிரம்மாஸ்திரமான "அம்பலப்படுத்தும் போராட்டம்” தீவிரமானது. 170 தொழிலாளர்களில் மூன்று பேரை உறுப்பினராகக் கொண்ட AITUC தலைமையுடன் தெளிவான DA கணக்கீடு அற்ற குறைவான தொகைக்கு வெளிப்படைத்தன்மை இல்லாமல் ஊதிய மாற்று ஒப்பந்தம் போட்டு நிர்வாகம் திணித்தது. இதனால் 36 நிரந்தரத் தொழிலாளர்கள் வேலையிழந்தனர்; தற்போது வரை மீண்டும் வேலை வழங்க வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன.
புதிய தொழிலாளி (மாதாந்திர செய்தித்தாள்):
முதலாளித்துவ HR அதிகாரிகளின் அடக்குமுறைகள் குறித்துக் களத்தில் தொழிலாளர்களிடம் நேரடியாகக் கேட்டறிந்த பாதிக்கப்பட்ட தகவல்களைத் தொகுத்துத் தனித்தனியாகப் பிரச்சாரம் செய்வதற்கு அதிக நேரம் பிடித்தது. அந்த நேர விரயத்தை ஈடுகட்ட, சேகரிக்கப்பட்ட அனைத்துக் குறிப்புகளையும் ஒன்றாகத் தொகுத்து, 4 பக்கச் சிறு வெளியீடாக (ரூ. 2 விலையில்) அச்சிட்டு விநியோகித்தபோது தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. மாநிலத்தின் வேறு எந்தப் பகுதியிலும் இதுபோன்ற ஒரு முயற்சி எடுக்கப்பட்டதில்லை. ஆனால், இந்த நடைமுறை வெற்றியைத் தொடர்ந்து அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ள முற்பட்டபோது, "அரசியல்தான் முக்கியம் தோழர்!" என்று கூறி, தோழர் பரசுராமனின் இந்தத் கள அனுபவப்பூர்வமான அணுகுமுறையை அமைப்பின் பொறுப்பாளர் நிராகரித்து, அதை வழக்கமான மற்றொரு அரசியல் ஏடாக மாற்றிவிட்டார்.
மற்றொரு பக்கம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநிலக் குழு அமைக்கப்பட்டு, அதன் துணைத் தலைவராக தோழர் பரசுராமனுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என மூன்று மாத இயக்கங்கள் வரிசையாக வேலைத்திட்டங்களாக நிறைவேற்றப்பட்டன.
* 2015: ஆகஸ்ட் 31 அன்று கமாஸ் நிர்வாகம் திடீர் கதவடைப்பு செய்தது. தற்போதும் 11 ஆண்டுகளாக வழக்கு மற்றும் வாய்தாக்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
* 2016: வெக் இந்தியா ஆலையிலும் 36 தொழிலாளர்கள் வேலையிழந்து வழக்கு, வாய்தா எனத் தொடர்கிறது. வேலையிழந்த கமாஸ், வெக் தொழிலாளர்கள் குடும்பத்தைப் பராமரிக்க வேறு வேலைகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். அமைப்பின் அரசியல் பிரச்சாரத்திற்குத் தொழிலாளர்கள் வரவில்லை.
* 2017: அமைப்பின் அரசியல் பிரச்சாரத்திற்கு வராத சங்கங்களுக்குச் சட்ட உதவி செய்ய முடியாது என்று மாநிலக் குழு கூட்டத்தில் அரசியல் தலைமை கூறியது. நம்மை நம்பி வந்த தொழிலாளர்களை எப்படி கைவிடுவது? தொழிலாளர்கள் என்ன செய்வார்கள்? என பரசுராமன் கேள்வி எழுப்பினார். ஆனால் அது தொழிலாளர்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
* ஒசூரில் மூன்று சங்கங்கள் கலைந்து போனதற்கு பரசுராமன் காரணம் என அமைப்பின் அரசியல் தலைமை கூறியது. பரசுராமன் சுய முடிவு எடுக்கவில்லை; அனைத்து முடிவுகளும் அமைப்பின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டதே. அமைப்பின் பொறுப்பாளர் மூலம் வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் முதல் செயல்பாடுகள் வரை எதையும் அன்றிருந்த அரசியல் தலைமை பரிசீலனைக்குக் கொண்டுவரவில்லை.
* 2018: அக்டோபர் மாநிலக் குழு கூட்டத்தில், "தொழிற்சங்கத்திற்கு வழிகாட்டியது அமைப்புதான்; அதன் முகமாகவே பரசுராமன் செயல்பட்டார். இந்த நிலையில் பின்னடைவு ஏற்பட்டதும் பரசுராமன் தான் காரணமா? பகுதி பொறுப்பாளர், அமைப்புக்குப் பொறுப்பில்லையா? அரசியல் தலைமை என்பதாலேயே வழிபட முடியாது எனப் பரசுராமன் கேள்வி எழுப்பியவுடன் மாநிலக் குழுவிலிருந்து நீக்கப்பட்டார்.
* மேலும், ஒசூர் அசோக் லேலண்ட் சங்கத் தேர்தலில் இரண்டு முறை சங்கத் தலைவராகப் போட்டியிட்டு முறையே 49 வாக்குகள் (2%), 26 வாக்குகள் (1%) பெற்று படுதோல்வி அடைந்தார். தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கையும் செல்வாக்கும் உருவாக்காமல், 50 பேரைக் கூட உறுப்பினராகச் சேர்க்காமல் நேரடியாகச் சங்கத் தேர்தலில் இறங்கியது, அமைப்பின் அரசியலைப் பிரபலப்படுத்த பரசுராமன் பயன்படுத்தப்பட்டார் என்பதையே காட்டுகிறது.
* அடுத்து குசேலர், மைக்கேல், CITU ஆகியவற்றை அம்பலப்படுத்தி முன்வைத்த முழக்கங்கள் மற்றும் அச்சிடப்பட்ட நோட்டீசுகள் (சாகச முழக்கங்கள்) மூலம் பிரபலம் தேட அமைப்பு முயன்றது. இதனால் அவ்வளையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் பரசுராமனும் புஜதொமு அணியும் தனிமைப்பட்டது.
* களப்பணியில் பரசுராமன்: DTP பணி, பேருந்து-வீடு-அலுவலகம்-கடைவீதி பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், இசை விழா, மாநாடு, போஸ்டர் ஒட்டுதல், தொழிலாளர்களைச் சந்தித்து அணிதிரட்டல், அரசியல் ஏடு விற்பனை என வாரம் முழுவதும் தினமும் ஒரு பணியென இடையறாது 25 ஆண்டுகளாகச் சிந்திக்க வாய்ப்பில்லாமல் செயல்பட்டு வந்தார். இத்துடன் கமாஸ், வெக் உட்பட ஆலைகளில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் வழக்குகளையும் நடத்தி வருகிறார். ஆலை விபத்துகளில் இறக்கும் தொழிலாளர்களுக்கு சுவரொட்டி மூலம் குரல் கொடுத்து இழப்பீடு பெறக் காரணமாக இருந்து வருகிறார்.
* ஆலோசனைக் கடிதம்: அரசியல் பிரச்சாரத்திற்கும் போஸ்டர் ஒட்டவும் ஆளில்லாத சூழல் குறித்தும், பகுதி வளர்ச்சியின்மை குறித்தும் அமைப்புக்குக் கடிதம் 2018 நவம்பரில் எழுதினார். பரிசீலனையின்றி "எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டம் போட்டு செய்யுங்க தோழர்" என்றார் அமைப்பின் பொறுப்பாளர்.
* 2021: வழிகாட்டிய பொறுப்பாளர்கள் அரசியல் தலைமையாகி விட்டார்கள். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நீதிமன்ற வாசலில் நிற்கிறார்கள்!
* 2026: தன் வாழ்வின் சரிபாதி 25 ஆண்டுகள் களப்பணி செய்த தோழர் பரசுராமன் ஆரோக்கியமான வாழ்க்கையையும் இரு விழிப் பார்வையும் இழந்த பின்னரும் மார்க்சிய தத்துவத்தை தொழிலாளர்களிடம் கொண்டு செல்ல வாழ்கிறார்.
---
பகுதி 2: கருத்துத் தொகுப்பு (அமைப்பு முறை மற்றும் அரசியல் விமர்சனம்)
* உணர்வுகள் சுரண்டப்பட்டமை: தொழிலாளர்களின் வர்க்க உணர்வையும் அறியாமையையும் உணர்ச்சியையும் பயன்படுத்தி, அமைப்பின் அரசியல் அம்பலப்படுத்துதலை மட்டுமே முதன்மை அரசியல் இலக்காகக் கொண்டு செயல்பட்டது வெளிப்பட்டுள்ளது.
* தொழிற்சங்க புரிதலின்மை: மேலும், தொழிலாளர்களின் வாழ்நிலை, சட்ட வாய்ப்புகள், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள், அன்றாடத் தொழிற்சாலை இயக்கம் என எந்தப் புரிதலும் இல்லாமல் அமைப்பின் பொறுப்பாளர் முதல் தலைமை வரை வழிகாட்டல் அளித்தது. "எல்லாவற்றையும் போராட்டமும் நடைமுறையுமே தீர்மானிக்கும்" என்ற வறட்டு முழக்கத்தை முன்வைத்தனர்.
* அதிகாரக் குவிப்பும் தனிமைப்படலும்: கள நிலவரத்தைக் கணக்கில் கொள்ளாமல் அமைப்பின் முடிவுகள் திணிக்கப்பட்டு தொழிலாளர்களின் எதிர்காலம் நாசமாக்கப்பட்டது.
* தேர்தல் புறக்கணிப்பு முதல் அரசை அம்பலப்படுத்தும் பிரச்சார இயக்கங்கள் வரை அனைத்தும் மக்களை விட்டு அமைப்பையும் தோழர்களையும் தனிமைப்படுத்தின.
* தோழர் பரசுராமன் வழங்கிய அனுபவக் கருத்துகளையும் பிற தோழர்களின் அனுபவங்களையும் அமைப்பின் பொறுப்பாளர் முதல் அரசியல் தலைமை வரை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.
* கமாஸ் ஆலையில் RTI தகவல் சேகரிப்பு, தொழிற் தகராறு வழக்குகள், நீதிப் பேராணை, பரசுராமனின் உழைப்பு இல்லாது இருந்திருந்தால் துவக்க வெற்றி கூட பெற்றிருக்க முடியாது.
* அமைப்பின் வறட்டுத்தனமான அரசியலால் எண்ணிலடங்காத, எழுத்தில் வடிக்க முடியாத துயரங்களை தொழிலாளர்களும் பரசுராமனும் சந்தித்துள்ளனர்.
* பொறுப்பற்றத் தன்மை: "அவன் பிழைப்புவாதி, இவன் முதலாளித்துவக் கைக்கூலி, சங்கத் தலைவர் எவனும் சரியில்லை" என்று முழங்கிவிட்டு, அம்பலப்படுத்தும் அரசியலால் தொழிலாளர்கள் வேலை இழந்த பிறகு (62 + 36 தொழிலாளர்கள்), அவர்களை அமைப்புக்கு முழுநேர ஊழியராக மாறச் சொல்லி வலியுறுத்தியதில் அமைப்பின் நோக்கப் பிழை வெளிப்படுகிறது.
* தனிநபர் சுயவிமர்சனமும் கள நிலவரமும்: தேர்தல் புறக்கணிப்புப் புரட்சிகர அமைப்புகள் என்ற பரவசமான மனநிலையால், தலைமையின் மீது கேள்விகளற்ற விசுவாசமும் "தலைமை வழிபாடும்" கொண்டு, சுயாதீனமாகச் சிந்திக்கத் தவறினேன் என்பதைத் தோழர் பரசுராமன் நேர்மையுடன் சுயவிமர்சனம் செய்து கொள்கிறார்.
* தொழிலாளர் நம்பிக்கையும் அமைப்பின் மௌனமும்: தோழர் பரசுராமனின் துணிச்சலான களப்போராட்டத்தையும் பார்த்து கமாஸ், குளோபல், வெக் உள்ளிட்ட பல ஆலைத் தொழிலாளர்கள் கேள்வி கேட்காமல் திரண்டனர். ஆனால், தொழிலாளர்களின் இந்த நம்பிக்கையையும் தியாகத்தையும் அமைப்பின் தலைமை தனது அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டு படுதோல்வியைப் பரிசளித்து விட்டு மௌனமாக நகர்ந்து விட்டது.
பகுதி 3: அனுபவங்களின் மூலம் பெற்ற படிப்பினைகள்!
1. தொழிலாளர் நலனே முதன்மையானது: அமைப்பின் அரசியல் லாபத்தை விடத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு, பணிப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரமே தொழிற்சங்க இயக்கத்தின் முதன்மை இலக்காக இருக்க வேண்டும்.
2. கோட்பாட்டு வறட்டுத்தனத்தைத் தவிர்த்தல்: பிற நாட்டுச் சூழல்களுக்குரிய (எ.கா: ஹூனான் அறிக்கை) அல்லது பொருத்தமற்ற தீவிர முழக்கங்களை அப்படியே ஆலைத் தொழிலாளர்களிடம் திணிப்பது தோல்வியிலேயே முடியும்.
3. சட்ட மற்றும் பேச்சுவார்த்தை வழிமுறைகள்: அனைத்துப் பிரச்சினைகளையும் "அம்பலப்படுத்தும் போராட்டமாக" மாற்றாமல், தந்திரோபாயப் பேச்சுவார்த்தைகள் மற்றும் சட்ட வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
4. ஜனநாயக அமைப்பியல்: களத்தில் நிற்கும் தோழர்களின் அனுபவக் குரலுக்கும், தொழிலாளர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் ஜனநாயக அணுகுமுறை அமைப்பிற்கு அவசியம். பின்னடைவுகளுக்குக் களப்பணியாளர்கள் மீது பழிபோடாமல் தலைமை பொறுப்பேற்க வேண்டும்.
* அமைப்பு இல்லாமல் சங்கம் வந்துவிட்டதா?: சங்கப் பின்னடைவுக்குப் பரசுராமன் காரணம் என அரசியல் தலைமை பழிபோடுவது தவறானது. ‘அமைப்பு இல்லாமல் சங்கம் வந்துவிடவில்லை. சங்கத்தின் ஒவ்வொரு நகர்வும் அமைப்பின் பொறுப்பாளர் வழிகாட்டுதலிலேயே நடந்தது. வெற்றியைத் தன் கணக்கில் எழுதிக்கொண்ட அமைப்புத் தலைமை, பின்னடைவு- பேரழிவு வந்ததும் அமைப்பின் பொறுப்பை மறைத்து பரசுராமன் மீது பழிபோடுவதும் தனி நபர் அராஜகவாதி எனப் புறங்கூறுவதும் பொறுப்பற்றத் தனமாகும். அமைப்பும் பொறுப்பாளரும் செய்த செயலைப் பொது வெளியில் வெளியிடுவதை யாரும் தடுக்கப்போவதில்லை.
5. வெகுமக்கள் தொடர்பு: சாகச முழக்கங்களாலும் மற்ற தொழிற்சங்கங்களை அம்பலப்படுத்துவதாலும் (அமைப்பின் மெக்கானிசம்) மட்டும் செல்வாக்கைப் பெற முடியாது; தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே முறையான அமைப்பாக்கத்திற்கு வழிவகுக்கும்.
6. சரியான கோட்பாட்டு வழிகாட்டலின் அவசியம்: கமாஸ், குளோபல், வெக் ஆலைகளிலும் கண்மூடித்தனமான அடக்குமுறைகள் இருந்தன. மூலதனம், உழைப்பு, வருவாய், லாபம், முதலாளித்துவக் கட்டமைப்பு, அரசுக் கட்டமைப்பு, சமூகச் சூழல் ஆகியவற்றை மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொழிலாளர்களைத் தயார்படுத்தி களத்தை அணுகியிருந்தால், தோழர் பரசுராமனின் செயல் அனுபவ ஆலோசனைகளைப் பொறுப்பாளர் கேட்டிருந்தால் 6 ஆண்டுகளில் இத்துணை பின்னடைவு ஏற்பட்டிருக்காது.
* ஆண்டுகளில் சுருண்டுபோன தொழிற்சங்கம்: தொழிலாளர் வாழ்நிலையையும் களத்தின் புறநிலையையும் உணராமல், அமைப்பின் பொறுப்பாளர் திணித்த வறட்டுத்தனமான சாகச முழக்கங்களாலும் பிடிவாதத்தாலும், அமைப்பின் ஆணைக்குப் பணிந்து நட என்ற அதிகார வர்க்க அணுகுமுறையால் 2010 முதல் 2016 வரையிலான வெறும் 6 ஆண்டுகளில் தூக்கத்தைத் தொலைத்துக் கட்டியெழுப்பப்பட்ட தொழிற்சங்க இயக்கம் முற்றிலுமாக சுருண்டுபோய் முடங்கியது.
7. அமைப்பின் தற்போதைய தேக்கநிலை: 50-ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடும் அமைப்பு, தான் முன்வைத்த அரசியல் - அமைப்பு முறை என்பதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர முடியவில்லை என்பதற்கு இத்தொழிற்சங்க அனுபவங்களே ஓர் அனுபவச் சாட்சியமாகும்.
8. தனிநபர் முடிவுகள் திணிக்கப்படல்: அமைப்பு முடிவு என்ற பெயரில் அமைப்பின் பொறுப்பாளர் மற்றும் அரசியல் தலைமையின் முடிவுகளே திணிக்கப்பட்டன.
9. கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டமை: கமாஸ், குளோபல் தொழிற்சங்கப் போராட்டத்தில் மட்டுமல்ல, பரசுராமனின் கருத்தும் ஆலோசனையும் பல இடங்களில் நிராகரிக்கப்பட்டது.
10. சுயவிமர்சனமின்மை: அமைப்பின் அரசியல் முழக்கங்கள் முதல் தொழிற்சங்க நடவடிக்கைகள் வரை தொழிலாளர்களிடம் ஏற்பட்ட வெறுப்பு, தனிமைப்படுத்தல் எனும் விளைவுகளை அமைப்பு பரிசீலனை செய்து சுயவிமர்சனம் செய்யவில்லை. அறிக்கையில் எழுதுங்க தோழர் என மூளைக்கு விலங்கிட்டனர்.
11. தொழிலாளர்களைக் கைவிடுதல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் வழக்குகள், அவர்தம் எதிர்காலம், குடும்பம் குறித்துக் கவலைப்படாமல் நேர்மையில்லாமல் கைவிட்டார்கள்.
12. அடக்குமுறையை லாபமாக்குதல்: அமைப்பின் அரசியல் லாபத்திற்காக தொழிலாளர் மீதான அடக்குமுறையை ஒரு வாய்ப்பாகவே தொழிற்சங்கங்களைப் பயன்படுத்தினர்.
13. தியாகத்திற்கு கிடைத்த அவலம்: தினசரி அரசியல் பிரச்சாரம், தொழிற்சங்கப் பணிகளுக்காக 20 ஆண்டுகள் தினசரி தூக்கமிழந்து உழைத்ததால் பரசுராமனின் இரு விழிப்பார்வையும் முழுவதும் பாதிக்கப்பட்டது. இந்த புரட்சிகரப் பயணத்தில் நாளை செத்தால் கூடத் தூக்கிப்போட 4 பேர் இல்லாத அவல நிலையை உருவாக்கியதுதான் அமைப்பு முன்வைத்த அரசியல் நிலைப்பாட்டின் சாதனையாக உள்ளது.
14. இயந்திரத்தனமான செயல்பாடுகள் ('Copy Paste' அரசியல்): ஜார் மன்னராட்சியும் யுத்தப் பிரபுக்களின் ஆதிக்கம் நிலவிய ரஷ்ய, சீன விடுதலைப் போராட்ட நடைமுறைகளை, ஒருங்கிணைந்த அரசுக் கட்டமைப்பும் சட்ட வழிகளும் கொண்ட இந்தியாவில், தொழிலாளர்களின் வர்க்கச் சூழலை ஆராயாது அப்படியே 'Copy Paste' செய்து பிரயோகித்தது. இடம், பொருள், ஏவல் எதையும் கணக்கில் கொள்ளாமல் தொழிலாளர் அமைப்பில் திணிக்கப்பட்ட இத்தகைய வறட்டுத்தனமான செயல்பாடானது, தொழிலாளர்களின் சட்ட உரிமைப் போராட்டங்களைப் பாழ்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தையே பறித்துவிட்டது.
15. வெளிப்படைத்தன்மையின்மை: புதிய வேலைப்பாணி 2021 என்ற பெயரில் தொழிலாளர் அரங்கையே கைவிட்டுவிட்டதைப் புதிய அமைப்புத் தலைமையும் பகிரங்கமாக எழுத்துப்பூர்வமாக வெளியிடவில்லை.
16. சுரண்டல் போக்கின் உண்மை: அப்பாவி தோழர்கள், தொழிலாளர்களின் அறியாமையையும் உணர்ச்சியையும் தன் அரசியல் லாபத்திற்கு அரசியல் தலைமை பயன்படுத்திக் கொள்கிறது.
17. சர்வாதிகாரப் போக்கு: தலைமையின் பண்ணையார்தனம் மற்றும் சர்வாதிகாரமும் என்பது 'அமைப்பு முறை' என்ற போர்வையால் மூடப்பட்டுள்ளது.
18. சமூக புறநிலை அறியாமை: வெளிப்படைத்தன்மையில்லாத அமைப்புமுறையால் தொழிலாளர் வாழ்நிலை-சமூகப் புறநிலையை அறியாத 'கேபின் கம்யூனிஸ்டாக' தலைமைகள் உள்ளனர். அமைப்பும் மதவழிபாட்டு மன்றமாகிவிட்டது.
19. வாழ்வியல் இழப்புகளைத் தடுத்தல்: இதற்கும் மேல் யாரும் அமைப்பால் தொழில், குடும்பம், உறவுகள் என வாழ்க்கை இழப்பைச் சந்திக்கக் கூடாது.
20. வெளிப்படையான அமைப்பின் தேவை: அமைப்பின் பொறுப்பாளர் முதல் அரசியல் தலைமை வரை வெளிப்படையான அமைப்புமுறையைக் கொண்டு செயல்பட்டால் அரசியல் அறியாமை, ஏமாற்றங்கள், சூழ்ச்சிகள் மற்றும் பாதிப்புகள் முடிவுக்கு வரும்.
21. ஆய்வில்லாத போராட்டங்களின் தோல்வி: இந்தியாவைப் பற்றிய வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்வு மற்றும் வர்க்கங்களின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுகள் இல்லாமல் செய்யும் போராட்டங்கள், புறநிலையோடு பொருந்தாமல் தொழிலாளர்கள், தோழர்களின் உழைப்பையும் தியாகத்தையும் வீணடித்துவிட்டன என்பது 25 ஆண்டுகால அனுபவத்தில் தெளிவாகிவிட்டது.
இதைப் படித்து முடித்தவுடன் "நாங்க அப்பவே சொன்னோம் கேட்டாங்களா" எனச் சரணாகதி வாதிகள் பேசலாம்; அவர்களுக்கான பதில்: மார்க்சிய தத்துவமற்ற அமைப்பின் அரசியல், வெளிப்படைத்தன்மையிலாத அமைப்புமுறை, அமைப்பு வடிவம், பொறுப்பாளர், அரசியல் தலைமை மீதான விமர்சனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், மருத்துவரும் மருந்தும் சரியில்லை என்பதால் நோய்க்கு மருந்தில்லை என்று கருதக்கூடாது.
*(குறிப்பு: தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்களுக்கு இந்த அறிக்கை ஓர் ஆயுதமாகும்)*
"தோழர்கள் முன்வைக்கும் கருத்துக்களும், விமர்சனங்களும், கடிதங்களும் அமைப்பு முறை' எனும் கருப்புத் திரைக்குப் பின்னால் தொடர்ந்து மறைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாகச் விமர்சன அறிக்கை பதிவிடுவதன் மூலமே, அமைப்பால் தொடரும் துயரங்களுக்கும் வறட்டுத்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற நோக்கில் இவ்வறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படுகிறது."
பகுதி 4: அமைப்பிலிருந்து விலகல் மற்றும் தீர்மானங்கள்!
செயற்குழுவின் வழிகாட்டலின்படி பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அமைப்பிலிருந்து விலகல் முறைப்படி அறிவிக்கப்படுகிறது:
1. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள் - பதிவு எண்: 24/KRI) செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட கமாஸ், வெக் உள்ளிட்ட தொழிலாளர் வழக்குகளை விரைந்து முடித்து, வேலைவாய்ப்பும் தக்க இழப்பீடும் பெறுவது என முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
2. மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம், மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளுடன் எந்தவித அரசியல் தொடர்பும் கிடையாது என இரண்டாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. அமைப்பின் அரசியல் மற்றும் அமைப்புமுறையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்; அதற்கு அமைப்பு பொறுப்பு ஏற்காமல் மௌனமாக நகர்ந்து விட்டதால், இனி அவர்களுடன் அரசியல் ரீதியான உறவோ அவர்களுக்கு உரிமையோ கோரத் தகுதி கிடையாது என மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. மார்க்சியம் முன்வைக்கும் உற்பத்தி முறை, சுரண்டல், சோசலிசக் கோட்பாடுகளை இயங்கியல் பொருள்முதல்வாதக் கோட்பாடுகளின் அடிப்படையில் தொழிலாளர்களுக்குக் கற்றுக்கொடுப்பது என நான்காவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. தினசரி 8 மணி நேர வேலை, விலைவாசியுடன் இணைந்த ஊதிய உயர்வு, போனஸ், ESI, PF உள்ளிட்ட பணி நிரந்தர அடிப்படை உரிமைகளுக்காக வெளிப்படைத்தன்மையுடன் ஜனநாயக வழிமுறையில் குரல் கொடுப்பது என ஐந்தாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சு.பரசுராமன்