குடியுரிமைத் திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து சட்டமுமாகியுள்ளது. ஆனால் இந்த மசோதாவுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதே ஏன் என்ற கேள்விக்கு செல்வதற்கு முன், இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் அதன் ஷரத்துகளைப் பற்றி சற்று அலசுவோம்.
ஒரு நாட்டு மக்களை ஆட்சி புரியும் அடிப்படையான அரசு இயல் முறையைக் கூறுவதே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டம் ஆகும். அரசின் தலையாய அங்கங்களாகிய சட்டமியற்றும் சபை, நீதித் துறை ஆகியவற்றைத் தோற்றுவித்து, அவற்றின் அதிகாரங்களை வரையறுத்து பொறுப்புகளைப் அதன் படி பகுத்து, பரஸ்பரம் அவைகளை வரையறுத்து, அவற்றுடன் மக்களுக்கும் உள்ள உறவுகளை நெறிப்படுத்துவதே அரசியலமைப்பு ஆகும். அவ்வாறு இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டதின் 14ஆம் உறுப்பு இந்திய குடிமக்களின் சமத்துவத்தைக் கூறுகிறது. அதாவது "சட்டத்தின் முன் சம நிலை" என்பதை விளக்குகின்றது.
இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 14-ன்படி அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத வேறுபாடுகள் இன்றி சமமாக நடத்தப்பட வேண்டும் என்கின்றது இச்சட்டம். ஆனால் மத்திய அரசால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவோ இந்து, சீக்கிய, பார்சி, சமண, பௌத்த, கிறிஸ்தவர்கள் மட்டும் இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பதற்கு வழிவகை செய்வதுடன், அண்டை நாட்டு இந்திய வம்சாவளி முசுலீம்களையம், ஈழத் தமிழர்களையும் வேண்டுமென்றே தவிர்த்துள்ளது இந்த மசோதா.
இந்தியா பல மொழிகள் பேசப்படும் ஒரு நாடு மட்டுமின்றி பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட ஒரு நாடுமாகும். இனத்தால், மொழியால், மதத்தால் நாம் பலவகையாகப் பிரிந்து இருப்பினும் நாம் ஒற்றுமையாகத் தான் இருக்கிறோம் என்றால், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்புதான் அதற்குக் காரணமாகும். உலக நாடுகளின் மத்தியில் நம் இந்திய நாட்டை தனித்துக் காட்டும் அடையாளமே இங்கு நிலவும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்புதான். அதைப் பலர் புரிந்து கொண்டு நல்ல பரஸ்பரத்துடன் தான் உள்ளனர்.
இன்றைய ஆட்சியாளர்களுக்குத் தான் இதில் வேற்றுமையுள்ளது, அதனால் தான் 'ஒரே நாடு, ஒரே மொழி' என்னும் தாரக மந்திரத்துடன் இந்தியாவை ஒரே ராஷ்டிரமாக்குவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முத்தலாக், பொது சிவில் சட்டம் என்ற வரிசையில் குடியுரிமைத் திருத்த மசோதாவும் ஒன்று. இச் சட்டத்தின் அடிப்படையே முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்பதாகவே தோன்றுகின்றது.
இதன் வெளிப்பாடாக நாடெங்கிலும் இந்த மசோதாவிற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அதன் ஒரு பகுதியாக டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம், அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மாணவர்கள் மீது போலீஸார் அத்துமீறி தடியடி நடத்தியதில் 120க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். அப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனுக்கியா என்னும் சட்டம் படிக்கும் மாணவியின் அழுகுரலுடன் அந்த வீடியோவை கண்டவுடன் மனம் பதைபதைக்கின்றது. அப்பெண் சொல்வது முற்றிலும் உண்மை அல்லவா? "எங்கள் வலி வார்த்தையால் விவரிக்க முடியாது, அவரவர்களுக்கு நடந்தால் தான் எங்கள் வலியை உணர முடியும்" என்கின்றாள்.
"அமைதியான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில்தான் இருந்தோம். ஆனால், அங்கு நுழைந்த காவலர்கள் கண்மூடித்தனமாக எங்கள் மீது தடியடி நடத்தினர். நாங்கள் வளாகத்தைவிட்டு வெளியேறுவதற்காக எங்கள் பைகளை எடுக்கவே உள்ளே சென்றோம். எங்களைக் குற்றவாளிகளைப் போல காவல்துறை நடத்தியது. கல்லூரியிலிருந்த உணவகம், நூலகம், தங்கும் விடுதி அனைத்தையும் சேதப்படுத்திவிட்டனர், பெண்கள் தங்கும் விடுதி என்றும் பாராமல் உள் நுழைந்து, அவர்கள் செய்த காரியத்தை வெளியே சொல்ல முடியாத அளவிற்கு நடந்து கொண்டனர். நேற்று இரவு நாங்கள் கண்ட காட்சி மிகவும் பயங்கரமாக இருந்தது. வளாகத்திலிருந்த மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, தாக்குதல் நடத்தப்பட்டது. என் நண்பர்கள் தலை, கை, கால் உடைக்கப்பட்டது. மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர். இரவு முழுவதும் நாங்கள் அழுது அழுது எங்கள் கண்ணீர் வற்றிவிட்டது, இது தான் ஜனநாயகமா??"
"மாணவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் கல்லூரி வளாகம் என அனைவரும் நினைத்திருந்தோம். என் பெற்றோர்கள் உட்பட கல்லூரி வளாகத்தில் எங்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நேராது என நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால், இன்று அனைத்தும் பொய்யாகிவிட்டது. இந்தக் கல்லூரியில் மட்டுமல்ல இந்த மொத்த இந்திய நாட்டில் நான் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. இனிமேல் நாங்கள் வேறு எங்கு செல்வது என்றும் தெரியவில்லை. எங்கு சென்றாலும் தாக்குதல் நடக்கிறது. இனி என் நண்பர்கள் இந்தியக் குடிமக்களாக இருப்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது. நான் இஸ்லாமியப் பெண் கிடையாது. இருந்தும் போராடுகிறேன். நான் ஒரு இயந்திரம் கிடையாது, எது நடந்தாலும் கண்மூடிக் கொண்டு செல்ல... உண்மையின் பக்கம் நிற்காமல் போனால் நான் படித்த கல்வி அர்த்தமற்றதாகிவிடும்" என்கிறாள் அப்பெண் அழுதுகொண்டே. இப் பெண்ணின் அழுகுரல் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட சவால் அல்லவா?
இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் நிலையைக் கண்டால், இவர்கள் இந்தியாவின் ஹிட்லர்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அம் மாணவி கேட்டதைப் போல், இது ஜனநாயகமா என்ற கேள்வி அனைவரின் மனதில் எழாமல் இல்லை. சர்வாதிகாரிகளின் ஆட்சிகளில் முதலில் பலியாவது ஜனநாயகம்தான். சர்வாதிகாரப் போக்கின் விளைவாக ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பதற்கான ஒடுக்குமுறைச் சட்டங்கள்/ மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. தங்களுடைய அடிப்படை உரிமைகள் கோரி மக்கள் நடத்தும் போராட்டங்கள் ஈவு, இரக்கம் இல்லாமல் ஒடுக்கப்படுகின்றன. இதே போல் ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜிக் கட்சியில் ஜனநாயகம் என்பது துளி கூட இருந்ததில்லை. எனவே, ஹிட்லரின் கையில் ஆட்சி வந்தவுடன் சர்வாதிகாரியானார். காலப் போக்கில் அதன் விளைவு உலகப் போர் மூண்டு, அப்போரில் ஜெர்மனி அழிந்ததை இந்த ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், பாசிசம் தான் அழிவின் தொடக்கம் என்று...
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியாவை பல நாடுகள் இது வரை கருதி வந்தனர், ஐ.நா உட்பட. ஆனால், இங்கு ஜனநாயகம் விழுங்கி பாசிச சர்வாதிகாரப் போக்கு படர்ந்து வருவதை உலகமே உற்று நோக்கி வருகின்றது என்பதற்கான எடுத்துக்காட்டு தான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எச்சரிக்கை எல்லாம். உலகின் மத்தியில் இந்திய நாட்டை தனித்துக் காட்டும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்பு அழிக்கப்பட எப்போதெல்லாம் நாட்டில் ஜனநாயகம் மறைந்து சர்வாதிகாரம் தலை தூக்குகின்றதோ அல்லது அரசாங்கத்தால் இயற்றப்படுகிற எந்தவொரு புதிய சட்டமும் அல்லது சட்டத்திருத்தமும் அரசமைப்புச் சட்ட அடிப்படை கொள்கைகளின்படி அமையாமல் இருந்தாலோ, அப்போதெல்லாம் நீதித் துறை உள்நுழைந்து ஜனநாயகத்தை வலியுறுத்த வேண்டியது அதன் தலையாய கடமையாகும். நீதித்துறை நாட்டின் நலன் கருதி அதன் தலையாய கடமையை நிறைவேற்றாமல் போனால், பாசிசம் அழிவின் தொடக்கம் என்பதை கடந்த கால வரலாறுகள் நமக்குக் காட்டியதைப் போல் இந்த ஆட்சியாளர்களுக்கு காலமே உணர்த்தும்.
- அப்சர் சையத், சென்னை