தமிழ்நாட்டில் பாஜக தனது உச்சபட்ச அட்டூழியத்தை அரங்கேற்றிக் கொண்டு இருக்கின்றது. அருணாசலப் பிரதேசம், உத்திரகாண்டு போன்ற வடகிழக்கு மாநிலங்களில் புழக்கடை வழியாக ஆட்சியைக் கைப்பற்ற அரங்கேற்றிய தனது சித்துவேலையை, தமிழ்நாட்டிலும் மிகச் சிறப்பாக தனது பினாமிகளைக் கொண்டு அரங்கேற்றி விட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்ததன் மூலம் பாஜக பினாமி அரசை கவிழும் நெருக்கடியில் இருந்து தற்காலிகமாக காப்பாற்றி இருக்கின்றார். 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் மொத்தமுள்ள 234 எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை 216 ஆகக் குறைத்து சட்டப்பேரவையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தேவையான 117 எம்.எல்.ஏக்கள் என்ற எண்ணிக்கையை, 108 இருந்தாலே போதும் என்று தனபால் மாற்றி இருக்கின்றார். இதன் மூலம் சட்டசபையில் மிக எளிதாக அறுதிப் பெரும்பான்மையை பாஜகவின் பினாமி அரசு நிரூபித்து, இன்னும் ஒரு மூன்று ஆண்டுகள் தமிழக மக்களின் தாலியை அறுக்கத் தயாராகிவிடும் சூழல் ஏற்பட்டு இருக்கின்றது.

ops and eps 600

இவ்வளவு சிரமப்பட்டு இந்த ஆட்சி தமிழ்நாட்டில் என்ன காரணத்திற்காக நடக்க வேண்டும்? அதற்கு என்ன அவசியம் வந்தது? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். அனைத்து வகையிலும் சீரழிந்த ஒரு கோமாளி ஆட்சி நடந்து கொண்டு இருக்கின்றது. குறைந்தபட்சம் தமிழ்நாட்டின் தனித்த அடையாளமாக இருந்த இந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, நுழைவுத்தேர்வு எதிர்ப்பு போன்றவற்றைக் கூட இந்தப் பிழைப்புவாதிகளால் காப்பாற்றிக் கொள்ள, எதிர்த்து நிற்க முடியவில்லை. அனைத்து மக்கள் நலத் திட்டங்களிலும் தோல்வி அடைந்து ஊழல் செய்வதில் மட்டும் மாபெரும் வெற்றி அடைந்து, கூச்சம் என்பது சிறிதும் இன்றி அவமானகரமாக இந்த அரசு இயங்கிக் கொண்டு இருக்கின்றது. தமிழ்நாட்டு மக்களின் நலன் என்பதெல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டுத் தன்னை ஊழல் வழக்குகளில் இருந்தும், சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்தும் காத்துக் கொண்டால் போதும், அதற்காக எதை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்ற நிலைக்கு இந்தப் பிழைப்புவாதிகள் வந்துவிட்டார்கள்.

மன்னார்குடி மாஃபியா கும்பலுக்கும் பிஜேபியின் பினாமி பழனிசாமி, பன்னீர்செல்வம் கும்பலுக்கும் இடையேயான மோதலும், அது சம்மந்தப்பட்ட செய்திகளும் தினம் தினம் மக்களை கொதிப்படைய செய்து கொண்டு இருக்கின்றது. ரேசனில் பருப்பு இல்லை, பாமாயில் இல்லை, குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை, படித்தவனுக்கு வேலை இல்லை, ஆனால் தினம் தினம் இவர்களின் வெற்று வாய் சவடால்களும் ஒருவரை மாற்றி ஒருவர் தூற்றிக் கொள்ளும் அருவருப்பான அர்ச்சனைகளும் மட்டும் குறைவில்லாமல் தமிழக மக்களுக்குக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றன.

இந்த ஆட்சியைக் கவிழ்ப்பதைவிட இந்த அடிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டை இந்துத்துவத்தின் சோதனைக் களமாக மாற்றுவதுதான் பிஜேபியின் திட்டமாக உள்ளது. இன்னும் ஒரு மூன்று ஆண்டுகள் இந்த ஆட்சி நிறைவு செய்யுமேயானால் தமிழ்நாட்டின் சந்து பொந்துகளில் எல்லாம் காவிக்கொடி பறக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.அம்மண சாமியார்களும், அகோரி சாமியார்களும் , பிட்டுபட சாமியார்களும் தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் உட்கார்ந்துகொண்டு இருக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தப் போகின்றார்கள். சாரண சாரணியார் இயக்கத் தேர்தலில் போட்டியிட்டு கேவலமான தோல்வியைத் தழுவிய எச்சிக்கலை ராஜாவும், இன்னும் தமிழ்நாட்டை கூறுபோட காத்திருக்கும் பிஜேபியின் காவி ரெளடிகளும் காலியாக உள்ள 18 தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புகூட பிரகாசமாக இருக்கின்றது.

18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததன் மூலம் அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் முகத்தில் கரியைப் பூசி இருக்கின்றது இந்தப் பினாமி அரசு. அவர்களை நீக்குவதற்காக சபாநாயகர் தனபால் கூறியுள்ள காரணம், அவர்கள் 18 பேரும் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறினார்களாம். கூறிய குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என்பதை விசாரணை செய்யாமாலேயே எப்படி தனபால் அது கண்டிப்பாக பொய்தான் என்ற முடிவுக்கு வந்தார் என்பது அவருக்கும், பிஜேபிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். ஆளுநர் வித்தியாசாகரராவ் தமிழகம் வரவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க பிஜேபியின் தூண்டுதல் காரணமாகவே எடுக்கப்பட்டுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்த தகுதி நீக்க நடவடிக்கையின் மூலம் இரண்டு பயன்கள் ஏற்பட்டுள்ளது. ஒன்று பிஜேபியின் பினாமி அரசு தன்னைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றது. அடுத்துக் காலியாக அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளில் பிஜேபி அதன் பினாமியின் துணையுடன் போட்டியிட்டு சட்டமன்றத்துக்குள் நுழைய விரும்பும் திட்டத்திற்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கின்றது. ஏற்கெனவே “பிஜேபி என்ன தீண்டப்படாத கட்சியா, அதனுடன் ஏன் கூட்டணி வைக்ககூடாது” என்று பிஜேபி அடிமைகள் சிலர் பேசியதையும் சேர்த்துப் பார்த்தால், இது நிச்சயம் நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

மக்கள் பிரச்சினைகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வெட்கக்கேடான முறையில் நடந்து கொண்டிருக்கும் இந்த அரசை எப்படி வீட்டுக்கு அனுப்புவது என மக்கள் புலம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டுமே உள்ள இந்த அமைப்பு முறையில் அது சாத்தியமில்லை என்ற உண்மை முகத்தில் அறைந்தால் போல இப்போது மக்களுக்கு உறைக்க ஆரம்பித்து இருக்கின்றது. தேர்ந்தெடுக்கும் உரிமை போல திருப்பி அழைத்துக் கொள்ளும் உரிமையையும் இருக்குமானால் இந்த அரசை மக்கள் இந்நேரம் ஓட ஓட விரட்டி அடித்து இருப்பார்கள். அப்படியான உரிமையைப் பெற மக்களை ஒன்றிணைத்து இங்கிருக்கும் அமைப்புகள் போராட வேண்டும். ஆனால் அது போன்ற போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும், ஜனநாயக விரும்பிகளும் இதுவரை முன்னெடுத்ததாக நமக்குத் தெரியவில்லை. கீழ்த்தரமான மனிதர்களின் கைகளில் மாட்டிக் கொண்டு அவலநிலையில் வாழும் இந்த நிலை மாறவேண்டும் என்றால் திருப்பி அழைக்கும் உரிமைக்கான போராட்டங்கள் நிச்சயம் நடைபெற வேண்டும் என்பதைத்தான் நடக்கும் நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

இந்த அரசு தானாக கவிழுமா என்று பார்த்தால் சாவதற்கு இழுத்துக் கொண்டிருக்கும் உயிரைப் போல இழுத்துக் கொண்டே இருக்கின்றது. மக்கள் ஏக்கத்துடன் அந்தச் சாவு நடக்காத என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் பேராபத்து என்பதைத் தொடர்ந்து தனது மோசமான செயல்பாடுகளால் வெளிப்படுத்தி வருகின்றது. இந்த அரசை ஒழித்துக் கட்டுவது என்பது மன்னார்குடி மாஃபியா கும்பலையும், கொள்ளைக்காரர்களான ஓபிஎஸ் - இபிஎஸ் கும்பலையும், பிஜேபியும் ஒருசேர ஒழித்துக் கட்டுவதாகும். எதிர்க்கட்சிகள் மக்களுடன் இணைந்து இந்தக் கையாலாகாத அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்த வேண்டும். 18 தொகுதிகள் மட்டுமல்ல மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.

- செ.கார்கி

Pin It