stalin with archakarsசமூக நீதி மண்ணின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் இழிவு செய்து செய்துகொண்டிருந்த சனாதனக் கும்பலின் திமிரில் நெருப்பை வைத்திருக்கின்றார் தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அவர்கள். தன்னுடைய ஆட்சியின் 100வது நாளில் இதைச் செய்து வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கின்றார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஒவ்வொரு குடிமகனுக்குமான சமத்துவத்தை உறுதிப்படுத்தவே நாம் இத்தனை ஆண்டுகாலம் போராட வேண்டி இருக்கின்றது என்பது, நாம் எவ்வளவு மோசமான சனாதன பாசிஸ்ட்கள் நிறைந்த மண்ணில் வாழ்கின்றோம் என்பதற்கு சான்று.

ஒரு சிறிய புல்லுருவிக் கூட்டமும், அந்தக் கூட்டத்தை அண்டிப் பிழைக்கும் அடிமைக் கூட்டமும் சக மனிதனின் ஜனநாயக உரிமையை மதத்தின் பேரால், சாதியின் பேரால், நம்பிக்கையின் பேரால் பறித்து அவர்களை சூத்திரர்கள் என்றும், தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் சொல்லி இழிவு செய்து கொட்டமடிப்பதைத் தடுக்கும் திராணியற்ற நிலையில் இத்தனை ஆண்டுகளாக நாம் இருந்தோம் என்பதே வெட்கக்கேடானது ஆகும்.

ஆனால் இனியும் அப்படி இருக்க முடியாது என்பதை நாம் அவர்களுக்கு உரத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். காரணம் இப்போதே சனாதன விசக்கிருமிகள் தங்களின் நாற்றமெடுத்த, ஆண்டு ஆண்டுகாலமாக செய்துவந்த அயோக்கியத்தனமான பொய் பரப்புரைகளை கட்டவிழ்த்துவிடத் தொடங்கி விட்டது.

சக மனிதனின் ஜனநாயக உரிமையை மறுத்து அவர்களை பொதுவெளியில் வந்து இழிவு செய்வதற்கு தங்களுக்கு வாழ்நாள் உரிமை உள்ளது போல சில சனாதன சாக்கடைப் புழுக்கள் பேசிக் கொண்டிருக்கின்றன.

அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஆன்மீக உரிமையை தனக்கே அத்தாரிட்டி ஆக்கி இத்தனை ஆண்டுகளாக அதன் பேரில் பொறுக்கித் தின்றதையும், கடவுளுக்குப் பூசை செய்வதால் தன்னை பூலோக தேவர்களாக பிரகடனப்படுத்திக் கொண்டு சக மனிதர்களை நாயினும் இழிவாக நடத்தியதையும் இனி செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டிருப்பது பொங்கச்சோறு புளியோதரைக் கும்பலுக்கு நடுக்கத்தைத் தருகின்றது. அந்த நடுக்கம்தான் நடுரோட்டுக்கு வந்து அதற்குக் காரணமான ஸ்டாலின் அரசைப் பார்த்து நாயைப் போல குரைக்க வைக்கின்றது.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை. அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 58 கோயில்களில் பணியாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அர்ச்சகர் பயிற்சி முடித்த மொத்தம் 207 மாணவர்களில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் இருந்தனர். இவர்களில் மாரிமுத்து, தியாகராஜன் என்ற இரண்டு மாணவர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் அட்ரசே இல்லாத சிறிய கோயிலில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். ஐந்து பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 200 பேரில் 4 பேர் வேறு அரசு வேலைகளுக்குச் சென்று விட்டனர். 196 பேர் அர்ச்சகர் பணிக்காக காத்திருந்தனர். இவர்களில் பலருக்கு வயது 35 மேல் ஆகிவிட்டதால் பணி கிடைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அரசு கூடிய விரைவில் அவர்களுக்கும் பெரிய கோயில்களில் பணி நியமன ஆணைகளை வழங்கும் என்று நம்புகின்றோம்.

ஆனால் பிரச்சினை இப்போது அதுவல்ல. ஸ்டாலின் அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை மிக எளிதாக செயல்படுத்திவிட்டாத நாம் நினைக்கலாம். ஆனால் ஒரு போர் தொடங்கப்பட்டிருக்கின்றது. சனாதனத்திற்கும் சமத்துவத்திற்குமான போர் அது.

ஆண்டாண்டு காலமாக கருவறையைக் கைப்பற்றி வைத்திருந்த கும்பல் நிச்சயம் இதற்கு எதிராக உச்சிக்குடுமி நீதிமன்றத்திற்குச் செல்லும். இப்போதே அதற்கான வேலைகளை அது தொடங்கி விட்டது.

ஏற்கெனவே கடந்த காலங்களில் உச்சிக்குடுமி நீதிமன்றம் இது சம்மந்தப்பட்ட வழக்குகளில் பெரும்பாலும் வேண்டுமென்றே குழப்பமான தீர்ப்புகளையே வழங்கியுள்ளது நமக்குத் தெரியும்.

1970-ல் சேஷம்மாள் வழக்கில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான அதிகாரம் மதச்சார்புத் தன்மையற்றது என்றும், அதற்கான தகுதி, திறமைகளை அரசு நிர்ணயிக்கலாம் என்றும், குற்றமிழைத்த அர்ச்சகர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கும் அறநிலைத் துறை நிர்வாகத்திற்கு அதிகாரம் உண்டு என்றும் அறிவித்ததோடு எந்த சைவ மற்றும் வைணவக் கோயில்களில் ஆகம முறைப்படி அர்ச்சகர்கள் நியமிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் ஆகம முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியது. மேலும் அப்பதவிகளில் எவரும் வம்சாவளி உரிமை கொண்டாட முடியாது என்றும் கூறி தமிழக அரசின் சட்டத் திருத்தத்தை உறுதிசெய்தது.

1972 இல் இயற்றப்பட்ட சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வாரிசுரிமை அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழகத்தில் இந்து அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்களில் உள்ள 1144 அர்ச்சகர்களில் 574 பேர் வாரிசுரிமைப்படி தான் இன்றுவரை பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 411 பேர் பார்ப்பனர்களின் பரிந்துரையின்பேரில் அர்ச்சகராகப் பணி நியமனம் பெற்றவர்கள்தான்.

2006-ல் இந்து அறநிலையத் துறை சார்பாக, சாதி வித்தியாசமில்லாமல் தகுதியும், பயிற்சியும் பெற்ற எவரையும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்ற அரசாணையை திமுக அரசு பிறப்பித்தது. அதற்காக ஒரு அவசரச் சட்டத்தையும் கொண்டு வந்தது.

இதை எதிர்த்து சிவாச்சாரியார்கள் தொடுத்த வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாத மத்தியில் உச்ச நீதிமன்றம் வழங்கி தீர்ப்பில் "தமிழக கோயில்களில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிக்கும் மரபு உள்ள இடங்களில் அதே முறைப்படி நியமிக்க வேண்டுமென்றும், ஆகம விதிகளின் கீழ் அர்ச்சகர் நியமனங்கள் நடக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் நீதிமன்றங்களை அணுகி, தனித்தனியாக நிவாரணம் கோர வேண்டுமென்றும்" என்றும் தீர்ப்பளித்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பின் மூலம் எல்லா சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாமா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை என்பதோடு அன்றைய அதிமுக அரசும் இது தொடர்பாக தன்னுடைய நிலைபாடு எதையும் தெரிவிக்கவில்லை.

ஆகம விதிகளைப் பின்பற்றி மட்டுமே அர்ச்சகர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று வைத்துக் கொண்டால் ஏற்கனவே கோயில்களில் தீட்சை பெறாமல் சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு பூசை செய்து வரும் பார்ப்பனர்கள் கோயிலில் இருந்து வெளியேற்றப்படும் சூழ்நிலை உருவாகும். ஆனால் அந்த அந்தக் கோயில்களில் ஏற்கெனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று சொல்வதன் மூலம் மரபுகள், சம்பிரதாயங்கள் என்ற போர்வைக்குள் பார்ப்பனர்கள் அவர்கள் பூசை செய்யும் கோயிலிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட இந்தத் தீர்ப்பு வழி ஏற்படுத்திக் கொடுத்தது.

தற்போது பார்ப்பனர்கள் இதைத் தனக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி உச்சிக்குடுமி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்ட வாய்ப்பிருக்கின்றது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 25 -2ல் திருத்தம் இன்னும் கொண்டு வரப்படவில்லை என்பதால் சனாதனிகளின் குரைப்பொலி சற்று அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால் 2002ல் ஆதித்யன் எதிர் கேரள அரசு என்கிற வழக்கில் தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதின்றம், "ஆகமங்கள், மதப் பழக்க வழக்கங்கள் போன்றவை 'எல்லோரும் சமம்' என்ற இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இருந்தால், அவை சட்ட ரீதியாக செல்லாது என்று கூறி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க முடியும்" என்று தீர்ப்பளித்துள்ளது.

ஒரு பக்கம் மாநில உயர் நீதிமன்றங்கள் அந்த அந்த மாநிலத்தின் தனித்தன்மைக்கு ஏற்ப தீர்ப்புகளை வழங்கினாலும் பார்ப்பனியத்தின் ஊதுகுழலான உச்சிக்குடுமி நீதிமன்றம் அதை ஒரு பொருட்டாகக் கருதாத நிலையே உள்ளது.

இருந்தாலும் தற்போது திமுக அரசு செயல்படுத்தியது போலவே கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியமும் தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 6 தலித்துகள் உள்பட பிராமணரல்லாத 36 பேரை அர்ச்சகர்கள் பணிக்கு நியமித்து சனாதனத்துக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கின்றது.

எனவே எதிரி என்ன நடவடிக்கையில் இறங்குவான் என்பது நமக்கு நன்றாகவே தெரிந்திருப்பதால் அதற்கான அத்தனை முன் எச்சரிக்கை நடவடிக்கையையும் நாம் எடுத்தாக வேண்டும்.

தமிழக பாஜக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை வரவேற்றாலும் இன்னொரு பக்கம் சனாதனக் கும்பலை தூண்டிவிட்டு தனது காரியத்தை சாதிக்கத் திட்டம் தீட்டும் என்பது தெரியாத புதிரல்ல.

தற்போது புதிதாக அர்ச்சகர்களாக நியமிக்கப்படவர்களுக்கு எதிராக பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பலின் பின்புலத்தில் இருந்துதான் அனைத்து அவதூறு செய்திகளும் பரப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. காரணம் நேரடியாக அரசின் இந்த முடிவுக்கு பெரும்பான்மை தமிழக மக்கள் ஆதரவாக இருக்கின்றார்கள் என்பதால் அவர்களை பகைத்துக் கொள்வது தனது வருங்கால அரசியல் நலனுக்கு வேட்டு வைத்துவிடும் என்பதுதான்.

ஆனால் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதால் மறைமுகமாக பார்ப்பன கும்பலுக்கு உதவி வருகின்றது.

எனவே தமிழக அரசு இந்து சமய அறிநிலையத் துறையின் கீழ் உள்ள 44,290 கோயில்களிலும் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்.

முன்பே சொன்னது போல ஒரு போரை நாம் தொடங்கி விட்டோம். இது சனாதனத்திற்கும் சமத்துவத்திற்குமான போர். இந்த போர் திமுக என்ற ஓர் அரசியல் கட்சியின் போர் அல்ல. தன்மானமும் சுயமரியாதையும் உள்ள ஒவ்வொரு தமிழனுக்குமான போர். இரண்டாயிரம் ஆண்டுகளாக நம்மை இழிவுபடுத்தி, வயிறு வளர்த்த கும்பலின் மீதான இறுதிப் போராக இது இருக்க வேண்டும். இந்த முறை நாம் யார் என்பதை எதிரிகளுக்கு கண்டிப்பாக நிரூபிக்க வேண்டும்.

- செ.கார்கி

Pin It