பெற்றோரை இழந்து ஆதரவற்ற சிறுமிகள் வளர்க்கப்படும் இடம் செஞ்சோலை என்பது உலகம் அறிந்த உண்மை. யுனிசெப் மற்றும் பல்வேறு நாட்டு தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் செஞ்சோலைக்கு வருகை தந்து அதைப் பாராட்டியுள்ளனர். உலகம் அறிந்த உண்மையை சிங்கள அரசு அறியவில்லை என்று சொல்வது அப்பட்டமான பொய்யாகும். திட்டமிட்டு குறிவைத்துத்தான் செஞ்சோலையை சிங்கள ராணுவ விமானங்கள் குண்டுவீசித் தாக்கியுள்ளன. இதற்கு என்ன காரணம்?

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெஞ்சம் கவர்ந்த இடம் செஞ்சோலை என்பதும் அங்கு வளர்க்கப்படும் சிறுமிகளை தனது சொந்தப் பிள்ளைகளுக்கு மேலாக அவர் நேசித்தார் என்பதும் சிங்கள வெறியர்களுக்குத் தெரியும். எனவேதான் பிரபாகரனுக்கு உளரீதியான உளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இந்தப் படுகொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்தக் கொடியவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

1987ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் திலீபனின் மகத்தான உயிர்த் தியாகம் நடந்தபோது நான் தமிழீழத்தில் இருந்தேன். அப்போது ஒரு நாள் 'தம்பி' பிரபாகரன் அவர்கள் என்னை அவருடன் அழைத்துச் சென்றார். எங்கே என்பதை அவரும் கூறவில்லை. நானும் கேட்கவில்லை. காரில் தம்பியும் மாத்தையாவும் வேறு ஏதோ முக்கிய விடயமாகப் பேசிக் கொண்டிருந்ததால் நான் குறுக்கிட விரும்பவில்லை.

சந்தடியும் நெருக்கடியும் மிக்க யாழ்ப்பாண நகரின் எல்லையைத் தாண்டிக் கிராமப்புறம் எனக் கருதத் தக்க ஓரிடத்தில் சோலை ஒன்றுக்குள் நாங்கள் சென்ற கார் புகுந்தது. காரை விட்டு நாங்கள் இறங்கும்போது தம்பி "அண்ணா! ஓயாத வேலைத் தொல்லைகளுக்கு இடையே எனக்கு நிம்மதியையும் மனநிறைவையும் அளிக்கக்கூடிய இடம் இதுதான்" என்று கூறினார்.

தமிழீழத்தின் தன்னிகரில்லாத தலைவனுக்கு மனநிம்மதி அளிக்கக்கூடிய விஷயம் அங்கு என்ன இருக்கிறது என்பதைப் புரிந்த கொள்ள முடியாமல் சுற்றும் முற்றும் பார்த்தேன்.

அழகான சோலை, அதன் நடுவே ஒரு கட்டடம். அமைதியான சூழ்நிலை - இவற்றைத் தவிர வேறு எதையும் நான் காணவில்லை.

'தம்பி' சிரித்தவண்ணம் "உள்ளே போவோம். அங்குதான் எல்லாமே இருக்கிறது" என்றார்.

அவருடன் அந்தக் கட்டடத்துக்குள்ளே சென்றோம். தம்பியைப் பார்த்ததும் கலகலவெனச் சிரித்தவண்ணம் ஓடோடி வந்த ஏராளமான குழந்தைகள் அவரைச் சூழ்ந்துகொண்டன. அவரும் அக்குழந்தைகளைத் தூக்கியும், கொஞ்சியும் மகிழ்ந்தார். அளவளாவினார். சாக்லெட் போன்ற தின்பண்டங்கள் நிறைந்த கூடைகளைத் தோழர்கள் உள்ளே கொண்டுவந்து வைத்தனர். ஆசிரியைகளைப் போலக் காணப்பட்ட அங்கிருந்த இரு பெண்களைக் கூப்பிட்டுக் குழந்தைகளுக்கு அவற்றைக் கொடுக்குமாறு அவர் கூறினார்.

பிறகு பின்புறம் உள்ள ஓர் அறைக்குச் சென்றோம். அங்கு சில குழந்தைகள் உடல் நலமின்றிப் படுத்திருந்தன. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றையும் அணுகி ஆதரவாகப் பேசினார்.

ஆசிரியைகளை அழைத்துக் குழந்தைகளின் உணவு மற்றும் தேவை ஆகியவற்றைக் கேட்டறிந்தார். மாத்தையாவை அழைத்து உடனே ஆவன செய்யும்படி கூறினார்.

பிறகு வெளியே வந்து மரநிழலில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்த வண்ணம் பேசத் தொடங்கினோம்.

"அண்ணா! இந்த குழந்தைகளின் பெற்றோர் போரில் இறந்துவிட்டதால் ஆதரவற்று நின்றன. இவர்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இயக்கத்தின் நீங்காத கடமை அது. தாங்கள் அனாதைகள் என்ற உணர்வு இந்தக் குழந்தைகளுக்கு ஒருபோதும் ஏற்படக்கூடாது. உடலில் ஊனம் ஏற்பட்டாலும் ஏற்படலாம், உள்ளத்தில் மட்டு:ம ஊனம் ஏற்பட்டு விடக்கூடாது. பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளத்தில் ஊனம் ஏற்பட்டால் அவர்களின் எதிர்காலம் பாழாகும். எனவே, இந்தக் குழந்தைகளுக்குத் தாயும்-தந்தையுமாக இயக்கமே விளங்குகிறது. இவர்களை நல்லமுறையில் வளர்த்துக் கல்வி கற்றுத் தந்து ஆளாக்குவதன் மூலம் எதிர்காலப் புரட்சித் தலைமுறையைச் செவ்வனே உருவாக்குகிறோம்" என்றார்.

எதிரிகளுடன் வாழ்வா! சாவா என்ற போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போதுகூட எதிர்காலத் தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கும் அவரை வியப்புடன் பார்த்தேன். தன்னுடைய ஏராளமான பணிகளுக்கு நடுவேகூட ஆதரவற்ற இந்தக் குழந்தைகளைத் தேடித் தாயன்போடு வந்திருக்கும் அவரைப் பார்த்தபொழுது பெருமிதம் கொண்டேன்.

இனவெறி அரசின் அழிப்புக் கரங்களால் பாதிக்கப்பட்டு எதிர்காலமே தமக்கு இல்லை என நொந்துபோன இளம் உள்ளங்களைத் தட்டிக்கொடுத்து வளமான எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையை ஊட்டித் தன்னம்பிக்கையுடன் புதிய வாழ்வை நோக்கி அவர்கள் அடியெடுத்து வைக்க தலைவர் பிரபாகரன் வகுத்த திட்டம்தான் ‘செஞ்சோலை சிறார் இல்லம்’ ஆகும்.

அன்று என்னை அழைத்துக்கொண்டு போய் அவர் காட்டியபோது சிறிய அளவில் இருந்த இவ்வில்லம் இன்று பெரியதொரு நிறுவனமாக உருவாகி இருக்கிறது.

விடுதலைப் புலிகள் மகளிர் படைப்பிரிவின் நேரடிப் பார்வையில் இது இயங்குகிறது. செஞ்சோலை வளாகத்தில் மகளிர் பாடசாலை, சிறார் இல்லம் ஆகியவை அமைந்துள்ளன. இந்த நிறுவனத்தின் முதுகெலும்பாக விளங்குபவர் ஜனனி. ஒழுங்கமைப்பைக் கவனிப்பவர் தனுஜா. பாடசாலையின் முதல்வராக கிரிஜா உள்ளார். 3 வயது முதல் 15 வயது வரை உள்ள பெண் குழந்தைகள் இங்குக் கல்வி பயிலுகின்றனர். இக்கல்வியின் நோக்கம். மாணவர்களைத் தேர்வுக்குத் தயாரிப்பது அன்று. வாழ்க்கைக்குத் தேவையான பூரண ஆளுமை உள்ளவர்களாக உருவாக்குவதேயாகும். மகத்தான பணியில் செஞ்சோலை ஈடுபட்டுள்ளது.

இங்கு செயல்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பிள்ளைகளின் தனியாற்றல் இனம் காணப்பட்டு அதற்கேற்ற முறையில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இசை, நடனம் போன்ற நுண்கலைகளுக்குப் பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

விடுதலை பெற்ற நாட்டுக்குப் பயன்படும் வகையில் உதவுதல், நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப் பாடுபடுதல் போன்றவை பற்றியும் இங்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

இங்கு ஆசிரியர்கள், நிருவாகிகள், பிள்ளைகள் ஆகிய அனைவருமே ஒரே குடும்பமாகச் செயல்படுகிறார்கள்.

அவ்வப்போது மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்படுகிறது. சிறுவர் பூங்கா, விளையாட்டு அரங்கு ஆகியவையும் உண்டு.

கற்பித்தலுக்குரிய உபகரணங்கள், விளையாட்டுப் பொருள்கள் ஆகியவை இங்கேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

சுயதேவைப் பூர்த்தி செஞ்சோலையின் முக்கிய திட்டமாகும். கோழிப்பண்ணை, மாட்டுப்பண்ணை, காய்கறித் தோட்டம் ஆகியனவும் இங்கு உண்டு.

செஞ்சோலைக் குழந்தைகளும் போராளிக் கலைஞர்களுமாகச் சேர்ந்து இசைமாலை என்னும் இன்னிசை நிகழ்ச்சிகளைப் பல ஊர்களிலும் நடத்தி நிதி திரட்டுகிறார்கள்.

பிரபாகரனின் அற்புத கனவுகளுள் ஒன்று செஞ்சோலை. நாளை பிறக்கும் தமீழீழத்துக்கு வளம் சேர்க்கப்போகும் இளைய தலைமுறை இங்கு உருவாக்கப்படுகிறது.

(பழ. நெடுமாறன் எழுதிய "தமிழீழம் சிவக்கிறது" என்ற நூலில் இருந்து)

நன்றி: தென்செய்தி

Pin It