தமிழ்நாட்டில் நீண்ட காலமாக மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் சிவராத்திரி பூஜையை, கலை இரவு போல விடிய விடிய ஒரு கொண்டாட்டமாக நடத்துகிறார். மத்திய அரசு, மாநில அரசுகளின் தலைவர்கள், கலைத்துறை, விளையாட்டுத்துறை, நீதி, நிதி, நிர்வாகத்துறை, ஊடகங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என சமுதாயத்தின் அனைத்துத் துறைகளில் இருந்தும் மக்கள் அந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர்.

tamannah jaggi vasudevபட்டியலின மக்களின் நிலங்களை அபகரித்தது, அரசின் அனைத்து விதிகளையும் மீறுவது, சுற்றுச்சூழல் கேடுகள், சட்டவிரோத நடவடிக்கைகள் என எல்லாமே மக்களுக்குத் தெரிந்துள்ளது. அந்த விழாவில் பங்கு பெறும் அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும், மீடியாக் களுக்கும், காவல்துறை, நீதித்துறை அதிகாரி களுக்கும்கூட ஜக்கி வாசுதேவின் அனைத்துத் தில்லுமுல்லுகளும் தெரியும். எல்லாம் தெரிந்தும் ஈஷா மய்யம் நடத்தும் முழு இரவுக் கொண்டாட்டத்தில் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் பங்கேற்கின்றனர். 

ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்தில் மட்டுமல்ல, சங்கராச்சாரிகளின் காஞ்சி சங்கர மடம், $$ரவிசங்கரின் அகில உலக மடங்கள், சைவ ஆதீன மடங்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடங்கள், நித்தியானந்தா மடங்கள், அமிர்தானந்தமயி மடங்கள் என அனைத்திலும், அனைத்து விதமான சட்டவிரோத நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன. அனைத்து மடங்களின் மீதும், மடத் தலைவர்களின் மீதும் வழக்குகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை மக்களும் ஊடகங்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

ஆனாலும், எந்த மடத்திற்கும், எந்தச் சாமியாருக்கும் மக்கள் ஆதரவு குறையவில்லை. கஞ்சா குடிக்கிச் சாமியார் முதற்கொண்டு கார்ப்பரேட் சாமியார் வரை அவரவர் சக்திக்கு ஏற்ப மக்களை ஏய்த்து, சுரண்டி சுகமாக வாழ்ந்துவருகிறார்கள். இந்த இந்துச் சமுதாயத்தின் சட்டங்கள் சிறிதும் அசையாமல் பாதுகாத்தும் வருகிறார்கள். இந்த நிலைக்கு அடிப்படைக் காரணம் மக்களின் மூடநம்பிக்கை.

மேற்கண்ட சாமியார்கள், மடங்கள், மூடநம்பிக்கைகள், கடவுள், ஜாதி, மதங்களை எதிர்க்கும் பகுத்தறிவாளர்கள் எண்ணிக்கையில் மிக மிகக் குறைவு. அந்தக் குறைவான எண்ணிக்கை கொண்ட தோழர்களையும்,  இந்தப் பார்ப்பன - பனியா - கார்ப்பரேட் அரசு தனது அன்றாடச் செயல்பாடுகளுக்கு எதிர்வினை மட்டுமே ஆற்றுபவர்கள் என்ற நிலைக்குப் பின்னோக்கி இழுத்து நிறுத்திவிட்டது.

எந்தச் சிக்கலையும் நிரந்தரமாகத் தீர்க்க என்ன செய்யலாம் என நாம் யோசிப்பதற்கு முன் அடுத்த தாக்குதல் நடத்தப்பட்டுவிடுகிறது. ‘தற்காப்பு’ என்ற தளத்தில்கூட அவசர அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் நாம் ‘தாக்குதல்’ தளத்தைப் பற்றி யோசிக்கவே முடியவில்லை.

இந்தத் தற்காப்பு என்ற தளத்திலாவது முடிந்த அளவு போராடிக் கொண்டிருந்த செயல்வீரர்களில் பலர் அண்மைக்காலமாக, முகநூல் போன்ற சமூகவலைத் தளங்களில் சிக்கிக் காணாமல் போய் விட்டனர். பகுத்தறிவாளர்களின் செயல் பாடுகள் சமூகவலைத்தளங்களில் எதிரொலிக்க வேண்டும். நாம் தான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட்களை உருவாக்க வேண்டும்.

ஆனால், நிலைமை தலைகீழாக உள்ளது.  நாம் எப்படி இயங்குவது? நாம் எந்தச் செயல்பாட்டை முன்னெடுப்பது என்பதைச் சமூகவலைத்தளங்களில் யார் யாரோ உருவாக்கும் ட்ரெண்ட்கள் தான் நிர்ணயிக்கின்றன. ட்ரெண்ட்களின் பின்னே நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

அதன் விளைவு? மகா சிவராத்திரி என்ற விழாவிற்கு அடிப்படையாக இருக்கும் இந்து மத மூடத்தனத்தையும், அறிவுக்கு எதிரான கற்பனைக் கதையையும் பரப்பும் வேலையை விட்டு விட்டு, ஜக்கி வாசுதேவ் பின்னாலும், அவரது விழாவில் கலந்துகொண்ட தமன்னா, காஜல், ராணா போன்றவர்கள் பின்னாலும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

ஜக்கி போன்ற சாமியார்களையும், மடங்களையும் எதிர்ப்பது அவசியமான ஒன்றுதான்.  ஆனால், நாம் அதைக்கூடச் செய்வதில்லை. சிவன் சிலையில் உள்ள முகத்தோடு வடிவேலு முகத்தையும், ஜக்கி நடனப் படத்தோடு வடிவேலு நடனப் படத்தையும் போட்டு விட்டுப் போய்விடுகிறோம். வெறும் கிண்டல், கேலியோடு கடந்து போய்விடுறோம். சிவனை வழிபடும் மக்கள்கூட, உள்ளூரில் சிவன் கோவிலுக்குப் போய்விட்டுவந்து, முகநூலில் ஜக்கியைக் கிண்டல் செய்து ஒரு பதிவைப் போட்டுவிடு கின்றனர். நமது போராளிகள் கோவிலுக்குப் போகாமல் அதே பதிவைப் போடுகின்றனர். அவ்வளவுதான் வேறுபாடு.

இது பயன்தராது. சாமியார்கள் மாறிக்கொண்டிருப்பார்கள். அவர்களைப் பார்க்க வரும் கூட்டம் மாறிக்கொண்டிருக்கும். அதேசமயம் இந்த இழிவு நிலை நீங்காமல் தொடர்ந்துகொண்டே இருக்கும். சமூகவலைத்தளங்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பு நாம் இப்படித்தான் இயங்கினோமா? குறைந்தது யாராவது ஒருவரிடமாவது சிவனைப் பற்றியும், சிவராத்திரியின் மூடநம்பிக்கை பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும் விளக்கம் கொடுத்திருப்போம். விவாதித்திருப்போம். அமைப்புகள் வெளியிடும் துண்டறிக்கைகளைப் பரப்பியிருப்போம். ஒரு தட்டி, அல்லது சுவரொட்டி போட்டிருப்போம்.

ஆனால், இப்போது அதுபோன்ற பணிகள் எதுவும் நடக்கவில்லை. சிவராத்திரி மூடநம்பிக்கை பற்றிய பெரியாரின் கருத்தை நாம் பரப்பவில்லை. ஃபோட்ஷாப் படங்களைப் பரப்பி நிம்மதியாகி விடுகிறோம். சமூக வலைத்தளங்களிலாவது பெரியார் பேசிய சிவராத்திரிக் கதைகளைப் பரப்பியிருக்க வேண்டும். அதை ஒரு ட்ரெண்ட் ஆக்கியிருக்க வேண்டும். நாம் தவறிவிட்டோம்.

இனிமேல் வரும் மதப் பண்டிகைகளிலாவது, இதுபோன்ற பண்டிகைகள் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே அவை தொடர்பான கருத்துப் பரப்பல்களைத் தொடங்க வேண்டும். சிவராத்திரி நாளில் சராசரி மனிதர் யாராவது ஒருவர், ஒரே ஒருவர், நமது பிரச்சாரத்தால் கோவிலுக்குப் போகாமல் நிம்மதியாகத் தூங்கப் போனால் அதுதான் நமது வெற்றி. சிரிக்க வைக்கும் படங்களால் நாம் புதிதாக எவரையாவது உருவாக்க முடிந்ததா? என்று யோசித்துப் பாருங்கள். நமது ஆற்றலை விரயமாக்குவதைவிடப் பெரியாரியலுக்கு மிகப்பெரும் துரோகம் வேறு எதுவும் இல்லை.

மகா சிவராத்திரியின் மகா யோக்கியதை!

தோழர் பெரியார்

ஒரு வேடன். அவன் தன் உணவுக்குத் தினமும் பல பிராணிகளை வேட்டையாடி கொன்று தின்பது வழக்கம், அந்தப்படி ஒரு நாள் காட்டில் வேட்டையாடி இரை தேட சென்றதில் அவனுக்குக் கொல்ல ஒரு பிராணியும் கிடைக்கவில்லை. அவன் மனக் கலக்கமடைந்து சோர்ந்து திரிந்தான். அந்நேரத்தில் அந்தக் காட்டில் ஒரு புலி, அவன் கண்ணுக்குத் தென்பட்டது. நேரமும் சற்று இருட்டி விட்டது. என்றாலும் வேடன் புலியைக் கண்டு ஓடினான். புலி விரட்டிற்று. வேடன் உடனே அங்கு இருந்த ஒரு மரத்தின்மீது அவசரமாக ஏறிக் கொண்டான்.

புலி அவனைப் பார்த்த வண்ணமே மரத்தடியில் சிறிது நின்று கொண்டிருந்து படுத்துக் கொண்டது. வேடன் அந்தப் புலியை விரட்டுவதற்காக ஆக மரத்திலிருந்த சிறு கிளைகள் தழைகள் முதலியவற்றைப் பிடுங்கி கீழே எறிந்தான். அப்போது சிறு மழைத்தூரல் விழுந்து கொண்டு இருந்ததால் அத்தழைகள் சிறிது நனைந்து விழுந்தன.

இப்படியே பயந்து கொண்டு இரவு முழுதும் தூங்காமல் செய்து கொண்டு இருந்தான். சிறிது வெளிச்சம் படும்படி வானம் வெளுக்க ஆரம்பித்தவுடன் புலி ஓடிவிட்டது. இந்த நிலையில் வேடன் கீழிறங்கி வீட்டிற்குப் போய்விட்டான். பிறகு அதே தொழிலாக இருந்து சில நாள் பொறுத்துச் செத்தான். சிவன் உடனே அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுத்துவிட்டார். காரணம் என்னவென்றால்,

அந்த வேடம் தினம் உயிர்களைக் கொன்று வதை செய்து சாப்பிடுபவனாகவும், விற்பவனாகவும் இருந்தாலும், அவன் அன்றிரவு தான் பறித்துப் போடுகின்ற தழை, வில்வத்தழை என்று அறியாதிருந்தாலும், அப்போது அந்த மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது விழுகிறது என்பது தெரியாமல் போட்டிருந்ததாலும், அவனுக்குச் சிவ பக்தி, ஒழுக்கம் என்பவை சிறிதும், இல்லாமல் இருந்தாலும், அவனுக்குத் தெரியாமல் வில்வத்தழை நீரில் நினைந்து சிவலிங்கத்தின் மீது பட்டிருப்பதால், அவனுக்குக் கைலாயத்தில் இடம் கொடுக்க வேண்டியது அவசியம் என்று சிவன் கருதி மோட்சம் கொடுத்தான் என்பது இதன் கருத்து.

எதற்கு ஆக இக்கதை கற்பிக்கப்பட்டது என்றால், எவ்வளவு அயோக்கியனானாலும் இந்த விரதத்தை கொண்டாடினால் மோட்சம் கிடைக்கும் என்று மக்கள் கருதி இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். இதனால் நாம் அறியக்கிடப்பது என்னவென்றால், எவ்வளவு அயோக்கியனும் ஆரியமதத்தில் சேர்ந்தால் நன்மை அடைவான் என்கின்ற அளவுக்கு இது மதப்பிரசாரமாகும் என்பதுதான்.

இப்படியானால் ஆரிய (இந்து) மதம் காரணமாக எவனுக்காவது ஒழுக்கமேற்பட முடியுமா? எவனாவது ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்பட முடியுமா? ஆரிய மதமும் ஒன்றே தான் என்பது அறியத்தக்கது. ஆதலால் திராவிட மக்கள், இந்த முட்டாள் தனமானதும் அயோக்கியத் தனமானதுமான இப்படிப்பட்ட மதம், சாஸ்திரம், கடவுள், பக்தி, விரதம், பூசை முதலியவற்றை நன்றாய் வெறுக்க வேண்டுமென்பது, இதனால் விளங்குகிறது.- விடுதலை, 09. 02. 1953

Pin It