நான் அண்மையில் ரவி வைத்தீசு[1] அவர்களின் தமிழ்த்தேசியம் பற்றிய நூலையும் மற்றும் தேசியம் சார்ந்த சில நூல்களையும்[2,3] படித்தேன். அவற்றிலிருந்து சில முக்கியமான கருத்துக்களைப் பகிர்வதுதான் இந்தக்கட்டுரையின்  நோக்கம்.

maraimalaiadikal bookதமிழ்த்தேசியம் என்பது பொதுவாக  நீதிக்கட்சி , சுயமரியாதை மற்றும் திராவிட இயக்கங்களின் அரசியல் செயல்பாட்டாக மட்டுமே அறியப்படுகிறது.  ஆனால் தமிழ்த்தேசியம் அரசியல் தளத்தில் செயல்படுவதற்கு முன்பாக பண்பாட்டுத்தளத்தில் பெரிய அளவில் செயல்பாடுகள் இருந்தன. இச்செயல்பாடுகளை ஆராய்ச்சியாளர்கள் இதுவரை கண்டுகொண்டதில்லை. அண்மையில் மானிட்டோபா பல்கலையில் பணியாற்றும் இணைப்பேராசிரியர்  ரவி வைத்தீசு அவர்கள் தமிழ்த்தேசிய  ஆரம்பகால வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்து, தமிழ்த்தேசியம் எவ்வாறு பண்பாட்டு தளத்தில் துவங்கியது என்றும் அதில் மறைமலை அடிகள் எவ்வாறு முக்கிய பங்கு வகித்தார்   என்றும் அவருடைய நூலில் விளக்குகிறார்.  

மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப்பொதுவாக அறியப்படுகிறார். ஆனால் இது அவரின் தமிழ்த்தேசிய பங்களிப்பை சுருக்குவதாகும்.  வைத்தீசு அவர்களின் ஆராய்ச்சியின்படி தமிழ்த்தேசிய பண்பாட்டுத்தள ஆரம்பத்தில், அடிகள் அவர்கள் மையப்புள்ளியாக விளங்குகிறார். அடிகளின் தனித்தமிழ் இயக்கம் என்பது தமிழ்த்தேசிய பங்களிப்பில் ஒரு பங்குதான். அவரின் முழு பங்களிப்பைப் பற்றி அறிய, தேசியம்  எவ்வாறு செயல்படுகிறது என்ற புரிதல் அவசியம். அதனால் முதலில் அடிகளின் பங்களிப்பை விளக்கும் முன், தேசியம் எவ்வாறு செயல்படுகிறது என்ற நான் கற்ற நூல்களிலிருந்து மூன்று முக்கிய கருத்துக்களை எடுத்து வைக்கிறேன். பல ஆராய்ச்சியாளர்கள் இக்கருத்துக்களை தெளிவாக விளக்கியுள்ளதால், நான் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. அவர்கள் கூறிய முக்கியமானவற்றை அப்படியே தருகிறேன்.  

1. இறந்தகால வரலாறு தேசியத்தின் எதிர்கால வரலாற்றை தீர்மானிக்கிறது.

கார்ல் மார்க்சு:   மனிதர்கள் தங்கள் எதிர்கால வரலாற்றை தாங்களே படைக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை எப்படி வேண்டுமானாலும் படைப்பதில்லை. அவர்கள்  நிகழ்கால சூழ்நிலையையும், முன்னோர்கள் அவர்களுக்களித்த இறந்தகால வரலாற்றையும் கொண்டே எதிர்காலத்தை படைக்கிறார்கள். முன்னோர்களின் பாரம்பரியம் வாழும் மக்களின் மனதில் ஆழமாக பதிந்து அவர்களை ஆட்டுவிக்கிறது.

புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஏரிக்கு ஆப்சுபாம்:  வரலாறு இல்லாத தேசம் என்பது முரண், ஒரு தேசத்தை உருவாக்குவதே அதன் இறந்தகால வரலாறுதான்.

அந்தோணி சுமித்து:

  • ஒரு தேசிய இயக்கம் தேசத்தின் எதிர்காலத்தை இறந்தகால வரலாற்றின் சாயலில் உருவாக்க முயல்கிறது. தேசத்தின் வரலாறு என்பது ஏதோ பழையது, எந்தவொரு விளைவும் இல்லாதது அன்று. வரலாறு என்பது தேசத்தின் புனிதம், பூர்விக நிலம், பொற்காலம், அடையாளம், அறம், பண்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • ஒரு தேசத்திற்கு எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல இறந்தகால வரலாறும் முக்கியம்; தேசத்தின் பொன்னான இலக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல தேசத்தின் பழைய பொற்காலமும்  முக்கியம்.
  • ஒரு தேசியகருத்தியல் மக்களின் மனதில்  உள்ள  தேசியத்தைப்பற்றிய வரலாற்று நினைவுடன் எவ்வளவு ஒத்துப்போகிறதோ, அதற்கேற்றவாறே கருத்தியலின் திறன், வேகம் இருக்கும். அவ்வாறு இருக்கும்பொழுது மக்களின் பேரெழுச்சி நடக்கும். தங்களின் அன்றாட கவலைகளை மறந்து, பயத்தினை துறந்து பொதுநன்மைக்கு போராடத்தயாராவர்.

2. தேசிய அறிவுசீவிகளின் பங்கு அதிமுக்கியம்

தேசிய இயக்கமென்பது அறிவுசீவிகளால் நடத்தப்படுவது[3]. ஒரு தேசம் தேசிய இயக்கத்தை உருவாக்குவதில்லை.  தேசிய இயக்கம்தான்  தேசத்தை உருவாக்குகிறது.  அறிவுசீவிகளின் முக்கிய செயல்பாடுகள்:

  • வரலாறு இல்லாமல் தேசம் இல்லை என்பதால், அவர்களின் முதல் கடமை தேசத்தின் வரலாற்றை எழுதுவது. இறந்தகால வரலாறு எதிர்கால தேசிய செயல்பாடுகளை தீர்மானிப்பதால், எதிர்கால தேவைக்கேற்றபடி ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியான புனைவு வரலாற்றை எழுதுவது இயல்பு.
  • தேசத்திற்கு பொதுவான பண்பாடு இல்லாத பட்சத்தில், பழைய பழக்கவழக்கங்கள், கட்டுக்கதைகள், நாட்டுப்புறக் கதைகள், சின்னங்கள் ஆகியவற்றைக் கொண்டு தேசிய உயர் பண்பாட்டை உருவாக்குவர்.
  • தேசிய வரலாற்றிற்கு ஏற்ப, அதன் சாயலில்  தேசிய கருத்தியலை உருவாக்குகிறார்கள். அவர்களின்  சிந்தனைத் திறன், மற்றும் கற்பனைகள்தான் தேசிய இயக்கத்தின் செயல்பாடுகளையும், மக்களின் ஈடுபாட்டையும், தேசியத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது.
  • தேசிய சின்னங்களையும், பழைய கட்டுக்கதைகளையும் தாராளமா பயன்படுத்தி மக்களை ஈர்ப்பர். தேசிய எண்ணத்தையும் குறிக்கோள்களையம் மக்களிடம் பரப்புவர்.

3. தேசிய செயல்பாடுகளை அகம் புறம் என இரண்டாகப் பிரித்தல்

ஆசியா ஆப்பிரிக்கா நாடுகளில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக நடந்த தேசியப்போராட்டங்களை ஆராய்ந்து பார்த்தா சட்டர்சி [2] அவர்கள் கீழ்காணும் கருத்துக்களை முன்வைக்கிறார்:

தேசியம் முற்றிலும் ஒரு அரசியல் செயல்பாடு என்பது அடிப்படையில் தவறான பார்வை. காலனி ஆட்சியில் அரசியல் செயல்பாடுகளுக்கு வெகு முன்னதாக, தேசியம் தனக்கென ஒரு சுதந்திரமான தளத்தை அமைத்து வெற்றியடைகிறது. அவ்வெற்றிக்கு பின்னரே முழு சுதந்திரத்திற்கான அரசியற்போர் நடைபெறுகிறது. இதனை ஒரு தேசிய இயக்கம் தன்னுடைய தேசிய செயல்பாடுகளை அகம் புறம் என இரண்டாகப்பிரித்து செயல்படுத்துகிறது 

அகம்: ஒரு தேசத்தின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், தொன்மங்கள் என்று எவையெல்லாம் தேசிய அடையாளம் சார்ந்ததோ, அவை அகம் என்று அடைப்புக்கள் கொண்டுவரப்பட்டன. அகம் என்பது அடையாளம் என்பதனால், தேசியம் இந்த அடையாளத்தை பாதுகாத்தது, குறிப்பாக  காலனி ஆட்சியின்  சட்டதிட்டங்கள் மற்றும் செயல்பாடுகள்  அடையாளத்தை தொடமுடியாதவாறு செயல்பட்டது. அதற்காக பண்பாட்டை மாற்றாமல் இருந்தது என்று சொல்ல முடியாது. தேசியம் இந்த அகத்தில்தான் முழு வீச்சில் தேசிய வரலாற்றிற்கேற்ப, மேற்குலக பண்பாடு அற்ற, ஒரு நவீன பண்பாட்டை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. உணர்வுப்பூர்வமாக மக்களை தாங்கள் ஒரு தேசியம் என்று உணரவைக்கிறது. இத்தளத்தில் தேசியத்தின் முக்கிய செயல்பாடுகள்:

  • தேசியம் தனது பழைய மொழியை சீர்திருத்தி, அச்சு ஊடகம் மூலமாக பரப்பி தேசத்திற்கான ஒரு நவீன மொழியை உருவாக்குகிறது. தேசம் தனது  இறையாண்மையை முதலில் நிலைநாட்டுவது மொழியில்தான்.
  • தேசமெங்கும் கல்விக்கூடங்களை திறந்து நவீன் மொழியையம், தனது அடையாளங்களான கலை, இலக்கியங்களை பரப்பி மக்களை தேசிய அடையாளத்தில் கொண்டுவருகிறது. தேசியம் நாட்டை தனது ஆட்சிக்குக்கீழ் கொண்டுவருமுன் பள்ளிகளை தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவருகிறது.
  • பாரம்பரிய குடும்பம் மற்றும் சமுதாய சீர்திருத்தங்களை செய்ய காலனி ஆட்சியை அனுமதிக்கவில்லை. சீர்திருத்தம் செய்வதற்கான உரிமை  தேசத்திற்கு மட்டுமே உண்டு என்று போராடியது.
  •  அந்நியரின் பண்பாட்டை தழுவினால், தேசிய அடையாளம் அழிந்துபோகும் என்பதால் வீட்டிலும் புரட்சி வெடித்தது.  அந்நிய பண்பாட்டு ஆதிக்கம் வீட்டினில் நுழையாதவாறு பண்பாட்டு புரட்சி நடத்தப்பட்டது.

அகத்தில் வெற்றியை உறுதி செய்து தன் இறையாண்மையை நிலைநாட்டியபின், தேசியம் புறத்தில் இறங்குகிறது.

புறம்: இது பொதுவெளி. இங்கே காலனி ஆதிக்கத்திற்கு எதிராக உலகில்  ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான தத்துவங்களான விடுதலை, உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேசியம் போராடுகிறது. இந்த தளத்தில் மேற்குல முறைகள், தத்துவங்கள் தாராளமாக பின்பற்றப்படுகின்றன.

தமிழ்த்தேசியம்:

இனி எவ்வாறு அடிகளின் தமிழ்த்தேசிய பண்பாட்டு செயல்பாடுகள் அமைந்திருந்தன என வைத்தீசு அவர்களின் நூலின் அடிப்படையில் பார்ப்போம். நான் மேலே கூறிய மூன்று தேசிய செயல்பாடுகளில்,  தமிழ்தேசியத்தை  உருவாக்கிய அறிவுசீவி பாத்திரத்தை  வகித்தவர் அடிகள் என்றால் மிகையில்லை. திராவிடக்கருத்தியலின் பெரும்பங்கு அடிகளிடமிருந்து வந்ததே என்பதை அவரின் பங்களிப்பை அறியும்பொழுது உணரமுடியும். வைத்தீசு அவர்களின் நூலில் கூறப்பட்ட முக்கிய கருத்துக்கள்:

  • அடிகள் வரலாற்றின்  முக்கியத்துவத்தை உணர்ந்தவர். மேற்குல நாடுகள் தங்களுடைய உண்மையான வரலாற்றை உணர்ந்ததால்தான் வலிமையாக உள்ளனர்.  ஆனால் தமிழர்கள் புராண இதிகாசங்களை நம்புவதால்தான் பின்தங்கியுள்ளனர் என நம்பினார். அதனால் நிலையான, திடமான தமிழ்த்தேசியம் அமைப்பதற்கு தமிழர்களுக்கு உண்மையான வரலாறு அவசியம் என்றுணர்ந்தார்.
  •  அவர் ஐரோப்பிய மொழியியல் மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளின்  துணையோடு  தமிழர்களுக்கான வரலாற்றை தமிழ்த்தேசியத்தை குறிக்கோளாகக் கொண்டு கட்டமைத்தார்.  போப்பு, கால்டுவேல், சுந்தரம் பிள்ளை, நல்லசிவம் பிள்ளை  என்று பலர் தமிழ் மொழி மற்றும் வரலாற்றை ஆராய்ந்து ஆங்கில ஆராய்ச்சி இதழ்களில் எழுதியிருக்கின்றனர். ஆனால் அவற்றைத் தமிழில் தமிழ்த்தேசிய நோக்கோடு எண்ணற்ற நூல்களில் எழுதி  பரப்பியவர் அடிகள். அவர் பரப்பிய கருத்துக்கள் சுருக்கமாக :
    •  தமிழர்க்கு ஆரியம் கலவாத வரலாறு உண்டு.
    •  இந்திய துணைக்கண்ட வரலாற்றில், தமிழர்கள் மிகச்சிறந்த சாதனையாளர்கள்.
    • தமிழ்மொழி வடமொழியை விட மிகச்சிறந்தது மூத்தது. இந்தியப்பண்பாடே தமிழர்களிடமிருந்து பிறந்து பிரிந்ததுதான்.
    • சாதிய மற்றும் பெண் கொடுமைகள்  ஆரியத் தாக்கத்தால்  ஏற்பட்டவை என்றும், பண்டையத் தமிழர்கள் பாகுபாடில்லாமல், சமத்துவ சமூகமாக, பெண்கள் உரிமையுடன் விளங்கினார்கள் என்று இலக்கிய வரலாற்றின் உதவியுடன் நிறுவுகிறார்.
    • தமிழரின் நாகரீகம் தொன்மையானது.  பல உலக நாகரீகங்களான எகிப்து, பாபிலோன், ஈப்ரு, சுமேரிய நாகரீகங்களின்  வேர் தமிழர் நாகரீகம்.
    • சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து, வரலாற்றை மீளமைத்தார்.   போப்பு அவர்களின் ஆராய்ச்சியின் உதவியோடு, சைவம் தமிழர் நாகரீகத்திலிருந்து தோன்றியது என்று விளக்குகிறார். இதன்மூலம் சைவ இலக்கியத்தை  தமிழ் இலக்கியம் என்கிறார். சைவத்தை ஆரிய வழக்கங்களிருந்து மீட்டெடுக்க முயல்கிறார்.
    • திருவள்ளுவர், இராமலிங்க அடிகளார் அவர்கள் தமிழரின் தத்துவமாக  எடுத்துரைக்கிறார்.  தமிழரின் தத்துவங்கள் பகுத்தறிவிற்கு ஏற்றவையாகவும், நவீன உலகிற்கு பொருத்தமாகவும்  உள்ளன என்று விளக்குகிறார்.
    • மொத்தத்தில் தமிழர் வரலாற்றை  நவீன எதிர்கால உலகிற்கு ஏற்றவாறு  மொழி மற்றும்  அறிவியல் ஆராய்ச்சிகளைக்கொண்டு தமிழ்த்தேசிய நோக்கோடு கட்டமைக்கிறார்.
  • இவ்வாறு வரலாற்றை எழுதியபின், இதனடிப்படையில் உண்மையான தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்க  பின்வரும்  மொழி மற்றும் சமூக சீர்திருத்தங்களைக்  கோருகிறார். பொதுநிலைக்கழம் ஒன்றை நிறுவி சீர்திருத்தங்களை செயல்படுத்துகிறார்.
    • தமிழரின் வாழ்விற்கும் சிறப்பிற்கும் மொழித்தூய்மை இன்றியமையாதது. தமிழர்கள் திராவிடர்களாக பல மொழிகள் பேசும் குழுக்களாகப் பிரிந்ததற்கு காரணம் மொழித்தூய்மையைப் பேணாததால்தான் என்றுரைத்தார். அதனிடப்படையில் தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தார்.
    • கோவில்களில் சாதிப்பாகுபாட்டை விலக்குதல். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு பயிற்சியளித்தல்.
    • தமிழில் பூசைகள் செய்தல்.
    • சாதி மத வேற்றுமைகளைக் களைதல்.
    • சாதிமறுப்புத்   திருமணங்களை ஊக்குவித்தல்.
  • நீதிக்கட்சி மற்றும் பின்வந்த திராவிட இயக்கங்கள் அடிகளின் கருத்துக்களை பொதுமக்களிடம் தீவிரமாகப் பரப்பின. எடுத்துக்காட்டாக தூயதமிழ் மீட்டல், சங்க இலக்கியங்களை கொண்டு பரப்புரை செய்தல், தமிழிசை மீட்டல், பண்டைய பெண்களின் திறமையும் கற்பையும் வியத்தல்,  ஆரியத்திலிருந்தது வேறுபட்ட தமிழரின் பண்பாட்டையும் தனித்தன்மையை போற்றுதல் என்பன பண்பாட்டுத்தளத்தில் முக்கிய செயல்பாடுகளாக அமைந்தன. சுருக்கமாக திராவிட இயக்கத்தின் பண்பாட்டுத்தள செயல்பாடுகள் "தமிழரின் பண்டைய பொற்கால மீட்பு" என்ற இலட்சியத்தை மையமாகக் கொண்டே அமைந்தது.
  • சுயமரியாதை, திராவிட தமிழ்த்தேச இயக்கங்களின் அடித்தளம் என்பது  அடிகளின் கருத்தியலின் அடிப்படையில் கட்டப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் அடிகளின் கருத்துக்கள் தமிழ்த்தேசிய திராவிட இயக்கங்களின் பரந்த செயல்பாடுகளின் திசையினை தீர்மானித்தன.  திரு.வி.க அவர்கள் அடிகளைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்: "தென்னகம் தன்னை மறந்து பல ஆண்டுகளாக நீண்ட நெடிய தூக்கத்திலிருந்ததது. அத்தூக்கத்தை தட்டியெழுப்பியவர் அடிகள்".

 ஒரு தேசியமமைக்கை அறிவுசீவிகளின் பங்கை மேலே பார்த்தோம். அந்த அறிவுசீவிப் பங்கை வகித்தவர் அடிகள். அவரில்லாமல் தமிழ்த்தேசிய கருத்தியல் இல்லை. அவரின் பங்களிப்பை செந்தமிழ்ச்செல்வி இதழில் காணப்படும் இரங்கல் மிகத்தெளிவாக தெரிவிக்கிறது: செந்தமிழ்ச்செல்வி நூல் என்னிடம் இல்லாததால் ரவி வைத்தீசு அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை அவ்வாறே தருகிறேன்:

 “There can be few among us who would deny the greatness of Maraimalai Adigal. A greater challenge is to correctly assess his supreme contribution to Tamil people. The Tamil we speak, the Tamil we write are all his gifts. Even our Tamil knowledge, our very Tamil patriotism and nationalism, our current Tamil leaders, intellectuals, creative writers, and our contemporary tamil patriots are all rivers and streams that have flown from this great mountain called Maraimalai”.

என்னுடைய பார்வையில் வைத்தீசு அவர்களின் ஆராய்ச்சி தமிழ்த்தேசியத்தை அறிந்துகொள்ள மிக முக்கியம் எனக்கருதுகிறேன். தமிழ்த்தேசியம் என்பது ஒரு அரசியல் செயல்பாடு மட்டுமே என்ற கருத்தை உடைத்து பண்பாட்டுத்தளத்தின் முக்கியத்துவத்தையும் அறிவுசீவிகளின் முக்கியத்துவத்தையும் அறிந்துகொள்ள உதவியிருக்கிறார். பார்த்தா  சட்டர்சியின் ஆராய்ச்சியின் உதவியுடன் பார்க்கும்பொழுது, முதலில் பண்பாட்டுத்தள வெற்றியே பின்வரும் அரசியல் வெற்றியை தீர்மானிக்கிறது என்பது புலனாகிறது.

பயன்படுத்திய நூல்கள்:

  • Vaithees, V. Ravi. Religion and Nation in South India. Maraimalai Adigal, the Neo-Saivite Movement, and Tamil Nationalism, 1876-1950. Oxford University Press India, 2015.
  • Chatterjee, Partha. The nation and its fragments: Colonial and postcolonial histories. Vol. 11. Princeton, NJ: Princeton University Press, 1993.
  • Smith, Anthony D., and Anthony Smith. Nationalism and modernism. Routledge, 2013.

பின் குறிப்பு:

இந்தக்கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் தேசியம் பற்றிய தத்துவங்கள் பார்த்தா சட்டர்சி அவர்களின் தத்துவங்களை  முதன்மைப்படுத்தி, ரவி வைத்தீசு அவர்களின் தமிழ்த்தேசிய பண்பாட்டுத்தள ஆராய்ச்சியின்  துணைகொண்டு விளக்கப்பட்டுள்ளது.  இந்த கருத்துக்கள் ஒரு நிலைப்பாட்டின்  அடிப்படையில் மட்டுமே விளக்கப்பட்டுள்ளது. தேசியம்பற்றிய ஆராய்ச்சியில் பல நிலைப்பாடுகள்  உள்ளன. காரல் மார்க்சு, பெனெடிக்டு அர்னால்டு, எரிக்கு ஆப்சுபாம் ஆகியோரைப்பற்றி நான் இங்கு கூறினாலும், அவர்களின்  தேசியம் பற்றிய நிலைப்பாடுகள் வேறானவை. இவற்றைப்பற்றி மேலும் கற்க  அந்தோணி சுமித்து நூலைப்  படிக்கவும்.

சு.சேது

Pin It