பண்டைய காலத்தில், முதலாளிகள் தங்களது நிலத்தில் விவசாயம் செய்ய பண்ணை அடிமைகளைப் பயன்படுத்தினார்கள். வேலை முடிந்ததும் ஆடு மாடு போல் சங்கிலியால் பண்ணை அடிமைகளை கட்டிப் போட்டனர். வேலை நேரம் உட்பட அனைத்து நேரமும் விலங்குகள் போல் பண்ணை அடிமைகள் கருதப்பட்டனர். தூங்கும் நேரத்தில் கூட முதலாளிகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்தனர். அவர்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஏனெனில் பண்ணை அடிமைகள் அக்கால கட்டத்தில் முழுமனிதர்களாக கருதப் படவில்லை.
அக்கால கட்டத்தில் இரு பழங்குடி இனங்களுக்கு இடையே நடக்கும் போரில் வென்றவர்கள், தோல்வியுற்ற பழங்குடி குழுக்களைச் சார்ந்த ஆண்களைக் கொன்று விடுவர். மீதமுள்ள ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாக மாற்றி விடுவர். தோற்றவர்களிடம் அடிமைகளாக இருந்தவர்கள் போரில் வென்றவர்களுக்கு அடிமைகளாக கையளிக்கப் பட்டனர். அதாவது எஜமானார் மாற்றம் மட்டுமே. உரிமை மாற்றம் அடிமைகளுக்கு எதுவும் கிடையாது. ஐரோப்பிய நாடுகள் ஏனைய ஆசிய, ஆப்ரிக்க நாடுகளை காலனிகளாக ஆண்ட காலத்தில், காலனி நாடுகளைச் சேர்ந்தோர் அடிமைகளாக கப்பல்களில் ஏற்றிச் செல்லப்பட்டு ஏகாதிபத்திய நாடுகளின் விவசாய நிலங்களிலும் தோட்டங்களிலும் தொழிற்சாலைகளிலும் கொத்தடிமைகளாக வேலை செய்தனர். இன்று கூட வாழ வழியின்றி, செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்வோர் உண்டு.
அதற்குப் பிந்தைய முதலாளித்துவ உலகில் கூலித் தொழிலாளிக்கு கொஞ்சம் சுதந்திரம் கிடைத்தது. விரும்பினால் சம்பளம் வாங்கிக் கொண்டு ஒரு முதலாளியிடம் வேலை செய்யலாம். குறிப்பிட்ட நேர உழைப்பு முடிந்த பின்னர் முதலாளியிடம் இருந்து பிரிந்து வந்து விடலாம். சம்பளம், வேலையிடம், வேலை நேரம், முதலாளியின் நடத்தை உட்பட பல காரணங்களுக்காக வேலையை விட்டு நின்று விடலாம். வேலை செய்ய விருப்பம் இல்லையென்றாலும், வேலை செய்ய முடியாமல் போனாலும் வேறு வேலைக்கு மாறிக் கொள்ள கூலித் தொழிலாளிக்கு உரிமை உண்டு.
வாடகைத் தாய் முறையோ பெண்களை அடிமை காலகட்டத்திற்குத் தள்ளுகிறது. ஏனெனில், பெண் என்பவள் வியாபாரத்திற்காக பொருளை (குழந்தையை) உற்பத்தி செய்யும் இயந்திரமும் அல்ல. வாடகைத் தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள உறவு ஒரு பொருளை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளருக்கும், உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கும் இடையிலான உறவைப் போன்றதும் அல்ல. இருப்பினும், வாடகைத் தாய் முறையில், "வாடகைத் தாய்" தன் வயிற்றை மட்டும் வாடகைக்கு விடவில்லை, மாறாக தன்னையும் தன் வயிற்றில் வளரும் குழந்தையையும் விற்கிறாள். வாடகைத் தாயாக மாற முடிவெடுக்கும் போதும் அவள் சுதந்திரமானவளாக முடிவெடுப்பதில்லை. வாடகைத் தாயாக மாறிய பின்னரும் அவள் சுதந்திரமானவளாக முடிவெடுக்க இயலாது. அவளுடைய கர்ப்பமும் அவளுக்குச் சொந்தமில்லை.
வாடகைத் தாயின் வயிற்றில் குழந்தை வளரும் காலகட்டத்தில், அவள் என்ன செய்கிறாள், அவள் என்ன சாப்பிடுகிறார், அவள் எப்போது தூங்குகிறார் என 24 மணி நேரமும் கண்காணிக்கப் படுகிறாள். வாடகைத் தாயை பணியமர்த்துபவர்களிடம் முழுமையாக தன்னை ஒப்படைக்கிறாள். குழந்தையை பெற்றெடுக்கும் இந்த முறையில், வாடகைத்தாய் 'பினாமி போன்ற' ஒரு உரிமையற்ற பாத்திரத்தை ஏற்றுக் கொள்கிற கட்டாயத்திற்கு உட்படுத்தப் படுகிறாள். குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தையை குறிப்பிட்ட காலத்திற்கு பாதுகாக்கும் ஒரு இன்குபேட்டர் போல தனது கருவறையில் வைத்திருந்து பெற்றெடுத்துத் தருகிறாள்.
கர்ப்ப காலத்திலும், மகப்பேறு காலத்திலும் வாடகைத் தாயாக மாறியவளுக்கு எவ்வித உடல் வலியோ, உளவியல் சிக்கலோ இருந்தாலும், பிள்ளையை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை இருக்கிறது. அதே வேளையில் பெற்றெடுத்த பிள்ளையை உரிமை கோரவும் முடியாது. வாடகைத் தாயாக மாற ஒப்புக் கொண்ட நொடியில் இருந்து, அவளால் எதையும் சுதந்திரமாகச் செய்ய முடியாது. அவள் விரும்பினாலும், மருத்துவரும் (வாடகைத் தாயின் எஜமானர்களும்) ஒப்புக் கொள்ளாத வரை அவளால் கருக்கலைப்பு கூட செய்ய முடியாது. அவள் விருப்பத்திற்கு மாறாக சிசேரியன் முறைக்கு கட்டாயப் படுத்தப்படலாம். அதாவது தன் சொந்த உடலையோ, தன் உடலில் உள்ள கர்ப்பத்தையோ சொந்தம் கொண்டாட முடியாத வகையில் பிரிந்தெடுக்கப் படுகிறாள். பண்ணை அடிமைகள் எப்படி தன் உடலை சொந்தம் கொண்டாட முடியாமல் இருந்தார்களோ, அதே நிலைக்கு வாடகைத் தாயும் தள்ளப் படுகிறாள்.
வாடகைத் தாயாக மாற அவள் முடிவெடுப்பதும் அன்பின் காரணமாகவோ, சுதந்திரமாகவோ இருக்காது. வயிற்றை விற்றாவது உயிர் வாழ வேண்டிய நிலையில் உள்ள பெண்கள் மட்டுமே வாடகைத் தாயாக இருப்பதற்கு ஒப்புக் கொள்வார்கள். அதாவது மோசமான சமூகப் பொருளாதார சூழ்நிலையே வாடகைத் தாய்மார்களை உருவாக்குகிறது. இன்னொரு பெண்ணிற்கு குழந்தை பெற்றுத் தந்தால், அந்தப் பெண் மகிழ்ச்சியாக இருப்பாள், அவளுக்கு நாம் உதவுவோம் என்ற சுதந்திரச் சிந்தனையின் காரணமாக எந்தப் பெண்ணும் வாடகைத் தாயாக இருப்பதற்கு ஒப்புக் கொள்ள மாட்டாள்.
ஒருவருடைய வாழ் நிலையே அவளுக்கு வாடகைத் தாயாக மாறும் உணர்வை கொடுக்கிறது. மாறாக வாடகைத் தாயாக மாற வேண்டும் என்ற சுதந்திர உணர்வு கொண்ட ஒரு பெண்ணைக் கூட இவ்வுலகில் காண முடியாது. உயர் வர்க்கப் பெண்கள் எவரும் வாடகைத் தாயாக மாற சம்மதிக்க மாட்டார்கள் என்பதில் இருந்து வாடகைத் தாய் முறையின் கொடூரத்தைப் புரிந்து கொள்ளலாம்.
உண்பது, தூங்குவது, உடலுறவு கொள்வது போன்றவை மனிதர்களுக்கும் விலங்களுக்கும் பொதுவானவைகளாக இருந்தாலும், மனிதர்களை விலங்குகளிடம் இருந்து பிரிப்பது உழைப்பு மட்டுமே. ஆனால் முதலாளித்துவ சமூகம் உழைப்பை மனிதர்களிடம் இருந்து அன்னியப்படுத்தி வைத்துள்ளது. முதலாளித்துவ சமூகத்தில் யாரும் விரும்பி உழைப்பதில்லை. உயிர் வாழ்வதற்கு வேறு வழியின்றி உழைக்கிறார்கள். ஆனால் விலங்குக்கு மட்டுமே உரிய பண்புகளான ”உண்பது, தூங்குவது, உடலுறவு கொள்வது” போன்றவற்றை மேற்கொள்ளும் போது மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கும்படி முதலாளித்துவ சமுகம் மனிதனை மாற்றி வைத்துள்ளது என்பார் மார்க்ஸ். வாடகைத் தாய் முறையோ பெண்ணை முழு நேரமும் விலங்காகவே இருக்க கட்டாயப் படுத்துகிறது. கோழிப் பண்ணையில் முட்டைக்காகவும், கறிக்காகவும் வளர்க்கப்படும் பண்ணைக் கோழியின் நிலைக்கு ஒப்பானது வாடகைத் தாயின் நிலை.
வாடகைத் தாய் முறை என்பது குழந்தை பெற்றுத் தர வாய்ப்புள்ள ஒரு பெண், குழந்தை பெற இயலாத இன்னொரு பெண்ணுக்கு குழந்தை பெற்றுத் தர உதவும் முறை அல்ல. அது பெண்ணை தன் உடலின் மீது உரிமை கோர இயலாத அடிமை முறைக்குள் தள்ளும் கொடூரம்.
முதலாளித்துவ சமுகத்தில் பல்வேறு அறிவியல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பினும், அவை தனியாருக்கு இலாபத்தை ஈட்டித் தரும் சேவையாகவே இருந்து வருகிறது என்பதை நம் அனுபவத்தில் பார்த்து வருகிறோம். வாடகைத் தாய் முறை அறிவியல் வளர்ச்சியின் வெளிப்பாடாக இருந்தாலும், அதனை அனுபவித்துப் பார்த்த பின்னர் தான், அதன் நல்லது கெட்டதைப் புரிந்து கொள்ள இயலும் என்ற போதாமை இன்று இல்லை. வாடகைத் தாய் முறை அதன் அடிப்படையிலே சுரண்டல் தன்மையோடு தான் உள்ளது என்பதை விளக்க நமக்கு மார்க்ஸ் தேவைப் படமாட்டார். சக மனித உயிர்கள் மீது அன்பிருந்தால் போதும்.
- சு.விஜயபாஸ்கர்