Uthappuram

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவைச் சேர்ந்த உத்தப்புரம் கிராமம் கடந்த மாதம் இந்திய ஊடகப் பரப்புகளில் தொடர்ந்து முக்கிய இடத்தை வகித்தது. இந்த கிராமத்தின் கதை இந்தியாவெங்கும் உள்ள தேனீர்க் கடைகளில், ஊர் மந்தைகளில், குடும்பங்களில் துவங்கி தேசிய மனித உரிமை ஆணையம் வரை விவாதிக்கப் பெற்றது. இது இழிவின் கதை. சாதி இழிவை இரண்டாயிரம் ஆண்டுகளாய் அனுபவித்து வரும் ஒரு சமூகத்தின் கதை இது.

1989ல் நடந்த கலவரத்தின் விளைவாக உத்தப்புரம் கிராமத்தில் நான்கு கொலைகள் விழுந்தன. அதில் இரண்டு பிள்ளைமார் மற்றும் இரண்டு பள்ளர்களின் உடல் மண்ணில் சரிந்தது. பதற்றத்தை தணிக்க வந்த காவல்துறையின் துப்பாக்கி ரவைகள் மேலும் இரண்டு பள்ளர்களின் உயிரை காவு வாங்கியது. மேலும் அந்த ஊரில் இருந்த 131 தலித்துகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாய் காவல்துறை சிறை பிடித்தது. இந்த பதற்றமான சூழ்நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த 5 பேரை தூக்கிச் சென்று ஒரு மாபெரும் ஒப்பந்தம் உருவாக்காப்பட்டது.

எழுமலையில் உள்ள அருணாச்சலம் திரையரங்கில் 18 பட்டி நாட்டாமைகள் கூடியிருக்க சட்டமன்ற உறுப்பினர்கள் அதியமான், தவமணித் தேவர் மற்றும் கட்டளை செல்வம் ஆகியோரின் முன்னணியில் இந்திய தேசத்தின் பெருமைமிகு சாதிய சாசனம் உருவாக்கப்பட்டது. உயிருக்கு பயந்து அந்த சாசனத்தில் உத்தப்புரத்தைச் சேர்ந்த ஐந்து தலித்துகள் உட்பட 23 பேர் கையயாப்பமிட்டனர். அந்த சாசனத்தின் மூலப்பிரதி காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. கையயாப்பமிட்ட 5 தலித்துகளில் மூன்று பேர் இறந்து விட்டனர். உயிரோடிருக்கும் இருவரில் ஒருவர் 80 வயதைக் கடந்து நடமாட முடியாத நிலையில் இருக்கும் ராமன்.

மற்றொருவர் இன்று அந்த ஊரின் பெரியவரான பொன்னையா (வயது 65). இன்று அந்த ஊரை வழிநடத்திக் கொண்டிருக்கும் பொன்னையா ஒரு ஓய்வு பெற்ற இராணுவ வீரர். இந்திய இராணுவத்தில் சிக்னலிங் பிரிவில் தொழில்நுட்ப மெக்கானிக்காக 20 வருடங்கள் 20 நாட்கள் தேசத்திற்கு சேவை புரிந்து விட்டு ஊரில் வசிக்கிறார்.

Pillaimar's posterஉத்தப்புரம் ஒரு கிராம ஊராட்சி. அதில் பள்ளர்-50, கொடிக்கால் பிள்ளைமார்-500, மூப்பர்-150, கவுண்டர்-150, ஆசாரி-3, மருத்துவர்-6, வண்ணார்-6, சைவப்பிள்ளை-1 மற்றும் பிரமலைக்கள்ளர்-7 குடும்பங்கள் வசிக்கின்றனர். 1948, 64, 89 என மூன்று அலைகளாய் பெரும் சாதிய கலவரநிலை அந்த ஊரை கவ்வியது. 1989ல் நான்கு கொலைகள் விழுந்த பின்னணியில் உருவான இழிசாசனத்தின் அடிப்படையில் உத்தப்புரம் கிராமத்தின் பிள்ளைமார்-பள்ளர் குடியிருப்புகளை பிரிக்கும் பெருஞ்சுவர் எழுந்தது. இந்தச் சுவர் ஊரின் குறுக்கும் நெடுக்குமாக ஊடுருவிச் செல்கிறது. பல தெருக்களை மறித்து வானுயர நிற்கிறது அந்த அவமானச் சின்னம்.

350 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுவற்றைச் சகித்துக் கொண்டு கடந்த 19 ஆண்டுகளாக அந்த ஊரின் தலித்துகள் பெரும் அவமானத்துடன் வாழ்ந்து வருகின்றனர். 1989க்குப் பின் பல முறை எழுந்த சிறு எதிர்ப்புணர்வுகளும் பயனற்று அடங்கிப் போயின. அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவராக ஒரு தலித் பொறுப்பேற்றும் இன்று வரை நிழற்குடையோ, சாக்கடைக்கு மூடி கூட போட முடியவில்லை. தலித்துகளின் திருவிழாக்கள் நடைபெறும் பொழுது வட தோரணங்கள் கொடிகள் கட்ட முடியாது. சாதிய இந்துக்கள் தயாரித்த இழி சாசனத்தை அப்படியே சுவீகரித்துக் கொண்ட அரசு அந்த கிராமத்தில் இரண்டு பள்ளிகள், இரண்டு தண்ணீர்த் தொட்டிகள், இரண்டு நியாயவிலைக் கடைகள் என தீண்டாமையை சட்டமாக்கியது.

அந்த ஊர் பள்ளியில் ஒன்றாய் படித்த தலித் சிறுவர்களைக் கூட சாதிய இந்துக்களின் வண்மம் விட்டு வைக்கவில்லை. ‘அண்ணன்’ என்று தன் சக மாணவனை அழைத்த தலித் சிறுவர்கள் பள்ளிக்கூடத்தில் வைத்து அடிக்கப்பட்டனர். ‘ஏண்டா நீ என்ன என் கூடப் பொறந்தவனா?’ என்று கூறிக் கொண்டே சாதிய இந்து மாணவர்கள் கொடுமைப்படுத்தினார்கள். தலித் குழந்தைகள் கல்லூரிக்குச் செல்வதைக் கூட உயர் சாதியினரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. பலமுறை பள்ளி மாணவர்களுடன் கைகலப்பு நிகழ்ந்துள்ளது. ஒரு தலித் மாணவியை கேலி செய்ததற்காக பிள்ளைமார்கள் 10,000 ரூபாய் அபராதம் கட்டி உள்ளனர். இதுபோல் கட்டுப்பாடை மீறும் தலித் இளைஞர்களின் மீதும் அபராதம் விதிக்க ஊர் தவறியதில்லை. தலித்துகள் மத்தியிலான பல ஊர்கட்டுப்பாடுகள் தான் கடந்த 19 ஆண்டுகளாய் அங்கு அமைதி நிலவிட காரணம்.

இந்தச் சூழ்நிலையில் 2008 பிப்ரவரி 9 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை மாவட்டத்தில் 47 மையங்களில் தற்சமயம் நடைமுறையில் உள்ள பல்வேறு விதமான தீண்டாமை முறைகளை பதிவு செய்தது. பிப்ரவரி 22ம் தேதி மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது அறிக்கையை வெளியிட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு அந்த வாரம் வெளியான ஃப்ரண்ட்லைன் இதழ் ஒரு கட்டுரையை வெளியிட்டது. மார்ச் 25 அன்று பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இத்தனை நிகழ்வுகளிலும் அரசாங்கத்திடமிருந்து எந்த அசைவும் இல்லை.

ஏப்ரல் 17ல் தி இந்து நாளிதழில் வெளியான உத்தப்புரம் கிராமத்து புகைப்படம் ஒன்று தேசத்தின் ஆன்மாவை உறையவைத்தது. அந்த புகைப்படத்தில் இரு சமூகங்களைப் பிரிக்கும் இழி சுவற்றின் மீது மின்சாரம் பாயும் கம்பிகள் வெய்யப்பட்டிருந்தன. இந்த கம்பிகளின் வழியே இரவு நேரங்களில் மின்சாரம் பாய்ச்சினர் பிள்ளைமார் சமூகத்தினர். புதிதாக முளைத்த இந்த மின்சார வேலியின் தேவை எங்கிருந்து வந்தது? பங்குனி மாதத்தில் அந்த கிராமத்தின் தலித் சமூகத்தின் திருவிழா கொண்டாடப்பட்டது. அந்த திருவிழாவிற்கு பக்கத்தில் இருக்கும் அம்மாபட்டி கிராமத்து கோனார்கள் தான் சாமி (உதிரக்) கிடாய் கொடுப்பது வழக்கம்.

அந்த உதிரப் பலியோடுதான் கருப்பசாமி பொங்கல் துவங்கும். இந்த ஆண்டு அந்த கிடாய் ஊர் எல்லைக்கு வந்தது. தலித்துகளின் கொண்டாட்ட மனநிலையை சகிக்க முடியாத பிள்ளைமார் அந்த சாமி ஊர்வலத்தை மறித்தனர். கொட்டு அடிக்கக் கூடாது அமைதியாக செல்லவேண்டுமென சாதிய அகம்பாவத்துடன் கட்டளையிட்டனர். அதோடு நில்லாமல் நாங்க பத்து பேரு போதும் உங்க ஊரையே அழிக்க என சபதமிட்டனர். ஊர்வலம் கடந்து சென்றது, பொங்கல் கோலாகலமாய் நடந்தது. சபதமிட்ட பிள்ளைமார்களுக்கு மனதில் பயம் கவ்வியது. கூட்டமாய் திரண்டுள்ள தலித்துகள் திருவிழாவின் பொழுது வந்து தாக்கக்கூடும் என குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுத்தது.

பிள்ளைமார்கள் ஒன்றுகூடி மின்சார வேலியை அமைத்தனர். அமைத்த வேலியைக்கூட நிமிர்ந்து பார்க்க அவகாசமில்லாத தலித்துகள் திருவிழாவில் லயித்திருந்தனர். அந்த மின்சார வேலியின் மீது பாய்ந்த சில கோழிகள் இறந்து விழுந்து கிடந்தது தான் தலித்துகளை மேலே நிமிர்ந்து வேலியை பார்க்கச் செய்தது. இரு நாட்கள் அந்த கோழிகளைப் புதைக்காமல் உத்தப்புரத்திற்கு ஜமா பந்திக்காக வந்த மாவட்ட உயர் அதிகாரியிடம் இந்த கோழிகளைக் காண்பித்து முறையிட்டனர். எந்தப் பயனும் இல்லை.

தி இந்து நாளிதழின் செய்தித்தாளுடன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன். உடனடியாக மின்சார வேலி தொடர்புடைய சர்ச்சை முடிவுறும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். ஏப்ரல் 19 அன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து உத்தப்புரம் நிலவரம் குறித்து முறையிட்டனர். ஓரிரு நாட்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ்கரத் தலைமையில் உத்தப்புரம் அவமானச் சின்னத்தை இடிக்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. இந்த அறிவிப்பு தான் மாநில அரசிற்கு பெரும் நெருக்கடியாய் அமைந்தது. அடுத்த சில நாட்கள் பெருங்குழப்பம் நிலவியது. மே 2 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பிள்ளைமார்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது.

உத்தப்புரம் பிள்ளைமார்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு வந்து தங்களின் 302 குடும்ப அட்டைகளை வீசி எரிந்தனர். (உத்தப்புரத்தில் பிள்ளைமார் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் 304 குடும்ப அட்டைகள் உள்ளன. ஏனோ இருவர் மட்டும் தங்கள் குடும்ப அட்டைகளை வீசி எரியவில்லை) மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அன்று திருப்பூரிலிருந்து பயனப்பட்டு மதுரை வந்து தங்களின் போராட்டம் முடிந்ததும் திருப்பூர் திரும்பிச் சென்றனர். உத்தப்புரம் பிள்ளைமார்களின் பெரும் பகுதியானவர்கள் திருப்பூரில் வசித்து வருகின்றனர். நல்ல சம்பாத்தியங்களுடன் வங்கி கையிருப்புகள் கூடி விட்ட நிலையில் சாதிய அகம்பாவமும் சேர்ந்தே வளர்ந்தது.

மே 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உத்தப்புரத்திற்கு சுவரை இடிக்க வருகிறார் என செய்தி ஊரை எட்டியது. 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஊரில் குவிக்கப்பட்டனர். அன்று அதிகாலை 6 மணியளவில் பிள்ளைமார்கள் உத்தரப்புரத்தை விட்டுக் கிளம்பி 6 கிமீ தொலைவில் உள்ள தாளையூத்து மலை அடிவாரம் நோக்கி பயணப்பட்டனர். அந்த இடம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது. அந்த மலையடிவாரத்தில் 20 ஆண்டுகளாக விவசாயம் செய்து பெரும் தோப்பாக வளர்த்தது உத்தப்புரத்தைச் சேர்ந்த 5 தலித் குடும்பங்கள். இந்த தோப்பில்தான் வனவாசம் என பெரு ஊடகங்கள் அழைத்த பிள்ளைமார் சுற்றுலா துவங்கியது.

ஆட்சியர் கிராமத்திற்கு வந்து 350 மீட்டர் சுவற்றில் நான்கு மீட்டரை மட்டும் இடித்து இரு பக்கம் இருந்த பாதைகளை இணைத்தார். உடன் தமிழகமெங்கும் ஊடகங்களில் உத்தப்புரம் சுவர் இடிக்கப்பட்டுவிட்டது தீண்டாமை ஒழிந்து விட்டது என திருவிழாக் கோலம் பூண்டது. எந்த ஊடகமும் அங்கே கம்பீரமாய் நிற்கும் 346 மீட்டர் சுவற்றைப் பற்றி வாய் திறக்கவில்லை (350 - 4 = 346). நான்கு மீட்டர் இடிக்கப்பட்டதற்கே முதல்வர் கலைஞர் அந்த கிராமத்திற்கு உத்தமபுரம் என பெயரிட்டார். மீதி 346 மீட்டர் சுவர் இடிக்கப்பட்டால் என்ன பெயர் வைப்பார்?

மலையடிவாரம் நோக்கி தினமும் மாவட்ட ஆட்சியரின் கிரிவலம் துவங்கியது. அடுத்த ஒரு வாரம் பெரும் கேலிக்கூத்துகள் அரங்கேறின. ஏறக்குறைய இடதுசாரிகள் தலித் கட்சிகளைத் தவிர்த்து அனைவரும் ஒன்றாய் மலையடிவாரத்தில் ஐக்கியமாயினர். பஞ்ச காலத்தில் கஞ்சித் தொட்டிகளில் மக்கள் அலை மோதிவது போல் பெரும் சினிமா செட்டுகள் போடப்பட்டன. தினமும் தமிழக நாளிதழ்களின் செய்தியாளர்கள் அங்கே குழுமினர். அவர்களுக்கு ஒரு ஃபுல் பாட்டிலும் 1000 sரூபாய் கவரும் தயாராய் இருந்தது. இந்த கஞ்சித் தொட்டி காட்சியை அதற்கு கைமாறாக பிரசுரித்தால் போதுமானது.

18 பட்டி கிராமத்தினரும் பிள்ளைமார்களின் உறவினர்கள் உள்ள திருமாணிக்கம், அச்சம்பத்து, விராட்டிபத்து, சோழவந்தான், சின்னமனூர், பேரையூர் என பல கிராமங்களிலிருந்து வேன் பிடித்து வந்திறங்கினர். ஏறக்குறைய ரொக்கம் ரூ. 20 லட்சம், 70 மூடை அரிசி, 10 மூடை பருப்பு என ஒரு மிகப்பெரும் பட்டியலை நம்மால் இங்கு தர இயலும். பிள்ளைமார்களுக்கு வந்து சேர்ந்த ரொக்கத்தில் அனைத்து சாதியினரின் பணமும் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை.

Temple compoundஆனால் இதில் சில லட்சங்களை கொடுத்து தங்கள் பங்களிப்பையும் செய்தன திமுக, அதிமுக கட்சிகள். மலையடிவாரத்தில் சாதிய வண்மம் விண்ணை முட்டியது. அந்தப் பகுதியின் சாதி இந்துக்கள் கூடி வெளிப்படையாகவே தலித்துகளை ஒழித்துக் கட்ட பெரும் திட்டங்கள் தீட்டின. அவர்கள் தங்கியிருந்த தலித்துகளுக்குச் சொந்தமான தோப்பிலிருந்த ஆடுகள், கோழிகள் என எல்லாம் பெரும் விருந்தாய் தினமும் படைக்கப்பட்டது.

சுவர் இடிப்பிற்கு அடுத்த நாள் அருகிலுள்ள கோடாங்கி நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள தேவர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. உடன் பதற்றம் மதுரை மாவட்டம் எங்கும் பரவியது. உத்தப்புரம் பிள்ளைமார்களின் உறவினர்கள் உள்ள ஊர்களில் தான் முதல் மறியல் நிகழ்வுகள் துவங்கியது. அச்சம்பத்து, விராட்டிபத்து, சின்னமனூர் என துவங்கிய மறியலில் அடுத்த 3 நாட்கள் மதுரை ‡ குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏறக்குறைய இந்த மறியலுக்கு அரசாங்கம் முழுமையாய் ஒத்துழைத்தது.

கோடாங்கி நாயக்கன்பட்டியில் காவல்துறையினர் இருந்த போதிலும் எப்படி தேவர் சிலை அவமதிக்கப்பட்டது என்பதை அறிய அங்கே சென்ற பொழுது அந்த ஊரில் எந்தப் பதற்றமும் இல்லை. மதுரையிலிருந்து காவல் துறையினர் மோப்பநாய்களுடன் வருவதை அறிந்த கிராம மக்கள் தேவர் சிலையை குளிப்பாட்டி மாலையணிவித்து வழிபடத் துவங்கினர். வழிபாட்டை அரசு நிறுத்திட இயலுமா? தேவர் சிலை அருகில் உள்ள தேனீர் கடைகாரர் தான் செருப்பு மாலை அணிவித்தது என்கிற எளிய உண்மை சீமைக் கருவேலியாய் ஊரெங்கும் மண்டிக் கிடந்தது. காவல் துறை எப்படியும் இந்த உண்மையைக் கண்டறிய உயர்மட்டக் குழு அமைத்தாக வேண்டும்.

18 பட்டியில் உள்ள அனைத்து சாதியினர் மலையடிவாரத்தில் ஒன்றிணைந்து தாய் பிள்ளையாய் உணவு சமைத்தது போல் கோரிக்கைகளை சமைக்க இயலவில்லை. வழிந்து உருவாக்கப்பட்ட கோரிக்கைகளோடு மீசையில் மண் ஒட்டவில்லை என நிரூபிக்க அவர்கள் முயன்றனர். 1989 கலவரத்தில் சேதமான பிள்ளைமார் வீடுகளை அரசு கட்டித்தர வேண்டும். நிழற்குடை கட்ட அனுமதிக்க முடியாது என வீம்பான கோரிக்கைகள். ஊருக்குப் பொதுவான முத்தாளம்மன் கோவில் அருகில் உள்ள அரசமரத்தை வழிபடும் உரிமையை வழங்குவதில்லை என்பதில் பிள்ளைமார்கள் கராராய் இருந்து வருகிறார்கள்.

அந்த கோவிலுக்கு ஏற்கனவே சுற்றுச்சுவர் அமைத்தாகி விட்டது. இப்பொழுது அரசாங்கத்திடம் அவர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கை இந்த கோவில் நிலத்தை தங்கள் சமூகத்திற்கு பட்டா போட்டுத்தர வேண்டும் என்பதுதான். தீண்டாமையை உறுதிப்படுத்த அரசாங்கம் ஒத்துழைத்தால் அது வரலாற்றுப் பிழையாகிவிடும். இரு சமூக வாக்குகளையும் உத்திரவாதப்படுத்தும் வகையில் முதல்வர் சட்டமன்றத்தில் உரையாற்றினார். சிலர் பாதை கேட்டார்கள் சிலர் பாதுகாப்பு கேட்டார்கள் பாதையும் வழங்கப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்றார் முதல்வர்.

இந்த அறிக்கை இருசமூக வாக்குகளையும் மையம் கொண்டது என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது. பாதை வேண்டுமென்பது மிகவும் வெளிப்படையான கோரிக்கை. ஆனால் பாதுகாப்பு வேண்டும் என்கிற கோரிக்கை திட்டமிட்டு தலித்துகளை பெரும் வன்முறையாளர்களாக சித்தரிக்கின்றது. அந்தக் கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கினார் முதல்வர். பிள்ளைமார்களுக்கு எதிராக என்றும் முதல்வர் கலைஞர் இருந்ததில்லை என்பதை விளக்க சிறப்பு தூதர்கள் மலையடிவாரம் நோக்கி பயணப்பட்டனர். மே 13 மாலை சுற்றுலா முடிந்து உறவின் முறையை சேர்ந்தவர்கள் ஊர் திரும்பினர்.

அவர்களுக்கு ஒருவார காலம் நிழல் கொடுத்த தோப்பில் இருந்த பல பெரிய மரங்கள் வெட்டப்பட்டன. தலித்துகளின் வெள்ளாமை அழிக்கப்பட்டது. ராசு, நாகராசு, பால்ராசு, வாசி மற்றும் மொட்டையாண்டி ஆகியோரின் குடும்ப வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. ராசுவின் வீட்டிலிருந்து 5 பவுன் தங்க நகை எல் ஐ சி பத்திரங்கள் 5000 ரூபாய் மதிப்புடைய இலவம் பஞ்சு இரண்டு கடப்பாறை, ஒரு சம்பட்டி, இரண்டு மண் வெட்டி அவருக்குச் சொந்தமான இரு புளியமரங்கள், இரண்டு வேம்பு, இரண்டு நெல்லி மரங்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது. அவரது வீடு முற்றிலும் சூறையாடப்பட்டிருந்தது.

அரை ஏக்கர் செண்டு பூ வெள்ளாமை அழிக்கப்பட்டு செடிகள் பிடுங்கிக் கிடந்தது. நாகராசுவின் வீட்டு தகர மேற்கூரை பக்கத்திற்கொன்றாய் சிதறிக் கிடந்தது. அவரது ஒரு ஏக்கர் அகத்தி தோப்பு அழிக்கப்பட்டிருந்தது. ஒரு ஏக்கர் செண்டுபூ வெள்ளாமை அழிக்கப்பட்டிருந்தது. அவர்கள் வளர்த்த 15 ஆடுகள், 2 மாடுகள், 4 நாய்கள் என எல்லாம் மாயமாய் மறைந்தது. இந்த ஐந்து குடும்பங்களுக்கும் பலமுறை முறையிட்டும் அரசு குடும்ப அட்டைகளை வழங்கவில்லை. இந்த வாழ்வாதார இழப்பை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விட்டெரிய குடும்ப அட்டைகள் இல்லாத நிராயுதபாணிகள்.

காந்திய வழியில் மேற்கொள்ளப்பட்ட அறப்போராட்டம் என பிள்ளைமார்களின் போராட்டத்தை பத்திரிகைகள் விவரித்து ஓலமிட்டன. அவர்கள் தங்கிய மலையடிவாரம் முழுவதும் 500 மதுபாட்டில்கள் சிதறிக் கிடந்தன. தலித்துகளின் சேதாரங்களை மதிப்பிடச் சென்ற பலரின் கால்களை கண்ணாடி சில்கள் பதம் பார்த்தன. இந்த மது பாட்டில்களின் குவியல்களின் புகைப்படம் தீக்கதிர் நாளிதழில் வெளியானதும் பிள்ளைமார்கள் வேன் பிடித்து மீண்டும் மலையடிவாரம் சென்று பாட்டில்களை பொறுக்கத் துவங்கினர். காந்திய வழியிலான போராட்டத்தின் தடையங்களை அழிப்பது அவசியம்தானே.

இப்பொழுது அங்கே ஒரு மிகப் புதிய திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. உத்தப்புரத்தில் உள்ள முத்தாளம்மன் 18 பட்டிக்கும் சொந்தமானதென புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராமத்தைச் சேர்ந்த தலித்துகளை அழித்தொழிக்க 18 பட்டிகளும் சாதி வேறுபாடுகளைக் களைந்து களமிறங்கியுள்ளது. பிள்ளைமார் உறவின்முறை பொறுப்பாளர்கள் கார் பிடித்து ஊர் ஊராய் சென்று நன்றி நவில்தல் கூறத் துவங்கியுள்ளனர். இது நன்றி தெரிவித்தலா? அல்லது வருங்கால திட்டக்குழு கூட்டமா?

அந்தப் பகுதியில் எங்கு சென்றாலும் சாதிய இந்துக்கள் அனைவரும் ஒற்றைக் குரலில் பேசுகிறார்கள். அந்த சுவர் தீண்டாமை சுவர் அல்ல அது பாதுகாப்பு சுவர். இரு சமூகங்களும் ஒன்றுபட்டு உருவாக்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட சுவர். அந்தச் சுவர் முழுதும் பட்டா இடத்தில் தான் உள்ளது. அதனை இடிக்க அரசுக்கு உரிமை இல்லை. அது ஒரு பாதுகாப்பு சுவர். யாரோ வெளியிலிருந்து வந்து ஊரின் அமைதியை குலைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எத்தனையோ கிராமங்களில் இரட்டைக் குவளை முறை அமலில் உள்ளது. அந்த கிராமங்களில் தலித்துகளுக்கு கடை வைக்க அனுமதி கிடையாது. அவர்கள் இரட்டைக் குவளையில்தான் தேனீர் அருந்துகிறார்கள். அப்படியென்றால் அவர்கள் உடன்பட்டு அருந்துகிறார்கள் என்று அர்த்தம் கிடையாது. இதனை நாம் இந்த நேரத்தில் தெளிவாக உரத்துக் கூறியாக வேண்டும். காலம் காலமாய் மரபின் பெயரால் இங்கு நாரிக்கிடக்கும் இழிவுகளை இவர்கள் பேணவே விரும்புகிறார்கள்.

சுதந்திரம் பெற்று 61 ஆண்டுகளுக்குப் பின்னும் ஏறக்குறைய நாடெங்கிலும் தலித்துகளின் நிலை இதுவாகத்தான் உள்ளது. சாதிய இழிவை போக்கிக் கொள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் எந்த வழிவகையும் இல்லை. ஒரு இந்து தேசத்திற்கான சட்ட அமைப்பைத்தான் வல்லரசாக தன்னைத் தானே மார்தட்டிக் கொள்ளுகிற இந்த மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு கொண்டுள்ளது. கல்வியும் பொருளாதார மேன்மையும் எவ்விதத்திலும் மனிதர்களிடத்தில் உள்ள சாதி வெறியை மட்டுப்படுத்தவில்லை.

நகரங்களில் வாழும் பொழுது பெரும் தாராள மனதுடன் திகழும் நவீன மனிதன் போல் ஒப்பனை செய்து விட்டு தன் சொந்த ஊருக்குச் சென்றதும் சாதிய அபிமானியாக உருமாறுகிறான். ஒருமுகப்படுத்தப்பட்ட வாக்கு வங்கியாக சாதியை பயன்படுத்த துவங்கிய பல அரசியல் கட்சிகளுக்கு இன்று சாதி தான் அரசியல் மூலதனம். சாதியை மையமாகக் கொண்டு இயங்கும் பல தொண்டு நிறுவனங்கள் கூட சாதியை உயிர்ப்பித்து வைக்கும் விசயத்தில் கராராக இயங்குகிறார்கள். கிராம பூசாரிகள் அமைப்பு, குத்துவிளக்கு பூஜை, யோகா, மரபை காப்பது, வாழ்வியல் கலை என பல வடிவங்களில் தீவிரவாத இந்து அமைப்புக்கள் மிதமான வேசத்தில் உலவி வருகிறார்கள். சூழலை பாழ்படுத்தி வருகிறார்கள் சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு பற்றி பேசவேண்டிய சூழல் நம்மை எதிர்நோக்கி காத்திருக்கிறது.

Thalayuthu excursionஉத்தப்புரம் தலித்துகளின் வாழ்நிலையில் பெரும் மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. அந்த ஊர் தலித்துகளின் ஜனத்தொகை 2,000 ஆனால் அவர்களின் இன்றைய சமூக வாழ்நிலை இவ்வாறுதான் உள்ளது. ஆசிரியர்- 5, மில் தொழிலாளி-6, காவல்துறை-2, மின்சார வாரியம்- 2, பால் வாடி- 2, டாஸ்மாக்-6 மற்றும் கட்டிடத் தொழிலாளர்கள்-150. இதுதான் அந்த ஊர் தலித்துகளுக்கு உலக வேலைவாய்ப்புகளில் கிடைத்த பங்கு. இருப்பினும் அவர்கள் நெஞ்சுரத்துடன் தொடர்ந்து போராட அவர்களுக்கு துணிவு ஏற்பட்டது அவர்களின் சொந்த நிலத்திலிருந்துதான். அந்த ஊர் தலித்துகளில் 100 பேரைத் தவிர அனைவரும் சொந்த நிலமுடையவர்கள். அவர்கள் எக்காரணத்திற்கும் வேற்றுசாதியினரின் வயல்களுக்கு சென்று கூலி வேலைக்கு கையேந்தி நிற்க வேண்டிய அவலநிலை இல்லை.

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையை பிள்ளைமார் உறவின் முறை பாராட்டியது. விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் முதல்வரிடம் மனு கொடுத்து ஒதுங்கிக் கொண்டார். எல்லாம் முடிந்த பின்பு தா. பாண்டியன் உத்தப்புரம் சென்று இது ஒரு ஆன்மீகப் பிரச்சினை என புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். இதுதான் தமிழக அரசியல் பரப்பில் ஏற்பட்ட எதிர்வினை. கணிசமான அரசியல் கட்சிகளுக்கும் சாதிய வாக்குகளின் மீதுதான் பார்வை படிந்துள்ளது.

மே 18 காலை 6 மணியளவில் உடைகற்கள் ஆட்டு உரல்கள் எனப் பல பொருட்களைக் கொண்டு காவல் துறையினரின் முன்னணியில் மீண்டும் பாதை அடைக்கப்பட்டது. ஆய்வாளரிடம் முறையிட்ட பின்பு அவை எல்லாம் அகற்றப்பட்டன. அந்த ஊரில் கடந்த 20 நாட்களாக அரசாங்கத்தின் தீயணைப்புப் படை வண்டி, காவல்துறையின் அதிரடிப்படை வஜ்ரா வாகனம் மற்றும் பல பட்டாலியன் காவல் துறையினர் குவிந்து கிடப்பது சூழலைப் படம் பிடித்து காட்டுகிறது. சாதிய கலவரம் அங்கு வெடிக்கும் தருணத்தில் அரசியல் சக்திகள் களம் கண்டு அமைதியை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் அவசியம். 

-
அ. முத்துக்கிருஷ்ணன்