சாரட் வண்டிகள் சாதாரணமானவை கிடையாது. அதற்குள் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்க வெறி ஆழ்துயில் நிலையில் எப்போதும் இருக்கின்றது. அது அவ்வப்போது கண்விழித்து, மறைந்து போன தன் கடந்த காலத்தை எண்ணி, விம்மிப் பொருமுகின்றது. வழி நெடுக கைகட்டி நின்று கூழைக் கும்பிடு போட்ட அடிமைகளும், மன்னர் வாழ்க, எசமானர் வாழ்க, ஜமீன் வாழ்க, துரை ஐயா வாழ்க என்று காலந்தோறும் காற்றில் ஒலித்த கோஷங்களும் இன்றி, சாரட் வண்டிகள் நிசப்தமாக நின்று கொண்டிருக்கின்றன. மீண்டும் தன் பழைய காலத்திற்குச் செல்ல ஏதாவது கால எந்திரம் கண்டுபிடிக்க‌ப்படும் என அசைக்க முடியாத நம்பிக்கை சாரட் வண்டிகளுக்கு உள்ளது. தன்னிடம் இருந்து முன்நோக்கி பல தசாப்தங்கள் ஓடிவிட்ட வரலாற்றைப் பின்நோக்கி இழுக்க, பிரம்மன் தன்னுடைய தலையில் இருந்தோ, தோல்பட்டையில் இருந்தே, தொடையில் இருந்தோ பாதத்தில் இருந்தோ யாரையாவது பெற்று அனுப்புவான் என்று அவை காத்துக் கிடக்கின்றன.

periyar anna veeramani

சாமானியர்களால் ஒருநாளும் மன்னராகவோ, ஜமீனாகவோ, துரையாகவோ ஆக முடிவதில்லை. ஆனால் அவர்கள் மன்னர்களாக, ஜமீன்களாக, துரைகளாக கூத்துக் கட்ட எந்தத் தடையும் இல்லை. கூத்தில் மீசையை முறுக்கலாம், கர்ஜிக்கலாம், சிரச்சேதம் செய்ய உத்தரவு பிறப்பிக்கலாம், வாள் எடுக்கலாம், சவுக்கால் விளாசலாம், வெட்டி வீழ்த்தலாம். மக்கள் கைதட்டி ஆராவரிப்பார்கள். விடிந்ததும் இருளோடு சேர்ந்து ஆதிக்கத்தை அடையாளப்படுத்தும் ஆடைகளும் களைக்கப்பட்டு விடும். கூத்தில் வேடமிடும் மன்னனுக்கும், நிஜ மன்னனுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் எப்பொழுதும் நன்றாக உணர்ந்தே வைத்திருப்பார்கள். இருந்தாலும் எளிய மக்களால் எளிதில் அணுக முடியாத அவர்களை கூத்தில் பார்த்து ரசிப்பதில் குடிகளுக்கு மகிழ்ச்சி இருக்கவே செய்கின்றது. அந்த மகிழ்ச்சிதான் திரும்பத் திரும்ப கூத்து நடத்தும்படி கூத்தாடி மன்னர்களையும், ஜமீன்களையும், துரைமார்களையும் தூண்டிக் கொண்டே இருகின்றது. காலம் கடந்து போனாலும் மக்களின் மனங்களில் மன்னர்களும், ஜமீன்களும், துரைகளும் இன்னும் ஆதிக்கம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களின் கனவுகளில் அடிக்கடி சாரட் வண்டிகளில் வரும், அவர்களின் முன் மண்டியிட்டு மக்கள் தங்களின் விசுவாசத்தைக் காட்டுகின்றார்கள். சாரட் வண்டிகள் குலுங்கி குலுங்கி சிரிக்கின்றன.

மன்னர்களும், ஜமீன்களும், துரைகளும் ஒழிந்த இந்த ஜனநாயக காலத்தில் சாலைகளில் சாரட்டைப் பார்க்கும் போதெல்லாம் அது ஏதோ அந்நியப்பட்டு, தனது சுய ஆதிக்கத்தை விளம்பரப்படுத்த, கல்லாப்பெட்டி பெருத்த கனவான்கள் செய்யும் தந்திரமாகவே படுகின்றது. குப்பை மேடுகளிலும், சாக்கடையின் ஓரங்களிலும், வாழத் தகுதியற்ற இடங்களிலும் வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்கள், குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்டை மிரட்சியுடன் பார்க்கின்றார்கள். அது ஏதோ வானத்தில் இருந்து இந்த மண்ணைப் பார்க்க வந்த தேவதூதுவர்களின் வாகனம் போல் அவர்களுக்கு உள்ளது. அதைப் பார்க்கும் போதே அவர்களின் மூளை, ஓடிச்சென்று அந்தச் சாரட்டின் முன் தெண்டனிட்டு வணங்கு, அது உன்னை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்ட பரம்பரையின் வாகனம் என்று கட்டளை போடுகின்றது.

சாரட்டில் பயணிப்பது ஒன்றும் அவ்வளவு பாவமான செயலல்ல என்பது உண்மைதான். ஆனால் சாரட்டில் பயணித்த பல பேர் மக்களின் உழைப்பில் வயிறு வளர்த்த மக்கள் விரோதிகளாகவே கடந்த காலத்தில் இருந்தனர். சாரட் ஒரு ரயிலைப் போலவோ, பேருந்தைப் போலவோ எளிய மக்களை ஏற்றிச் செல்லும் வாகனமாக என்றுமே இருந்ததில்லை. அது வல்லாதிக்கத்தின் குறியீடாகவே இருந்து வந்தது. சாரட்டில் பூட்டப்பட்ட குதிரைகளின் எண்ணிக்கையும், அதன் சாதியும் அதை வைத்திருப்பவனின் அந்தஸ்த்தை பிரதிநிதித்துவப்படுத்துபவை.

எளிய மனிதர்களுடன் எளிய மனிதர்களாக வாழுபவர்கள் ஒருநாளும் தன்னை அவர்களிடம் இருந்து பிரித்துக் காட்டும் எதையும் பயன்படுத்த விரும்பவதில்லை. அக்டோபர் 23, 1948 அன்று ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் மாகாண‌த் தனி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கு அண்ணா தலைமையேற்க பெரியார் சம்மதம் தெரிவித்து இருந்தார். மாநாடு தொடங்கியதும் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் அண்ணாவும், முக்கியத் தலைவர்கள் சிலரும் அமர்ந்து கொண்டனர். ஊர்வலம் தொடங்கியது. ஆனால் சாரட் வண்டியில் பெரியார் அமரவில்லை. கறுப்புச் சட்டை, இடுப்புத்துண்டு, கைத்தடியோடு ஊர்வலத்தில் நடந்தே வந்தார். அதுதான் பெரியார். மற்றவர்களின் வற்புறுத்தலால் சாரட்டில் பயணிப்பதற்கும், விருப்பப்பட்டு பயணிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. சுயமரியாதையையும், சமத்துவத்தையும் உறுதியாக ஏற்றுக்கொண்டவர்கள் ஒருநாளும் விருப்பப்பட்டு அதில் பயணிக்க மாட்டார்கள்.

ki veeramani charrot

நம்மிடம் அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் இருக்கலாம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட சிலரும் பெரும் சொத்துடைய நபர்களாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த தொண்டர்களும் அப்படி செல்வச் செழிப்பில் இருப்பவர்களாக நினைத்து, அவர்கள் முன் தம் மேட்டுக்குடி மிதப்பைக் காட்ட நினைப்பவர்கள் வெகு விரைவில் அந்தத் தொண்டர்களின் மனங்களில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள். பொது வாழ்க்கையை ஏற்றுக் கொண்டவர்கள், எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதையே தம்முடைய வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்கள், அந்த எளிய மக்களின் வாழ்வியலைப் போலவே தம்முடைய வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள வேண்டும். சாமானிய மக்களிடம் அனைவரையும் சமமாகப் பார்க்கும் பார்வை இன்னமும் வந்துவிடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் இன்னமும் முதலாளிகளையும், அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தையும் பார்த்தால் கூழைக்கும்பிடு போடுபவர்களாக உள்ளார்கள். அவர்களிடம் உங்களின் உபரி உழைப்பைத் திருடிய கொள்ளைக்காரன் தான் முதலாளி என்பதையும், அதிகார வர்க்கத்தினர் அனைவரும் உங்களுக்கு சேவை செய்ய உங்களின் வரிப்பணத்தில் நியமிக்கப்பட்டவர்கள், அவர்களை தட்டிக் கேட்க உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது என்பதையும் அழுத்தமாகப் பதிய வைப்பதுதான் நம்முடைய பணி.

அப்போதுதான் தன்னை அழிக்கத் துடிக்கும் அனைத்து அதிகாரத்திற்கு எதிராகவும் மக்கள் போராடுவார்கள். அதைவிட்டுவிட்டு அவர்கள் மனங்களில் இருக்கும் அடிமைச் சிந்தனைக்கு உரம் இடுவது போல் நடந்து கொள்வது நிச்சயம் பகுத்தறிவு ஆகாது. பெரும் ஆடம்பரத்தைக் காட்டி மக்களை மயக்கும் பிற்போக்குவாதிகள்தான் தங்களை மக்கள் பிரமாண்டமாக ஒரு அரசனைப் போல நினைக்க வேண்டும் எனச் செயல்படுவார்கள். சுயமரியாதையை கற்றுக் கொடுப்பவர்கள் ஒரு பிரம்மம் போல சாரட் வண்டிகளில் மீது அமர்ந்துகொண்டு கீழே இருப்பவர்களைப் பார்க்க விரும்பமாட்டார்கள். அப்படி நினைப்பதைக் கூட அவமானமாகக் கருதுவார்கள். வாழ்நிலைதான் நம்முடைய சிந்தனையைத் தீர்மானிக்கின்றது என்பார் மார்க்ஸ். நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றோமோ அப்படித்தான் நம்முடைய செயல்களையும் அமைத்துக் கொள்வோம். வெள்ளைச் சட்டையில் அழுக்கு ஏற்பட்டால் உடனே தெரிந்துவிடும். ஆனால் கறுப்புச்சட்டையில் அழுக்கு ஏற்பட்டால் அது பார்ப்பவர்களின் கண்களுக்கு உடனே தெரியாது. ஆனால் தூய்மையை விரும்புவர்கள், யாருக்கும் தெரியாதே என்பதற்காக அழுக்கை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். சாரட் வண்டிகள் ஒரு நாள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய்விடும். நம் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு நம் பின்னால் அணிதிரண்டவர்கள், அடுத்த தலைமுறைக்கு சுயமரியாதையையும், பகுத்தறிவையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்பினால் பரவாயில்லை. ஆனால் நாமும் ஒருநாள் இதுபோல சாரட் வண்டியில் பயணிக்க வேண்டும் என்று விரும்பிவிட்டால்? பாடுபட்ட அனைத்துமே நாசமாகி விடுமே!

- செ.கார்கி

Pin It