இங்கே ஓட்டு அரசியலில் ஈடுபடும் ஒருவரின் அதிகபட்ச இலக்கு என்பதே எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதுதான். அதைத் தாண்டி மக்களின் பண்பாட்டு மட்டத்தை உயர்த்துவது, அறியாமையில் இருந்து அவர்களை விடுவித்து, பகுத்தறிவு ரீதியாக சிந்திக்க கற்றுத் தருவது, மக்களின் பொருளாதார அடிமைத்தனத்திற்கான காரணத்தை உணர வைப்பதன் மூலம் அவர்களுக்கு வர்க்க உணர்வை ஊட்டுவது என்பதாகவெல்லாம் எந்த அரசியல்வாதியும் சிந்திப்பதே கிடையாது. அவர்கள் மக்களை எப்போதுமே முட்டாள்தனத்திலும், வறுமையிலுமே வைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள். அப்படி இருப்பதுதான் தொடர்ச்சியாக தங்கள் இருத்தலை காப்பாற்றிக் கொள்வதற்கு உதவும் என்று கணக்கு போடுகின்றார்கள். அதற்காக மான, வெட்கத்தை விட்டு, எந்த எல்லைக்கும் சென்று தரம் தாழ்ந்த உபதேசங்களை மக்களுக்குக் கொடுக்க மரியாதைக்குரிய ஓட்டுப் பொறுக்கிகள் தயாராகவே இருக்கின்றார்கள். மக்களிடம் எப்படி பேசி நடிப்பது, அவர்களின் மீட்பானாக தன்னை எப்படி நம்ப வைப்பது என்பதற்கெல்லாம் சினிமாவைப் போல அவர்கள் மிக நேர்த்தியாக ஒத்திகை பார்க்கின்றார்கள்.

vaiko and advaniஆனால் இது எல்லாம் மக்களுக்கு நன்றாகவே தெரியும். தங்களை ஏமாற்றுபவன் யார்? தங்கள் முதுகில் ஏறி சவாரி செய்பவன் யார்? என்பதை எல்லாம் அவர்கள் மிக நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார்கள். அதை நன்றாக உணர்ந்ததால்தான் அவர்கள் அரசியலை சாக்கடை என்கின்றார்கள். ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளின் மாய்மலங்கள் நிறைந்த பேச்சுக்களை காலம் காலமாக கேட்டு சலித்துப் போன ஒருவர் வேறு என்ன மாதிரியான முடிவுக்கு வர முடியும்?

இப்படி மக்களுக்கு அரசியலின் மீது அக்கறையற்றுப் போவதற்கும், சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைக்கும் பல இளைஞர்கள் கூட அதை வெறுத்து ஒதுக்குவதற்கும் கேடுகெட்ட இரட்டை நாக்கு அரசியல்வாதிகளே காரணமாக இருக்கின்றார்கள்.

எதிரி மிக வெளிப்படையாகத் தெரியும் போது, நம்மால் அவர்களை மிக எளிதாக அம்பலப்படுத்திவிட முடியும். ஆனால் உள்ளிருந்தே அடி அறுக்கும் நபர்களை நம்மால் அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடியாது. அது போன்று உள்ளிருந்தே அடி அறுக்கும் பலர் பெரியாரியவாதிகள் என்ற போர்வையிலும், கம்யூனிஸ்ட்கள் என்ற போர்வையிலும் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றார்கள்.

அப்படி தமிழகத்தில் இந்துத்துவவாதிகளின் மீதும், பார்ப்பனியத்தின் மீதும் ஒரு கரிசனமான பார்வையை ஏற்படுத்த அதன் ஸ்லீப்பர் செல்லாக செயல்படுபவர்தான் வைகோ அவர்கள். வைகோவால் ஒரே நேரத்தில் பெரியார் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்யவும் தெரியும்; முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்யவும் தெரியும். அண்ணாவையும் தொழத் தெரியும், அத்வானி காலிலும் விழத் தெரியும். பகத் சிங்கின் வீரத்தை வீராவேசமாகப் பேசும் அதே வாயால், சுதந்திர போராட்ட வீரனை காட்டிக் கொடுத்த வாஜ்பேய் தன்னை மகனாகக் கருதினார் என கூச்சமே இல்லாமல் பெருமை பட்டுக் கொள்ளவும் முடியும். திமுகவையும், ஸ்டாலினையும் வண்டி வண்டியாக திட்டிவிட்டு அவரது கருணையில் பதவியையும் பெற்றுக் கொள்ள முடியும்.

வைகோவின் முழு அரசியல் வாழ்க்கையையும், அவரது செயல்பாடுகளையும் வரலாறாக நாளை யாராவது படித்தால், படித்த நபர் ‘என்ன கருமம்டா இது?’ என்று காறித் துப்பிவிட்டு படித்த புத்தகத்தை நெருப்பு வைத்து கொளுத்தி விடுவார்.

ஓட்டுப் பொறுக்கிகளில் பல டிசைன் ஓட்டுப் பொறுக்கிகள் இருந்தாலும், அவர்களில் யாருமே வைகோவுக்கு ஈடு இணையாக எப்போதுமே வர முடியாது. காரணம் சாதா அரசியல்வாதி மலை அளவு பொய் சொல்வார் என்றால், வைகோ இமாலய அளவு பொய் சொல்வார். 

2009 ஆம் ஆண்டு மே 17 அன்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நந்திக்கடல் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவத்தால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டது நமக்கு நினைவிருக்கலாம். சில இணையதளங்கள் அதற்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டு இருந்தன. பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மைதான் என சிங்கள அரசும் ஒத்துக் கொண்டது. போரை வழிநடத்திய இந்திய அரசும் ஒத்துக் கொண்டது. ஆனால் பிரபாகரனை தம்பி என்றும், அண்ணன் என்றும் சொல்லி தமிழகத்தில் அரசியல் நடத்திக் கொண்டிருந்த பலர் 'அவர் உயிரோடுதான் இருக்கின்றார், விரைவில் திரும்பி வந்து போரைத் தொடங்குவார்' என்று நாக் கூசாமல் புளுகிக் கொண்டிருந்தார்கள். அதில் முதன்மையானவர் வைகோதான். அது மட்டுமல்ல, நேதாஜி இன்னும் உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், அந்த ஆதாரங்களை விரைவில் வெளியிட்டு அனைவரின் முகத்திரையையும் கிழிக்கப் போவதாகவும் மதுரை ஓபுளாபடித்துறையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒருமுறை வைகோ பேசினார். ஆனால் ‘போர்வாள்’ ஏனோ அந்த ஆதாரத்தை இதுவரையிலும் வெளியிடவே இல்லை.

vaiko for temple festivalஆனாலும் இப்படி ஒவ்வொரு முறையும் வைகோ தன்னை நிரூபித்துக் கொண்டே இருந்தாலும், பல பெரியாரியவாதிகள் அவருக்கு முட்டுக் கொடுக்கத் தவறுவதே இல்லை. ஆனால் அப்படி முட்டுக் கொடுத்த பெரியாரியவாதிகளின் பல்லைப் பிடித்தே தற்போது பதம் பார்த்திருக்கின்றார் வைகோ.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழாவில் பேசிய வைகோ அவர்கள் “மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, பழனி கோவிலுக்கு, திருப்பதிக்கு, காஞ்சிபுரத்துக்கு அத்திவரதரைத் தரிசிக்க என பக்தர்கள் போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். மசூதிக்குப் போகிறவர்களை வாழ்த்துவது போல - ஜெபக்கூடங்களுக்கு செல்வபவர்களை வாழ்த்துவது போல கோவில்களுக்குப் போகிறவர்களை வாழ்த்தலாம்” என்றும், “வீரமணி வேண்டுமானால் என்னுடன் இதற்கு உடன்படாமல் போகலாம். அப்படியானால் பெரியாரிடம் இருந்து விலகி விட்டாயா? என்கிற கேள்வி வரலாம். வரும். 1940களில் பேசியதை அண்ணா 1960களில் பேசவில்லையே… 50களில் பேசியதை 60களில் பேசவில்லையே... அது போர்த் தந்திரம். அதிகாரம், சனாதன எதிரிகள் கைகளுக்கு செல்லக் கூடாது என்பதற்கான வியூகம் இது” என்றும் பேசி இருக்கின்றார். 

அது மட்டுமல்ல “99% இந்துக்கள் இன்றும் கோவில்களுக்கு போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்கள் ஊரில் இருக்கிற 99% பேர் கோவில்களுக்குப் போகிறார்கள். அதைத் தடுக்க முடியவில்லை உங்களால். பிறகு எதற்கு கோவிலுக்குப் போகிறவர்களை கிண்டல் செய்கிறீர்கள்? எங்கள் ஊரில் பாட்டனார் கட்டிய கோவிலுக்கு இப்போது கோபுரம் அமைத்து கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அது மக்களின் விருப்பம். அதைத்தான் செய்கிறோம்" என்றும் வைகோ பேசியுள்ளார்.

திராவிட அரசியலில் அரை நூற்றாண்டுக்கும் மேலே இருந்தவர் வைகோ. அவரால் மசூதிக்குப் போகிறவர்களையும், சர்ச்சுக்குப் போகிறவர்களையும், இந்து கோயிலுக்குப் போகிறவர்களோடு ஒன்றாக ஒப்பிட்டுப் பேச முடிகின்றது என்றால், அவர் கற்றுக் கொண்ட திராவிட அரசியலின் இலட்சணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் அவர் ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதன் மூலம் அனைத்துப் பார்ப்பன கடவுள்களும் தங்களுக்கு விருப்பமே என்ற காரியவாத முழக்கத்தை முன் வைத்த அண்ணாவைக் குறிப்பிடுகின்றார்.

வைகோ சொல்வது போல, 99% இந்துக்கள் கோயிலுக்குப் போகின்றார்கள் என்பது இங்கிருக்கும் அனைத்து முற்போக்கு அமைப்புகளுக்குமே தெரியும். ஆனால் நமக்குத் தெரிந்து எந்த ஒரு முற்போக்குவாதியும் கோயிலின் வாசலில் நின்று கொண்டு, வரும் இந்து பக்தர்களைப் பார்த்து கிண்டல் செய்தது கிடையாது. அதை அவர்கள் பொதுவெளியில் பரப்புரை செய்வதன் மூலமும், நூல்கள் மூலமும் தான் செய்கின்றார்களே ஒழிய, யாரையும் வம்படியாகப் பிடித்து உட்கார வைத்து செய்வது கிடையாது. ஆனால் வைகோவுக்கு பகுத்தறிவுப் பரப்புரை செய்வதற்கும், கிண்டல் செய்வதற்கும் உள்ள வித்தியாசமே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்பது கேலிக்கூத்தானது.

வைகோவுக்கு வேண்டுமென்றால் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்கள் (சூத்திரன்) என்ற பட்டத்தோடு வாழ்வதற்கு, கோயில் கட்டி கும்பாபிசேகம் செய்யும் அளவிற்கு தன்மானமும், சுயமரியாதை உணர்வும் தரம் தாழ்ந்து போயிருக்கலாம். ஆனால் நேர்மையான பெரியாரியவாதிகள் இன்னும் தன்மானத்தோடும், சுயமரியாதையோடும் அதை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

பொது மக்கள் விரும்புகின்றார்கள் என்பதற்காக அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் இன இழிவைப் பற்றி கவலைப்படாமல் சோரம் போகிறவன், மக்கள் நலன் மறந்த நான்காம்தர அரசியல்வாதியாக மட்டுமே இருக்கத் தகுதியுடைவன்.

வைகோவும் ஒரு சாதாரண அரசியல்வாதிதான் என்பதை தோழர்கள் புரிந்து கொண்டு வைகோவுக்கு இனிமேலாவது முட்டுக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் வைகோ இங்கிருக்கும் முற்போக்கு இயக்கங்களை அடி அறுக்கும் செயலுக்கு நாமும் உடந்தையாக இருந்தவர்கள் ஆகி விடுவோம்.

- செ.கார்கி

Pin It