“முழுப் பூசணியை சோற்றில் மறைப்பவன்” என்பது ஒரு காரியவாதியை, ஏமாற்றுப் பேர்வழியை குறிப்பிடுவதற்கு சொல்லப்படும் உதாரணம். ஆனால் இதனை ஒரு மாநிலக் கல்வி அமைச்சரும், ஊடகங்களும் சேர்ந்து செய்தால் என்னவென்று சொல்வது?
சமீபத்தில் ஒரு பள்ளி மாணவி சீருடையுடன் பள்ளியின் வாசல் கதவுக்கு வெளியில் நின்று கண்ணீர் மல்க அழுது கொண்டு நிற்கும் புகைப்படம் ஊடகங்களில் வைரலானது. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் உள்ள ஹையக்ரீவர் என்ற தனியார் ஆங்கிலப் பள்ளியில் யுகிதா என்ற மாணவி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
கணவனைப் பிரிந்து வாழும், யுகிதாவின் அம்மாவான இலக்கியா தினக்கூலி வேலை செய்து பல எதிர்காலக் கனவுகளுடன், தனது மகளை முதல் வகுப்பு முதலே ஆங்கிலவழிப் பள்ளியில் சேர்த்திருக்கிறார். இந்த வருட கல்விக் கட்டணத்தில் 6000 ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளார். உரிய காலத்தில் மீதிப் பணத்தை கட்டவில்லை என்பதால் யுகிதாவை காலாண்டுத் தேர்வு எழுத விடாமல் வெளியில் துரத்தி விட்டிருக்கிறது பள்ளி நிர்வாகம். இதுதான் அந்தப் புகைப்படத்தின் பின்னணி செய்தி!
மூன்று நாள் கழித்து “கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் உத்தரவுக்கிணங்க அந்த மாணவி அதே பள்ளியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்” என்று அனைத்து ஊடகங்களிலும் பிரேக்கிங் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது.
உண்மை என்னவென்றால், ஊடகங்களில் வெளியான செய்தியறிந்து மாவட்ட கல்வி அலுவலகத்தினர் குறிப்பிட்ட தனியார் பள்ளியில் விசாரண நடத்தியுள்ளனர். அந்த மாணவி கல்விக் கட்டணம் செலுத்தாத காரணத்தை பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. “அப்படியா...உடனே சான்றிதழைக் கொடுத்து அனுப்பி விடுங்கள். அவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்து கொள்ளட்டும்” என்று மாவட்டக் கல்வி அலுவலகம் கூறிவிட்டது. இதன்படி தனியார் பள்ளியிலிருந்து துரத்தப்பட்ட யுகிதா என்ற அந்த மாணவி அடுத்த நாளே சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள குமணந்தொழுவு என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்து விட்டார். அங்கு மூன்று காலாண்டுத் தேர்வும் எழுதி விட்டார்.
ஆனால் அமைச்சர் செங்கோட்டையனோ அதே தனியார் பள்ளியில் மாணவி சேர்ந்து விட்டதாக அடித்து விடுகிறார். நடுநிலை வேசம் போடும் ஊடகங்கள் நேரில் சென்று பெயரளவுக்குக் கூட விசாரித்தறியாமல் பிரேக்கிங் நியூஸ் போட்டு கல்லா கட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
மாணவியின் அம்மா இலக்கியா அவர்களிடம் பேசினால் உண்மை நிலவரத்தைக் கூறத் தயாராக இருக்கிறார். பேசுவீர்களா அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே!
- தேனி மாறன்