மாயக்கண்ணாடி படம் பற்றி நானும் என் நண்பரும் விவாதித்தபோது என் நண்பர் சேரனுக்கு ஆதரவாக பேசினார். சேரன் எல்.ஜ.சி பிரச்சினையை மையப்படுத்தி எடுத்தது சரிதானாம். காரணம் கேட்டால் நெட்ஒர்கிங் நிறுவனம் இதர தனியார் நிறுவன இன்சூரன்சுடன் போட்டி போடும் வலு சேரனுக்கு இல்லையாம். எல்.ஜ.சி பற்றி எடுத்தால் தான் எவரும் கோர்ட்டில் கேஸ் போடவில்லை என்றும் இதர தனியார் நிறுவனங்களை மையப்படுத்தி எடுத்திருந்தால் அந்நிறுவனங்கள் சேரன்மேல் கோர்ட்டில் கேஸ் போட்டிருக்குமென்றும் சேரன் மேல் கொண்ட கண்மூடித்தனமான அக்கறையில் பேசினார்.
சேரனுக்கு அத்தகு வலு இல்லை என்றால் எப்படி பாரதிகண்ணம்மா, தேசியகீதம் என்று எடுத்திருக்கக் கூடும். மேலும் என் நண்பர் சொல்கிறார் பாரதிகண்ணம்மா படத்தால் சேரன் எவ்வளவு கஷ்டப்பட்டார், அப்பொழுது எந்த பொதுமக்கள் குரல் கொடுத்தனர் என்று. நண்பருக்கு நடப்பும் புரியவில்லை நான் சொல்வதும் புரியவில்லை. சரி நண்பரின் பார்வையில் பார்த்தால் பாரதி கண்ணம்மா மூலம் ஜாதியத்துக்கு எதிராக தேசியகீதம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எதிராக வெற்றிகொடிகட்டு மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏஜென்டுகளுக்கு எதிராக குரல் கொடுத்த சேரனால் இதர தனியர் நிறுவன இன்சூரன்சையோ நெட்ஒர்கிங் நிறுவனத்தையோ மையப்படுத்தி திரைப்படம் அமைக்காதது ஆச்சர்யத்தையே தருகிறது. (இதில் தான் இன்று அதிகம் கஷ்டங்கள் உள்ளது. குறுகிய காலத்தில் பணம் பண்ண தற்சமயம் இதனையே பரவலாக செய்து வருகின்றனர்)
பொதுமக்கள் ஒவ்வொருவரும் சேரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால்தான் இன்று இயக்குனர்கள் வரிசையில் முதல் ஜந்திற்குள் சேரன் இருக்கிறார். ஒரு படத்துக்கு இயக்குனராக ஒரு கோடிக்கும் மேல் வாங்குகிறார். நடிகராக அவதாரம் எடுத்து இருக்கிறார். தேசிய விருதும் பெற்று இருக்கிறார். பாவம் என் நண்பனுக்கு இது எல்லாம் தெரியவில்லை. மேலும் நண்பர் சொல்கிறார் சேரன் எவ்வளவு அழகாக பத்து நிமிடம் எல்.ஜ.சி யில் ஆள் சேர்ப்பது பற்றி விவரிக்கிறார் என்றும் அதில் உள்ள கஷ்டங்களை எல்லோரும் புரிந்து கொள்ள முடியும் என்றும் இந்த அளவு எல்.ஜ.சி பற்றி எவரும் சொன்னதில்லை என்றும் வாதம் வேறு.
உலகம் புரியாத நண்பராக இருக்கிறார். இன்று யாரும் எல்.ஜ.சிக்கு எதிராக பயப்படுவதில்லை நெட்ஒர்கிங் பிசினசுக்கும் தனியார் இன்சுரன்சு ஏஜென்டுக்கும் தான் பயப்படுகின்றனர். மேலும் நண்பர் சொல்கிறார் சேரன் இரண்டு வருசம் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்தாராம். சேரன் மாயக்கண்ணாடி எடுத்தாரா இல்லை அந்நியன் படத்தை எடுத்தாரா? மாயக்கண்ணாடிக்காக சேரன் இரண்டு வருசம் என்ன கஷ்டப்பட்டார் என்று பரவலாகவே தெரியுமே. மேலும் நான் சேரனை தீவிரமாக எதிர்ப்பதாகவே நண்பர் புரிந்து கொண்டுள்ளார்.
நானும் சேரனின் தீவிர ரசிகர். அது இன்று வரை தொடரவே செய்கிறது. அதனால்தான் இந்த கட்டுரையை என்னால் எழுத முடிந்தது. மேலும் சேரனுக்கும் ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்காக தேசியவிருது பெற்றதற்கு பா.விஜய்க்கும் வாழ்த்து செய்தி அவர்களின் முகவரிக்கு அனுப்பியதும் பதிலுக்கு பா.விஜயிடம் இருந்து நன்றிக் கடிதம் நான் பெற்றதும் என் நண்பருக்குத் தெரியாது. நான் மீண்டும் மீண்டும் நண்பனுக்கு சொன்னது மாயக்கண்ணாடி தவறான படம் இல்லை. அதை சேரன் எடுத்தது தவறு என்று. ஆனால் சேரனைப் போலவே என் நண்பரும் முரண்டு பிடிக்கிறார், ஒத்துக்கொள்ள.
பொதுமக்கள் ஒத்துக்கொண்டனர். அதன் பலனைத்தான் சேரன் அறுவடை செய்கிறார். மேலும் நண்பர் சொல்ல வருவது சேரன் எதையெடுத்தாலும் நாம் எல்லாம் பார்க்க வேண்டும் எனும் தொனியில் பேசினார். அதற்கு எதற்கு சேரனின் படத்தை பார்க்க வேண்டும் இயக்குனர்கள் சூர்யா, கஸ்தூரிராஜா போன்றவரின் படத்தைப் பார்த்து விட்டு போகலாமே.
இயக்குனர் சேரன் நடிகராகிவிட்டதால் தனது மாயவாதத்தை பெருந்தன்மையாக ஒத்துக்கொள்வதற்கு மறுக்கிறார். படம் பார்த்துவிட்டு வந்து அனைவரும் சொல்வது நாங்கள் நல்ல படத்தை பார்க்கவில்லை, சேரனின் மாயத் தோற்றத்தை தான் என்று.
மேலும் இந்த படத்தைப் பற்றி நக்கீரன் பத்திரிக்கையில் சேரன் கூறியிருப்பது பிரபல தனியர் தொலைக்காட்சி சேரனை இருட்டடிப்பு செய்கிறதாம். சேரன் தற்சமயம் அந்த தொலைக்காட்சியுடன் விரோதப் போக்கை கையாலவில்லையாம். மாயக்கண்ணாடியின் தோல்விக்கு இதையும் ஒரு சாக்காக சப்பைகட்டு கட்டுகிறார். அப்புறம் எப்படி சேரன் சார் உங்களுடைய ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து படங்கள் வெற்றி பெற்றது?
மாயக்கண்ணாடி படம் பற்றிய விமர்சனத்தை சேரன் வரவேற்கத் தயங்குகிறார். யாரோ ஒரு முறை பார்த்துவிட்டு விமர்சிப்பதை கொஞ்சம் காதுகுடுத்து கேட்காமல் இரண்டு மூன்று பெரிய இயக்குனர்கள் படம் நல்லா வந்திருப்பதாக சொன்னார்களாம் அதுவே சேரனுக்கு போதுமாம். சேரன் இரண்டு மூன்று இயக்குனர்களுக்காக படம் எடுக்கிறாரா இல்லை கடைக்கோடி மக்களுக்காக படம் எடுக்கிறாரா என்று தெரியவில்லை.
இவ்வளவு காலம் எதார்த்தத்தை பதிவு செய்ய முயற்சித்த சேரன் மாயக்கண்ணாடியை மாட்டிக் கொண்டு இதுதான் எதார்த்தம் என்கிறார். தவமாய் தவமிருந்து போல எத்தனை பேர் இங்கு வாழ்ந்திருக்க கூடும், மாயக்கண்ணாடியைப் போல் எத்தனை பேர் வாழ்ந்திருக்கக் கூடும்?
- பாண்டித்துரை
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
மாயக்கண்ணாடியால் மனவருத்தம்
- விவரங்கள்
- பாண்டித்துரை
- பிரிவு: கட்டுரைகள்