தனத்தை உங்களுக்கு நினைவிருக்கிறதா? குவளைத் தண்ணீர் தீண்டாமைத் தீயாய் சுட்ட கதை தனத்தினுடையது. 12 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடியிருப்புக்கு (தலித்துகளின் சேரிப்பகுதி) பக்கத்தில் இருக்கும் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் எல்லா குழந்தைகளும் அருந்த வைத்திருந்த மண்பானையில் தலித் குழந்தையான தனமும் தண்ணீர் குடிக்க, சாதி இந்துவான ஆசிரியர் அடித்த அடியில் தனத்தின் ஒரு கண் பாதிக்கப்பட்டது. தனத்துக்கு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா நடிகர் கமலஹாசன் ஆகியோர் கொஞ்சம் பண உதவி செய்ததாக நினைவு. தலித் ஆர்வலர்கள் மனித உரிமை போராளிகளின் உதவியோடு தனம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு சர்ச்பார்க் கான்வெண்டில் சேர்க்கப்பட்டார்.

தனத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனம் இப்போது தனது சொந்த ஊரான கட்டுநாயக்கன்பட்டிக்குப் பக்கத்தில் இருக்கிற ஜலகண்டபுரத்திலுள்ள அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவி. விடுமுறை நாட்களில் வயதான தன் தாயோடு தனம் செங்கல் சூளையில் வேலைக்குப் போய் கொண்டிருக்கிறாள். சமீபத்தில் தனத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது நீண்ட நேரம் உரையாட முடிந்தது. தனத்துக்கு கொடுமை நடந்த அந்த பள்ளி இந்த 12 ஆண்டுகளில் நடுநிலைப் பள்ளியாக ஏற்றம் பெற்றிருக்கிறது. சாதி இந்துக்களின் குடியிருப்பைத் தாண்டி தலித்துக்களின் காலனிக்குள் செல்வதற்கு பயன்படுத்தப்படும், புழுதி படிந்த சாலை தார்ச் சாலையாக மாறியிருக்கிறது.....

ஆனால்
தனம்....
சாதி.....
தீண்டாமை....
இந்த 12 ஆண்டுகளில் கொஞ்சமும் மாறவில்லை என்பதை தனத்தின் இன்றைய வரிகளிலேயே புரிந்து கொள்ளலாம்.

''எனக்கு கொடுமை நடந்த எங்கூரு பள்ளிக்கூடத்துல வேணும்னா நிலை மாறியிருக்கலாம். எங்க ஊருல.. எங்களைச் சுத்தியிருக்கிற சனங்க கிட்ட இன்னும் அதே நிலைதானே இருக்கு. எங்க ஊருல இருக்குற ஒரு குடியானவங்க வீட்டுக்குள்ள என்னை கூட்டிட்டுப் போய் ஒரு டம்ளர் தண்ணி வாங்கி கொடுத்துடுங்க பார்க்கலாம்' 'என்று கேட்கிறார் தனம்.

தனத்தின் தலித் சேரிக்கும் சாதி இந்துக்களின் தெருவுக்குமிடையில் எந்த மதிற் சுவரும் இல்லை. ஆனாலும் கட்டுநாயக்கன்பட்டியும் ஒட்டு மொத்த தமிழகத்தைப் போல உத்தப்புரமாகத்தான் இருக்கிறது. சுவரற்ற வெளியைத் தாண்டி தலித் மக்கள் சாதி இந்துக்களின் தெருக்களுக்குக் செல்ல முடியாது. அதை மீறி தலித் மக்களும் சென்றது கிடையாது.

உத்தப்புரத்தைப் பற்றி நமது அச்சு, காட்சி ஊடகங்களில் தினம்தோறும் செய்திகள் வருகின்றன. இரு சமூகங்களுக்கிடையே எழுந்த சுவர் பிரச்சனையில் கோவித்துக் கொண்டு மலையடிவார காட்டுக்குள் சென்ற ஒரு பிரிவினர் காட்டுக்குள் படுகிற துன்பங்களைத் தாங்கி வருகிற செய்திகள் அவை. பொதுப் புத்தியில் அவை இன்று அனுதாபங்களாக தியாகங்களாக மாற்றப்பட்டு விட்டது. ஒரு இனத்தை தீண்டத்தாகாத இனமாக ஒதுக்கி வைக்கும் திமிர் எங்காவது தியாகமாக மாறுவதை நீங்கள் பார்க்க வேண்டுமானால் உத்தப்புரத்திலுள்ள கொடிக்கால் பிள்ளைமாரைப் போய் பார்த்து வாருங்கள். ஒரு வேளை வனவாசத்தை முடித்து விட்டு அவர்கள் ஊர் திரும்பியிருந்தாலும் கூட அவர்களை நீங்கள் பார்க்கலாம்.

முந்நூறுக்கும் மேற்பட்ட அந்த பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி மக்களின் தலைகளில் இன்று ஒரு ஒளி வட்டம் சாத்தப்பட்டிருக்கிறது. அந்த ஒளி பிள்ளைமாருக்கானது மட்டுமல்ல அனைத்து பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளுக்குமானது. தலித்துக்களின் வாழ்வுரிமைக்காக தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக அந்த ஒளிவட்டம் ஆதிக்கசாதியினரால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒளிவட்டம் படிந்துள்ள புனித கொடிக்கால் பிள்ளைமார், அரசு நிர்வாகத்தின் உதவியோடு தலித் மக்களின் முகத்தில் விழிக்கக் கூடாது என்று எழுப்பிய 600 மீட்டர் நீள மதிற்சுவருக்கு அந்தப் பக்கம் வாழுகிற - அழுக்கான - இத்தனை காலமும் குனிந்து குனிந்து வாழ்ந்த, இப்போது நிமிரத் துடிக்கிற அந்த மக்களையும் போய் பாருங்கள். கடந்த 19 ஆண்டுகளாக நாட்டுக்குள் வாழ்ந்தும் நடமாடும் உரிமையற்ற மனிதர்களாக அவர்கள் நடத்தப்பட்டது உங்களுக்குத் தெரியும். பொதுப் பாதை திறந்த பிறகும் அந்தப் பாதையை பயன்படுத்த முடியாத பதட்டம் மண்டிய அவர்களின் வாழ்க்கையை நீங்கள் காண முடியும்.

உத்தப்புரத்தில் இப்படி ஒரு சுவர் இருக்கிறது என்கிற செய்தியை கேள்விப்பட்ட உடனேயே எனக்கு இரண்டு சுவர்கள்தான் நினைவுக்கு வந்தது. ஒன்று பள்ளிப்பாடத்தில் படித்த சீனப் பெருஞ்சுவர் இன்னொன்று பெர்லின் சுவர். இரண்டுமே வரலாற்றுச் சிறப்புமிக்கது. மேற்குலகின் வரலாற்றைக் கடப்பவர்கள் நிச்சயம் பெர்லின் சுவரையும் கடக்க வேண்டியிருக்கும். தேசாந்திரிகளுக்கு சீனப் பெருஞ்சுவரின் ரகசியம் தெரியும் ஆர்வம் இருக்கும். நாட்டில் எல்லையை எதிரிகளிடமிருந்து காக்க சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டதாக ஒரு கதை உண்டு.

பெர்லின் சுவரின் கதை இரண்டு கொள்கைகளுக்கிடையில் நேர்ந்த கலாசார பரிவர்த்தனை தொடர்பான சிக்கலில் இருந்து முகிழ்த்தது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் வீழ்ச்சிக்குப் பிறகு ஜெர்மனியின் எல்லைகள் வெற்றி பெற்ற அரசுகளால் மாற்றியமைக்கப்பட்டது. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்ற இருநாடுகள் உதயமாக பெர்லின் நகரம் கிழக்கு ஜெர்மனிக்கா, மேற்கு ஜெர்மனிக்கா என வந்த போது பெர்லின் நகரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதன் ஒரு பகுதி நேசநாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு பெர்லின் கிழக்கு ஜெர்மனியின் தலைநகரம் ஆக, மேற்கு பெர்லினை நேச நாடுகள் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

மேற்கு பெர்லினை சுதந்திரப் பகுதியாக அறிவிக்க வேண்டும், அங்கிருந்து நேசநாடுகள் வெளியேற வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட அதன் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு ஜெர்மனி அரசு தன் தலைநகரான கிழக்கு பெர்லினில் நூற்றி ஐம்பத்தைந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு முப்பது சென்டி மீட்டர் அகலமுள்ள நீளச் சுவர் ஒன்றை 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெறும் பதின்மூன்றே நாட்களில் கட்டி எழுப்பியது. அன்றைக்கு மேற்குலகோடு ரஷ்யா பெரும் பனிப்போரை சந்தித்த காலத்தில் தன் எல்லைகளை அது காத்துக் கொள்ள வேண்டிய தேவையின் காரணமாய் பெர்லின் சுவர் எழுப்பப்பட்டிருக்கலாம். பின்னர் ரஷ்ய சோஷலிச அரசின் பின்னடைவுக்குப் பிறகு 1989 ஆண்டு பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது.

பெர்லின் நகரின் தெருவில் உடைக்கப்பட்ட சுவரின் மிச்சங்கள் இன்னும் நினைவுப் பொருட்களாக பாதுகாக்கப்படுகிறதாம். தினம்தோறும் சுற்றுலாப்பயணிகள் இந்த மிச்சங்களைப் பார்த்து செல்கின்றனர். சுவரின் மேற்குக் கரையிலிருந்து பார்த்தால் அது வெறும் சுவர் மட்டுமே. கம்யூனிசத்தின் கட்டுபாட்டில் இருந்த கிழக்குக் கரையிலிருந்து பார்த்தால் மட்டுமே ஹிட்லர் காலத்திய கொடுமைகளின் நினைவுகள் பெர்லின் சுவர் வழியே இன்னும் நினைவுகளாக கசிகிறதாம். யூத அழிப்பின் கோரங்கள் இன்றும் அங்கு வரும் பார்வையாளர்களுக்கு நினைவூட்டப்படுகிறதாம். ரோமன் போலன்ஸ்கியின் ''தி பியானிஸ்ட்'' படத்தின் க்ளைமாக்ஸில் ஹிட்லரின் ஜெர்மனியைத் தோற்கடித்து வெற்றியோடு ஒரு அமெரிக்க ராணுவ டாங்கி வரும். அந்த டாங்கியில் அமெரிக்க கொடி பறப்பது போல காட்டப்பட்டிருக்கும்.

ஒரு பத்து நிமிட க்ளைமாக்ஸில் ரஷ்யாவின் வரலாற்றை மறைக்க முனைபவர்கள் கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு ஜெர்மனி உருவாக்கிய போர் நினைவுக் காட்சியகத்தை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள் என்றால் அதுதான் இன்று பாலஸ்தீனியர்களைக் கொல்ல இஸ்ரேலிய யூத வெறியர்களுக்கு கை கொடுக்கிறது. அந்த வகையில் ஹிட்லரின் கொடுமைகள் உருவாக்கிய, யூதர்கள் மீதான கரிசனங்கள் தியாகங்களாக மாற்றப்பட்டது. அதுதான் இன்று பாலஸ்தீனியர்களைக் கொல்லப் பயன்படுகிறது. இப்படியான ஒரு சூழலில் 1989 ஆம் ஆண்டு பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது.

அதே ஆண்டில் 1989ல் உத்தப்புரத்தில் கொடிக்கால் பிள்ளைமாரால் 600 மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்று தலித் காலனியை தனிமைப்படுத்தி எழுப்பப்பட்டது. ஆனால் பெர்லின் சுவரைப் பற்றி ஏராளமான தகவல்கள் இன்று காணக் கிடைக்கிறது. ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் மண்ணில் எழுப்பட்டிருக்கும் சுவரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என தகவலை ஊடகங்களில் தேடினால், கொடிக்கால் பிள்ளைமாரின் வனவாசம் பற்றிய தகவல்கள்தான் காணக் கிடைக்கின்றன. எந்த மாதிரி ஒரு சூழலில் இப்படி சுவர் தலித் மக்களின் காலனியைச் சுற்றி எழுப்பப்பட்டது என்றால் அதற்குள் ஆழமாக போக வேண்டியதில்லை. சாதித் திமிரல்லாமல் வேறென்ன இருக்க முடியும்? ஆனால் தகவல் தெரியாமல் எழுதி விட முடியதல்லவா? அப்போதுதான் தோழர் சு.வெங்கடேசனின் ''16 உடைகற்களும் 1600 போலீசாரும்'' என்ற உத்தப்புரம் சுவர் பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. சுவரின் பின்னணி, இப்போது உருவாக்கப்பட்டிருக்கும் பொதுப் பாதை என விரிவான தகவல்களோடு எழுதப்பட்டிருக்கும் அந்த கட்டுரையின் தகவல்களைக் கொண்டுதான் நாமும் உத்தப்புரத்தை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது.

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள உத்தப்புரம் கிராம ஊராட்சியில் கொடிக்கால் பிள்ளைமார் சமூக குடும்பங்கள் 450ம் பள்ளர் குடும்பங்கள் 650ம் கவுண்டர் 150ம் உள்ளனர். இவர்களோடு பறையர் 25 குடும்பங்களும் மூப்பர் 75 குடும்பங்களும் அருந்ததியர் 30 குடும்பங்களும் பிரமலைக்கள்ளர் 5 குடும்பங்களும் நாயக்கர் 30 குடும்பங்களும் ஆசாரி 3, வண்ணார் 20, மருத்துவர் 6, செட்டியார் 5, சைவப் பிள்ளைமார் 1 என சாதி இந்துக்களும் தலித் மக்களுமாய் வாழ்கிற உத்தப்புரம் கிராமப் ஊராட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் ஒட்டுமொத்தமாக இங்கு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஆண்டாண்டு காலமாக கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமை, அதற்கு எதிரான தலித் மக்களின் எதிர் நடவடிக்கைகள், 1948, 1964 என தலித்துக்களின் வாழும் உரிமைக்கான கலக வரலாறு நீண்ட வரலாறாக இருக்கிறது.

உத்தப்புரம் தலித் மக்களின் குலதெய்வம் கருப்பசாமி. பிள்ளைமாரின் குல தெய்வம் முத்தாலம்மன். தலித்துக்கள் தங்களின் குல தெய்வ திருவிழாவை கொண்டாடும் போது அவர்களது முன்னோர்கள் நட்டு வைத்த அரசமரத்தை மூன்று முறை சுற்றி வந்து கருப்பசாமியைக் கொண்டாடுவது குல மரபு. அரச மரம் இருப்பதோ பிள்ளைமாரின் குல தெய்வக் கோவிலான முத்தாலம்மன் கோவிலின் முன்னால் பத்தடி தூரத்தில். தலித் மக்கள் கருப்பசாமியைக் கும்பிட அரச மரத்தைச் சுற்றிய போதெல்லாம் பிள்ளைமாருக்கு சாமி வந்திருக்கிறது. தலித்துக்கள் அரச மரத்தைச் சுற்றுவதால் முத்தாலம்மனுக்கும் தீட்டு நமக்கும் தீட்டு என்று கொதித்துப் போன பிள்ளைமார் தலித் மக்களை எங்கள் பகுதிக்குள் வரக் கூடாது என தடை விதிக்க தீண்டாமையின் வடிவமாக வெளிப்பட்ட பிள்ளைமாரின் உத்தரவை எதிர்த்து தலித் மக்கள் கிளம்ப இரு பக்கமும் மோதல்கள். இந்த மோதல் 1989 ஆம் ஆண்டு உக்கிரமடைய அரசு நிர்வாகம் - போலீஸ் பிள்ளைமாருக்கு ஆதரவாக இருக்க பெரும்பாலான உத்தப்புரம் தலித் மக்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

பெரும்பாலான தலித்துக்கள் சிறைக்குள் போன ஒரு சூழலில் சுற்றியிருந்த மற்ற ஆதிக்க சாதியினரின் துணையோடு போடப்பட்ட ஒப்பந்தம்தான் மகத்தான உத்தப்புரம் ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் மொத்தம் 23 பேர் கையொப்பம் இட்டுள்ளனர். இருபத்தி மூன்று பேரில் ஒரே ஒருவர்தான் தலித்துக்களின் சார்பில் கையொப்பம் இட்டவர். மீதி 22 பேரும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள். தலித் மக்களுக்கு இன்று வரை அடிமை சாசனமாகவும் ஆதிக்க சாதிகளுக்கு தங்களின் சாதித் திமிருக்கு சர்ட்டிபிக்கேட்டாகவும் இன்று வரை இருக்கும் இந்த ஒப்பந்தம் சாதி இந்துக்கள், மதுரை மாவட்ட நிர்வாகம், போலீஸ் துணையோடு ஒரு தரப்பாகக் கூட தலித்துக்கள் இல்லாமல் அவர்களின் விருப்பத்தை மீறி போடப்பட்ட ஒப்பந்தம்.

காலம் காலமாக தலித்துக்கள் சுற்றி வரும் அரசமரைத்தை இனி தலித் மக்கள் சுற்றமாட்டார்கள், அப்படி சுற்றாமல் இருக்க வேண்டுமானால் பிள்ளைமாரின் குடியிருப்பு வழியாக முத்தாலம்மன் கோவிலையும் உத்தப்புரம் தலித் காலனியையும் இணைக்கும் பொதுப் பாதையை மூடிவிட வேண்டும் என ஒரு ஒப்பந்தத்தை ஆதிக்க சாதியினரே உருவாக்கி மிரட்டி கையொப்பமும் வாங்கி சுட்ட செங்கற்களால் மதிற்சுவரும் கட்டி விட்டனர். சிறையிலிருந்து வெளிவந்த தலித் மக்களோ குழப்பம், கலவர பயம், மிரட்டலுக்குப் பயந்து தங்கள் பெருசே கையொப்பம் இட்டு விட்ட பரிதாபம் என கடந்த 19 ஆண்டுகளாக சுவரைத் தாண்ட முடியாமல் வழிபாட்டு உரிமையையும் இழந்து பொது இடத்தை பயன்படுத்துகிற உரிமையையும் இழந்து வாழ்ந்திருக்கின்றனர்.

இந்த 19 ஆண்டுகளில் தலித் மக்கள் சாதி இந்துக்களிடமிருந்து துல்லியமாக அரசு நிர்வாகத்தால் பிரிக்கப்பட்டனர். பொதுப் பள்ளியை பிரித்து தனிப்பள்ளியும், தனி பால்வாடியும், தனி ரேஷன் கடையும் உருவாக்கப்பட்டது. தங்களின் குறைகளை சொல்லவோ பாதுகாப்பு தேடவோ தனி போலீஸ் ஸ்டேசன் மட்டும் உருவாக்கப்படவில்லை. அது பிள்ளைமார் தெருவில் அவர்களை பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்தது. (இன்று எப்படி எனத் தெரியவில்லை) இத்தனை ஆண்டுகளில் சுவருக்கு பின்னால் இருந்த தலித் மக்கள் அதைத் தாண்ட நினைக்கவில்லை. 19 ஆண்டுகளுக்குப் பிறகு தலைமுறைகள் மாறிய பிறகு இன்று அந்த தீண்டாமைச் சுவர் தாண்டப்பட வேண்டும் அதை இடித்துத் தள்ள வேண்டும் என தலித் இளைஞர்கள் நினைக்கிறார்கள். இந்த சிந்தனைக்கு வரவே அவர்கள் 19 ஆண்டுகாலம் அடிமைகளாக இருக்க வேண்டியிருக்கிறது.

இந்நிலையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலாசார அமைப்பான தீண்டாமை ஒழிப்பு முன்னணி உத்தப்புரம் சுவர் பிரச்சனையைக் கையிலெடுத்து போராடத் துவங்கியது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பதட்டம் கூடி வருவதை உணர்ந்த தமிழக அரசு 600 மீட்டர் சுவரின் ஒரு தட்டையான பகுதியில் 4 மீட்டர் அளவிலான சுவரை உடைத்து தலித் காலனிக்கும் பிள்ளைமார் தெருவுக்குமான பொதுப் பாதை ஒன்றை உருவாக்கி இருக்கிறது. ''பாதுகாப்பு சுவரும் இருக்கட்டும். பாதையும் இருக்கட்டும்" என்று தன் வழக்கமான சிலேடையில் சொன்னார் தமிழக முதல்வர். ஆக 4 மீட்டர் போக மீதியுள்ள 596 மீட்டர் நீள தீண்டாமைச் சுவர் பாதுகாப்புச் சுவர் என்கிற பெயரில் இன்னமும் நீடிக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் சாதி இந்துக்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தமிழக அரசு ஒட்டு மொத்தமாக இடித்து தள்ளிவிட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை மீடியாக்கள் உருவாக்கியிருக்கிறது. தவிரவும் அதை ஒரு தடுப்புச் சுவர் என்று, அரசின் பாதுகாப்புச் சுவர் என்கிற பாசாங்குக்கு மீடியாக்களும் ஒத்து ஊதின. தமிழ் மக்களின் மனச்சாட்சி, தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று கூவும் நமது புலனாய்வு கில்லிகளின் சகல உறுப்புகளும் உத்தப்புரம் விஷயத்தில் மௌனமாகி விட்டன. நீண்ட மௌனத்தைக் காத்து அவர்கள் சார்ந்த ஆதிக்க சாதித் திமிரை காத்து நிற்கிறார்கள்.

நீள தீண்டாமைச் சுவரின் ஒரு சிறு பகுதி உடைக்கப்பட்டு பொதுப் பாதை ஒன்று உருவாக்கப்பட்டு ஏழு நாட்களைக் கடந்து விட்ட பிறகும் இன்னமும் அந்த பொதுப் பாதையை ஒரு தலித் கூட பயன்படுத்த முடியாதபடி பதட்டம் மண்டிக் கிடக்கிறது உத்தப்புரம். ஆனால் சுவரிடிப்பிற்கு முன்பே உத்தப்புரம் கொடிக்கால் பிள்ளைமார் தங்களது 302 ரேஷன் கார்டுகளையும் கொண்டு போய் மாவட்ட ஆட்சியரிடம் திருப்பிக் கொடுத்தனர். வந்த வேகத்தில் அவர்கள் மலையேறப்போய் விட்டனர். அவ்வளவுதான் தீண்டாமைச் சுவரிடிப்புச் செய்தி பின்னுக்கு தள்ளப்பட்டு காட்டுக்குள் போய் இருந்த சில நூறு குடும்பங்கள் மீது தமிழகத்தின் ஒட்டு மொத்த மீடியாக்களின் கவனமும் திரும்பியது. தினம்தோறும் அவர்களின் மீது கருணை வழியும் செய்திகள். சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகாலத்தில் இன்னொரு இன மக்களை அங்கீகரிக்க மறுக்கிற - அவர்களின் வாழ்வுரிமையை பறிக்கிற சாதி வெறியின் தடித்தனத்தை கண்டிக்கிற யோக்கியதை எந்த தமிழ் மனச்சாட்சிகளிடமும் இல்லை.

தலித் தலைவர்களும் உத்தப்புரம் மக்களின் உரிமைப் போராட்டத்தை குழப்பம் விளைவிக்கும் செயல் என்றுதான் பார்த்தார்கள். ஒடுக்கப்பட்ட தரப்பு மக்களின் நியாயங்கள் வெளியில் வராத ஒரு சூழலில் இதர பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினர் தங்களின் தார்மீக ஆதரவை கொடிக்கால் பிள்ளைமாருக்கு தெரிவித்தனர். மதுரை கலவரச் சூழலுக்கு தயார்படுத்தப்பட்டது. எந்த தலைவரின் சிலையை உடைத்தால் மதுரை பற்றிக் கொள்ளும் என்பது தெரிந்து உடைத்தார்கள். ஆனால் விளைவுகளை எதிர்நோக்கியே இவைகள் செய்யப்படுகிறது என்பதை அறிந்த தலித் மக்கள் அமைதியாக இருந்ததன் விளைவாய் பெரும் கலவரம் தவிர்க்கப்பட்டது.

ஒளிவட்டம் கூடிக் கொண்டே போக பிள்ளைமார் உறவின் முறை சங்கத்தின் தலைவர் முருகேசன் பி.பி.சிக்கு அளித்த நேர்காணலில் இப்படி தங்கள் குரலை பதிவு செய்கிறார்.

முருகேசன்: முதல்வர் அறிவித்திருப்பது தலித் மக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பிறபடுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். ஒரு இனத்தை அழித்து இன்னொரு இனத்தை வாழ வைப்பது போன்று நாடகம் ஆடியிருக்கிறார் தமிழக முதல்வர்.

பி.பி.சி: நீங்கள் கட்டியிருக்கும் சுவர் சட்ட விரோதமானதென்று நீங்கள் நினைக்கவில்லையா?அனைத்து மக்களின் பொதுப் பயன்பாட்டிற்காக கிராமம் இருக்கிறது அதற்குள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை ஒதுக்கி வைத்து விலக்கி வைக்கும் விதமாக சுவர் கட்டும்போது அதை அரசு இடிப்பதில் என்ன தவறு?

முருகேசன்: புறம்போக்கு நிலத்தில் பொதுவான பாதைகளில் கட்டப்பட்ட சுவரல்ல அது. நாங்கள் குடியிருந்த எங்களின் பட்டா நிலத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டுப்பகுதியில் 1989ஆம் ஆண்டு மேற்படி சமூக விரோதிகளால் எங்கள் குடியிருப்புகள் அழிக்கப்பட்டு தரைமட்டம் ஆக்கப்பட்ட போது, மீண்டும் நாங்கள் அங்கு குடியிருக்க வேண்டும் என்றால் அத்து மீறல் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக - 1989ல் இதே திமுக அரசுதான் இருந்தது - அப்போதிருந்த கலெக்டர், தாசில்தார் இவர்கள் அனுமதியின் பேரில் நாங்களாக காம்பவுண்ட் சுவர் எழுப்பிக் கொண்டோம்.

பி.பி.சி” உங்கள் பட்டா நிலமாக இருந்தால் கூட அடுத்த மக்களை கிராமத்துக்குள் வருவதைத் தடுக்கும் என்றால் அதை அரசாங்கம் எப்படி அனுமதிக்கும்.?

முருகேசன்: எங்கள் சொந்த நிலத்தில் சொந்த வீட்டில் மற்றவர் பிரவேசிப்பதை எப்படி அனுமதிக்க முடியும்? எனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் எனது வீடு இருக்கிறது. அதில் மற்றவரை நான் எப்படி அனுமதிக்க முடியும்?

பி.பி.சி: நீங்கள் கட்டியிருந்த சுவரின் ஒரு பகுதியை அரசு இடித்திருப்பதாக அறிவித்திருக்கிறது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

முருகேசன்: எங்கள் உணர்வுகளை மதிக்காமல் புரிந்து கொள்ளாமல் எங்கள் கோரிக்கைகளை கேட்காமல் சமரசப் பேச்சு வார்த்தைகளை நடத்தாமல் ஒரு தலை பட்சமாக அராஜமாக அக்கிரமமான சர்வாதிகார செயலை செய்திருக்கிறது அரசு. நாங்கள் நேற்று எங்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைத்து விட்டு ‘நீங்கள் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறீர்கள். இந்த அரசின் மீதும் மாவட்ட நிர்வாகத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே மானத்துடனும் பாதுகாப்புடனும் வாழ இயலாது என்பதால் நாங்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைத்து, மேற்படி ஊரில் குடியிருப்பதை தவிர்த்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற தாழையூத்து மலையில் நாங்கள் மலைவாழ் மக்களாக வாழச் செல்கிறோம் என்று டி.ஆர்.ஓ விடம் கூறினோம். தாசில்தாரும் இதுதான் உங்கள் முடிவு என்றால் தாரளாமாக செல்லலாம் என்று அட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டு அனுப்பி விட்டார். நேற்று 5.5.2008 அன்று இரவு 11 மணிக்கு எங்களுக்கு செய்தி கிடைத்தது, ‘முதலமைச்சர் தீர்மானமாக அந்த சுவரை இடித்து விட முடிவு செய்திருப்பதாக’. இரவோடு இரவாக நாங்கள் மலைக்கு குடிபெயர்ந்து விட்டோம்.

பி.பி.சி: நீங்கள் எடுத்த இந்த முடிவை உங்களால் நடைமுறைபடுத்த முடியுமா?

முருகேசன்: எங்களுக்கு இந்த அரசாங்கத்தால் பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால் நாங்கள் எப்படி அந்த ஊரில் குடியிருப்பது?

பி.பி.சி: பாதுகாப்பு பிரச்சனை என்றால் என்ன பாதுகாப்பு பிரச்சனை? அவர்கள் உங்களுக்கு அப்படி என்னதான் செய்து விட்டார்கள்?

முருகேசன்: தலித் இனத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் நாங்கள் குறை கூறவில்லை. அங்கும் அப்பாவி மக்கள் இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் சகோதர சகோதரிகளாகத்தான் பார்க்கிறோம். அவர்களும் எங்களுடன் இது நாள் வரை அன்பாகத்தான் இருந்தார்கள். ஒரு சில சமூக விரோதிகள் மட்டும் ஒரு சில சமூக விரோதிகள் (கொஞ்சம் அழுத்தமாக சொல்கிறார்) அவர்களைப் பயன்படுத்தும் சில சமூக அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு சில அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு எங்களோடு வன்முறையைத் தூண்டி விட்டு எங்களுடன் மோதல் போக்கை கடைபித்து வருகிறார்கள்.

பி.பி.சி: ஒரு சில சமூக விரோதிகள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசிற்குத்தானே இருக்கிறது? சட்டத்தை நீங்களே கையில் எடுத்துக் கொண்டு ஊருக்கு நடுவே சுவர் கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது சரியா?

முருகேசன்: அத்துமீறலைத் தடுக்க வேண்டி எங்கள் இடத்தில் நாங்கள் எங்களுக்கு பாதுகாப்பு தேடிக் கொள்கிறோம். குடியிருக்க வீடு கட்டும்போது திருடர்கள் வராமல் இருக்க காம்பௌண்ட் சுவர் கட்டுகிறோம் அல்லவா? அது போலத்தான் இது. எங்கள் பாதுகாப்புக்காக எழுப்பப்படும் சுவரை தெருவில் செல்லும் ஒருவர் ''என்னைப் பார்க்கக் கூடாது என்பதற்காக இவர் சுவர் எழுப்பியிருக்கிறார். இது தீண்டாமைக் குற்றம்'' என்று சொன்னால் அது பொருத்தமாக இருக்குமா?

பிள்ளைமார் உறவின் முறை முருகேசனின் நேர்காணல் இப்படியாக முடிகிறது. கடந்த பல நூற்றாண்டுகளாக அக்ரகாரத்திலிருந்து ஒலித்த குரலின் இன்னொரு வடிவமான இந்தக் குரலையும் கடந்த நாற்பதாண்டுகளாக நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். அதே கலப்பற்ற தமிழில் அநீதிகளை வார்த்தைகளால் கரைக்கும் குரல். வந்தாரை வாழ வைத்த பண்பாடு செழித்தோங்கிய கடைச் சங்கத்தின் கடைசி மிச்சங்கள் இவர்களாகத்தான் இருக்க முடியும். அதனால்தான் இந்த மண்ணின் பூர்வகுடிகளை அவர்கள் வாழும் நிலத்திலேயே இவர்களால் அகதிகளாக்கி விட முடிகிறது. திருடர்களைப் போல இந்த மண்ணின் மூத்த குடிகளை தடித்த வார்த்தைகளைச் சொல்லி சுவரெழுப்பிவிட முடிகிறது.

முருகேசன் பாதுகப்புக்காக கட்டப்பட்ட சுவர் அது என்கிறார். ''பாதுகாப்பும் தேவை பாதையும் தேவை'' என்கிறார் முதல்வர். அப்படி என்றால் திருடர்கள் யார்? சுவருக்கு அந்தப் பக்கம் உள்ளவர்கள் என்று தானே அர்த்தம். இதைக் கேட்ட எந்த தமிழ் மனமும் கொதிக்கவில்லையே?

ஏன் தெரியுமா? முருகேசன் ஒளிவு மறைவு இன்றி தன் சாதி வெறியை காட்டி விட்டார். ஆனால் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரைக்கும் எல்லா கிராமங்களிலும் கண்ணுக்குத் தெரியாத உத்தப்புரம் சுவர் சாதி இந்துக்களால் எழுப்பப்பட்டுத்தான் இருக்கிறது.

துவக்கத்தில் நீங்கள் படித்த தனத்தின் காலனியில் உள்ளதும் இதே சுவர்தான். திண்டுக்கல், சேலம், திருப்பூர், சத்தியமங்கலம், மதுரை பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இன்னும் இரட்டை டம்ளர் முறை நடைமுறையில் இருக்கிறது. உத்தப்புரம் இவர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியை உருவாக்கி இருக்கிறது. அது அந்தந்த சாதி இந்துக்கள் வாழும் பகுதிகளில் தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு சுவரை எழுப்புவதுதான். பட்டா இல்லாததுதான் சுவரெழுப்ப தடையாக இருக்கிறது. அதனால்தான் உத்தப்புரத்தில் கொடிக்கால் பிள்ளைமார் தங்களின் குல தெய்வக் கோவிலான முத்தாலம்மன் கோவிலுக்கு பட்டா கேட்கிறார்கள். பட்டா இருந்தால் தீண்டாமைச் சுவர் எழுப்பலாம் அதை அரசு இடிக்காது. ஆக இனி பட்டா இருப்பவர்கள் இப்படியான சுவரெழுப்பினால் அதற்கு முன்னுதாரணமாக உத்தப்புரம் இருக்கும்.

பட்டா கேட்கிறவர்கள் முத்தாலம்மன் கோவிலோடு தங்களின் வீடுகளுக்கும் சேர்த்து கேட்கிறார்கள். இன்னும் அரசு புறம்போக்கு நிலங்களில் குடிசை போட்டு வாழ்ந்து கூலி வேலை செய்து வாழும் தலித் மக்களில் பெரும்பாலானோர் நிலமற்ற ஏழைகளாகத்தான் வாழ்கிறார்கள். பிள்ளைமாரும் உண்மையில் அப்படித்தானே! ஆகவே அவர்களின் வீடுகளுக்கு அரசு தாரளமாக பட்டா வழங்கட்டும். ஆனால் முத்தாலம்மன் கோவில் பட்டா வேண்டிய அவர்களது கோரிக்கையை முதல்வரிடம் தெரிவிப்பதாக மலையடிவாரத்தில் இருந்த பல சாதி கூட்டு (18) தலைவர்களுக்கும் உத்திரவாதம் கொடுத்ததன் மூலம் அவர்கள் உத்தப்புரத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

முத்தலம்மன் கோவிலுக்கு பட்டா வழங்கப்பட்டால் மீண்டும் பொதுப் பதையை சட்டப்பூர்வமாகவே பாதுகாப்பின் பேரால் அடைத்து விட முடியும். கருப்பண்ணசாமியின் அரச மரம் ஆதிக்க சாதியின் பட்டாவுக்குள் சிக்கிக் கொள்ளக் கூடும். அப்படியே கண்டதேவி கோவிலின் பட்டாவை கள்ளர் சமூகத்துக்கும் சிதம்பரம் நடராஜர் கோவில் பட்டாவை சிதம்பரம் தீட்சிதர்களுக்கும் கொடுத்து விட்டால் போதும். இதுவரை மனங்களில் மட்டுமே கட்டப்பட்ட சுவர் நிஜமாகவே தமிழ் மக்களின் மனசாட்சியாய் எழுந்து நிற்கும்.

எனது சொந்த சமூகமான மீனவ மக்களுக்கு எதிராகவும் இப்படி ஒரு சுவர் அரபிக் கடலோரத்தின் கரைகளில் வாழும் எங்கள் கிராமங்களைச் சுற்றி எழுப்பட்டிருக்கிறது. இந்திய வரைபடத்தில் கொண்டை ஊசியை ஒத்த வடிவம் கொண்ட குமரி மாவட்ட கடற்கரை ஓரங்களில்தான் நாங்கள் நீண்டு வாழ்கிறோம். அரபிக்கடலோரத்தின் அலைவாய்க் கரையில் பரதவர்களான நாங்களும், எங்களைப் போலவே கிறிஸ்தவ மதத்தையும் மீன்பிடிக்கிற தொழிலையும் கொண்டிருக்கும் முக்குவ மக்களும் வாழ்கிறார்கள்.

இரட்டை டம்ளர் முறையோ, தடுப்புச் சுவர்களோ, கோவிலில் நுழையும் உரிமை மறுக்கப்படுதலோ என சாதி இந்துக்களாலோ கிறிஸ்தவ நாடார்களாலோ அல்லது வெள்ளாளர்களாலோ எங்களுக்கு எந்த சாதி தீண்டாமையும் கிடையாது தொல்லையும் கிடையாது. ஏனென்றல் நீண்டு பரந்த கடற்கரை கிராமங்களில் எங்களைத் தவிற வேறு சாதியார் கிடையாது. நாங்கள் தனித்து வாழ்கிறோம். எங்கள் கிராமங்களில் ஒரு சாதி இந்துவை பார்க்க முடியாது. கன்னியாகுமரியில் தொடங்கி கேரளத்தின் எல்லையான நீரோடி வரை நீளாமாய் நீட்டிப் படுத்திருக்கும் இந்த மீனவ மக்கள் பல நூறு ஆண்டுகளாய் புறம்போக்கு நிலங்களில் வாழ்கிறார்கள்.

கடலில் வேட்டையாடுவதும் கரைகளில் கூடிக் கழிப்பதும் மீதி நேரத்தில் தேவாலயங்களுக்கு மண் சுமப்பதும்தான் இவர்களின் வாழ்க்கை. சுனாமி அனர்த்தனம் தாண்டவமாடியபோது உள்ளூர் பண்ணைகள் எங்களுக்கு அவர்களது வீட்டின் பழைய துணிகளையும் கெட்டுப் போன சாதங்களையும் கொண்டு வந்து கொட்டி உதவினார்கள். முதன் முதலாக இப்படி ஒரு பெரும் சமூகம் தமிழக கரையோரப்பட்டினங்களில் வாழ்கிறார்கள் என்பதே அப்போதுதான் பொது வெளிக்குத் தெரிந்தது.

சுனாமியின் போது வழங்கப்பட்ட பழைய துணிகளை மீனவ மக்கள் திருப்பி அனுப்பினார்கள். தயிர் சாதம் கொண்டு வந்த கொடுத்தபோது ''எங்களுக்கு கொஞ்சம் மீன் குழம்பு கிடைக்குமா?” எனக் கேட்டார்கள். ''கொழுப்பப் பாத்தியாலே அய்யோ பாவம்னு நாம சோறு கொண்டு கொடுத்தா மீன் குழம்பு கேக்குறத? போய் பிடிச்சி குளம்பாக்கி தின்ன வேண்டியதுதானே” என்கிற வசையாடல்கள் பதிலுக்கு வந்தன.

தமிழகம் முழுக்க கண்ணுக்குத் தெரியாத உத்தப்புரம் சுவர் எழுப்பட்டிருக்கிறது. அந்தச் சுவர் எங்கள் கிராமங்களையும் மூடியிருக்கிறது என்பதை எண்பதுகளில் இந்து முன்னணியால் நிகழ்த்தப்பட்ட மண்டைக்காடு தாக்குதல் மூலம் தெரிந்து கொண்டோம். கிறிஸ்துவ மீனவர்களுக்கும் இந்து நாடார் விவசாயிகளுக்குமான மோதலாக மட்டுமே அதை பார்க்க முடியாது. கிறிஸ்துவம் மீனவ மக்களிடம் கொண்டு வந்த சிறிதளவு மாற்றத்தைக் கூட சகிக்க முடியாத கொடூர மனதின் வெளிப்பாடுதான் அந்த மாண்டைக்காடு தாக்குதல். அப்போது நாங்கள் மொத்தமாக இந்தியாவின் நிலப்பரப்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தோம். இன்றும் அப்படித்தான் துண்டாடப்பட்டு வாழ்கிறோம். இப்போது சுனாமிக்குப் பிறகு மீனவ மக்களை கடற்கரையிலிருந்து வெளியேறச் சொல்கிறது அரசு. அங்கிருந்து வெளியேறி நாங்கள் சாதி இந்துக்களின் குடியிருப்புகளுக்குள் வாழச் செல்லும் போதுதான் வெளிப்படையாக புலப்படுகிறது உத்தப்புரம் சுவர்கள்.

பத்து ரூபாய் வருமானம் வந்தால் அதில் ஏழு ரூபாயை தேவாலயங்களுக்குக் கொடுத்தவர்கள் மீனவ மக்கள். இன்று அவர்கள் திருச்சபையின் நிறுவனங்களில் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறார்கள். காலம் காலமாக மறுக்கப்பட்ட உரிமைகளை இப்போது கேட்கத் துவங்கிய போது எங்களின் கோட்டாறு மறைமாவட்டமே இரண்டாக பிரிகிறது. நிர்வாக வசதிக்காக என்று சொன்னாலும் உண்மையில் நாடார் பாதிரியார்கள் தங்களுக்கு தனி மறைமாவட்டம் வேண்டும் எனக் கேட்டு, கொழுத்த வருமானம் வரும் நிறுவனங்களை தங்கள் பங்கில் கேட்டு வாங்கிக் கொண்டு விரைவில் பிரியப் போகிறார்கள். ஆக சுவர்கள் கிறிஸ்தவத்தையும் விட்டு வைக்க வில்லை. எறையூரில் அது வன்னியர்கள் எழுப்பும் சுவராகவும் குமரி மாவட்டத்தில் நாடார்கள் எழுப்பும் சுவராகவும் வடக்கன்குளத்தில் பிள்ளைமார் எழுப்பும் சுவராகவும் திருச்சியில் ரெட்டியர் எழுப்பும் சுவராகவும் அது எங்கும் பரவி விரிகிறது.

எதிர் எதிர் சாதிகளுக்குள் உருவான சுவர்கள் இப்போது ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குள்ளும் விரிகிறது. எங்கள் சொந்த சாதியான பரதவர் என்னும் இன மக்கள் எங்களைப் போலவே ஒடுக்கப்பட்ட இனமாக வாழக் கூடிய முக்குவ இன மக்களுக்கு எதிராக ஒரு மனச் சுவரை எழுப்பியிக்கிறார்கள். அது போல அருந்ததியின மக்களுக்கு எதிராக தலித் மக்கள் சுவரெழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உத்தப்புரத்தில் சுவர் உடைக்கப்பட வேண்டும்... 650 குடும்பங்களாக வாழும் பள்ளர் இன மக்கள் தங்களுக்கு எதிராக கட்டப்பட்டிருக்கும் சுவரை உடைக்கும் அதே வேளையில் அங்கு 30 குடும்பங்களாக வாழும் அருந்ததியின மக்களின் உள் ஒதுக்கீடுக்காக போராட முன் வரவேண்டும். வேதனைகளையும் வலிகளையும் அவர்களோடு இணைத்தே உணர வேண்டும். ஆக மொத்தத்தில் முருகேசன்களின் வார்த்தைகளில் சொன்னால் சமூக விரோதிகளெல்லாம் ஒன்று சேர வேண்டும்.

- டி.அருள் எழிலன்

Pin It