உலகப் பழங்குடியின மக்களின் பன்னாட்டு நாள்
பூமி தோன்றும்போதே முளைத்தவை வனங்கள்; அவை பல்லாயிரம் ஆண்டுகளின் நினைவுகளைச் சுமந்தபடி பசுமையாய் நிற்கின்றன. மெளனமாய் நிற்கும் மலைகள் முன்னோர் வாழ்ந்த கதைகளையும், தலைமுறைகள் கடந்த பாதைகளையும் தம் நிமிர்ந்த மார்பில் தாங்கி நிற்கின்றன. வற்றாத ஜீவநதிகள் வெறும் நீரோட்டமல்ல; அவை நாகரிகங்கள் பிறந்ததையும், வளர்ந்ததையும் பறைசாற்றும் நினைவோடைகள். இத்தகைய மலைப்பாதைகளில் நடை பழகியவர்கள் ஓர் இனக்குழுவினர்.
அவர்கள் வனத்தின் மொழியைக் கற்றனர்; மரங்களின் மூச்சைச் சுவாசித்தனர்; மண்ணின் மணத்தை உணர்ந்தனர். பறவைகளின் குரல் ஒலிப்பைக் கொண்டு பருவ மாற்றத்தையும், காற்றின் வேகத்தைக் கொண்டு காலநிலையையும் அறிந்தனர். ஆறுகளின் ஓட்டத்தில் தம் அழுக்கை அகற்றினர். இயற்கையின் பேரழிவுகளான வெள்ளம், புயல், காட்டுத்தீ போன்றவற்றைக் கடவுளாகப் பாவித்தனர். அவர்களே பூமியின் பூர்வகுடிகள்; வனத்தின் முதல் காவலர்கள். வனம் அவர்களுக்கு வெறும் வளமல்ல, வாழ்வளிக்கும் தாய். மரம் அவர்களுக்கு வெறும் தாவரமல்ல, தலைமுறைகளை இணைக்கும் உறவுப்பாலம்.
கால ஓட்டத்தில் மாற்றங்கள் வந்தன, மோதல்கள் வெடித்தன. அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, உரிமைகள் மீறப்பட்டன. அவர்களின் தனித்துவமான வாழ்வியல் மறுக்கப்பட்டது. ஆயினும், கடும் புயலிலும் வேர்களை விடாது பற்றும் மரம்போல், அவர்கள் நிலைத்து நின்றனர். வலிகளையும் சோதனைகளையும் கடந்து இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 அன்று, 'உலகப் பழங்குடியின மக்களின் பன்னாட்டு நாள்' கடைப்பிடிக்கப்படுகிறது. 1994-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட இந்நாள், 1982-இல் நடைபெற்ற பழங்குடி மக்கள் மீதான ஐ.நா. செயற்குழுவின் முதல் கூட்டத்தை நினைவுகூர்கிறது. இது ஒரு அடையாளப்பூர்வமான அனுசரிப்பு மட்டுமல்ல; தொன்றுதொட்டு இப்புவியைப் பாதுகாத்து வந்தவர்களைப் புறக்கணித்துவிட்டு, முறையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நெறிகளை உருவாக்க முடியாது என்பதற்கான உலகளாவிய நினைவூட்டலுமாகும்.
பழங்குடியின மக்களின் வாழ்வியல் அறம்
நவீன வனச் சட்டங்கள் இயற்றப்படுவதற்கு முன்பே, பழங்குடியின மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். காடு அவர்களின் வீடாக, வாழ்வாதாரமாக, மருந்தகமாக, பள்ளிக்கூடமாக, வழிபாட்டுத் தலமாகத் திகழ்ந்தது. பாரம்பரிய வழக்கங்களுடன், சூழலியல் சமநிலையைப் பேணி, சிறிய நிலப்பரப்புகளில் பயிரிட்டும்; தேன், கிழங்குகள், மருத்துவத் தாவரங்களைச் சேகரித்தும்; ஓடைகளில் மீன் பிடித்தும்; சிறிய விலங்குகளை வேட்டையாடியும் தம் வாழ்க்கையை மனநிறைவுடன் கழித்தனர்.
அவர்கள் செல்வத்தைச் சேமிக்கவில்லை; மாறாக ஆறுகள், மரங்கள், வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் செழிப்பைச் சேமித்தனர். சுற்றுச்சூழல் ஓர் அறிவியலாக அறியப்படுவதற்கு முன்பே, பல்லுயிர்ப் பெருக்கத்தை அவர்களின் அனுபவ அறிவு பல நூற்றாண்டுகளாகப் பாதுகாத்து வந்தது.
பாரம்பரியத்தைத் தடுக்கும் அரசதிகாரம்
பழங்குடியினருக்கும் வனத்திற்கும் இடையேயான பிணைப்பை அரசதிகாரத்தின் வனத்துறை தலைகீழாகப் புரட்டிப்போட்டது. பாதுகாப்பு என்ற பெயரில், பல பாரம்பரிய நடைமுறைகள் தடை செய்யப்பட்டன அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டன. காட்டைச் சார்ந்திருந்த அவர்கள், படிப்படியாகத் தங்கள் பாரம்பரிய வாழ்வாதாரத்தை இழந்தனர்.
அரசின் கெடுபிடிகளால் காடுகளில் வாழ முடியாத சூழல் ஏற்பட்டதால், ஆயிரக்கணக்கான பழங்குடியினர் சமவெளிகளுக்குக் குடிபெயர்ந்தனர். அங்குக் கட்டுமானத் தொழிலாளர்களாகவும், தோட்டத் தொழிலாளர்களாகவும், தினக்கூலிகளாகவும் மாறினர். ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் நிறைந்த அவர்களின் பாரம்பரிய உணவு முறை மாறியது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்றவை அவர்களின் உணவாகின. தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றிய உணவுப் பழக்கத்திலிருந்து விலகியதால், அவர்களின் உடல்நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
உரிமைகள் மறுக்கப்படுகின்றன
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணை (பிரிவு 46) மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்யும் பிரிவு 21 ஆகியன பழங்குடியினரைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. அவர்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியைச் சரிசெய்யும் பொருட்டு, 'பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006' (FRA) நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது. அதேபோல், 'பஞ்சாயத்துகள் (பழங்குடியினர் பகுதிகளுக்கு விரிவாக்கம்) சட்டம், 1996' (PESA), அவர்களின் வாழ்வியலைப் பாதிக்கும் அரசு முடிவுகளுக்கு எதிராகக் கிராம சபைகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.
உலக அளவில் இவர்களின் நிலம், பண்பாடு, அடையாளம் மற்றும் சுயநிர்ணய உரிமையை ஐக்கிய நாடுகள் சபையின் 'பழங்குடி மக்களின் உரிமைகள் பிரகடனம் (UNDRIP)-2007' அங்கீகரிக்கிறது. எனினும், இவையாவும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன; நடைமுறையில் கானல் நீராகவே காட்சியளிக்கின்றன.
பழங்குடியினரை உள்ளடக்கிய வளர்ச்சி
பெரும்பாலான பழங்குடியின குடியிருப்புகளில் கல்வியும் சுகாதாரமும் இன்றும் மோசமான நிலையிலேயே உள்ளன. செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இக்காலத்திலும், எண்ணற்ற கிராமங்களில் சாலை வசதி, இணைய இணைப்பு, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் அல்லது செயல்படும் சுகாதார மையங்கள் இல்லை என்பது கசப்பான உண்மை.
பழங்குடியின கர்ப்பிணிப் பெண்களிடையே இரத்தசோகை பரவலாக உள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாடு தாய்மார்களையும் பச்சிளம் குழந்தைகளையும் அச்சுறுத்துகிறது. மருத்துவமனைகள் எட்டாத தொலைவில் இருப்பதனால், பல கிராமங்களில் இன்றும் வீட்டுப் பிரசவங்களே நடக்கின்றன. இதனால் பல பிறப்புகள் பதிவு செய்யப்படாமல் போவதுடன், பிறப்புச் சான்றிதழ் பெறுவதும் கடினமாகிறது.
பிறப்புச் சான்றிதழ் இல்லாததால், ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, சாதிச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைப் பெறுவது அவர்களுக்குத் தொடர் போராட்டமாகவே உள்ளது. அடிப்படை ஆவணங்கள் இல்லாத காரணத்தால் கல்வி, சுகாதாரம் மற்றும் கல்வி உதவித்தொகை போன்ற சலுகைகளை அவர்கள் பெற முடியாமல் போகிறது.
வெளிப்படையான சவால்கள்
குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை, பள்ளி இடைநிற்றல், வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியப் பிரச்சினைகள் மற்றும் பதின்பருவ கர்ப்பங்கள் போன்றவை பழங்குடியின மக்களிடையே காணப்படும் சமூக அவலங்களாகும். சமூக விழிப்புணர்வுத் திட்டங்கள் கடைசிக் கிராமத்தை அரிதாகவே சென்றடைகின்றன. அடிப்படை வசதிகளற்ற பள்ளிகளுக்கு நடுவே, தரமான கல்விக்காகக் குழந்தைகள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்க மலைக் கிராமங்களுக்கு வருகின்றனர்; அதுவும் அதிக வாக்குகள் உள்ள இடங்களுக்கு மட்டுமே. சில பழங்குடியினருக்குத் தாங்கள் எந்தத் தொகுதிக்கு உட்பட்டவர்கள் அல்லது தம் பிரதிநிதிகள் யார் என்பதே தெரிவதில்லை. பிரதிநிதித்துவம் மக்களைச் சென்றடையாத இடத்தில் ஜனநாயகம் செழிக்க முடியாது.
கூட்டுச் செயற்பாட்டுடன் கூடிய நலத் திட்டங்கள்
பழங்குடியின மக்களின் எதிர்காலத்திற்கு நலத்திட்டங்களை விட, கூட்டுச் செயற்பாடே (Collective Action) மிக அவசியம். வன உரிமைச் சட்டம் மற்றும் PESA ஆகியவற்றைத் திறம்படச் செயல்படுத்த வேண்டும். தாய்-சேய் ஊட்டச்சத்தை மேம்படுத்தி, ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும். தாய்மொழியில் கல்வியளிக்கும் உண்டு உறைவிடப் பள்ளிகளை நிறுவ வேண்டும். போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் இணைப்பை உறுதி செய்வதுடன், அடிப்படை ஆவணங்களைப் பெறும் நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்.
வளர்ச்சி என்பது அறிவிக்கப்படும் திட்டங்களின் எண்ணிக்கையில் இல்லை; அவை மக்களைச் சென்றடைவதில்தான் உள்ளது. இதில் குடிமைச் சமூகத்திற்கும் முக்கியப் பொறுப்புண்டு. பல்கலைக்கழகங்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் அவர்களுக்காகப் பணியாற்றுவதை விடுத்து, அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். சமூக அவலங்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பரப்புரைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
அவை மக்கள் இயக்கங்களாக மாற வேண்டும். பழங்குடியின இளைஞர்கள் தம் பண்பாட்டு அடையாளத்தை இழக்காமல், அனைத்துத் துறைகளிலும் (ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆட்சியர்கள்) சிறந்து விளங்க ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இறுதியாக...
பழங்குடியின மக்களின் இயற்கை அறிவு நூல்களில் இல்லை; அது பூமியின் பருவ காலங்களிலும், வனத்தின் ஒவ்வொரு திசையிலும் எதிரொலிக்கிறது. இயற்கையை ஆள நினைக்காமல், அதோடு இயைந்து வாழக் கற்ற அவர்களின் அனுபவ அறிவு இன்றைய உலகிற்கு மிகச்சிறந்த வாழ்வியல் பாடமாகும்.
வனம் அழிந்தால் மரங்கள் மட்டும் வீழ்வதில்லை; ஒரு வரலாறும், பண்பாடும் மௌனமாகிறது. ஒரு தலைமுறையின் நினைவுகள் மண்ணோடு மண்ணாகின்றன. ஆகவே வனத்தைக் காப்போம்; பழங்குடியினரின் குரலுக்கு மதிப்பளிப்போம்.
ஏனெனில்,
வனம் என்பது அடர் மரங்களின் கூட்டமல்ல... பூமியின் நினைவகம்.
மலை என்பது பாறையின் உயரமல்ல.... முன்னோரின் கதை.
ஆறு என்பது நீரின் ஓட்டமல்ல.... நாகரிகத்தின் நாடித்துடிப்பு.
இயற்கையின் நெறிமுறைகளும் பழங்குடியின மக்களின் அனுபவ அறிவும் வேறல்ல.... ஒன்றுதான்!
- ச.மோகன்