தமிழ்நாட்டு மக்களுக்கு இது மாபெரும் சோதனைக் காலம் போல் இருக்கின்றது. வந்தவன், போனவன், விளங்காதவன் எல்லாம் வாய்க்கு வந்ததை வாந்தி எடுத்து வைத்து, அதையே கொள்கை என்று நம்பச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை சித்தரவதை செய்துகொண்டு இருக்கின்றார்கள். காவி அரசியல், பாபா அரசியல், முருகன் அரசியல் என்று முச்சந்திக்கு முச்சந்தி நின்று கொண்டு, மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, அவர்களை எந்நேரமும் அச்சத்திலும், பீதியிலும் உறைய வைத்துக் கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ஏற்கெனவே குழப்பத்தில் தத்தளித்துக் கொண்டு இருக்கும் தமிழக மக்களை கிழித்துக் கொண்டு ஓட விட்டிருக்கின்றார் கமல் அவர்கள்.

kejriwal and kamal haasan

ஏற்கெனவே கமல் பேசுவது புரியவில்லை, அவர் போடும் டுவிட்டுகள் பைத்தியக்காரனின் உளறல்கள் போல உள்ளது என நன்கு படித்த அறிவு ஜீவிகள் வட்டாரங்களிலேயே அங்கலாய்க்கப்பட்டுக் கொண்டு இருந்தது. அப்படிப்பட்டவரிடம் ஏதோ அரிதான சமூக சிந்தனைகள் புதைந்து கிடப்பது போன்றும், அதைத் தோண்டி எடுத்து தமிழக மக்களுக்கு கமல் தாரளமாக விநியோகம் செய்யப் போகின்றார் என்றும் தமிழகத்தில் உள்ள சில காலிசட்டி மூளைக்காரர்கள் குதூகலமாய் பேசியும் எழுதியும் வந்தனர்.

செயலலிதாவும், கருணாநிதியும் களத்தில் குத்துச்சண்டை போட்டுக்கொண்டு இருந்தபோது எட்டி கூட பார்க்காமல் ஜகா வாங்கியவர், இப்போது கையை முறுக்கிக் கொண்டு குஸ்தி போட கிளம்பிவிட்டார். சரி எவன், எவனோ அரசியலுக்கு வர்றான், தாத்தா கமலும் தனது அந்திமக் காலத்தில் ஏதோ தமிழக மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகின்றார், வந்துவிட்டதுதான் போகட்டுமே என்று பார்த்தால், மனிதர் தான் ஒரு குழப்பவாதி மட்டுமல்ல, சீர்குலைவுவாதி என்பதையும் அவராகவே இன்று வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டார். கமலிடம் பெரியாரையும், மார்க்ஸையும் தேடித் தேடிப் பார்த்து குதூகலமடைந்த நம் தோழர்கள் மண்டையில் உறைக்கும்படி, 'தான் இடதும் அல்ல, வலதும் அல்ல; மய்யம்' என்றும் 'சித்தாந்தங்கள் தேவையில்லை' என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் பிரகடனப்படுத்தி இருக்கின்றார். கமலைப் புரிந்து கொள்வதற்கும், அவரின் அரசியலைத் தெரிந்து கொள்வதற்கும் நம் தோழர்களுக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றது.

கமல், அரவிந்த் கெஜ்ரிவாலை அழைத்து வந்தது ஏதோ தற்செயலான நிகழ்வு அல்ல. நாங்கள் எந்தச் சித்தாந்தங்களுக்கும் தாலி கட்டிக் கொள்ளவில்லை என்று வெளிப்படையாக அறிவிக்கும் கெஜ்ரிவாலும், சித்தாந்தங்கள் தேவையில்லை என்ற கமலும் முன்னெடுக்க விரும்பும் அரசியல் என்பது என்.ஜி.ஓ. அரசியலே ஆகும். அதனால்தான் கமல் 8 கிராமங்களை தத்தெடுக்கப் போவதாக அறிவித்து இருக்கின்றார். கிராமங்களை மேம்படுத்துவது என்பதும், அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருவது என்பதும் அரசு செய்ய வேண்டிய வேலையே அல்லாமல், சில பணக்காரர்களின் பிச்சையில் நடைபெறும் தர்ம காரியங்கள் அல்ல. இதைத்தான் உலகம் முழுவதையும் தனது லாபவெறியால் அழித்து கொள்ளையிட்டுக்கொண்டு இருக்கும் மைக்ரோசாப்ட், போர்டு, ராக்பெல்லர், கொக்கக்கோலா போன்றவை செய்துவருகின்றன. அரவிந்த் கெஜ்ரிவாலும் அப்படிப்பட்ட என்.ஜி.ஓக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர் என்பது உலகறிந்த செய்தி. இப்போது அதன் பிரதிநிதியாகவே கமல் தமிழ்நாட்டில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகின்றார்.

கமல் சொல்வதுபோல் எல்லாம், சித்தாந்தங்கள் அற்ற அரசியல் சாத்தியமே அல்ல. உலகில் இருப்பது இரண்டே அரசியல் தான். ஒன்று முதலாளிவர்க்க அரசியல், இன்னொன்று பாட்டாளிவர்க்க அரசியல். இதில் இரண்டிலும் சேராத முன்றாவது அரசியல் என்று எதுவுமே உலகில் இல்லை. அப்படி சொல்லிக்கொண்டு அரசியல் களத்திற்கு வரும் நபர்கள் முதலாளி வர்க்கத்தின் கைக்கூலியாகவும், முதலாளித்துவத்தின் சேப்டி வால்வாகவுமே உலகில் இருந்திருக்கின்றார்கள். மார்க்ஸ் காலத்தில் இருந்து இன்றுவரை அதுதான் நிலைமை. மக்கள் தங்கள் மீது முதலாளிகளால் நிகழ்த்தப்படும் கொடும் சுரண்டலில் இருந்து விடுபடவே விரும்புகின்றார்கள். அவர்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் சூறையாடும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட விரும்புகின்றார்கள். தரமான கல்வியையும், மருத்துவத்தையும், தண்ணீரையும் இன்னும் பிற மனித வாழ்வுக்கான தேவைகளையும் கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். இதை எல்லாம் மக்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்ள நிர்பந்திக்கும் அரசு ஒரு கையாலாகாத முதலாளித்துவ அடிவருடி அரசு ஆகும். இன்று மக்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இது போன்ற கையாலாகாத அரசுகள் தான் காரணம்.

இதுதான் அடிப்படையானதும், பிரதானமானதுமான பிரச்சினை. யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்களுக்கு இந்தப் பிரச்சினைகளின் மீது என்ன கருத்து இருக்கின்றது என்பதைப் பொறுத்துதான் அவர்கள் சாமானிய மக்களுக்காக கட்சி நடத்த வருகின்றார்களா அல்லது கார்ப்ரேட்டுகளின் ஏவல் நாய்களாக இருக்க கட்சி நடத்த வருகின்றார்களா என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் கமலுக்கு இந்தப் பிரச்சினைகளின் மீதெல்லாம் எந்தக் கவனமும் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தால் அதை அவரே வெளிப்படையாக சொல்லி இருப்பார். மாறாக நான் இடதுமல்ல, வலதுமல்ல, மய்யம் என்று சொல்லுவது, ஏற்கெனவே இருக்கும் பல முதலாளித்துவ அடிவருடி கட்சிகளில் தானும் ஒன்று என்பதைத்தான் காட்டுகின்றது. அது மட்டும் அல்லாமல், வலது என்பது முதலாளித்துவ ஆதரவு என்பதையும் தாண்டி, மக்களை வர்க்க அடிப்படையில் இணையாமல் தடுத்துப் பாதுகாக்கும் சாதி, மதம் போன்ற பிற்போக்குச் சக்திகளின் அரசியலும் ஆகும். கமலுக்கு இடது அரசியலைப் பற்றியும் தெரியவில்லை, வலது அரசியலைப் பற்றியும் தெரியவில்லை அல்லது இரண்டையும் தெரிந்துகொண்டு ஓட்டரசியலில் வெற்றிபெற மற்ற பிற்போக்கு கட்சிகளின் அரசியலையே தானும் கையில் எடுக்க நினைக்கின்றார். அதனால்தான் அவரால் பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், காந்தி, அம்பேத்கர், நேரு, ஒபாமா, சந்திரபாபு நாயுடு என அனைவரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடிகின்றது. பிழைப்புவாதிகளுக்கும் சீர்குலைவுவாதிகளுக்கும் அனைவருமே ஒன்றாகத் தெரிவது வியப்பில்லைதான்.

இந்திய அரசின் கைக்கூலியாய் இருந்து கூடங்குளம் மீனவ மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்த அப்துல் கலாமின் வீட்டில் இருந்து அரசியல் பயணத்தைத் துவங்கிய கமல், மீனவ மக்களை சந்திக்கத் திராணியின்றி கோழையைப் போல மதுரைக்கு ஓடிவந்தது ஒன்றும் வியப்பில்லைதான். சந்தித்து இருந்தால் கமலின் அப்துல் கலாம் மீதான பாசம் சந்தி சிரித்திருக்கும். கமல் ஒரு பெரும் அறிவாளியாய் இருக்கலாம், அனைத்தையும் கற்ற வித்தகராக இருக்கலாம். அது அவரின் தனிப்பட்ட திறன் சம்மந்தப்பட்டது. ஆனால் தனது அறிவையும், ஆற்றலையும் ஒருவன் யாருக்காகப் பயன்படுத்துகின்றான் என்பதை வைத்துத்தான் அவன் யாருக்கானவன் என்பதை நாம் அடையாளம் காண முடியும். அப்துல் கலாம் தனது அறிவை இந்திய அரசின் மேலாதிக்க மனப்போக்கிற்குப் பயன்படுத்தியவர், இந்து வலதுசாரிகளின் சித்தாந்த மேலாண்மைக்கு ஆதரவு கொடுத்தவர், தனியார் பள்ளி மேட்டுக்குடி குழந்தைகளையே எப்போதும் கொஞ்சி குதூகலமடைந்தவர். அதனால்தான் அப்துல் கலாமைப் பற்றி அம்பலப்படுத்தினால் காங்கிரசுக்கும் எரிகின்றது, பிஜேபிக்கும் எரிகின்றது, ஏன் மீனவ மக்களின் நண்பனாக தன்னை காட்டிக் கொள்ளும் சீமானுக்கும் எரிகின்றது.

கமல் தன்னை திரையில் வேண்டுமென்றால் சகலகலா வல்லவனாக காட்டிக் கொள்ளலாம். திரையில் கதாநாயகன்தான் எல்லாமும். ஆனால் அரசியலில் தனிமனிதர்கள் கதாநாயகர்கள் கிடையாது. அவர்கள் முன்னிலைப்படுத்தும் சித்தாந்தம்தான் கதாநாயகன். கதாநாயகன் இல்லாத சினிமா கூட வெற்றி பெற்றுவிடும் ஆனால் சித்தாந்தம் இல்லாத கட்சி ஊர் சிரித்து, அசிங்கப்பட்டு, அம்பலப்பட்டுப் போவது உறுதி. அரசியல் என்பது வெற்று வார்த்தைகள் அல்ல. அது செயல்பாட்டுக்கான களம். எந்த ஒன்றைப்பற்றியும் தெளிவான பார்வை இல்லாத, சாமானிய மக்களுக்கு என்ன தேவை என்பதுகூட புரியாமல் பொத்தாம் பொதுவாக 'நான் வந்தால் அனைத்தையும் மாற்றிவிடுவேன்' என்று சொல்வது காற்றில் கம்பு சுற்றும் வீரர்களின் செயல்பாடாகும்.

திமுகவும், அதிமுகவும் நிச்சயமாக தமிழக அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதே சமயம் யாரும் கேவலத்தில் இருந்து கழிசடைக்குப் போக விரும்ப மாட்டார்கள். கமல் முன்னிறுத்தும் அரசியல் என்பது என்.ஜி.ஓ. வகைப்பட்ட கழிசடை அரசியல். மக்களை சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிளவுபடுத்தும் பாசிச அரசியலான இந்துத்துவ அரசியல் மீது எந்த விமர்சனமும் அற்ற வலது சாரி அடிவருடி அரசியல், கார்ப்ரேட்டுகளை நக்கிப் பிழைக்கும் கைக்கூலி அரசியல். இப்படி எல்லாவகையிலும் மோசமான ஓர் அரசியலை தமிழக மக்களுக்கு கொடுக்க கமல் தயாராக இருக்கின்றார். மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும், கமலுக்கு ஓட்டுப் போட்டால் கோவணமாவது மிஞ்சுமா என்று.

- செ.கார்கி

Pin It