இந்த நேரத்தில் எனக்குப் பல விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. உங்களை மரியா அந்தோணி யாவின் வீட்டில் சந்தித்தது, உங்களுடன் வர என்னை நீங்கள் அழைத்தது, புறப்படத் தயாரானபோது ஏற்பட்ட பரபரப்பு. இறந்து போனால் யாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட போதுதான் உண்மை உறைத்தது. பிறகு எல்லாம் புரிந்து போனது. புரட்சியின் போது ஒருவர் இறக்கவும் செய்யலாம் அல்லது வெற்றியும் பெறலாம். வெற்றிக்கான பாதையில் பல தோழர்கள் இறந்து போனார்கள். இன்று நாம் பக்குவப்பட்டிருப்பதால் அவையெல்லாம் அத்தனை உணர்ச்சிகரமாக இல்லாமல் இருக்கலாம். அந்த நிகழ்ச்சி திரும்புகிறது.
கியூப புரட்சியில் எனக்கு அளிக்கப் பட்டிருந்த கடமைகளை நிறைவேற்றிவிட்டேன் என நினைக்கிறேன். நான் உங்களிடமிருந்தும், தோழர்களிட மிருந்தும், என்னுடையவர்களாகிவிட்ட மக்களிட மிருந்தும் விடைபெறுகிறேன். கட்சியின் தலைமையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்தும், என்னுடைய அமைச்சர் பதவியிலிருந்தும், கமாண்டர் பொறுப்பிலிருந்தும், கியூபாவின் பிரஜைக்கான உரிமையிலிருந்தும் நான் விலகுகிறேன். கியூபாவுடன் சட்டரீதியாக எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் இவைகளைப் போல விலக்கவே முடியாத வேறு உறவுகள் இருக்கின்றன. அவைகளை என்னால் உதறிவிட முடியாது. புரட்சியின் வெற்றியை ஒருங்கிணைக்கிற அர்ப்பணிப்போடும், முழு ஈடுபாட்டோடும் நான் கடந்த காலத்தில் பணி புரிந்திருக்கிறேன் என நம்புகிறேன்.
என்னுடைய மோசமான தவறு ஒன்றுதான். சியரியா மாஸ்ட்ரோவின் ஆரம்ப நாட்களில் உங்கள் மீது மேலும் நம்பிக்கை வைக்காமலிருந்து விட்டேன். தலைமைக்கும், புரட்சிகரத் தன்மைக்கும் தகுதியான உங்கள் குணநலன்களை உடனடியாகப் புரிந்துகொள்ளவில்லை. அற்புதமான நாட்களில் நான் வாழ்ந்திருக்கிறேன். கரீபீய சிக்கல் எழுந்த சோகமான ஆனால் வேகமான தருணங்களில் உங்களோடு சேர்ந்து மக்களின் பக்கம் நின்ற பெருமையை உணர்கிறேன். அந்தச் சமயத்தில் உங்களைப் போல எந்தவொரு தலைவரும் அவ்வளவு பிரமாதமாக செயல்பட்டிருக்க முடியாது. அபாயங்களையும், கொள்கைகளையும் சரியாக எடுத்துரைத்த உங்களை சரியாகப் புரிந்துகொண்டு எந்த தயக்கமுமின்றி பின் தொடர்ந்ததற்குப் பெருமைப்படுகிறேன்.
என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் வேறு நாடுகளுக்குத் தேவைப்படுகின்றன. கியூபாவின் தலைவராக நீங்கள் இருப்பதால் உங்களுக்கு மறுக்கப்பட்டதை என்னால் செய்ய முடியும். நாம் பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது. சந்தோஷத்தோடும், வருத்தங்களோடும்தான் நான் இதனைச் செய்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அருமையான உலகத்தைக் கட்டி எழுப்புவார்கள் என்கிற தூய்மையான எனது நம்பிக்கைகளை இங்கு விட்டுச் செல்கிறேன். தங்கள் மகனாக என்னை வரவேற்ற மக்களை நான் விட்டுச் செல்கிறேன். இதுதான் உயிரை வேதனைப்படுத்துகிறது. புதிய போர்க்களங்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்த நம்பிக்கையைக் கொண்டு செல்கிறேன். மக்களின் புரட்சிகரத்தன்மைகளைப் பெற்றுச் செல்கிறேன். எங்கிருந்தாலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிடும் புனிதமான கடமையை நிறைவேற்றுகிற உணர்வை ஏந்திச் செல்கிறேன். இதுதான் எனது பலத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆழமான காயங்களைச் சரிசெய்கிறது.
கியூபா ஒரு முன்னுதாரணமாக விளங்கியதைத் தவிர என் காரியங்களுக்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. வேறோரு வானத்தின் கீழே என்னுடைய கடைசி நேரம் இருக்குமானால், அப்போதும் இந்த மக்களையும், முக்கியமாக உங்களையும் நினைத்துக் கொள்வேன். நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கும், நீங்களே முன்னுதாரணமாய் விளங்கியதற்கும் நன்றி. என்னுடைய செயல்களின் விளைவுகளால் உங்களுக்கு உண்மையாக இருப்பேன். நம்முடைய புரட்சியின் வெளியுறவுக் கொள்கையோடு அடையாளம் காணப்பட்டவன் நான். எங்கிருந்தாலும் அப்படியே இருப்பேன். கியூபப் புரட்சியாளனுக்குரிய பொறுப்பை உணர்ந்தே இருக்கிறேன். அப்படியே நடந்துகொள்வேன்.
என்னுடைய மனைவிக்கும், குழந்தைகளுக்கும் எதையும் விட்டுச் செல்லவில்லை என்று எந்த வருத்தமும் கிடையாது. சந்தோஷம்தான். வாழ்வதற்கு தேவையானவற்றையும், கல்வியையும் கொடுப்பதற்குமான ஒரு அரசு இருக்கிறது. உங்களிடமும், நமது மக்களிடமும் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் அவை தேவையில்லை என நினைக்கிறேன். வார்த்தைகளால் நினைப்பதையெல்லாம் சொல்லிவிட முடியாது. காகிதங்கள் வீணாவதைத் தவிர வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. நமது காலடிகள் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீர மரணம். எனது முழுமையான புரட்சிகரமான உணர்ச்சி வேகத்துடன் உங்களை ஆரத் தழுவிக்கொள்கிறேன்.