நாகரிக சமூகத்திற்கு முன்பு வாழ்ந்த மனிதர் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்வை மேற்கொள்ளாத நாடோடிகளாக வாழ்ந்துள்ளனர். அவர்கள் இடம்விட்டு இடம்பெயர்ந்து இயற்கையோடு போராடி தமது விருப்பத்திற்காக எதிர்கொண்ட தடைகள் பல கடந்து நிலையானதொரு வாழ்விடத்தை பண்டைய மனிதர் அமைத்துக் கொண்டனர். சிலர், மலை காட்டுப்பகுதிகளில் தங்கி வாழ முற்பட்டனர். சிலர் வயல்வெளி மற்றும் கடல்பகுதிகளில் தமது குடியிருப்பை ஏற்படுத்தினர்.
காட்டை அழித்துச் சமவெளிகளில் வேளாண் தொழிலை மேற்கொண்ட பிறகே, மனிதன் நிலைத்த இடத்தில் வாழ வேண்டியதாயிற்று. “விவசாயம் கண்ட பின்பு வாழ்வு நிலைத்தது. ஒரே இடத்தில் நிலைத்து வாழ முடிந்தது”1 என்பர். அவர்கள் வேளாண்மை செய்ய முற்பட்டபின் அது தொடர்பான பொருட்களைத் தேடினர். குறிப்பாக கால்நடைகளை வளர்க்கவும் பராமரிக்கவும் செய்தனர். பாசன வசதி கண்டனர். இப்படியாக தொழில் அடிப்படையிலான ஒரு வேளாண் சமூகம் நாகரிகமிக்க சமூகமாக நிலைபெற்றது.
ஐவகை நிலங்களும் மக்களும்:
பண்டைத் தமிழக மக்களின் வாழ்வுமுறையினைப் பேசும் சங்க இலக்கியங்கள் மற்றும் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள், தமிழர் வாழ்விடங்களை நிலவியல் அடிப்படையில் பிரித்து விளக்குகின்றன. இந்நூல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலப்பாகுபாடுகளையும் அந்நிலப்பகுதிக்கேற்ப அமைந்திருந்த பண்பாடுகளையும் குறிப்பிடுகின்றன. “தொன்மையான தமிழ் மக்கள் குன்றுகளிலிருந்தும் காடுகளிலிருந்தும் வளமான சமவெளிப் பகுதிக்கும் அல்லது வேறு கடற்கரைப் பகுதிக்கும் சென்று வரலாற்றுரீதியான இடப்பெயர்ச்சியையும் அல்லது வேறுவகையில் சொல்லப்போனால் புதிய கற்கால வேடர் நிலையிலிருந்து தொடங்கி இடைப்பட்ட நிலையிலுள்ள ஆட்டுமந்தை மேய்ப்பாளர் நிலையைக் கடந்து நிலைத்த வாழ்க்கையை உடைய உழவன், மீன்பிடிப்பவன் நிலைக்கு வந்த வளர்ச்சியையும் இவ்வைந்து நிலப்பிரிவுகளும் வெளிப்படுத்துவது சாத்தியமே”2 என்று அறிஞர் குறிப்பிடுவர். எனவே பழங்கால மக்கள் கூட்டம் தமக்கேற்ற நிலப்பகுதியைத் தெரிவுசெய்து அங்கேயே நிலைபெற்றுவிட்டனர். சிலர் இடம்பெயராது மலை, காடுகளிலேயே வாழ்வதற்கான வழியைத் தேடிக் கொண்டனர்.
பல்வேறு குடிகள்:
இங்ஙனம் நிலைபெற்றுவிட்ட நிலப்பகுதிகளில் இனக்குழுத் தலைமை உருவாகிறது. தொழில் பிரிவுகளும் அவர்தம் கடமைகளும் வகுக்கப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் இவற்றிற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. அவற்றுள் தொல்குடிகள் குறித்துப் பேசும் வழக்காறுகள் முக்கியமானவை. அவை வருமாறு: “அம்குடி, பழங்குடி, முதுகுடி, குரம்பைக்குடி, வேட்டைக்குடி, நீள்குடி, விழுக்குடி, வீழ்குடி, செழுங்குடி, பல்குடி போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும், சிறுகுடி சில்குடிப்பாக்கம் போன்றவை வாழ்விடங்களின் பெயர்களாக வருகின்றன. ஆயக்குடி, கடம்பன்குடி, போன்ற இனக்குழுவும் குடி என்று கூறுவதைக் காணலாம்”3 எனவே ஓர் இனம் சார்ந்த மக்கள் கூட்டத்தைக் குடி என வழங்கிய பெயர் பின்னர் அவர் இருந்த இருப்பிடத்தைக் குறிப்பதற்காகியுள்ளது. “இல்அடுகள்ளின் சில்குடிச் சீறூர்”4 என்பதால் பல குடும்பங்கள் இடம்பெறக் கூடிய இடம் ‘ஊர்’ எனப் பின்னர் அழைக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூட்டம் இருக்கும் வாழ்விடம் ‘பேரூர்’ எனவும் குறைவான குடில்கள் உள்ள இடம் ‘சீறூர்’ எனவும் வழங்கப்பட்டுள்ளன. “அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர்”5 எனவும் “பேர் ஊர் துஞ்சம்” எனவும் குறிக்கப்படும் சங்க இலக்கிய வரிகளை இதற்குச் சான்று காட்டலாம். பொதுவாக ‘ஊர்’ என்ற வழக்கு மருதநிலப்பகுதிக் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் வேளாண் தொழிலில் ஈடுபட்டு நாகரிகமிக்க மனிதர்களாக உருமாறிய அப்பகுதியே சிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறு, சிறு வேளாண்பகுதிகள் அவ்வப்பகுதித் தலைவர்களால் நிர்வகிக்கப்பட்டுள்ளன. பின்னர்காலத்தில் “இக்குழுத்தலைமை நிலத்தலைமையாக மாற அரசம் உருவாகியது”6 என்பர்.
‘நாடு’ - ஒரு பெரும் நிலப்பரப்பு:
தொடக்க காலத்தில் சிறுசிறு பகுதிகளை நிர்வகித்தவர்கள் தங்களுக்குள்ளாகப் படையெடுத்துச் செழிப்பான பகுதிகளையும் கால்நடை முதலான சொத்துக்களையும் கைப்பற்றியதோடு பெரிய நிலப்பரப்பை ஆள்கிற நிலைக்குச் செல்கிறார்கள். அதாவது குறிஞ்சி, முல்லை முதலான நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அந்தந்த திணைத் தலைவர்களின் ஆளுகையனின்று விலகி நானிலத் தலைமையின்கீழ் வாழ்பவர்களாக மாறுகின்றனர். இதனால் புதிய, மாறுபட்ட கலவையான ஒரு பெருநிலம் ஆட்சிக்குரிய பரப்பாக விரிகிறது.
பல்வேறு திணை மக்கள் ஒரு நாட்டின் கீழ் வாழ்பவர்களாக மாறுகின்றனர். இது குறித்து அறிஞர், “நாகரிக வளர்ச்சியால் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து வாழ்ந்த பகுதிகளை ஆண்ட சீறூர் மன்னரும் முதுகுடி மன்னரும் ஊர்களை ஆள்பவர்களாகவே இருந்தனர். அவர்கள் ஆண்ட பகுதி முதலில் ‘நாடு’ என அழைக்கப்பெறவில்லை. காலமாற்றத்தால் பலதரப்பட்ட பகுதிகளையும் பல்வேறு தொழில் செய்யும் மக்களையும் உள்ளடக்கிய பெரிய நிலப்பரப்பாக ஆட்சிப்பகுதி விரிவடைந்த பிறகு குறுநில மன்னர்களும் வேந்தர்களும் ஆளுகையில் ‘நாடு’ என்ற பெயர் வழங்கலாயிற்று”7 என்பர். “பெண்ணையம் படைப்பை நாடு கிழவோயே”8 என்றும் “நனிமலை நாடன் நள்ளி”9 என்றும் குறுநில மன்னர்கள் அழைக்கப்பட்டனர். “பூத்தன்று பெரும நீ காத்த நாடே”10 என்றும், “எமன் புல வைப்பின் நன்னாட்டுப் பொருந”11 என்றும் பெரிய வேந்தர்கள் குறிக்கப்படுகின்றனர். ‘நாடு’ என்பது ஓரளவு தனித்த, சிறப்பு வாய்ந்த, பெரும்பகுதியைக் குறிப்பிடுகிற சொல் எனலாம்.
நாடு- பெரியதும் சிறியதும்:
நாடு என்பது நிலப்பகுதியைக் குறிப்பிடும் சொல்லாகவே பயன்பட்டுள்ளது. இது பெரிய அளவிலான நிலப்பரப்பையும் சிறய அளவிலான நிலப்பகுதிகளையும் குறிக்கின்ற சொல்லாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சான்றாக, பறம்புமலையும் அதனைச் சார்ந்த முந்நூறு ஊர்களுமே பறம்பு நாடாகும். ஓர் ஆற்றுச் சமவெளியும் அதனைச் சார்ந்த சில ஊர்களும் பிறிதொரு அரசன் ஆளுகிற நாட்டுப்பகுதியாக இருக்கும். சங்ககாலத்து ஓரி மன்னனின் கொல்லிநாடும் ‘ஆய்’ மன்னன் ஆண்டபகுதியும் இவற்றோடு பொருத்திக் காணத்தக்கவை. இவற்றை “இனவழி அரசு”12 என அழைப்பர். பல்வேறு இனக்குழு வழி அரசுகளே ஒருங்கிணைந்து தமிழ்நாடு என்றாகியிருக்கிறது. “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்த தமிழ்கூறும் நல்லுலகம்” என எல்லை வகுத்துப் பாடியிருப்பது தமிழ்மொழி பேசுகிற மக்கள் திரளாக வாழ்ந்திருந்த மிகப்பெரும் நிலப்பகுதியாகும். இப்பகுதியையும் முற்காலத்து சேர, சோழ, பாண்டியர் என்கிற முப்பெரும் வேந்தர்கள் ஆண்டுள்ளனர். இவர்கள் ஆண்ட பெருநிலப்பரப்பு பாண்டியநாடு, சோழநாடு, சேரநாடு என அழைக்கப்படுகின்றன. இந்நாட்டுப் பகுதிக்குட்பட்ட பகுதிகளும் ‘நாடு’ என்றே அழைக்கப்பட்டுள்ளன. சான்றாக, தொண்டைநாடு, கொங்குநாடு முதலியவற்றைக் குறிப்பிடலாம். இது ஒருபுறமிருக்க, பண்டைக்காலத்தில் வட்டாரங்களை அடிப்படையாகக் கொண்டு பன்னிரு நாடுகளாகத் தமிழ்நாடு பிரித்துக் காணப்பட்டுள்ளது. அவையாவன: தென்பாண்டிநாடு, குடநாடு, குட்டநாடு, கற்காநாடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, அருவாவடதலை நாடு, சீதநாடு, மலையமான்நாடு, புனல்நாடு ஆகியனவாகும். தொல்காப்பியர் குறிப்பிடுகிற பன்னிரு நிலத்தைப் பின்வந்த உரையாசிரியர்கள் இங்ஙனம் பிரித்துக் காட்டுகின்றனர். இந்நாடுகளுக்கேற்பட்ட பெயர்க்காரணம் அறியப்படாவிடினும் இவை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் என்பதை அறியலாம். எனவே நாடு என்பது தமிழக உட்பிரிவில் ஒரு முழுமைப் பகுதியைக் குறிக்கிற சொல்லாகவும் இருக்கிறது.
‘நாடு’ எனும் அடையாளம்:
பிற்காலத்து மன்னர்கள் நிலப்பகுதியைப் பல்வேறு பெயரிட்டு வழங்கினர். இது நிர்வாகத்தின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டவை. சான்றாக பல்லவர். “அவர்தம் ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதியை இராட்டிரம் அல்லது மண்டலம் விசயம் அல்லது கோட்டம் நாடு, ஊர் எனப் பகுத்து நிர்வகித்தனர். மண்டலம் வளநாடு என்றும் அழைக்கப்பட்டது”13. இதேபோல் சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கிராமங்கள் அனைத்தும் மத்திய அரசின் உறுப்புகளாக விளங்கின. “பல கிராமங்கள் சேர்ந்தது கூற்றம் எனவும் கூற்றத்துக்கு கோட்டயம் என்றும் நாடு என்றும் பெயருண்டு. பல கூற்றங்கள் சேர்ந்தது ஒரு வளநாடு. பல வளநாடுகள் சேர்ந்தது ஒரு மண்டலம் ஆகும்”14. இக்கருத்துக்களால் நிர்வாக முறைக்கேற்ப நிலப்பகுதிகள் வகுக்கப்பட்டுப் பெயரிடப்பட்டுள்ளன என்பதை அறியலாம்.
தமிழ் மக்கள், சாதி அடிப்படையில் இனங்காணப்பட்ட பின்பு, அவர்களில் மக்கட் செல்வாக்கு, மக்கள் எண்ணிக்கைப் பெரும்பான்மை அடிப்படையில் குறிப்பிட்ட பகுதி அவர்களது சாதிப் பெயரில் வழங்கப்படுவதுமிருக்கிறது. காட்டாக, செட்டிநாடு, கள்ளர்நாடு, வல்லம்பர் நாடு முதலியவற்றைக் குறிப்பிடலாம். மேலும் திசை அடிப்படையில் மேல்நாடு, கீழ்நாடு, வடக்கத்தி நாடு என்றும் ஊர்ச் சிறப்பினடிப்படையில் வெள்ளலூர் நாடு, மல்லாக்கோட்டை நாடு என்றும் பெயரிட்டு வழங்கி வருவதைக் காணமுடிகிறது. இப்பகுதிகள் ஒரு பெரும் நிலப்பகுதிக்குட்பட்ட பகுதிகளே என்பதில் கருத்து மாறுபாடில்லை. ஆயின், இவை போன்ற வழக்குகள் இன்றளவும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வழக்கில் இருந்து வருகின்றன.
கால அடிப்படையில் ‘நாடு’ என்கிற சொல் பல்வேறு பொருளைத் தாங்கி நிற்கின்ற சொல்லாக இருப்பினும் அது தனது அடிப்படைப் பொருளான நிலப்பகுதியைக் குறிக்கின்ற சொல்லாக மாறாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இச்சொல், நிலப்பிரிவு, ஆட்சிப்பிரிவு, அதிகாரப் பிரிவு, நிர்வாகப் பிரிவு, சமூக அடையாளம் என்ற அளவிலும் தொழில்படுகிறது. நிலப்பரப்பும் ஆட்சி அதிகாரமும் தமிழகத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களால் கைக்கொள்ளப் பெற்றுள்ளன. எனினும் சுதந்திரகால இந்தியாவுக்கு முன்புவரை முடியாட்சி அரசுக்கென அமைக்கப்பெற்றிருந்த நிலப்பிரிவுகள் இன்றுவரை நிர்வாகத்தின் பொருட்டுக் கடைப்பிடிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதியைக் குறிக்கிற ‘நாடு’ என்கிற வழக்கு ஏட்டில் அழிந்து போனாலும் அச்சொல் நிலப்பரப்பையும் வாழ்வியல் அதிகாரத்தையும் அடையாளப்படுத்துகிற நிலையில் இன்றுவரை கிராமப்பகுதி மக்களிடையே வழக்கில் இருந்துவருவதைக் காணமுடிகிறது.
நாடு-மரபுக் கருத்து:
‘நாடு’ என்கிற நிலப்பகுதியின் வரையறைக்குள்ளான நீதி வழங்கல், நிர்வாகம் செய்தல், காவல் காத்தல், வழிபாடு செய்தல், சடங்குகள் மேற்கொள்ளல் ஆகியவற்றின் அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகள் இன்றும் மரபுவழியாகத் தொடர்ந்து வருகின்றன. மாறிவரும் புதிய சமூகச்சிந்தனைகள் இந்த இறுக்கமான மரபினை அசைத்திருப்பதை மறுப்பதில்லை. நீதி வழங்கல், கிராம நிர்வாகம் போல்வனவெல்லாம் தற்கால அரசாங்கத்தின் அதிகார அமைப்பிற்குள் சென்றுவிட்டன. ஆயின், கோயில் வழிபாட்டு முறைகள், கிராமியக் குடும்ப வழக்கங்கள் எல்லாம் மிகவும் உணர்வுப்பூர்வமாக மக்களிடையே தக்கவைக்கப்பட்டுள்ளன. இதனால் புதிய சட்டங்கள் வழிபாட்டுச் சடங்குமுறையினைச் சீண்டும்போது மக்கள் எதிர்ப்புக்கு ஆளாகின்றன. சாதிய மோதல்கள் இதனால் உருவாகின்றன. எனவே பண்டைய சமூக அதிகார அமைப்பு என்பது ‘நாடு’ என்கிற சொல்லால் கிராம மக்களது மனச்சட்டத்தில் வேரூன்றி இருக்கிறது எனலாம்.
அடிக்குறிப்புகள்
1. எஸ்.ஏ.பெருமாள், மனிதகுல வரலாறு, ப.68
2. K.Zvelbil, Tamil Poetry 2000 Years ago
3. ஆர்.பூங்குன்றன், பண்டைத் தமிழகத்தில் அரசு உருவாக்கம், ப.68
4. புறம்., பா.329
5. குறுந். பா.41
6. நற். பா.132
7. பெ.மாதையன், ‘முன்னுரை’, சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம் ப.4.
8. பெ.மாதையன், சங்ககால இனக்குழுச் சமுதாயமும் அரசு உருவாக்கமும். ப.78
9. புறம், பா.126
10. சிறுபாண். வரி.107
11. பதிற். பா.13
12. புறம் பா.42
13. தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு பக்.69, 70
14. ஆ.இராமகிருட்டிணன், தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், ப.148