இலங்கை அரசினால் தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட ‘தடுப்புக் காவல் மற்றும் சித்திரவதை‘ குறித்தான ஆய்வறிக்கையை ‘சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான செயற்திட்டம் (ITJP)‘ என்கிற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு 2015-2022 வரையிலான ஏழு ஆண்டுகளில் இலங்கைப் பாதுகாப்பு படையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 139 ஈழத் தமிழர்களிடம் ஆய்வுகளை மேற்கொண்டு செய்திகளை தொகுத்திருக்கிறது. இவர்கள் அனைவரும் இப்போது இலங்கைக்கு வெளியே இருந்தனர். வேறு அயல்நாடுகளில் புகலிடம் கோருபவர்களாக இருக்கின்றனர்.இந்த ஆய்வு அமைப்பானது, தென்னாப்பிரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட அமைப்பு. இதன் தலைமைப் பொறுப்பில் மனித உரிமை செயல்பாட்டாளரான யாசுமின் சூக்கா இருக்கிறார். இதன் உறுப்பினர்கள் யாவரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்திலும், சர்வதேச மனித உரிமை செயல்பாடுகளிலும் பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள். இலங்கைக்குள் தமிழர்களின் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள் பலவும் இன்னமும் வெளிவராத செய்திகளாகவே இருக்கும் சூழலில், இந்த 139 பேரிடம் நடத்திய ஆய்வுகளே, மனம் பதறும் அளவிலான கொடூரங்களை வெளிக் கொண்டு வந்திருக்கின்றன. தமிழர்கள் மீதான சிங்களத்தின் இனவெறி 2009-போருக்குப் பின்பும் தொடர்கிறது என்பதை இவ்வறிக்கை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
இந்த அமைப்பு ஆய்வுக்குட்படுத்திய 139 பேரும் 20 – 39 வயதுக்குட்பட்டவர்கள். 109 ஆண்கள் மற்றும் 14 பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தில், பெரும்பாலானவர்களை உறவினருக்கே தெரியாத வண்ணம் கடத்திச் சென்றே காவலில் வைத்து விசாரித்ததை சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து பிடித்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் 11 பேர் ராசபக்சே ஆட்சிக்காலம் முடிந்து இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே 2022-ல் பதவியேற்ற பின்பு தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவர்கள்.
ஒவ்வொரு நாளும் இவர்களிடம் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, உண்மையைச் சொல்லுமாறு அடித்து துன்புறுத்தி, அவர்களின் மீது பாலியல் ரீதியான வன்புணர்வுகளை செய்து, மரணத்தை விட வேதனையான இழிசெயல்களை இலங்கையின் விசாரணை அதிகார வெறியர்கள் நிகழ்த்தியுள்ளனர். நெகிழிப் பைகளால் முகத்தை மூடி மூச்சுத் திணற வைப்பது, பூட்சு காலினால் மிதிப்பது, சிகரெட்டினால் உடலின் அனைத்து இடங்களிலும் சூடு வைப்பது, கயிற்றில் கட்டி தலைகீழாகத் தொங்கவிடுவது மற்றும் இரும்புக் கம்பிகளை பிறப்புறுப்பில் திணிப்பது, ஆண்கள், பெண்கள் என பாராமல் வாய்வழி வன்புணர்ச்சி, அந்தரங்க உறுப்புகளை சிதைப்பது என நினைத்துப் பார்க்கவே அச்சம் தரும் வகையில் கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர். இதில் சிங்கள மொழி தெரியாத 50 பேரிடம் சிங்கள மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலங்களில் சித்திரவதை செய்து கையொப்பமும் வாங்கியுள்ளனர்.
தடுப்பு முகாம் கைதிகளிடம் நடத்தப்பட்ட பலவகையான சித்திரவதைகள் :
இலங்கை இனவெறி அரசு பாலியல் வக்கிரத்தில் அலைந்தவர்களாகப் பிடித்து விசாரணை அதிகாரிகளாக சேர்த்திருக்கிறது என்பதையே, இதில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை படிப்பவர்கள் உணர்வார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொரு பாலியல் கொடுமைகளும் மிருகத்தனமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் இலங்கையின் அதிகார வெறியர்கள் நடத்தியுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து மார்ச் 2021-ல் 24 வயதான ஒரு தமிழ் இளைஞன் இலங்கை சிபிஐ அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு 5 நாள் தடுப்புக் காவலில் அடைத்திருக்கிறார். இரண்டு சிங்கள அதிகார வெறியர்கள் அந்த இளைஞனின் ஆடையை அவிழ்த்து, ஒருவர் பின் ஒருவராக அவன் வாயினில் அவர்களின் ஆணுறுப்பை திணித்துள்ளனர். அந்த இளைஞன் எவ்வளவு மன்றாடியும் அந்த வெறியர்கள் விடவில்லை. அந்த செயலுக்குப் பின் இனி, தான் எதற்காக வாழ வேண்டும் என்கிற எண்ணமே மேலிடுவதாக அந்த இளைஞன் வாக்குமூலம் தந்திருக்கிறான். அந்த இளைஞனின் வயது 2021-ல் 24 என்றால் போர் முடிந்த 2009-ல் அவன் வயது 12 தான். அந்த 12 வயதில் வயதில் அவன் எப்படி விடுதலைப் புலிகளின் செயல்பாட்டில் தொடர்பில் இருந்திருக்க முடியும்.
இதைப் போல ஜூலை 2020-ல் இலங்கையின் ‘தீவிரவாத தடுப்புப் படை’ 20 வயது இளைஞனை கைது செய்து 35 நாள் தடுப்புக் காவலில் அடைத்துள்ளனர். இந்த இளைஞனுக்கும் நான்கு சிங்கள அதிகார வெறியர்களால் இதே போன்ற கொடுமை வாய் மற்றும் மலவாசல் வழியாக ஒரே சமயத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அவன் தாங்க முடியாமல் நகர்ந்ததால் சிகரெட்டால் அந்த வெறியர்கள் சூடு வைத்திருக்கிறார்கள். மலவாசல் வழியாக பெரிய இரும்புக் கம்பியையும் செருகியுள்ளனர். மிருகத்திலும் கேடான அந்த செயலால் அந்த இளைஞனின் பின்புறத்திலிருந்து இரத்தம் வழிந்து கொடுமையான வலி ஏற்பட்டிருக்கிறது. அவன் வயதும் 2009-ல் 9 வயதே தான் எனும் போது எந்த அடிப்படையில் புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக இந்த வெறியர்கள் சந்தேகித்தார்கள் என்கிற கேள்வியே எழுகிறது.
யாழ்ப்பாணத்தில் ஜூன், 2017-ல் 29 வயது பெண்ணைப் பிடித்து தடுப்புக் காவல் அதிகாரிகள் 7 நாள் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அந்தப் பெண்ணிருந்த அறையில் குடிபோதையில் நுழைந்த இரண்டு சிங்கள அதிகார வெறியர்கள், அவரின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கி, கைகளை பின்புறமாக கட்டி, மயக்கம் வரும் அளவுக்கு கன்னத்தில் அடித்துள்ளனர். அவளின் அந்தரங்க உறுப்புகளை செல்போனில் படமெடுத்துள்ளனர். அந்தப் பெண் மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்ததும் தான் மார்பகங்கள் முதற்கொண்டு உடல் முழுதும் சிகரெட்டினால் சூடு வைத்திருப்பதும், அவளின் பிறப்புறுப்பில் தாங்க முடியாத வலியுடன் இரத்தம் கொட்டுவதையும் பார்த்து வன்புணாச்சி செய்யப்பட்டிருப்பதை உணர்ந்திருக்கிறார்.
ஜனவரி 2009-ல் வவுனியாவிலிருந்து 39 வயதுப் பெண்ணை சிஐடி அதிகாரிகள் பிடித்து 21 நாள் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். அந்தப் பெண்ணையும் இரண்டு சிங்கள அதிகார வெறியர்கள் நிர்வாணமாக்கி, புகைப்படமெடுத்து அடித்ததில் மயங்கி விழுந்திருக்கிறார். அப்பெண் கண் விழித்த போது உட்காரக்கூட முடியாத அளவிற்கு பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் கொட்டியிருக்கிறது. சிங்கள அதிகார மிருகங்கள் அப்பெண்ணை மயக்க நிலையில் வன்புணர்ச்சி செய்திருந்தன.
சிங்கள அதிகாரிகள் தங்களின் பாலியல் வக்கிரத்திற்கு அப்பாவி இளைஞர்களை இரையாக்குவதற்கு, புலிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டை பயன்படுத்தி தடுப்புக் காவலில் அடைத்திருக்கின்றனர் என்பதும், இலங்கை அரசு இந்த வெறியர்களுக்கு பாலியல் தீனி போடவே தீவிரவாத தடுப்புச் சட்டத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையுமே இந்த கொடுமைகள் அனைத்தும் நிரூபிக்கின்றன.
தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவர்கள் மீதான பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் :
இலங்கையின் குற்றவியல் சட்டத்தின்படி ஒருவரை கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிபதியின் முன் ஒப்படைக்க வேண்டும். ஆனால் 1979-ல் கொண்டு வரப்பட்ட தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்படி, கைது செய்யப்படும் எந்த நபரையும் மூன்று மாதத்திற்கு நீதிபதியிடமும் தெரிவிக்காமல் தடுப்புக் காவலில் வைத்திருக்கலாம். மூன்று மாதத்திற்கு பிறகும் அமைச்சரின் பரிந்துரைப்படி, காவலில் வைத்திருப்பதை புதுப்பிக்கலாம் என்பதே நடைமுறையாக இருக்கிறது.இதன்படி 123 கைதிகளை நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்படாமலும், சில நாட்களில் இருந்து ஓராண்டு வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமலும் அவர்களை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுப்புக் காவலில் அடைத்திருக்கிறார்கள். ஒரே ஒருவர் மீது மட்டுமே குறிப்பிட்ட குற்றம் செய்ததாக வழக்கு போடப்பட்டு, மற்ற யாவரையும் சட்டவிரோதமாக அடைத்து வைத்து விசாரணை கைதிகளாகவே சித்திரவதை செய்திருக்கின்றனர். அதனால் இது ‘சட்டவிரோதமான தடுப்புக் காவல் (Unlawful Detention)‘ குற்றத்தை உறுதி செய்கிறது. அவர்களின் உறவுகளுக்கே தெரியாமல் கடத்தி சென்றதால் ‘வலிந்து காணாமலாக்குதல்’ எனும் குற்றத்தை உறுதி செய்கிறது. இவை இரண்டும் ‘அனைவருக்குமான சர்வதேச பாதுகாப்புக்கான உடன்படிக்கை விதி (International Convention for the Prevention of All Persons)’ – களுக்கு எதிராக இருக்கிறது.
ஐ.நா வின் மனித உரிமைகள் ஆணையம் 2014-ல், ‘மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் ஆணையாளர் அலுவலகத்திடம் (OHCHR)’ 2002-2011 வரை மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறை இலங்கையில் நடைபெற்றிருக்கிறதா என ஆய்வறிக்கை சமர்ப்பிக்கக் கூறியது. அதன்படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவானது (OlSL) தமது விசாரணையில், இலங்கையின் பாதுகாப்புப் படைகள், துணை ராணுவம், வடக்கில் ஈ.பி.டி.பி அமைப்பு, கிழக்கில் கருணா குழுக்களால் பலர் வெள்ளை வேன் கடத்தல் மூலமாக காணாமல் போவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்தது என ஆய்வில் வெளிக்கொண்டு வந்தது.
எந்தக் காரணமும் இல்லாமல் தடுப்பு முகாம்களில் பலரை நீண்ட காலமாக அடைத்து வைத்து பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதை OISL ஆவணப்படுத்தியது. போர் முடிந்த பின்னும் இலங்கை பாதுகாப்பு படையினருக்கு இராணுவ முகாம், காவல் நிலையம், மறுவாழ்வு முகாம் மற்றும் இரகசிய பகுதிகள் என அனைத்து இடங்களும் சந்தேகிப்பவர்களை அடைத்து வைப்பதற்கு வசதி வாய்ப்பாக இருந்ததாக OISL ஆவணப்படுத்தியது.
இக்குற்றங்களில் ஈடுபட்டு நிரூபணமான எந்த அதிகாரிகள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மகிந்த ராசபக்சேவே அடுத்த அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதால் OISL விசாரணைக் குழு நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் 2014 -ல் ITJP-ம், சில மனித உரிமைகள் குழுவும் இணைந்து ‘முடிவுறாத போர் – இலங்கையில் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை’ என 40 நபர்களின் மீது நடத்தப்பட்ட கொடூரங்களை வாக்குமூலம் வாங்கி ஆய்வறிக்கை சமர்ப்பித்தது. அதிலும் இதே மாதிரியான சித்திரவதைகள் சிங்கள அதிகார வெறியர்களால் நடத்தப்பட்டு இருந்ததை பட்டியலிட்டுக் கூறியது.
அதன் தொடர்ச்சியாக 2015-2022 வரையிலான ஏழு ஆண்டுகளில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகள் குறித்தான இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
போர் முடிந்த 2009 -க்குப் பின்பான இந்த 15 ஆண்டுகளில், இந்த தடுப்புக் காவல் சித்திரவதைகள் என்பது இலங்கையின் அதிகார அமைப்புகளில் ‘அமைப்பு ரீதியாக கட்டமைக்கப்பட்டு வேரூன்றியது’ என்பதாகவே இருக்கிறது என ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் ‘வோல்கர் டர்க்’ குறிப்பிடுகிறார்.
மேலும் அவர், போர் முடிந்து ஈழத் தமிழர்கள் 2015 -லிருந்து தங்கள் பிரதேசங்களுக்கான தேர்தல்களில் தமக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டதால், அரசியல் ரீதியான போராட்டங்கள் மற்றும் போரில் இறந்த உறவுகளுக்கான நினைவு கூறல் போன்றவற்றிற்கு ஒரு பாதுகாப்பு இருக்கும் நம்பினார்கள். ஆனால், இலங்கை அரசு, இவ்வாறான அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக சித்தரித்து தடுப்புக் காவலில் அடைத்திருக்கிறார்கள் என இந்த அறிக்கை மூலமாக தெரிய வருவதாக கூறுகிறார். மேலும் விடுதலைப் புலிகள் ஒருங்கிணைவதாக பொய் பிரச்சாரத்தை கட்டமைத்து இலங்கைக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த சர்வதேசத்திடம் ஆதரவு பெற்றதும் இதிலிருந்து தெரிவதாக சொல்கிறார்.
இந்த ITJP அமைப்பானது கடந்த ஆண்டு 2023-ல் “சிறிலங்காவிலுள்ள பாரிய மனிதப் புதைகுழிகளும், வெற்றியடையாத அகழ்வுப் பணிகளும்” என்ற கூட்டறிக்கையை பல அமைப்புகளுடன் இணைந்து வெளியிட்டது. முல்லைத்தீவுப் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கத் தோண்டிய குழியில் அடுக்கடுக்கான சடலங்கள் கிடைத்தன. அது குறித்த கட்டுரை இணைப்பு : https://may17kural.com/wp/mass-graves-are-evidence-of-tamil-genocide/
இந்த ஆய்வறிக்கை இலங்கைக்குள் இல்லாமல், வெளியில் இருக்கும் 139 தமிழர்களிடம் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமைகள் அமைப்பின் ஆய்வறிக்கைகளில் மிகவும் சொற்பமான அளவு மட்டுமே ஆவணப்படுத்தப்படுகின்றன. போர் முடிந்த 2009-க்குப் பின்பும் இதே போன்ற துன்புறுத்தல்களை சந்தித்த பலர் இன்னமும் ஆவணப்படுத்தப்படாமல் இலங்கைக்குள் இருக்கிறார்கள். தமிழினத்தின் மீது இவ்வளவு சித்திரவதைகளை நடத்திய அதிகாரிகள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படாமல் பதவி உயர்வு அளித்து அழகு பார்க்கிறது இலங்கை அரசு.
இலங்கையின் இனவெறி ராணுவம் போர்க்காலங்களில் நடத்திய போர்க்குற்றங்களும், ஒன்றரை இலட்சம் தமிழர்களைத் திட்டமிட்டுக் கொன்ற இனப்படுகொலையும் ஆதாரங்களுடன் நிரூபித்த பின்பும் இன்னமும் உலகம் அமைதியாக கடக்கிறது. போர் முடிந்த பின்பும் இலங்கை அரசு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை நடத்துவதற்கான சான்றுகளாக இந்த ஆய்வறிக்கைகள் இருக்கின்றன. இவை அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் என்பதனை பலரின் வாக்குமூலங்கள் நிரூபிக்கின்றன. இவ்வளவும் நிரூபணமான பின்பும், சர்வதேச நீதிமன்றத்தின் குற்றவாளி கூண்டில் ராசபக்சேவும், சிங்கள இனவெறி அதிகாரிகளும் நிறுத்தப்படவில்லை.
இன்று பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்யும் இசுரேலுக்கு துணையாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்குலக நாடுகள் பாதுகாப்பாக இருப்பது போல, இலங்கைக்கும் இந்த நாடுகளே பாதுகாப்பாக இருக்கின்றன. இலங்கைக்கு சார்பான, விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக் கட்டமைப்புகளை ஓயாமல் செய்த இந்தியப் பார்ப்பனீயப் பத்திரிக்கைகள், குறிப்பாக தமிழ்நாட்டின் பார்ப்பனீய ஊடகங்கள், சிங்கள இனவெறி அதிகாரிகளால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இந்த சித்திரவதைகள் பற்றியான ஆய்வறிக்கைகள் குறித்து எப்போதும், எந்த செய்திகளும் வெளியிடுவதில்லை. இந்தியப் பார்ப்பனீயம் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் அனைத்து வழிகளையும் அடைக்கும் வேலையே செய்கின்றன.
தமிழீழ இலட்சியம் கொண்ட தமிழர்களே இவற்றை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வளவு சித்திரவதைகளை அனுபவித்த தமிழர்களுக்கு நீதி கிடைக்க அனைத்து தளங்களிலும் சிங்கள அரசை, அதன் அதிகார மட்டத்தை அம்பலப்படுத்தும் பணிகளில் தமிழர்களாய் கைக்கோர்ப்போம்.
- மே பதினேழு இயக்கம்