கிராமத்தில் அம்மா கோழிகளுக்குத் தீவனமிடுவதைப் பார்த்திருக்கிறேன். கோழிகளை அழைப்பதற்கு என்றே பிரத்தியேகமான சத்தமொன்றை வைத்திருப்பாள். அந்த சத்தத்தைக் கேட்டவுடன் கோழிகள் தத்தமது குஞ்சுகளுடன் ஓடிவரும். அம்மா தரையில் விசிற விட்டிருக்கும் தானியங்களை ஆர்வமாக பொறுக்கித் தின்னும். சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு அம்மா உள்ளே சென்று விடுவாள். அந்த நொடிக்காகவே காத்திருந்ததுபோல எங்கிருந்தோ சில காக்கைகள் பறந்து வரும்; கோழிகளுக்கு இடப்பட்டிருந்த தானியங்களை ஓரமாக நின்று கொத்த ஆரம்பிக்கும். கோழிகள் இதைப் பார்க்காதவரை காக்கைகள் திருட்டுத்தனமாக தீவனத்தை தின்றுகொண்டிருக்கும். ஏதாவது ஒரு கோழி இதைப் பார்த்து, லேசாக ஓர் அசைவு மேற்கொண்டாலே போதும், காக்கைகள் பறக்க ஆரம்பித்துவிடும். அத்தகைய காக்கைகளில் ஒருவர்தான் ஓவியர் புகழேந்தி.

Pukalenthiஇந்த இனமானப் புலியின் ‘ஈழத்தமிழர்கள் பாசத்தைத்தான்’ இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இனவுணர்வை விற்று காசு பார்க்கும் வேஷத்தை அண்மையில்தான் அறிய முடிந்தது.

ஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலையை நிறுத்தக்கோரி தகவல்தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருந்தோம். எந்த அரசியல் பின்புலமும் இல்லாத, ஈழத்தமிழர்களின் மீதான சகோதர உணர்வினால் உந்தப்பட்டு நடந்த போராட்டம் அது. ஈழப்பிரச்சினையின் வரலாறு, சிக்கல்கள், துயரங்கள் ஆகியவற்றை இந்தத் தலைமுறை இளைஞர்கள் உணரும் வகையில் நிகழ்ச்சி நிரல்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. பழ.நெடுமாறன், இராசேந்திர சோழன், பேரா.கல்யாணி, சுபவீ, தியாகு, விடுதலை இராசேந்திரன், ஜெகத் கஸ்பார், சீமான், அருள்மொழி உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். சி.மகேந்திரன் (சிபிஐ), உமாபதி (திமுக), திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), வைகோ (மதிமுக) ஆகிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

இந்தப் போராட்டத்தின் பிறிதொரு நிகழ்வாக, போராட்ட இடத்தில் ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து ‘தொடர் ஓவியம் வரைதல்’ என்ற நிகழ்வையும் நடத்த இளைஞர்கள் விரும்பினார்கள். இதற்கு யாரை அணுகலாம் என்று தோழர் தியாகுவை, போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்த நண்பர்கள் கேட்டார்கள். அவர் வீரசந்தானம், புகழேந்தி பெயர்களைப் பரிந்துரைத்தார். நண்பர்கள் புகழேந்தியைப் போய் பார்த்தனர்.

அவர் தனது வீரப்பிரதாபங்களை மூன்று மணி நேரம் பேசியிருக்கிறார். பேச்சின் முடிவில், ‘போராட்ட இடத்தில் வரைந்தால், சத்தம் அதிகமாக இருக்கும்; ஓவியம் நன்றாக வராது. நான் இங்கேயே வரைந்து கொண்டு வருகிறேன்; மொத்தம் ரூ.10,000 செலவாகும்’ என்று கூறி அந்தத் தொகையையும் சில நாட்களில் வாங்கியிருக்கிறார். நல்லவேளை, எங்காவது வெளிநாட்டிற்குப் போய் உட்கார்ந்தால்தான் நல்ல பாடல்கள் வரும் என்று சினிமா இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் தயாரிப்பாளர்கள் தலையில் மிளகாய் அரைப்பதைப் போல அரைக்கவில்லை. இவர்களிடம் இதற்கு மேல் கறக்க முடியாது என்ற நினைத்தாரோ என்னவோ பத்தாயிரத்தோடு நிறுத்திவிட்டார். இத்தனைக்கும் அரசுக்கல்லூரியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.

‘புகழேந்தி என்பது காரணப்பெயர்தான். எப்போதும் தனது புகழை தானே ஏந்திக்கொண்டு திரிவதால் அப்படிப் பெயர் இருப்பது முற்றிலும் பொருத்தமே’ என்ற ஒரு பேச்சு அவரை அறிந்தவர்கள் மத்தியில் இருப்பதோ, கடந்த ஆண்டு அவர் வேலை பார்க்கும் அரசு கவின்கலைக் கல்லூரியில் மாணவர்கள் ஒரு வாரம் நடத்திய போராட்டத்தின் கோரிக்கைகளில் ஒன்று - ‘புகழேந்தியை இடமாற்றம் செய்யவேண்டும்’ என்பதோ தகவல்நுட்பத் துறை இளைஞர்களுக்குத் தெரியாது. மாநாடுகள், போராட்டங்களில் ஓவிய நிகழ்வு எவ்வாறு இருக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. அதனால் புகழேந்தியை முழுக்க நம்பினார்கள்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் முதல்நாள் புகழேந்தியின் ஓவியம் வரவில்லை. இரண்டாம் நாள் ஓவியம் வந்தது. கூடவே அவரும். ‘ஓவியம் இன்னும் ஈரம் காயவில்லை’ என்று கூறி, அதை பார்வைக்கு வைத்தார். மாலையில் அவரது மாணவர்களை அனுப்பி அதே ஓவியத்தை திரும்ப எடுத்துக் கொண்டார். ஓவியம் எங்களுக்கு வேண்டும் என்று நண்பர்கள் சிலர் கேட்டபோது, ‘இவ்வளவு பெரிய ஓவியத்தை உங்களால் பாதுகாக்க முடியாது; இதை நான் கண்காட்சிகளில் வைக்கப் போகிறேன்’ என்று காரணம் கூறினார்.

உள்ளேயிருந்த பூனை வெளியே வந்துவிட்டது. கிராமப்புறங்களில் ஒரு சொலவடை உண்டு, ‘ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே’ என்று. இவர் ஓவியக் கண்காட்சி வைப்பதற்கு, ஊரில் உள்ளவர்களை ஏமாற்றி காசு கறந்திருக்கிறார்.

பிரச்சினைகளைச் சார்ந்து நிகழ்த்தப்பட்ட பல்வேறு ஓவிய நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றிருக்கிறேன். அந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஓவியப் பலகை, தூரிகை என தேவையான பொருட்களை வாங்கி வைத்திருப்பார்கள். ஓவியர்கள் மருது, விஸ்வம், நெடுஞ்செழியன் என பிரபல ஓவியர்கள் யாரேனும் வந்து ஓவியம் வரைவார்கள். பிரச்சினைகளைச் சார்ந்த தங்களது உணர்வினை வெளிப்படுத்துவார்கள். மக்களுக்காக வரையப்பட்ட அந்த ஓவியங்கள் மக்களுக்கானதே என்ற எண்ணத்தோடு, தாங்கள் வரைந்த ஓவியங்களை நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அந்த ஓவியர்கள் யாரும் அதை அளப்பரிய செயலாக பெருமை பேசுவதில்லை; தங்களது சமூகக் கடமைகளில் ஒன்றாகவே அதைக் கருதி அடுத்த வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள்.

ஆனால் தமிழினத்திற்காக வேலை பார்ப்பதையே தனது பிறவி இலட்சியமாகக் கூறிக் கொண்டு திரியும் புகழேந்தி, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தனது புகழ் பாடுவதற்கும், அதையே முதலீடாக வைத்து பணம் சம்பாதிப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார்.

I.T. ஆட்கள் என்றால் 5000 ரூபாய் வாடகையை 10000 ரூபாயாக ஏற்றிச் சொல்லும் வீட்டுத் தரகர்களுக்கும், 10 ரூபாய் பொருளை 100 ரூபாய்க்கு விற்கும் கடைக்காரர்களுக்கும் புகழேந்திக்கும் பெரிய வித்தியாசமில்லை. அவர்களையாவது ஓரளவுக்குப் புரிந்து கொள்ளலாம், இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். ஆனால் புகழேந்தி பேசுவது தமிழர் விடுதலை, கொள்ளையடிப்பது தமிழர்களின் பணம்.

புகழேந்தியின் இந்தச் செய்கை குறித்து தெரிந்தபின்பு, பணம் கொடுத்த நண்பர்களிடம் இது குறித்துப் பேசினேன். ‘புகழேந்தி நம்மை ஏமாற்றியிருக்கிறார். ஒன்று நாம் பணத்தை வாங்க வேண்டும் அல்லது ஓவியத்தையாவது அவர் தர வேண்டும்’. ‘எப்படிக் கேட்பது?’ என நண்பர்கள் தயங்கினார்கள். அதன்பின்பு புகழேந்தியை நானே தொடர்பு கொண்டு பேசினேன்.

“ஒரு ஓவியத்திற்கு 10,000 ரூபாய் என்பது அதிகம். போராட்டத்திற்கான செலவு அதிகமாகி விட்டது. மொத்த செலவில் நான்கில் ஒரு பங்கு உங்களுக்கே ஆகியிருக்கிறது. ஒரு ஓவியத்திற்கு நிச்சயம் இவ்வளவு ஆகாது. எனவே மீதிப் பணத்தைக் கொடுத்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்”

“மீதியா? மொத்தம் 13,500 ரூபாய் ஆகியிருக்கிறது. என் கையிலிருந்து 3500 ரூபாய் போட்டிருக்கிறேன்.”

“13,500 ஆகியிருக்கிறது என்றால், அதற்கான செலவுக்கணக்கை கொடுங்கள். மீதிப்பணத்தைக் கொடுத்து ஓவியத்தை எடுத்துக் கொள்கிறோம்.”

“நீங்கள் என்னிடம் பணம் கொடுக்கவில்லை, பணம் கொடுத்தவர்கள் வந்து கேட்கட்டும். நான் பேசிக் கொள்கிறேன். ஓவியத்தை திருப்பிக் கொடுப்பது குறித்து யோசித்துச் சொல்கிறேன். அந்த ஓவியத்தை நீங்கள் என்ன பண்ணப் போகிறீர்கள்?”

“நாங்கள் அடுத்தடுத்த போராட்டங்களின்போது அந்த ஓவியத்தை பயன்படுத்தவிருக்கிறோம். பின்னர் ஓவியத்தை நல்ல விலைக்கு விற்க முடிந்தால், அதை ஈழ அகதிகள் முகாமிற்கு கொடுக்கவிருக்கிறோம்.”

“இந்த ஓவியத்தை அப்படியெல்லாம் பயன்படுத்த முடியாது. ரொம்பவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். வெளியிடங்களுக்கு கொண்டு சென்றால் அதன் மெருகு குறைந்துவிடும். இதை உங்களால் பாதுகாக்க முடியாது.”

“அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஓவியத்தை பத்திரமாகப் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு.”

“யோசித்துச் சொல்கிறேன்.”

Pukalenthi“நாளை அல்லது நாளை மறுநாள் உங்களிடம் பணம் கொடுத்த நண்பர்களோடு வருகிறேன். செலவுக்கணக்கை கொடுங்கள். வரவு செலவுக் கணக்கு பார்க்க எங்களுக்கு அது தேவை.”

அதோடு எங்கள் உரையாடல் முடிந்தது. உடனே தியாகுவுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். ‘முதலில் இரண்டு பேர் பேசினார்கள். இப்போது யாரோ ஒருத்தர் கணக்கு கேட்கிறார். நீங்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்’ என்று பதறியிருக்கிறார். தோழர் தியாகு என்னைத் தொடர்பு கொண்டு, புகழேந்தி பேசியதைக் கூறினார்.

“இரமேஷ்! இது சம்பந்தமாக நீங்கள் வேறு யாரிடமாவது பேசினீர்களா?”

“ஆமாம். கவிஞர் ஜெயபாஸ்கரனிடம் பேசினேன்.”

“அவர் என்னிடம் பேசினார்; பின்பு வீரசந்தானம் பேசினார். செய்தி இப்படி வெளியே போய்க் கொண்டிருக்கிறது.”

“தெரியட்டும் ஐயா! புகழேந்தியின் உண்மை முகம் எல்லோருக்கும் தெரியட்டும். இனவுணர்வாளர் என்று நம்பி வந்தவர்களை ஏமாற்றி, இவர் காசு பறிப்பது உலகுக்குத் தெரிந்தால் நல்லதுதானே!”

“ஏமாற்றினார் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”

“போராட்டக் களத்தில் எப்படி ஓவியம் வரைவார்கள் என்பது எங்களது நண்பர்களுக்குத் தெரியாதபோது, அவர்களை வழிநடத்துவதை விட்டுவிட்டு, அவர்களது அறியாமையைப் பயன்படுத்தி 10,000 ரூபாய் வாங்கியதை ஏமாற்றுத்தனம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்வது? படித்தவர்களையே இவர் இப்படி ஏமாற்றுகிறார் என்றால், உணர்வாளர் என்று இவரை நம்பி, விஷயம் தெரியாத, படிக்காத அப்பாவிகள் யாராவது வந்தால் இவர் எந்தளவிற்கு ஏமாற்றுவார்?”

“என்ன நடந்தது என்று எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. நான்தான் வீரசந்தனம், புகழேந்தி பெயர்களைப் பரிந்துரைத்தேன். அவர்கள் புகழேந்தியைப் பார்த்திருக்கிறார்கள். அவர் என்ன பேசியிருக்கிறார், எவ்வளவு காசு வாங்கியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. இதை நாம் உட்கார்ந்து பேசுவோம். அதுவரை யாரிடமும் இதுகுறித்துப் பேசாதீர்கள்”.

புகழேந்தியிடம் செலவுக்கணக்கு கேட்கலாம் அல்லது ஓவியத்தை வாங்கலாம் என்று நண்பர்களை அழைத்தபோது அவர்கள் மிகவும் தயங்கினார்கள். ‘கொடுத்த காசை எப்படி கேட்பது? 10,000 ரூபாய் ஆகும் என்று சொல்லித்தானே வாங்கினார்?’ என்றார்கள்.

‘ஓவியம் வரைய எவ்வளவு ஆகும் என்று உங்களுக்குத் தெரியாதபோது, அதிகமாக சொல்லி பத்தாயிரம் ரூபாய் வாங்கியதே முதல் தப்பு. அப்படி வாங்கிக் கொண்டு, வரைந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு போனது இரண்டாவது தப்பு. இப்போது எல்லாம் தெரிந்தபின்பு, சால்ஜாப்பு சொல்வது அதை விட பெரிய தப்பு.

இவை எல்லாவற்றையும் விட அவரிடம் பணமோ, ஓவியமோ வாங்க வேண்டியதற்கு வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது. சமூகத்தின் அநீதிகளை கண்டுப் பொறுக்காமல், அதை தட்டிக் கேட்கிற எண்ணத்துடனோ, அல்லது இருக்கிற சமூக அமைப்பை மாற்றியமைக்கிற நோக்கத்துடனோ நாம் வீதிக்குப் போராட வருகிறோம். அப்படி போராட வருகிற நம்மையே ஒருவர் ஏமாற்ற அனுமதிக்கிறோம் என்றால் அது நாம் போராடுவதற்கான நியாயத்தையே காலி செய்துவிடுகிறது’ என்று கூறினேன்.

நண்பர்கள் ரொம்பவும் நல்லவர்களாக இருந்தார்கள். ரொம்பவும் தயங்கினார்கள். என்னுடன் வருவதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பின்பு யாரும் இதுகுறித்து பேசவுமில்லை. புகழேந்தி ஓவியத்தைத் திருப்பித் தரவுமில்லை; செலவுகணக்கை சொல்லவும் இல்லை.

எனது நண்பர்களை ஒருவர் ஏமாற்றியதை அப்படியே விட்டுவிட என்னால் முடியவில்லை. அதன்பின்பு விசாரித்தபோதுதான் தெரிந்தது, புகழேந்தி கூடிய விரைவில் ஐரோப்பிய நாடுகளில் ஓவியக் கண்காட்சி நடத்தவிருக்கிறார் என்று.

இப்போது எல்லாம் புரிந்தது. ஓவியக்கண்காட்சிக்கான ஓவியங்களை அவர் தயார் செய்து கொண்டிருந்திருக்கிறார். அந்த ஓவியங்களில் ஒன்றை, உண்ணாவிரதம் இருந்த இடத்திற்குக் கொண்டு வந்து வைத்துவிட்டு, திரும்பவும் அதை எடுத்துப் போய்விட்டார். இதற்கு எங்கள் மீது அவர் சுமத்திய பில் தொகை ரூ.10,000. ஈழத்தில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து ஊரெல்லாம் போராட்டம் நடத்துகிறார்கள்; புகழேந்தி அதை வைத்து காசு சம்பாதித்திருக்கிறார். ஈழத் தமிழர்களின் இரத்தத்தில் குளிர்காய்ந்திருக்கிறார்.

புகழேந்தியின் செய்கையைப் பார்க்கும்போது, ஆழிப்பேரலை தமிழகத்தைத் தாக்கியதே - அப்போது கரையோரங்களில் ஒதுங்கிய உடல்களில் இருந்த தங்க நகைகளை ஒரு சிலர் கொள்ளையடித்ததுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

அவர் இதை மறுப்பாரேயானால் தயது செய்து கீழ்க்காணும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லட்டும்.

1. போராட்ட இடத்தில் ஓவியம் வரைதல் என்பது எப்படி இருக்கும் என்று புகழேந்திக்குத் தெரியாதா? முதல்முறையாக போராட வீதிக்கு வந்திருப்பவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, நான் ஸ்டுடியோவில் வரைந்து அதை எடுத்து வருகிறேன் என்று கூறியது ஏன்?

2. ஓவியம் வரைவதற்குத் தேவையான பொருட்களை விற்கும் கடையில், 10X5 அளவிலான ஓவியத்தை வரையத் தேவையான பொருட்களின் விலையை விசாரித்தபோது 1500 ரூபாய்தான் ஆகும் என்று தெரிந்தது. வேறொரு ஓவியரிடம் விசாரித்தபோது அவரும் அதை உறுதிப்படுத்தினார். அப்படியிருக்க புகழேந்தி 10,000 ரூபாய் வாங்கியது ஏன்? கொஞ்சம் விவரம் தெரிந்தவர்கள் கேட்டால், நீங்களா என்னிடம் காசு கொடுத்தீர்கள் என்று மடக்குவார். நாங்கள் பேசாமல் போகவேண்டும்? சென்னைக்குப் புதிதாக வருபவர்களிடம், ஒரு கிலோமீட்டர் தூரம் செல்வதற்கு 100 ரூபாய் வாங்கும் ஆட்டோ டிரைவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

3. போராட்டங்களின்போது வரையப்படும் ஓவியங்களை, எந்த ஓவியரும் எடுத்துக் கொண்டு போகமாட்டார் என்பது புகழேந்திக்குத் தெரியாதா? தெரியாது என்றால், பொதுப்பிரச்சினைக்காக இதுவரை எந்தவொரு போராட்டத்திலும் அவர் ஓவியம் வரைந்ததில்லையா? இல்லை மக்களுக்காக வரைகிறேன் என்று அவர் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் பொய்யா?

4. ஓவியத்தை உங்களால் பாதுகாக்க முடியாது என்று சொல்லும் காரணம் சொத்தையானது. பாதுகாக்க முடியாது என்றால், அப்படிப்பட்ட ஓவியத்தை வரைந்தது ஏன்? போராட்ட இடத்தில் வைப்பதற்குத்தான் நம்மை நாடி வந்திருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும்தானே?

5. வரைந்தார், கொண்டுவந்து காண்பித்தார், திரும்பவும் எடுத்துக் கொண்டு போனார் என்றால், அதற்கு எதற்கு 10,000 ரூபாய்? போராட்ட இடத்தில் 8 மணி நேரம் வைத்து இருந்ததற்கு, 10,000 ரூபாய் மொய்ப்பணம் என்கிறாரா?

6. நெடுமாறன், இராசேந்திர சோழன், தியாகு, சுபவீ, சீமான், ஜெகத் கஸ்பார் ஆகியோரும் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். அவர்கள் எல்லோரும் கருத்துக்களைத் தந்தார்கள். நீங்கள் ஓவியத்தைத் தந்தீர்கள். அவர்கள் ஒரு பைசா கூட வாங்கவில்லை. நீங்கள் பணம் வாங்கினீர்கள். அவர்கள் இனவுணர்வாளர்கள் என்றால், நீங்கள் இனவுணர்வு வியாபாரியா? நீங்கள் விற்பனை செய்வதற்கு ஈழத்தமிழுணர்வுதானா கிடைத்தது?

7. ஆதரவற்ற குழந்தைகளுக்காக கலைநிகழ்ச்சி நடத்தினால், அதில் கிடைக்கும் பணத்தை எல்லாம் அந்தக் குழந்தைகளின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவார்கள். நீங்களும் அதேபோன்று, உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளை முன்வைத்து உலகெங்கும் பரவியுள்ள ஈழத்தமிழர்கள் முன்பு ஓவியக் கண்காட்சி நடத்துகிறீர்கள். அந்தக் கண்காட்சிகளின் மூலம் கிடைக்கும் பணத்தை எந்த நல்ல காரியத்திற்காக செலவழித்திருக்கிறீர்கள்? அப்படி ஏதும் செய்யவில்லையென்றால், குலுக்கல் நடனம் ஆடி புலம்பெயர்ந்த தமிழர்களை சுரண்டும் சினிமா நடிகர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

8. தனது ஏமாற்றுவேலை தெரிந்துவிட்டது என்றவுடன், ‘வேண்டுமானால் ஓவியத்தை எடுத்துப் போகச் சொல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். யாரும் இதைப் பற்றி பேசியிருக்காவிட்டால் அப்படியே அமுக்கி இருப்பீர்கள்தானே?

9. ‘ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு’ என்று பேசுபவர்கள் எல்லாம் காசுக்காகத்தான் பேசுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு இங்கு இருக்கும்போது, தங்களின் செய்கை அதற்கு உரமூட்டுவது போலில்லையா? உண்மையான உணர்வாளர்களுக்கு நீங்கள் இழைக்கும் அநீதி அல்லவா இது?

10. இவை எல்லாவற்றையும் விட, நாள்தோறும் எண்ணற்ற கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் பெயரைச் சொல்லி சம்பாதிப்பதை விட, பிச்சை எடுப்பது மேலல்லவா?

பணம் கொடுத்த நண்பர்கள், ‘அவர் செய்தது தப்பு என்று தெரிகிறது. ஆனால் கொடுத்த பணத்தை எப்படித் திரும்பக் கேட்பது?’ என்று சொல்கிறார்கள். அவர்களின் இந்தப் பெருந்தன்மைக்கு உரியவராக புகழேந்தி நடந்துகொள்ளவில்லை என்பதுதான் வேதனை. இதை வெளியே சொல்வதற்குக்கூட அந்த நண்பர்கள் தயாராக இல்லை. கண்முன்னே நடக்கும் அநியாயத்தை கண்டும் காணாமல் இருக்க முடியாமல், கீற்று ஆசிரியராகத் தான் இதை நான் பதிவு செய்கிறேன்.

வெறும் 10000 ரூபாயை ஒரு பெரிய பிரச்சினையாக எழுதவேண்டுமா?

இன்னொருவர் ஏமாற்றப்படுவதை தடுக்க வேண்டுமென்றால், நிச்சயம் எழுதித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் இவரை ஓர் இனவுணர்வாளர் என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் நாடுநாடாக அழைத்துக்கொண்டு போய் கண்காட்சி நடத்துகிறார்கள். இவர் என்னடாவென்றால், இனவுணர்வை தனது வியாபாரத்திற்கான முதலீடாகப் பயன்படுத்துகிறார். இதோ, ஈழத்தமிழர்களின் கொடுமைகளை ஓவியங்களாக வரைந்து, ஓரிரு மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் கண்காட்சி நடத்தவிருக்கிறார்; அப்பாவித்தமிழர்களை சுரண்டவிருக்கிறார்.

உலகத்தமிழர்களே! உங்களது உணர்வை வைத்துப் பணம் சம்பாதிக்கும் புகழேந்தியிடம் கவனமாக இருங்கள்! இல்லையென்றால் அவரது ஓவியத்தோடு உங்களையும் சேர்த்து விற்றுவிடுவார்... 

- 'கீற்று' நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It