trichy karunchattai meeting 680நாத்திக இயக்கம் ஒரு வரலாற்று வகைப்பட்டதாகும். இது பகுத்தறிவு இயக்கம், அறிவொளி இயக்கம் என அழைக்கப்படுவதுண்டு. இந்த நாத்திக பகுத்தறிவு இயக்கம், முதலில் ஐரோப்பாவில் சுதந்திர தேசிய தொழில்துறை முதலாளித்துவத்தின் தோற்றத்தோடு இணைந்து தோன்றியது.

நிலவி வந்த நிலப்பிரபுத்துவ சொத்துடமை மற்றும் பண்ணை அடிமை முறையின் மூலம் நடந்த நிலப்பிரபுத்துவ சிறுவீத விவசாய உற்பத்தி முறையும், அதனைப் பாதுகாக்க அரசர்கள் ஆட்சி முறையும், இன உணர்வுகளுக்கும், இறையாண்மை பெற்ற இன அரசுகள் தோன்றுவதற்கும், தேசங்கள் சுதந்திர தேசிய தொழில்மயம் ஆவதற்கும் தடையாக இருந்தது.

எனவே இனத்தின் உருவாக்கத்துக்கும், இன விடுதலைக்கும், தொழில்மயமாக்கலுக்கும், முன்னேற்றத்திற்கும் தடையாய் இருந்த நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து, அந்தந்த இனங்களில் இருந்தே புதிதாக தோன்றி வளர்ந்த சுதந்திர தேசிய முதலாளித்துவம், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ஆயுதமேந்திப் போராடியது.

இக்காலக்கட்டத்தில்தான் (1789 - 1871) இன விடுதலைக்கு எதிரான, நிலப்பிரபுத்துவ பண்பாடுகளையும், மூடநம்பிக்கைகளையும், பொய்யான தலைவிதி தத்துவங்களையும், விஞ்ஞான உண்மைகளுக்கு எதிரான மதவாதத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்து, இன விடுதலைப் போருக்கு ஏற்ற துணைப் போராளியாய் தோன்றி செயல்பட்டது நாத்திக இயக்கம்.( பிரெஞ்சு நாட்டுப் புரட்சிகர வரலாற்றில் இதைத் தெளிவாகப் பார்க்கலாம்)

நாத்திக இயக்கத்தின் இந்த வரலாற்றுப் பணி இன்றும் முடிவடையவில்லை. உலக வரலாற்று அனுபவங்களை கணக்கில் கொண்டு, இன்று இன உணர்வுக்கு, இனங்களின் விடுதலைக்கு தடையாக உள்ள தமிழக கிராமப்புற நிலப்பிரபுத்துவ தன்மையிலான உற்பத்தி முறைக்கும், ஆதிக்கத்திற்கும் மற்றும் இனங்களை படை கொண்டு ஒடுக்கி வரும் மத்திய ஆட்சியையும், டெல்லியுடன் கைகோர்த்துள்ள அன்னிய நாட்டு பாசிச பயங்கரவாத கும்பல்களையும், மதவாதத்தையும் எதிர்த்துப் போராடும் இனவிடுதலைக்கான இயக்கங்களோடு, நாத்திக இயக்கம் கைகோர்க்க வேண்டியது இன்றும் கட்டாயமானதாகும்.

மாறாக சுயாட்சி, கூட்டாட்சி என்பதெல்லாம், இனங்களின் கைகளில் மாட்டப்பட்ட "பூ" சுற்றப்பட்ட புதிய விலங்கு என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டிய கடமையும் நாத்திக இயக்கத்திற்கு உள்ளது.

மதவாதமும் அதன் பொருளியல் அடித்தளமும்

சிறுவீத விவசாய உற்பத்தியே மதவாதத்திற்கும், சாதிக்கும் அடித்தளம். இன்று பாஜகவின் மதவாத, மதவெறி பாசிசத்திற்கு அடித்தளமாக இருப்பது, கிராமப்புற பின்தங்கிய சிறுவீத விவசாயமும் வானம் பார்த்த பூமியுமாகும். இதுதான் கிராமப்புற நிலப்பிரபுத்துவ முறையிலான எதேச்சதிகார ஒடுக்குமுறை கும்பலுக்கும் அடித்தளமாக உள்ளது. இதைப் பாதுகாப்பதன் மூலம் தான் உள்நாட்டு, வெளிநாட்டு ஏகபோகங்கள் இயற்கை வளங்களை, மனித வளங்களை கொள்ளையடிக்கவும், இனங்களை தங்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தைகளாக மாற்றி கொள்ளையடிக்கவும் முடியும்.

எனவே உள்நாட்டு, அன்னிய நாட்டு பெரும் ஏகபோக முதலாளித்துவக் கும்பல்கள் தங்களது கைக்கூலிகளை மத்திய, மாநில ஆட்சியில் அமர வைத்து ஒரு பலமான ஜனநாயக விரோதமான அரசு இயந்திரத்தை கையில் வைத்துக்கொண்டு இனங்களை ஒடுக்கி வருகின்றது.

இந்த கொள்ளைக்கூட்டம், இனங்கள் (மாநிலங்கள்) சுதந்திர தொழில்மயம் ஆவதைத் தடுக்கின்றன. அந்நிய நாட்டு விஞ்ஞானங்கள் தேசங்களை கொள்ளையடித்துச் செல்வதற்காக, பின்தங்கிய விவசாயத்தை, பின்தங்கிய கிராமங்களை, சாதிக் குடியிருப்புகளை, சாதியை ஒழிக்க மறுத்து வருகின்றனர். அவற்றைப் பாதுகாத்தும் வருகின்றனர்.

தற்போதைய மத்திய, மாநில அரசுகள் ஒரு அடிப்படை சமூக மாற்றம் பற்றி சிந்திக்கவே அஞ்சுகின்றனர். (சிந்தித்தாலும் இந்திய அரசியல் சட்டமும், அரசும் அதை அனுமதிக்காது என்பது வேறு) ஆட்சியாளர்களோ சமூக ஒழுங்கை, உருவாக்க உறுதிப்படுத்த இயலாதவர்களாக ஆகிவிட்டனர். சமூக விஞ்ஞான விதிகள் போதிக்கப்படாத கல்வி முறையால் படித்தவர்களைக்கூட, பிற்போக்குத்தனமான மதவாதம், தனக்கு சேவை செய்ய வைக்கிற கொடுமைகளைக் காண முடிகிறது.

எனவே,

???? இந்திய சிறையில் இருந்து விடுபடவும் ,
???? கிராமப்புற சிறுவீத விவசாய உற்பத்தியில் இருந்தும் சாதியை ஒழித்து, சாதிக் கொடுமையில் இருந்து விடுபடவும்,
???? தேசங்கள் சுதந்திர தொழில் மயமாகவும்,
???? அந்நிய நாட்டு, உள்நாட்டு ஏகபோக முதலாளித்துவ கம்பெனிகளை விரட்டிடவும்,
???? மதவாத பாஜக பாசிசத்தை முறியடிக்கவும்,

இன விடுதலைக்குப் போராடும் பாட்டாளி வர்க்கத் தலைமையிலான இயக்கங்கள் உட்பட அனைத்து சனநாயக இனவிடுதலை இயக்கங்களுடனும் இணைந்து தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து செயல்பட வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

( 23/12/18 அன்று திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணியில் வினியோகம் செய்த துண்டுப்பிரசுரம்)

- இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம்,
சுதந்திர வளர்ச்சிக்கான விவசாய சங்கம் - தமிழ்நாடு

Pin It