கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஶ்ரீமதி கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு மர்மமான முறையில் மரணமடைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று மாணவி ஶ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் நல்லடக்கம் செய்தனர்.
இந்த சோகம் மக்கள் மனதில் இருந்து நீங்குவதற்குள் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில், அரசு நிதி உதவி பெறும் “சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி” விடுதியில் தங்கிப் படித்து வந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி சரளா (திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் என்பவரது 17 வயது மகள்) மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார்.
சம்பவத்தன்று காலை வழக்கம் போல் சீருடை அணிந்துப் பள்ளிக்குப் புறப்பட்ட மாணவி சரளா தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்குச் சென்றார். அப்போது திடீரென விடுதி அறைக்குச் செல்வதாக மற்ற தோழிகளிடம் கூறி விட்டுச் சென்ற மாணவி சரளா நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த தோழிகள் விடுதி அறைக்குச் சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாகட் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் விழுப்புரம் மணி நகரைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கல்லூரிக் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மயங்கிய நிலையில் இருந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் மாணவி அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது போன்ற தொடர் சம்பவங்களை நாம் சாதாரண தற்கொலைகள் என்று எளிதில் கடந்து சென்று விட இயலாது. ஏனெனில் இது போன்ற சம்பவங்களில் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகளே தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு இது போன்ற சிக்கல்கள் ஏற்படுவதில்லை. அதே போன்று மாணவர்களுக்கும் இந்தச் சிக்கல்கள் எழுவதில்லை. இதைக் கூர்ந்து நோக்கினால் பெண் கல்வியைச் சீர்குலைக்கும் சதியாக இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா பெண் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதால் தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பை சிதைத்துக் காவிக் கூடாரமாக மாற்ற நினைக்கும் மதவாத சக்திகள் இது போன்ற சம்பவங்களின் பிண்ணனியில் இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி உரிமையாளர் திரு. இரவிக்குமார் இத்தகையப் பின்புலம் கொண்டவர் என்பதால் இந்தச் சந்தேகம் மேலும் வலுவாகிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றான “Multiple Entry Multiple Exit” என்பது இடைநிற்றலுக்கு (பெரும்பாலும் மாணவியரின் இடைநிற்றலுக்கு) வழி வகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிகழ்வுகளுக்கு உரியத் தீர்வாக தனியார் கல்வி நிறுவனங்களைத் தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று இந்தியப் பொதுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் படி அரசு ஒரே இரவில் இது போன்று முடிவெடுத்து விட இயலாது. ஆயினும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு அமைந்த கடந்த ஓராண்டில் படிப்படியாக அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது.
மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு என்பதற்கு உச்சநீதிமன்றம் வரை சென்று உறுதிப்படுத்தியது, ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குப் பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வியில் 7.5% இடஒதுக்கீடு வழங்கியது. அவர்களது அனைத்துக் கட்டணத்தையும் அரசே ஏற்றது. ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் தனியார்ப் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாற வழி வகை செய்தது. “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்” என்பதை “மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதியளிப்புத் திட்டம்” என மாற்றி ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவியருக்கு அவர்கள் உயர்கல்வி பயிலும் காலம் முழுவதும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. இவை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டுத் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கி உள்ளனர். மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை நான்காயிரம் ஆக உயர்ந்துள்ளது என்பது இதற்குச் சரியான எடுத்துக்காட்டு. இத்தகைய நிலை மாநிலம் முழுவதும் ஏற்பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.
பெண் கல்வியைப் பேணிக் காக்க அனைவரும் உறுதி ஏற்போம்!!
- வழக்கறிஞர் இராம.வைரமுத்து