கொரோனா நோய்த்தொற்று – ஊரடங்கு காரணமாக பூம்பூம் மாட்டுக்காரர்களின் வாழ்வாதாரம் பின்னடைவை நோக்கிச் சென்றுள்ளது. 2020 ஏப்ரல் 13, அன்று சத்தியம் தொலைக்காட்சி நியூஸ்-இல் வெளியான செய்தி ஒன்று, “உணவின்றி தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் எனும் செய்தி தொலைக்காட்சியில் வெளியானது”. 

boom boom mattukarar"பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி...

 டும் டும் டும் மேளம் தட்டி சேதி சொன்னான்டி...

 அரிசி போட வெளிய வந்த பொண்ணப் பாத்தான்டி

 அடுத்த மாசம் கல்யாணத்துக்கு

 தேதி சொன்னான்டி..."

          எனும் பாடல் திரையிசைப் பாடலாக தமிழகமெங்கும் ஒலித்தது. இப்பாடல் நாட்டார் நிகழ்த்துக்கலையான பூம்பூம் மாட்டுக்காரர் நிகழ்த்துமுறைப் பதிவு செய்துள்ளதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. அரிதாகி விட்ட நிகழ்த்துக்கலைகளில் பூம் பூம் மாட்டுக்காரர்களின் நிகழ்த்துதல் குறிப்பிடத்தக்கதாகும். நகரும் நிகழ்த்துதலில் பார்வையாளர்களிடம் தன் வாழ்விற்கான பங்களிப்பாக சிறிதளவு தானியங்களோ ஐந்து பத்து ரூபாவோ பெற்றுக் கொண்டு நாயனத்தை வாசித்த வாரே நகர்ந்து விடும் நிகழ்த்துக் கலைஞர், தனிநபராக மாட்டின் கயிறை கையில் பிடித்துக் கொண்டு நாயனத்தை வாசித்தவாறே நகர்ந்து செல்கிறார். இவர் வாசிக்கும் இசைக்கருவி வழியாக வெளிப்படும் இசை அலைகுடி வாழ்வின் வலி தொனிப்படுகிறது. ஒரு நபர் நிகழ்த்துதலாகவும் கணவன் மனைவியோ அல்லது தந்தையும் மகனோ அல்லது வேறு உறவு முறை சார்ந்த இரு நபரோ நிகழ்த்துவமான தன்மையைக் கொண்டுள்ளது பூம் பூம் மாட்டுக்காரர் நிகழ்த்துதல். இவ்வாறு இருவர் நிகழ்த்தும் போது ஒருவர் உருமி வாசிப்பதும் மாற்றொருவர் நாயனம் வாசித்துக் கொண்டே செல்வதுமான நிகழ்த்துதல் நிகழ்கிறது. அன்றாடம் இவர்களின் வாழ்வாதரம் இக்கலையை நம்பித்தான் நகர்கிறது. அலை குடிகளின் நிகழ்த்து மரபில் வாசிக்கப்படும் இவ்விசை சோகம் நிறைந்ததாகவும் வலி மிகுந்ததாகவும் இருக்கும் என்பதை இந்நிகழ்த்துதலில் காணமுடிகிறது. பாரம்பரிய நிகழ்த்துக் கலைஞர்கள் அலைந்து திரியும் நிகழ்த்துதல் வாழ்வு என்பது பெறும் வயிற்றுப் பிழைப்பிற்கானதாகவே அர்த்தப்படுகிறது.

  பூம் பூம் மாட்டுக்காரர்கள் தன் சொந்த மண்ணில் வாழ்விழந்து தமிழகத்தின் பல பகுதிகளில் நிலைத்துத் தங்காமல் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிழைத்து வருகிறார்கள். தமிழகத்தில் தெருக்களில் நிகழ்த்துவதும் மக்கள் கூடும் பொது இடங்களில் நிகழ்த்துவதுமான நிகழ்த்துக் கலைஞர்கள் ஏராளமாக உளர். தோற்பாவை நிழற்கூத்துக் கலைஞர்கள், சாட்டையடிக்காரர்கள், குரங்கு வித்தைக்காரர்கள், ரெக்கார்டு டான்ஸ் ஆடுபவர்கள், கழைக்கூத்தாடுபவர்கள், பகல் வேடம் போடுபவர்கள் எனப்பல நிகழ்த்துக் கலைஞர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அலைகுடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கான வாழ்வியல் மோசமான நிலையில் இருப்பதோடு வாழ்வதற்கான பொருளாதாரமின்றி நவிவடைந்த நிகழ்த்துக் கலைஞர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அரசு சார் கலைபண்பாட்டு மையமும் நலிவடைந்த கலைகளையும் கலைஞர்களையும் மீட்டெடுக்க முன்வருவதில்லை.

செவ்வியல் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசும் நிகழ்த்தும் பண்பாட்டு மய்யங்களும் விளிம்பில் வாழும் நிகழ்த்துக் கலைஞர்களின் மேல் அக்கறை கொண்டு வாழ்வளிப்பதன் மூலம் நிகழ்த்துக் கலைஞர்களின் பொருளாதாரத் தன்னிறைவு பெறுவதற்கான சாத்தியக் கூறு உருவாகும். இதனோடு நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வு வளம் பெறும். நிகழ்த்துக் கலைகளும் புத்துயிர் பெறும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் பாரம்பரிய நிகழ்த்துக் கலைஞர்களில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்கள், தஞ்சைக்கு அருகே உள்ள பட்டுக்கோட்டை இரட்டை சாலைக்கு அருகில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பல்வேறு ஊர்களுக்குச் சென்று பூம்பூம் மாட்டை வைத்துக் கொண்டும், மேளம் அடித்துக் கொண்டும் ஒவ்வொரு வீட்டிற்குச் சொல்வதும் கிடைக்கின்ற வருமானத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார்கள். இவர்களுக்கென வேறு எந்தத் தொழிலும் தமிழகச் சூழலில் இல்லாத நிலையால் இதை வைத்துக் கொண்டு இவர்கள் பிழைப்பு நடத்தி வந்தார்கள். மற்ற நேரங்களில் தெருக்களில் கிடைக்கும் இரும்புச் சாமான்கள் மற்றும் இதர உதிரிப் பொருட்களைத் தெருத்தெருவாகச் சென்று எடுத்து எடைக்குப் போட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார்கள்.

இந்தியா, தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அதிக உயிர்ப்பலி ஏற்படும் என்பதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஊரடங்கு உத்தரவால் இவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. பூம்பூம் மாட்டுக்காரர்கள் போன்ற நாட்டுப்புற நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல், பொருளாதாரப் பின்னணி மோசமான சூழலில் அரசு இவர்களின் மேல் அக்கறை கொண்டு, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான உணவுப் பொருட்களை, இரண்டு மூன்று மாதங்களுக்கு மேலாக உணவுப் பொருட்களைக் கொடுத்தால் இவர்களின் வாழ்க்கை மேம்படும். இல்லையென்றால் பூம்பூம் மாட்டுக்காரர்கள் முதலான நிகழ்த்துக் கலைஞர்கள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை மிக மோசமான சூழலை நோக்கி செல்வதோடு பட்டினிச் சாவுகளும் ஏற்படும் என்பதே உண்மை.

- ம.கருணாநிதி

Pin It