தமிழ்நாட்டில் நடக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, பா.ஜ.க.வின் பினாமி ஆட்சியாகவே செயல்பட்டு வருகிறது என்பதை அதன் ஒவ்வொரு செயல்பாடுகளும் உறுதிப்படுத்துகின்றன.

விநாயகன் சிலை ஊர்வலங்கள் என்ற பெயரில் மத அரசியல் ஊர்வலங்களை நடத்தி வரும் இந்து அரசியல் அமைப்புகள் சட்டங்களை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான மிரட்டல் ஊர்வலங்களாக விநாயகனைப் பயன்படுத்தி வந்தன. சட்டங்களைக் கையில் எடுத்துக் கொண்டு பொது மக்களுக்கும் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறைக்கும் பெரும் சவாலாகவே இந்த அரசியல் ஊர்வலங்கள் மாறிய நிலையில் காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்தது.

விநாயகன் சிலை ஊர்வலங்களின் சட்ட விரோத செயல்பாடுகளை முறைப்படுத்த சிலைகளை வைக்கும் ஒவ்வொருவரும் காவல்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள் மின்சாரத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடமிருந்து தனித்தனியாக அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியாது என்று அறிவித்து விட்டது.

இப்போது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, “பல்வேறு அரசுத் துறைகளில் அனுமதி வாங்கித் தரும் பொறுப்பை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்; நீதிமன்ற தீர்ப்புகளை ஒதுக்கித் தள்ளுங்கள்; ஒவ்வொரு விநாயகன் சிலைக்கும் ஒரு காவல்துறை ஆய்வாளர் பொறுப்பு ஏற்றுக் கொள்வார்; அவரிடம் சிலை வைக்கும் இடத்தை மட்டும் கூறிவிடுங்கள். எல்லா அரசுத் துறைகளிலிருந்தும் நாங்களே அனுமதி பெற்றுத் தந்து விடுகிறோம்” என்ற ஒற்றைச் சாளர முறையை அறிவித்துள்ளது. “இந்து முன்னணியினர் பெற வேண்டிய அனுமதிகளைப் பெற்றுத் தர வேண்டியது இனி எங்கள் பொறுப்பு” என்று காவல்துறை கூறுகிறது. இதற்கான உத்தரவுகளை பா.ஜ.க. பினாமி ஆட்சி பிறப்பித்திருக்கிறது. இதன் வழியாக பல்வேறு அரசுத் துறைகளில் பெற வேண்டிய அனுமதி, சடங்காக மாற்றப்பட்டுவிட்டது. காவல்துறையே, மற்ற அரசுத் துறைகளிடம் அனுமதி கேட்கும்போது மறுத்து விடுவார்களா என்ன?

இனி அடுத்த ஆண்டு விநாயகன் சிலைகளை ஒவ்வொரு பகுதியிலும் நிறுவும் பொறுப்பை அந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களே மேற்கொள்ளும்; இந்து முன்னணியினர் பேரணிக்கு மட்டும் வந்தால் போதும் என்ற அறிவிப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதற்கான கூட்டங்கள், கருத்தரங்குகள், ஆர்ப்பாட்டங்களுக்கு காவல்துறை அனுமதி கிடைப்பது அவ்வளவு எளிதானது அல்ல; நீதிமன்றம் வரை போக வேண்டியிருக்கிறது. ஆனால் மத அரசியல் பிரச்சாரத்துக்கு காவல்துறையே பொறுப்பேற்று செயல்படும் என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை! வெட்கக் கேடு!

Pin It