கேள்வி: கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: பார்ப்பனர்களுக்கு அடி வயிறு கலங்கும். சிந்து சமவெளி நாகரிகமும், கீழடியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையன என்று நிருபணமாகி விட்டதால், சமஸ்கிருத, வேத மேன்மை அடி வாங்குகிறது. தங்கள் சூழ்ச்சி வெளிப்படுகிறதே என அவர்கள் வருத்தமடைவது இயல்பே. சிந்து சமவெளி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட காளை உருவம் பொறித்த சின்னங்களை குதிரை என மாற்றி வரலாற்றை திசைதிருப்ப முயன்றவர்கள் பார்ப்பனர்கள். இப்போது அதே காளை வடிவ சின்னங்கள் கீழடியிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், நாம் நீண்ட காலம் சொல்லி வரும் திராவிட கருத்தாக்கம் வலுப் பெற்றுள்ளது. பார்ப்பனர்கள் தங்களை இந்த மண்ணின் மாந்தர்கள் என தொடர்ந்து பரப்பி வரும் பொய்கள் அம்பலமாகி உள்ளதால், பார்ப்பனர்களுக்கு எதையோ எடுத்து எதற்குள்ளோ வைத்துக் கொண்டது போல் இருக்கிறது.
கேள்வி: தமிழ்த் தேசியவாதிகளின் நிலை?
பதில்: வரலாற்றில் கோமாளிகள் எப்போதும் உண்டு. நமது ஆற்றலை அவர்களிடம் வீண் செய்ய வேண்டாம். கமுக்கமாக சிரித்து விட்டு நகர்ந்து விடவும். ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்தவும். மிகுந்த வேலைப்பளுவுக்கு இடையில் நகைச்சுவை வேண்டும் எனக் கருதினால் இனப்பெருமை பேசும் தமிழ்த் தேசியவாதிகளை அவ்வப்போது சீண்டுங்கள்.
கேள்வி: கீழடி முடிவுகள் தமிழர்களுக்குப் பெருமை தானே?
பதில்: இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?
கேள்வி: 2600 வருடங்களுக்கு முன்னர் இருந்த வைகை நாகரிகம் இன்றைய தமிழ்ச் சமுதாயத்தின் முன்னோடி என்பதும், அவர்கள் கல்வி பெற்ற, நாகரிக சமூகமாக இருந்தார்கள் என்பதும் தமிழர்களுக்குப் பெருமை தானே?
பதில்: நீங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துள்ளீர்கள் என்பதற்காக பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமா? அது உங்கள் கடமை. பகுத்தறிவு பெற்ற மனிதனின் கடமை. எனவே 2600 வருடங்களுக்கு முன்னர் இருந்த தமிழர்கள் கல்வி அறிவு பெற்றிருந்தனர், நகர நாகரிக அறிவை எட்டியிருந்தனர் என்பதற்காக நாம் பெருமை அடையக் கூடாது. கீழடி நமக்கு சில வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துகிறது. அதை இவ்வளவு காலம் போராடி அடைந்திருக்கிறோம். அந்த வரலாற்று உண்மைகளை மீண்டும் இழந்துவிடக் கூடாது. அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
கேள்வி: அப்படியானால் கீழடியில் அகழ்வாய்வு முடிவுகள் நமக்கு எந்த நன்மைகளையும் தராதா?
பதில்: கீழடியின் ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கும் உண்மைகள் நமக்கு பல பதில்களையும், பல கேள்விகளையும் எழுப்பியுள்ளன.
கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் எழுத்தறிவோடும், நகர நாகரிகத்தோடும், மத வழிபாடுகள் இன்றியும் வாழ்ந்துள்ளனர் என்பது உண்மையாகி விட்ட சூழலில், அதை எவ்வாறு இழந்தோம் என்ற மிக முக்கிய கேள்வி எழும்புகிறது. இந்தக் கேள்விக்கு பதில் தேடுவதில் அக்கறை செலுத்தினால், 100 ஆண்டுகளாக நாம் போராடிப் பெற்ற உரிமைகளை கடந்த சில ஆண்டுகளில் ஏன் இழந்து வருகிறோம் என்பதற்கான பதில் கிடைக்கும். போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமையை 10 சதவித பார்ப்பன இட ஒதுக்கீட்டு மோசடி மூலம் இழந்துள்ளோம். நமது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராம மாணவர்கள் பெற்ற மருத்துவக் கல்வி உரிமையை இழந்து நிற்கிறோம். தகுதி இல்லை என ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள் 100 ஆண்டுகாலப் போராட்டத்தின் விளைவாக தட்டுத் தடுமாறி எழும்பி வரும் நிலையை மீண்டும் தகுதி, தேர்வு என சீரழிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. நாம் தோற்று வருகிறோம்.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் இது போன்று உரிமைகளை, சுயமரியாதையை இழந்துள்ளோம். அந்தத் தோல்வி எப்படி ஏற்பட்டது என்ற காரணிகளை ஆராய்வது மட்டுமே கீழடி முடிவுகள் நமக்கு உணர்த்தும் பாடம். தோல்வியை ஆராயாமல், இனப்பெருமை பேசினால் மீண்டும் ஒரு முறை தோற்க நேரிடும். தற்போது ஏற்பட்டிருப்பது தற்காலிக பின்னடைவு தான். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது பேரிழப்பு. அதிலிருந்து மீண்டு வர நாம் செய்த போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எனவே கடந்த கால வரலாற்றில் இருந்து பாடம் கற்றால் ஒழிய எதிர்கால வரலாற்றை மாற்ற இயலாது. பெருமை மட்டுமே பேசினால் இன்னும் 2000 ஆண்டுகள் பின்னோக்கிப் போவது நிச்சயம். எனவே விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே என்ற வேண்டுகோளைத்தான் முன்வைக்க வேண்டும்.
அடுத்தபடியாக ஆய்வுப் பணிகள் இரு திசைகளிலும் பயணிக்க வேண்டும். ஒரு திசைப்பயணம் வைகை நதி அல்லது தொல் திராவிடர் நாகரிகம் எப்படி உருவானது? அதன் தொடர்புகள் என்னென்ன? வீச்சு என்ன? தொடக்கம், படிநிலை வளர்ச்சி என பல்வேறு கோணங்களை ஆராய வேண்டும். இது தொடர்பான அறிவியல் பூர்வ முறையில் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் வெளிவர வேண்டும். இரண்டாம் திசைப் பயணம் இந்த நாகரிகம் எந்தப் புள்ளியில் இருந்து வீழ்ந்தது? அதன் காரணிகள் என்ன? வீழ்ச்சிக்கு உதவிய அழிவு சக்திகள் என்னென்ன? அந்த வீழ்ச்சியைத் தடுக்க முயற்சிகள் ஏதும் எடுக்கப்பட்டனவா? அவை ஏன் தோற்றன? எனவாறு பல்நோக்கில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
கேள்வி: வரலாற்றில் இருந்து கற்க வேண்டியவை என்னென்ன? வரலாற்றின் பயன் என்ன?
பதில்: ஆங்கிலேய வரலாற்றாளர் E.H. Carr வரலாற்றின் பயனை வரையறுத்துக் கூறியுள்ளார். ஒருதொடர்ச்சியான நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடையான உரையாடலே வரலாறு.
வரலாறு என்பது நமக்கு வீட்டிற்கு கட்டப்படும் அடித்தளம் போல... மேற்கூரையாக இருக்க இயலாது. கிரேக்கத் தத்துவம், பிரெஞ்சின் அரசியல் தத்துவம், பிரிட்டன் தந்த பொருளியல் அறிவு ஆகியன எல்லாம் வரலாற்றில் இருந்து நமக்குக் கிடைத்திருக்கும் அடித்தளம். அடித்தளத்தைப் பயன்படுத்தி வலுவான மேற்கூரையை கட்ட முயல்வது தான் அறிவார்ந்த சமூகம் செய்ய வேண்டிய கடமை. தொடர்ச்சியான தமிழர்களின் நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் இடையேயான உரையாடலை நீட்டிப்பதே கீழடி மூலம் நாம் செய்ய வேண்டிய பணியும், கற்க வேண்டிய பாடமும் ஆகும்.
- சு.விஜயபாஸ்கர்