கொத்து, கொத்தாக அடுக்கி வைக்கப்பட்ட மனித உடல்கள். கை இல்லாமல், கால் இல்லாமல், முகம் சிதைந்து உடல் துண்டாகி, ஒரு மனிதன் எப்படி எல்லாம் கொடூரமாக சாகக்கூடாதோ அப்படி எல்லாம் செத்துக் கிடந்தார்கள்.

தன்னுடைய அப்பா எங்கே?, அம்மா எங்கே? அண்ணன் எங்கே? தம்பி எங்கே? தங்கை எங்கே? என கையில் புகைப்படத்துடன் பிணக்குவியலில் கண்ணீருடன் ஒவ்வொருவரும் தேடுவது மனதை உறைய வைக்கின்றது.

உறவுகளைப் பறிகொடுத்தவர்களின் துயரம் மொழிகடந்து, எல்லை கடந்து அனைவரையும் பற்றிக் கொண்டிருக்கின்றது.

288 பேர் இறந்து விட்டதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக செய்திகள் வருகின்றன.

இவ்வளவு பெரிய விபத்து நடந்து, இத்தனை மனித உயிர்களைப் பறி கொடுத்தபின், விபத்துக்கான காரணத்தை ஊழியர்களின் தவறுகளில் மோடி அரசு தேடிக் கொண்டிருக்கின்றது.

இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்ற கருவியில் செய்யப்பட்ட மாற்றமே விபத்துக்குக் காரணம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகின்றார்.

odisha train accidentஇன்டர்லாக்கிங் சிஸ்டம் என்பது ரயில் தண்டவாளத்தில் ரயில்வே கேட், சிக்னல்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் பாயிண்ட் இயந்திரங்கள் கட்டுப்பாட்டு அறைகளுடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஒட்டுமொத்த கட்டமைப்பு ஆகும். ரயிலானது ஒரு குறிப்பிட்ட லைனில் செல்லும் போது, அந்த லைனில் வேறு ரயில் எதுவும் இல்லை என்பதை இந்த இண்டர்லாக்கிங் மூலமே உறுதி செய்யப்படுகிறது

ஒடிசா ரயில் விபத்தின் போது இந்த இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்ததால்தான் இணைப்பு தண்டவாளத்தில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த போதும், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிக்னல் கிடைத்து விபத்து ஏற்பட்டது என்று ரயில்வே அமைச்சர் கூறுகின்றார்.

ரயில்வே அமைச்சரின் இந்தக் கருத்து தற்போதைக்கு இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் கூறப்பட்டது என்பதுதான் உண்மை. காரணம் ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதை 3 மாதங்களுக்கு முன்பே, அதாவது பிப்ரவரி மாதமே தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி எச்சரித்து இருக்கின்றார்.

ஆனால் மனித உயிர்களை கிள்ளுக்கிரைகளாக நினைக்கும் பாசிச மோடி ஆட்சி அதை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் பெரும் விபத்தை எதிர்நோக்கி காத்திருந்திருக்கின்றது.

அதுமட்டுமட்டுமல்ல, ரயில்களின் மோதலைத் தவிர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ‘கவாச்’ கருவியும் இதுவரை முறையாக அனைத்து ரயில்களிலும் பொருத்தப்படவில்லை. இந்தக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தால் சுமார் 400 மீட்டருக்கு முன்னதாகவே என்ஜின்களின் செயல்பாடு முடக்கப்பட்டு விடும்.

ஏறக்குறைய 2011-12ம் ஆண்டே நடைமுறைக்கு வந்துவிட்டது இந்த கவாச் கருவி. இந்திய ரயில்வேயின் 68,043 கிமீ நீளமுள்ள ரயில் தடத்தில் சுமார் 1,445 கிமீ நீளத்துக்கு மட்டும இந்த வசதி கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதாவது வெறும் 2 சதவீத ரயில் தடங்கள் மட்டுமே கவாச் பாதுகாப்பில் இருக்கின்றன.

விலை மலிவான இந்தக் கருவிகள் மட்டும் பொருத்தப்பட்டிருந்தால் இவ்வளவு பெரிய விபத்தைத் தடுத்திருக்க முடியும். ஆனால் ரயில்வேயை தனியாருக்கு விற்கவும், அதை பணக்காரர்களுக்கான பயணமாக மாற்றவும் துடித்துக் கொண்டிருக்கும் மோடி அரசு, எளிய மக்களின் உயிரோடு விளையாடி இருக்கின்றது.

இவ்வளவு பெரிய விபத்தில் இத்தனை நூறு மக்கள் கொடூரமாக செத்தபின், அதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டிய மோடி, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார்.

விபத்து நடந்த இடத்திற்கு வந்த மோடி "இந்த துயர சம்பவத்தில் எனக்கு ஏற்பட்ட சோகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இது ஒரு கடினமான நேரம். சோகத்தை சமாளிக்க கடவுள் எங்களுக்கு வலிமை தரட்டும். காயமடைந்த பயணிகளுக்கு உதவுவதற்கும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் அரசாங்கம் முழு முயற்சி எடுக்கிறது. இது ஒரு தீவிரமான சம்பவம். இது குறித்து ஒவ்வொரு கோணத்திலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள், யாரும் தப்பிக்க முடியாது" என்று பேசி இருக்கின்றார்.

ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஏன் நிரப்பப்படாமல் இருக்கின்றது என்றோ, ஏன் ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் எடுக்கப்படுகின்றார்கள் என்றோ, கீழ்நிலைப் பணியாளர்கள் ஓய்வின்றி 16 மணி நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுவதைப் பற்றியோ, ஏன் கவாச் கருவி பொருத்தப்படவில்லை என்றோ அவரிடம் யாருமே கேள்வி எழுப்பவில்லை.

மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்தே வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ரயில்களில் பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது

எளிய மக்கள் அதிகம் பயணிக்கும் ரயில்களில் மின்விசிறிகள் இல்லாமல் இருப்பது, கழிப்பறைகள் இல்லாமல் இருப்பது, அப்படியே இருந்தாலும் மனிதர்களால் பயன்படுத்த முடியாத அவல நிலையில் இருப்பது என்ற நிலையில்தான் இருக்கின்றது.

புறநகர் மற்றும் கிராமப்புறங்களை நகரங்களோடு இணைக்கும் ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதோடு அதன் டிக்கெட் விலையும் தொடர்ச்சியாக மோடி அரசால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

மக்களிடம் இவ்வளவு கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டாலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லாத கொடிய ஆட்சியாகவே மோடியின் ஆட்சி இருந்துள்ளதைத்தான் 288 பேரின் கொடூர சாவு காட்டியிருக்கின்றது.

கடந்த 2020 ஆண்டு ரயில் நிலையங்களின் பராமரிப்பை தனியாருக்கு விடுவது, ரயில்களை தனியார் இயக்க அனுமதிப்பது, பயணச்சீட்டு உள்ளிட்டவற்றை தனியார் விற்பனை செய்ய அனுமதிப்பது, சரக்கு ரயில்களை தனியாருக்குத் திறந்து விடுவது போன்ற நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது.

அதன்படி பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தேஜாஸ் ரயில் போல அதிக தனியார் ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், புதிய ரயில்வே பாதைக்காக 12,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் அறிவித்திருந்தார்.

மேலும் 100 வழித்தடங்களில் 150 தனியார் ரயில்களை இயக்கும் நடவடிக்கைக்கு ரயில்வே துறை தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டவுடன் ஹூண்டாய், சீமென்ஸ் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும், டாடா, அதானி போன்ற இந்திய நிறுவனங்களும் தனியார் ரயில்களை இயக்க விருப்பம் தெரிவித்தன.

இந்தியாவில் ஏறத்தாழ 21000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் 14 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலை செய்கிறார்கள். ரயில் வண்டி, ரயில் நிலையங்கள், உணவு விற்பனைப் பிரிவு, டிக்கெட் விற்பனைப் பிரிவு, ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேசன், ரயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனங்கள், எஞ்சின் தயாரிக்கும் கனரக நிறுவனங்கள், ரயில்வே உதிரிபாகம் மற்றும் மின்பொருள் தயாரிப்பு நிறுவனம், ரயில் சக்கர தொழிற்சாலைகள், ரயில்வே அச்சகங்கள், ரயில்வே ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்புகள், விளையாட்டு மைதானம், பள்ளிக்கூடம், மருத்துவமனை, கேன்டின் இதுபோன்று பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியது இந்திய ரயில்வே.

இப்படி பல லட்சம் கோடி சொத்து மதிப்பு கொண்ட ரயில்வேயை கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்கு விற்றுவிடத்தான் முதலாளிகளின் அடியாளாக செயல்படும் மோடி அரசு துடித்துக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே IRCTC-ன் 12.6% பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது, அதேபோல் 5% ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேசனின் பங்குகள் மற்றும் ரயில் நிலையங்களில் WIFI வசதிகளை ஏற்படுத்தித் தரும் ரயில்டெல் நிறுவனத்தின் 10% பங்குகளும் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. என்ஜின் தயாரிப்பு நிறுவனங்களையும், ரயில் பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டமும் மோடி அரசிடம் உள்ளது.

பணக்காரர்கள் பயணிக்க 'வந்தே பாரத்'தும், ஏழைகள் ரயிலில் பயணித்தாலே பரலோகத்திற்குப் போகவுமான நிலையை மோடி அரசு ஏற்படுத்தி இருக்கின்றது.

மோடி அரசிடம் பொதுத்துறைகளை விற்றுத் தின்பதையும், வளங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதையும் தவிர வேறு எந்தத் திட்டமும் இல்லை.

மனித உயிர்களை மதிக்கத் தெரியாத கொடூர பாசிஸ்ட்கள் ஆட்சியில் இருக்கும் வரை இது போன்ற விபத்துகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கும். நாம் எப்போது பாசிஸ்ட்களுக்கு முடிவு கட்டுகின்றோமோ, அவர்களை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிகின்றோமோ, அப்போதுதான் எளிய மக்கள் பாதுகாப்பான பயணத்தை நம்பிக்கையுடன் மேற்கொள்ள முடியும்.

- செ.கார்கி

Pin It