யோக்கியனாக வேடம் போடுவதுதான் மிகவும் சிரமமான காரியம். மக்களை ஏமாற்றி, பிழைக்க நினைப்பவனால் ஒருபோதும் தன்னுடைய பிழைப்புவாதத்தை நீண்ட நாட்களுக்கு வெளிக்காட்டாமல் இருக்க முடியாது. அவனுடைய சொல்லோ, செயலோ ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களை அம்பலப்படுத்திவிடும்.

ஆனால் தன்னுடைய சொத்தை காப்பாற்றிக் கொள்ளவும், பதவியை காப்பாற்றிக் கொள்ளவும், அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்ளவும் மட்டுமே கொள்கை ‘வெங்காயம்’ பேசும் பேர்வழிகள், அதையே தன்னுடைய வாழ்க்கை என்று நினைப்பவர்கள், தாங்கள் அம்பலப்படுவதைப் பற்றியோ அம்மணமாவதைப் பற்றியோ ஒருபோதும் கவலைப்படுவது கிடையாது.

அவர்கள் தங்களைப் போலவே ஒரு பிழைப்புவாத அடிமைக் கூட்டத்தை வைத்திருப்பார்கள். அந்த அடிமைக் கூட்டத்தின் வேலை வாலாட்டச் சொன்னால் வாலாட்டுவதும், குரைக்கச் சொன்னால் குரைப்பதும், கடிக்கச் சொன்னால் கடிப்பதும்தான்.

இன்று பல அரசியல் கட்சிகள் வைத்திருக்கும் இணைய கூலிப்படைகள் அவற்றிக்கு ஓர் உதாரணம். இவர்களின் முழு நேர வேலையே தன்னுடைய கட்சி செய்யும் எல்லா செயல்களுக்கும் முட்டுக் கொடுப்பதுதான்.modi and bangaaru adikalarதன் சொந்தக் கட்சிக்காரன் கொலை வழக்கிலோ, ஊழல் வழக்கிலோ, பாலியல் குற்றச்சாட்டுகளிலே மாட்டிக்கொண்டால் உடனே ஒரு டேட்டாவை எடுப்பார்கள். இந்தெந்த கட்சிக்காரன் மீதெல்லாம் இவ்வளவு கிரைம்ரேட் இருக்கின்றது, எனவே எங்கள் கட்சிக்காரன் மேல் குற்றம் சொல்லும் யோக்கியதை யாருக்குமே இல்லை என கருத்துருவாக்கம் செய்வார்கள்.

இன்னும் ஒரு படி மேலே போய், பார்ப்பனன் ஊழல் செய்தால் தப்பில்லை, கொலை செய்தால் தப்பில்லை, பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் தப்பில்லை, அதையே சூத்திரன் செய்தால் மட்டும் தவறா என உங்களுக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள்.

சொந்தக் கட்சி அல்லது அமைப்பில் பொறுக்கித் தின்ன வேண்டும் என்றால், அந்தக் கட்சி, அமைப்பு செய்யும் எல்லா அயோக்கியத்தனங்களுக்கும் முட்டுக்கொடுப்பதும், அதை கண்டும் காணாமல் போவதும்தான் ஒரு நல்ல தொண்டனின் அறமாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இது அறமல்ல, அயோக்கியத்தனம்!. இது போன்றவற்களை வைத்துக் கொண்டு மயிரை மட்டும்தான் வளர்க்க முடியுமே தவிர, முற்போக்கான சமூகத்தை அல்ல.

சொல்லொன்றும், செயலொன்றுமாக இருப்பவர்கள் எப்போதுமே மக்கள் விரோதிகளாகவும், கொள்கை சிந்தாந்தம் போன்றவற்றை பொறுக்கித் தின்பதற்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொள்பவர்களாகவுமே இருப்பார்கள். இது தலைவனுக்கும் பொருந்தும், தொண்டனுக்கும் பொருந்தும்.

ஒரு பக்கம் முற்போக்கு பேசுவதும், இன்னொரு பக்கம் மக்களை முட்டாள்களாக்கி அதன் மூலம் கோடி கோடியாய் பொருளீட்டும் பிற்போக்குவாதிகளை ஆதரிப்பதும் மக்களை முட்டாளாக்கும் கீழ்த்தரமான செயலாகும். அப்படியான செயலை யார் செய்தாலும் அதைக் கண்டிப்பதுதான் முற்போக்கு இயக்கங்களின் கடமையாக இருக்க வேண்டுமே அல்லாமல் அதை ஆதரிப்பது அல்ல.

சில தினங்களுக்கு முன்னால் ‘ஆம்பள அம்மா' என பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகள் அவர்கள் இறந்த போது தமிழ்நாட்டில் இருக்கும் உண்மையான முற்போக்குவாதிகளுக்கு எல்லாம் பேரதிர்ச்சி காத்திருந்தது.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்து ‘அரசு மரியாதை’ என்ற சொல்லுக்கு இருந்த மரியாதையையே அடக்கம் செய்தார்.

திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர பெரும்பாலான கட்சிகள் குறிப்பாக இந்துத்துவ எதிர்ப்பு பேசும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட பங்காருவின் இறப்புக்கு இரங்கல் அறிக்கைகளை விட்டன.

இந்த அரசியல் கட்சிகளே இப்படித்தான் என நாம் காறித்துப்பும் சமயத்தில் ஓர் அறிக்கை வந்து விழுந்தது. அந்த வரலாற்று புகழ்மிக்க அறிக்கையை வெளிட்டது கி.வீரமணி ஆவார்.

நாம் மேலே சொன்னது போல, பார்ப்பன சாமியார்கள் செய்தால் தப்பில்லை, அதையே சூத்திர சாமியர்கள் செய்தால் தவறா என்ற கூட்டத்திற்கு கருத்தியல் ஆயுத்ததை வீரமணி வழங்கினார்.

இப்படி ஒரு சம்பவத்தை செய்துவிட்டோமே, அதற்கு நீண்ட கொள்கை விளக்கம் கொடுக்க வேண்டுமே என வீரமணி அவர்கள் அச்சப்படவில்லை. திமுக வெளியிட்ட அதே இரங்கல் அறிக்கையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் “மேல்மருவத்தூரில் ஒரு பக்தி அமைப்பினை - அவருடைய சிந்தனைக்கு ஏற்ப அமைத்து வாழ்ந்த தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் (வயது 82) இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம். அவருடைய பக்தி, மதச் சிந்தனைக் கொள்கையில் நமக்கு உடன்பாடு இல்லையென்றாலும் கூட, அதில் அவர் ஒரு மவுனப் புரட்சியாளராகவே இறுதிவரை இருந்தது மிகவும் வியக்கத்தக்கதாகும். தமிழிலேயே பூசை முறை, அதிலும் பெண்களே அதை நடத்தலாம் என்பது ஹிந்து சனாதனத்திற்கு உடன்பாடில்லாத ஒன்று என்று அறிந்து ‘தன் வழி தனி வழி’ என்று ஆக்கிக்கொண்டு வாழ்ந்தவர்.

வெறும் பக்தி திருப்பணியோடு அவர் நின்று விடாமல், மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி போன்ற பல கல்வித் திருப்பணிகளையும் செய்தவர் என்ற முறையில், சமய சீர்திருத்தத்தில் அவர் ஒரு தனி முத்திரை பதித்து ஆரியத்தின் மறைமுக எதிர்ப்பினையும் எதிர்கொண்டு வளர்ந்தவர் - மனிதநேயர். அவரது மறைவால் வருந்தும் அவரது வாழ்விணையர், பிள்ளைகள், குடும்ப உறவுகள், அவரது பக்தர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் திராவிடர் கழகம் சார்பில் மனிதாபிமானத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை நீங்கள் உற்றுப் படித்தால் வீரமணி அவர்களின் மீ உயர் சக்தியை கண்டுகொள்ள முடியும்.

இந்த அறிக்கையின் ஓர் இடத்தில் “அவர் ஒரு மவுனப் புரட்சியாளராகவே இறுதிவரை இருந்தது மிகவும் வியக்கத்தக்கதாகும்” எனக் குறிப்பிட்டு இருப்பார். இது பங்காருவின் பொண்டாட்டிக்கே தெரியாத விசயமாகும்.

இதை எழுதுவதற்காக ஆசிரியர் அவர்கள் எவ்வளவு அடி ஆழம்வரை சென்று சிந்தித்திருப்பார் என நினைக்கும் போது நமக்கும் வியப்பாக இருந்ததோடு உடலும் சிலிர்த்தது.

பெரும்பாலான நாட்டார் தெய்வக் கோயில்களின் ஆண்டாண்டு காலமாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோயிலுக்குச் செல்வதையும், அங்கே பூசைகள் செய்வதையும் வாடிக்கையாக வைத்திருப்பது ‘ஆசிரியர்’ அவர்களுக்கு தெரியாமல்போய் இருக்க வாய்ப்பில்லை.

ஆனால் சூத்திர பங்காரு, தான் கொள்ளை அடிப்பதற்காக கட்டி வைத்திருக்கும் வழிபாட்டு மன்றங்களில் அதைச் செய்ததுதான் அவருக்குப் பெரிய புரட்சியாக தெரிகின்றது என்றால், இதையே ஒரு அன்னக்காவடி பிச்சைக்கார சூத்திர சாமியார் தன்னுடைய கோயிலில் செய்திருந்தால் அவரை வீரமணி பாராட்டுவாரா? நிச்சயம் வாய்ப்பே இல்லை.

அப்படி என்றால் ஆசிரியர் அவர்களின் கையைப் பிடித்து இரங்கல் அறிக்கையை எழுது எழுது என எழுத வைத்த அந்த சக்தி எது?

அதையும் ஆசிரியரே இரங்கல் அறிக்கையில் சொல்லிவிட்டார். அதாவது “வெறும் பக்தி திருப்பணியோடு அவர் நின்று விடாமல், மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி போன்ற பல கல்வித் திருப்பணிகளையும் செய்தவர்” என்று.

மக்களுக்கு கல்வியையும் மருத்துவத்தையும் கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசினுடையது என்றும், அதை தனியார் நடத்துவதும், சாமியார் நடத்துவதும், ‘பெரியாரிஸ்ட்’ நடத்துவதும் பணவசூலுக்காகவே என்றும் வீரமணி அவர்களுக்கு யார் சொல்லி புரிய வைப்பது?

பங்காரு தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை கட்டியமைத்து ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு முதலாளியாய் வருவதற்கு, தினம் தினம் உழைத்தால்தான் சோறு என்று வாழும் ஆயிரக்கணக்காண ஏழை மக்களின் ரத்தத்தை அல்லவா உறிஞ்சி இருக்கின்றார்.

அப்படி இருந்தும் பெரியாரின் கொள்கைகளைப் பேசும் வீரமணி எப்படி மக்களை ஆன்மீகத்தின் பெயரால் கொள்ளையடிக்கும் கேடுகெட்ட ஒருவருக்கு மனமுருகி இரங்கல் தெரிவிக்கின்றார் என்பதும் ஆச்சரியத்தில் ஆடிப் போகின்றார் என்பதும் சாதாரணமாக கடந்து போகும் ஒன்றல்ல.

வீரமணி அவர்களின் வர்க்க சிந்தனையும் அவரை ஆதரிப்பவர்களின் வர்க்க சிந்தனையும் எளிய மக்களின் நலன் என்ற எல்லையில் இருந்து கடந்து கார்ப்ரேட் நலன் என்ற நிலைக்கு வந்தடைந்து இருக்கின்றது. அது திமுகவின் நலன் என்ற புள்ளியில் இணைக்கப்பட்டு விட்டது.

திமுக பங்காரு அடிகள் ஒரு சூத்திர சாமியார், அதனால் அவர் என்ன அயோக்கியத்தனங்களை செய்தாலும் நாங்கள் ஆதரிப்போம் என்று சொல்ல முடியாது. ஆனால் வீரமணி அவர்களுக்கு அந்தப் பிரச்சினையே இல்லை. மொள்ளமாரித்தனத்தை பார்ப்பன சூத்திர முரண்பாடாகக் காட்டிவிட்டால் தனது அடிமைகள் மேற்கொண்டு பார்த்துக் கொள்வார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

அடிமைகளுக்கு ஒரு போதும் சுயசிந்தனையோ தவறுகளைத் தட்டிக் கேட்கும் தைரியமோ வருவதில்லை.

சூத்திர சாமியார் பங்காருவின் சாதனைகள் என்ன?

2010இல் ஆதிபராசக்தி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

2012ஆம் ஆண்டில் போதுமான வசதிகள் இல்லாத தங்களது பல் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதியைப் பெற இந்திய பல் மருத்துவக் கழக உறுப்பினர் முருகேசனுக்கு ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் லஞ்சம் கொடுக்க முயன்றபோது, முருகேசனையும் கல்லூரியைச் சார்ந்த பலரையும் சி.பி.ஐ. கைது செய்தது. பங்காரு அடிகளாரின் மருமகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளைக்குச் சொந்தமான பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், வணிகக் கட்டடங்கள், வாகன நிறுத்துமிடம், சித்தர் பீடத்தின் சில பகுதிகள் என எல்லாமே அரசு புறம்போக்கு நிலங்களிலும் நீர்நிலைகளிலும் கட்டப்பட்டிருப்பதால் அவற்றை அகற்ற வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அவற்றை இடித்து அகற்ற உத்தரவிட்டது.

இந்த வழக்கைத் தொடர்ந்த ராஜா என்ற நபரை ஆதிபராசக்தி பீடத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டியதாக புகார்களும் எழுந்தன.

கடந்த 2018ஆம் ஆண்டில் பங்காரு அடிகளாரின் மகனான செந்தில்குமார், தங்களது கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர், கல்லூரியில் உள்ள வசதிக் குறைவுகள் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டதால் அவரைத் தாக்கியதில், அந்த மாணவர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து செந்தில்குமார் மீது கொலை முயற்சி உள்படப் பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரைத் தேட ஆரம்பித்தது. இதையடுத்து அவர் தலைமறைவானார். (நன்றி:பிபிசி)

இவை எல்லாம் வெளி உலகிற்குத் தெரிந்த பங்காருவின் அழிசாட்டியத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே. இன்னும் தெரியாத பல அயோக்கியத்தனங்கள் பங்காருவின் சாம்ராஜ்ஜியத்தில் நடந்திருக்கின்றன.

சமூகத்தின் தன்னை குறைந்த பட்ச நேர்மையாளராக காட்டிக்கொள்ள விரும்புவர்கள் கூட இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகளை துணிந்து வெளிப்படையாக ஆதரிக்க மாட்டார்கள். ஆனால், 'முற்போக்காளர்கள்' எந்தவித கூச்சமோ, குற்ற உணர்வோ இல்லாமல் இவரை ஆதரிக்க முடிகின்றது என்றால் அவர்களின் தரம் என்ன என்பதை நாம் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

பத்து பிச்சைக்காரனுக்கு சோறு போட்டார், பத்து ஏழைக்குழந்தைகளைப் படிக்க வைத்தார் என்பதே ஒரு மோசடி பேர்வழியை ஏற்றுக் கொள்வதற்கும், அவரது சாவிற்கு இரங்கல் தெரிவிப்பதற்கும் போதுமானதாக இருக்கின்றது என்றால், சிந்தனை அளவில் அது போன்றவர்கள் எத்தகையவர்களாக வாழ்கின்றார்கள் என்பதை யோசிக்க வேண்டும்.

நமக்கு என்ன பயம் என்றால், நாளையே ஒரு கொலை குற்றவாளிக்கு ஆதரவாகவோ, பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாகவோ சாலையில் நின்று கொண்டு சங்கராச்சாரி செய்யாத கொலையா? பாலியல் வன்முறையா? அதை எல்லாம் செய்வதற்கு சூத்திர சாமியாருக்கு உரிமை இல்லையா? எனப் போர்க்கொடி தூக்கி விடுவார்களோ என்பதுதான்.

தலைவர்கள் தங்களோடு சேர்த்து தனது தொண்டர்களையும் தரம் தாழ்ந்தவர்களாக மாற்றுகின்றார்கள். அவர்கள் தெரிந்தே தங்களது தொண்டர்களுக்கு கீழ்மையைக் கற்றுக் கொடுக்கின்றார்கள்.

- செ.கார்கி

Pin It