மனச்சோர்வு, அலுப்பு, கலக்கம், குழப்பம் என நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு நாளில் ‘திடீரென ஒரு மந்திரக் கோல் நட்சத்திரங்களைத் தூவி நம்மை மலரச் செய்யாதா?’ என ஏங்கிக் கொண்டிருக்கும் போது அது நடந்தே விட்டால்…? சமீபமாக பலரிடமும் அவ்வாறான மந்திரக்கோல்கள் இருப்பதாக அறிகிறேன். அக புற சூழ்நிலை­கள் அப்படியே நம்மை விழுங்கிக் கொன்று கொண்டிருக்கையில், எதிர்பாராமல் எதிர்பாராதவரிடமிருந்து கிடைக்கும் புன்னகை, ஆறுதல், அக்கறையுடன் கூடிய கடிதல் என எதுவாகவும் இருக்கலாம்…… அந்த உணர்வை விவரிக்கவும் பெயர் சூட்டவும் கம்பனும் வள்ளுவனும்தான் வேண்டும். நமது இருப்பை நமக்கே உணர்த்திச் செல்லும் தருணங்கள் அவை !

                                                             **************

                        முதன் முதலாக, அப்படிப்பட்டதோர் உணர்வு உண்டு என எனக்குக் காட்டித் தந்த கல்லூரியின் துவக்க நாட்களுக்கு மீண்டும் செல்ல விழைகிறேன். இளங்கலைப் படிப்பின் போது ஐந்து பேர் கொண்ட குழு நாங்கள். நெல்லை, தூத்துக்குடி, குமரி – மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து இருக்கும் ஒரே அரசு கல்லூரி அது. பெரும்பாலும் (95%) கீழ் நடுத்தர பிரிவைச் சேர்ந்தவர்களால் நிறைந்திருந்தது….. இந்த வார்த்தை ஜாலம் எல்லாம் எதற்கு? அநேகமானோர் விளிம்பு நிலை அரிவைகள். தங்களுக்கென்று தனியாக அலைபேசி இல்லாத சுதந்திரப் பறவைகள்.

                        இரண்டு சாப்பாடு டப்பாக்களுடன் (இரண்டிலும் ஒரே சாதம்தான்!) காலை 6 மணிக்கு அவர்கள் ஊரில் இருந்து பேருந்து ஏறி 8 மணி கல்லூரிக்கு ஏழரை ஏழேமுக்காலுக்கு அடித்துப் பிடித்து வந்து சேர்ந்து, 10 மணி இடைவேளையின் போது ஒரு டப்பாவையும், கல்லூரி முடிந்து 1 மணிக்கு அடுத்த டப்பாவையும் காலி செய்து, மதியம் நேரே காட்டு வேலைக்குச் சென்று, மாலையில் ஜெராக்ஸ் கடை டியூஷன் சென்டர் என ஏதோ ஒன்றில் கால் கடுக்க நின்று உழைத்துவிட்டு, இரவு 9 மணிக்கு தம் ஊருக்குச் செல்லும் கடைசி பேருந்தைப் பிடித்து வீட்டிற்குப் போய், படிப்பதற்குச் சக்தியற்று 11 மணிக்குப் படுக்கையில் விழுந்து மீண்டும் மறுநாள் காலை 5 மணிக்கு எழும்பி…… எனச் சென்ற இவர்களது வாழ்க்கை எழுதி விவரிக்க இயலாத பலவற்றை உணர்த்திற்று எனக்கு. உலகின் பல்வேறு பக்கங்களைப் புரட்டிக் காட்ட ஆரம்பித்திருந்தது வாழ்க்கை.

                        நாங்கள் ஐவரும் ஒன்றாக உணவருந்த அமர்ந்த அந்த முதல் நாள் இன்னும் நினைவில் இருக்கிறது. டப்பாக்களைத் திறந்த சிறிது நேரத்தில் வித்தியாசமானதொரு….. புழுங்கிய வாடை. கிண்டலும் கேலியுமாக உண்ணத் தொடங்கினோம். உணவுப் பரிமாற்றம் துவங்கியது. என் உணவு வேறொருவர் கைக்குச் செல்ல, ‘எங்க சாப்பாடெல்லாம் நீ சாப்பிடுவியா?’ என்று முத்துலச்சுமி தயங்கியபடியே பாவமாகக் கேட்ட போது…. சுண்டு விரலை நிலையில் இடித்துக் கொண்டதைப் போல இருந்தது. ‘ஏன் என்னிய மட்டும் பாத்து அப்பிடி கேட்டா? சே! நான் சாப்பிட மாட்டேன்னு எது அவள நினைக்க வச்சுது?’ அடுத்த நொடி அவள் வெறும் கையுடன் அமர்ந்திருந்தாள். தாளித்த மோர் விட்டுப் பிசைந்த பழைய சாதம், கொத்தமல்லித் துவையல் – முதல் வாய் உள்ளே சென்றது. ‘உடனேயே பிடித்துப்போய் விட்டது’ என்றெல்லாம் நாடகத்தன்மையாகக் கூற மாட்டேன். கொஞ்சம்…. நிறையவே கடினப்பட்டுத்தான் அடுத்த இரண்டு வாய்ச் சோறும் உள்ளே சென்றது.

‘எப்பிடி இருந்துச்சு?’ – வழக்கமாகக் கேட்கப்படும் இக்கேள்வி அவளிடம் இருந்து எழவே இல்லை. நானாவது ஒப்புக்காக அன்று ஏதேனும் சொல்லி இருக்கலாமோ? அவ்வுணவு சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து கவலையையும் தாண்டி கோபம் கொள்ளச் செய்தது. அவள் எந்த விதத்தில் என்னை விடக் குறைந்து போய்விட்டாள் ? அல்லது நான்தான் அவளைவிட எந்த விதத்தில் உயர்ந்து விட்டேன் ? அரசியல் பின்னல்களும் நடப்பியலும் அரைகுறையாகப் பிடிபடத் துவங்கியிருந்த அந்த வயதில் இயற்கையாக இப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு சிந்திக்க முடிந்தது. அக்கேள்வியைக் கேட்க வைத்த, அவள் மனதில் உருவாகியிருந்த எனக்கும் அவளுக்குமான, அந்த இடைவெளியைப் போக்குவது எப்படி என எண்ணிக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக வார்த்தைகள் இதைச் சரி செய்யப் போவதில்லை.

மறுநாள் அவள் உணவை வலுக்கட்டாயமாக வாங்கி அதை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென ஒரு கை என்னிடமிருந்த உணவைப் பிடுங்கியது. “போதும்… கொண்டா இங்கன…. முழுசா தின்னு கொண்டாடீராத… பொடி அரிசிக்குப் பழகீட்டு இப்பிடி திடீர்னு பரு அரிசியா ஒரேடியா உள்ள போச்சுன்னா வயிறு என்னத்துக்காகும்? குடுத்துத் தொலை…” – எலும்பும் (பளபளக்கும் கரிய) தோலுமாக இருந்த முத்துலச்சுமி கடுகடுத்ததில் அந்த இடைவெளி கொஞ்சம் சுருங்கிப் போனதாகவே உணர்ந்தேன். இரண்டு மூன்று நாட்களே அறிமுகம் இருக்கும் ஒருவரிடம் இருந்து இவ்வளவு அக்கறையும் அன்பும் பழக்கப்பட்டிருக்கவில்லை எனக்கு.

அதன் பிறகான நாட்களில் அவ்வுணவு பழகிப் போக, அதன் சுவை ரசிக்க ஆரம்பித்தது…. அதில் அவளுடைய அன்பும் கலந்திருந்ததால். அம்மூன்று வருடங்களும் ‘யாரேனும் பழைய சாதம் கொண்டு வந்தால் அது எனக்கே’ என்பது எழுதப்படாத விதியாகிப் போனதெல்லாம் யான் பெற்றுக் கொண்டு வந்த வரம் ! அவள் என்னிடம் கேட்காமல் விட்ட அக்கேள்விக்கு இயற்றப்படாத இச்சட்டத்தை தினமும் நடைமுறைப்படுத்தி பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அவளது கடிதலில் தொனித்த அன்பு எனக்குத் தந்த உணர்வை வெறுமனே ‘நெகிழ்ச்சி’ என்றும் மட்டும் சுருக்கிக் கொள்ள இயலாது.

                                                 ***************

 ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பாவை ஸ்கேன் செய்யும் அறைக்கு அழைத்துச் செல்கையில் அங்கு தரையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு அக்கா கதவைத் திறந்துவிட்டு ‘உள்ளே செல்லுங்கள்’ என்பதாகக் கை காட்டி புன்னகைத்தார். நானும் பதிலுக்குச் சம்பிரதாயமாகத்தான் புன்னகைக்கத் துவங்கினேன். எனது புன்னகை முழுமை பெற்ற போது மனதின் இறுக்கம் தளர்ந்து ஆறுதல் அடைந்ததையும், ‘ஒண்ணும் இல்ல கண்ணு… அப்பாவுக்கு சரி ஆகிடும்’ என்ற வார்த்தைகளே அவரது புன்னகையாக வெளிப்பட்டதை நான் உணர்ந்து கொண்டதையும் அவர் தெரிந்துகொண்டிருப்பாரா ? எனக்கு அந்நேரத்தில் அப்புன்னகை எவ்வளவு தேவையாய் இருந்தது என்பது எனக்கே தெரியாமல் இருந்த போது அவர் அதை எங்ஙனம் உணர்ந்து கொண்டார் ? அவரது அந்த விலையில்லா புன்னகைக்கு நான் நன்றி சொல்லவே இல்லை. அப்பா உடல்நலம் தேறி வீட்டிற்குக் கிளம்புகையில் எதிர்ப்பட்ட அவரை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடையாளம் காட்டினேன். அப்பா அவரிடம் “போயிட்டு வரேம்மா…” என்று விடைபெற, அவரோ “வரேன்னு சொல்லாதீங்க சார்… நல்லபடியா ஒடம்ப பாத்துக்கோங்க” என்றபடி மீண்டும் அந்தப் புன்னகை. நிஜமாகவே கண்களின் எண்ணிக்கைக்காகக் குறைபட்டுக் கொண்ட தருணம் அது !

                                                            **************

             பூங்காவில் அமர்ந்திருந்த அந்த முதியவளுக்கு மற்றவர்கள் காசு தருவதைப் பார்த்து (அவள் பிச்சை கேட்கவில்லை; காசு கொடுத்தால் மறுக்கவும் இல்லை) அவள் கையில் ரூபாய் நோட்டைத் தந்த போது தோல் சுருங்கிய அவ்விரு கைகளும் என் கையை இறுக்கமாகச் சிறைப்படுத்தின. அந்தப் பற்றுதலில் தொனித்த பாசம் எனக்கொன்றும் புதிதல்ல. என் ஆச்சியினுடையது. என்னை அவள் அருகில் அமரச் செய்வதற்கான சமிக்ஞை. மண்டியிட்ட போது என்னைக் கூர்ந்து பார்த்தவள், “என் பேத்தியைப் போல் இருக்கே” என்றதும் என்னில் அனிச்சையாகத் தோன்றியது புன்னகை. மனம் வறண்டு கிடக்கையில் அதனுள் மீண்டும் உணர்வுகளை எளிய வழியில் சுரக்க வைக்கவல்ல ஆற்றல் புன்னகைக்கு உண்டு போலும்.

அவள் விழிகள் பனிக்க ஆரம்பித்ததற்குக் காரணம் முதுமையினால் பிறந்த கண்களின் வறட்சியாகக் கூட இருக்கலாம். அக்கரங்களின் சுருக்கங்களும் தென்னிக் கொண்டு ஓடும் நரம்புகளும் அவளுள் உயிர்த்துக் கிடக்கும் ஆயிரம் ஆயிரம் கதைகளைக் கதைக்க ஆவல் கொண்டு துடித்துக் கொண்டிருந்தன. ‘அக்கதைகளில் ஒன்றையேனும் வாசித்து விடுவது’ என்னும் என் முயற்சியைப் பாதியிலேயே குலைத்துப் போட்டாள். என் கைக்கு அவளது கதகதப்பு கடத்தப்பட்டுக்கொண்டிருந்தது சட்டென நின்றபோதுதான் அவளது கை என் தலைமீது வருடிக் கொடுத்ததை உணர்ந்தேன். அவளது வாழ்க்கைப் பயணத்தை ஓவியமாகக் கொண்டிருந்த முகத்தின் ரேகைகளை, புன்னகைத்து இன்னும் அதிகப்படுத்தினாள். புன்னகைத்ததில் முற்றிலுமாக சுருக்கங்களாகிப் போன முகத்துடன் எனக்கு விடை கொடுத்தாள். அந்நேரத்தில் அவளது பேத்திக்காகப் பரிதாபப்படாமல் இருக்க இயலவில்லை. அப்புன்சிரி எனக்குப் புன்கணீரை வரவழைத்ததில் வியப்பு ஒன்றும் இல்லை.

                                                ********************

            தமது தாயார் மறைந்த ஒரு மாதம் கழித்து சங்கர்ராஜ் சார் சொன்னார்கள் – “எங்க அம்மா சமைக்குறத பாக்குறதே அவ்ளோ ரசனையா இருக்கும். ‘கடுகு பருப்பு …. எங்க போய்ட்டீங்க? ஓ இங்க இருக்கீங்களா ? ஒங்கள மொளகா வத்தல் கூட தானே இருக்க சொன்னேன்… சரி வாங்க…. இப்ப கொஞ்ச நேரத்துல கேரட் பீன்ஸ் எல்லாரும் உங்க கூட சேர்ந்துப்பாங்களாம்……..’ அவங்க ஒலகம் அவ்ளோ அழகு……….” என்று கதை கேட்ட பிறகு நான் முன்பின் பார்த்திராத இனி பார்க்கவும் இயலாத அன்னாரது அம்மாவை ரொம்பவே பிடித்துப் போனது.

                                                *************************

                        பல்பொருள் அங்காடியில் பொருட்களை என் அருகில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்த ஊழியர் எனக்கான புன்னகையை என்னிடம் ஒப்படைப்பதற்காகவே அவரது முகத்திலிருந்து கறுப்புத் திரையை விலக்கினார். என் உலகை ஒரு நொடி அழகாக்கிவிட்டு புன்சிரிப்புடனான அந்த கனிவான முகம் மீண்டும் திரைக்குள் மறைந்து கொண்டது. அக்கரிய திரையினுள் தெரியும் அக்கண்களில்தான் எத்தனை பரிவு? ‘அந்தக் கறுப்புச் சிறைக்குள் எத்தனை கனவுகளோ? எத்தனை ஆசைகளோ?’ என்று அவருக்காக சில நாழிகை என்னை பச்சாதாபம் கொள்ளச் சொல்லிச் செல்லமாகப் பணித்தது அப்புன்னகை.

 பெரு நகரங்களில் உள்ள பெரு வணிகக் கடைகளில், தலைக்கு மேல் சுழலும் கண்காணிப்புக் கருவிக்கோ அல்லது அருகில் சுழலும் கங்காணிகளுக்கோ அடிபணிந்து, ஒப்பனையிடப்பட்ட முகத்தில் வேறு வழியில்லாமல் வற்புறுத்தி புன்னகையை வரவழைக்கும் செயற்கைத்தனங்கள் போல அல்லாது, பெட்ரோல் பங்க், உணவகம் இன்னும் பல இடங்களில் காசு கொடுத்து மீதம் சில்லரை பெறும் போது அரிதிலும் அரிதாக சில சமயம் கிடைக்கும் அந்த இலவசப் புன்சிரி கொஞ்ச நேரத்திற்கேனும் உலகின் நிறங்களைப் பளிச்சென மாற்றியமைக்கும் விந்தை என்னவோ? ஒருவேளை டைரி எழுதும் பழக்கம் இருந்திருந்தால் என் பக்கங்களை இவர்களைக் கொண்டுதான் நிரப்பியிருப்பேன். முன் பின் அறியாதவர்களால் ஒரே நொடியில் எங்ஙனம் நமது மனதை லேசாக்க முடிகிறது?

                        “மேடம்! மோள் எப்போளும் எங்களிடெ பிரார்த்தனையில் உண்டு” என்று அம்மாவிடம் அவளுடன் பணிபுரியும் ஜஸ்டின் அங்கிள் பறைந்த போது; மனிதர்கள் புதிது புதிதாகக் கடவுள்களை உருவாக்கிக் கொண்டிருப்பதைச் சாடி நான் எழுதிய ஒரு கட்டுரையை வாசித்த தீபா அக்காவின் அம்மா, அவ்வாறான ஒரு கடவுளை வழிபடும் பழக்கமும் நம்பிக்கையும் இருந்த போதும் கூட சிறிதும் கோபம் கொள்ளாமல் உடனடியாக அக்கோவிலுக்குச் சென்று அந்தப் புதிய கடவுளிடமே எனக்காக மன்னிப்புக் கோரியபடி “அவளுக்கு நம்பிக்கை இல்லாட்டா என்ன? அதான் நான் வேண்டிக்கிறேனே!” என்று உரிமையோடு கூறிய போது; “அவ எனக்கு மூத்த மக சார். எம் பிள்ளைக்கு நான் செய்யாம…?!” என்று இஸ்மாயில் அங்கிள் அப்பாவிடம் செல்லக் கோபம் கொண்ட போது ….. அப்பப்பா ! இவ்வுணர்வையும் எழுத்தாய் வடிக்கும் ஆற்றல் இல்லை எனக்கு ! என் முகத்தில் எழுமைக்கும் குறுநகை அகலாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும் அன்பிற்கினிய இப்’பயன்தூக்கார்’களின் அக்கறைக்கு எங்ஙனம் நன்றியுரைப்பேன் ?

                              காட்டாற்றில் அடித்துச் செல்லப்படும் வாழ்க்கையை இழுத்துப் பிடித்து அதில் பொதிந்திருக்கும் அழகியலை எடுத்துக் காட்ட இவர்களைப் போன்றே இன்னும் இன்னும் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் மனிதர்களின் மீதும் உலகின் மீதும் ஏமாற்றமோ வெறுப்போ வேர் பிடிக்கத் தொடங்குகையில் அவற்றைக் களையெடுத்துத் தூர எறிந்து, மனிதத்தின் மீதான எனது நம்பிக்கையை மீட்டெடுக்க இன்னமும் நிறைய பேர் வரத்தான் போகிறார்கள். எதிர்ப்பார்ப்புகளால் பொறாமையால் சொந்த உறவுகள் அந்நியமாகிக் கொண்டிருக்கும் நிலையில், நமக்கு நல்லது (மட்டுமே) நினைக்கும் அந்நியர்கள் பலர் மனதிற்கு நெருக்கமாகிப் போவது இயற்கையே ! இப்பேர்பட்டவர்களுக்காக மனம் கலங்குவதோ மகிழ்வதோ எந்த உணர்வு வகையில் சேர்த்தியோ? இவர்களுக்காகவோ இவர்களினாலோ நாம் உணர்பவற்றை வெறும் களிப்பு, உவகை, நன்றி, அன்பு, சோகம், வருத்தம், துயரம் என்றெல்லாம் சாதாரணமாக வகைப்படுத்த இயலும் என்று தோன்றவில்லை. அவ்வாறு அவ்வுணர்களைக் குறுகிய பெட்டியில் அடைக்கவும் விரும்பவில்லை. எவ்வளவு முயன்றும் அவற்றிற்குப் பெயர் சூட்ட இயலவில்லை. அவை பெயரற்றவையாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே ! எல்லாவற்றையும் வகைப்படுத்திப் பெயர் கொடுக்க முடிந்தால்தான் உலகம் எப்போதோ எந்திரத்தனமானதாகியிருக்குமே ?

                        தாத்தாவின் மறைவுக்குப் பல நாட்களுக்குப் பிறகு அவர்களது அலமாரியைச் சுத்தம் செய்யும் போது வெற்றுக் காகிதங்களுக்கும் பழைய பென்சில்களுக்கும் நடுவில் பாதுகாப்பாய் இருந்த என் எல்.கே.ஜி. பேட்ஜ் அன்று முழுவதும் என்னை ஆக்கிரமித்திருந்தது. இத்தனை வருடங்களாக தாத்தாவின் பொக்கிஷங்களில் இதுவும் ஒன்றாய் இருந்தது கண்டு கலவையான உணர்வுகள் உள்ளே முட்டி மோதிக் கொண்டிருந்தன. அதிக பட்சமாக அழுகை வரும் போல இருந்தது. ஒரு சாதாரண பொருளுக்கும் கூட இவ்வளவு ஆற்றலா?

                        முகிலற்ற வானம், இரவு வானில் தெளிக்கப்பட்ட பனித்துளிகள், நிலா (எந்த உருவில் எந்த அளவில் இருந்தாலும்!), சீரான தாள லயத்தை இசைத்துச் செல்லும் நதி, பூச்சிகளின் ரீங்காரப் பிண்ணனியில் பால் பிடித்து முற்றி நிற்கும் கதிர், உலகையே சிறிதாக்கித் தரும் மலை முகடு, போன்ற இயற்கைச் சூழலை, உலகின் கடிகாரங்களை எல்லாம் அழித்து விட்டு நேர வரையன்றி, முழுமையாக உணர்ந்து ரசிப்பதற்குக் கூட ஒரு மனநிலை வேண்டும். இவை, மகிழ்ந்திருக்கும் தருணத்தில், களிப்பை மிகுதி படுத்தித் தரவல்லவை. ஒரு வித வெறுமை, ஏக்கம், சோகம், விரக்தி கலந்த மனநிலையில் ரசிக்கும் போது மனங்களில் உண்டாகும் உணர்வினை விவரிக்கும் அளவு எனக்கு மொழி வசப்படவில்லை என்றே நினைக்கிறேன்.

 அவ்வப்போது இனம் புரியாத ஒரு தெளிவைத் தந்து விட்டுச் செல்லும் ‘பெயரிடப்படாத உணர்வுகளை’த்தானே ஒவ்வொரு கலைஞனும் படைப்பாளியும் மீண்டும் மீண்டும் மென்மேலும் சிறப்பாய் வெளிப்படுத்த முயன்று தோற்று படைப்புலகை அழகாக வெற்றிகரமாக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறான் ! இவற்றையெல்லாம் எழுதித் தீர்ப்பதைத் தவிர வேறு என்ன பெரிய வழி இருந்துவிடப்போகிறது? படைப்பாளி இல்லையெனினும் நானும் கொஞ்சமே கொஞ்சமாகத் தோற்றுக் கொள்கிறேனே ! இத்தோல்வியும் கூட எனக்குப் புன்னகைக்கவே கற்றுத் தருகிறது.

- சோம.அழகு

Pin It