பார்ப்பனியம் வரலாற்றில் எவ்வளவோ சித்தாந்தங்களை அழித்திருக்கின்றது. இந்தியாவில் தோன்றிய பல தத்துவ தரிசனங்கள் எல்லாம் இன்றைக்கு எழுத்தளவில் மட்டுமே படித்துத் தெரிந்து கொள்ளும் நிலையில் தான் நாம் இருக்கின்றோம். அதுவும் கூட பார்ப்பனியம் அழித்தது போக, மீதமுள்ள எச்ச சொச்சங்களைத்தான். அதனால் சாங்கியத்தையும், உலகாயதத்தையும், நியாய வைசேடிகத்தையும் முற்றிலுமாக அழிக்க முடிந்தது, சமணத்தையும், பெளத்தத்தையும்கூட செரிக்க முடிந்தது. முதலில் தனக்கு  எதிரான கருத்தியலோடு போராடும்; முடியவில்லை என்றால் அந்தக் கருத்தியலை செரிப்பதற்கு அந்தக் கருத்தியலின் கூறுகளை எல்லாம் தனதாக்கிக் கொள்ளும். இப்படித்தான் அது வரலாற்றில் தன்னோடு தோன்றிய அனைத்துச் சித்தாந்தங்களையும் இல்லாமல் செய்தது. ஆனால், அதனால் அன்று முதல் இன்றுவரை அழிக்கவும் முடியாமலும், செரிக்கவும் முடியாமலும் பார்ப்பனியத்தின் குரல்வளையை நெறித்துக் கொண்டிருக்கும் ஒரு சித்தாந்தமாக திராவிட சித்தாந்தம் மட்டுமே இருக்கின்றது. மற்ற மாநிலங்களில் எல்லாம் பார்ப்பனியம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள முடிந்தபோது, தமிழகத்தில் பார்ப்பனியம் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டது. இதுதான் திராவிட இயக்கங்களின் வெற்றி.

periyar 28ராமனையும், பிள்ளையாரையும் வைத்து மற்ற மாநிலங்களில் பார்ப்பனியம் தனது வெற்றியை நிலைநாட்டிக் கொண்டு இருக்கும் போது, தமிழகத்திலோ அதே ராமனையும், பிள்ளையாரையும் செருப்பால் அடித்து, திராவிடம் தன்னுடைய வெற்றியை நிலைநாட்டியது. இன்று வரை பார்ப்பனியத்திற்கு நினைத்தாலே சிறுநீர் கழிக்கும் பயத்தை இந்தியாவில் தந்துகொண்டு இருப்பது திராவிட சித்தாந்தமும், அதன் தலைவர் பெரியாரும் தான். தமிழகத்தைப் பொருத்தவரை சாதியம், மதவாதம், மூடநம்பிக்கை என பார்ப்பனியம் எதன் மீது எல்லாம் கட்டமைக்கப்பட்டதோ, அதன் அடித்தளத்தின் மீதே திராவிட இயக்கம் தாக்குதல் தொடுத்தது. அது பெரும்பான்மைத் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளவும் பட்டது. அப்படி தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான் இங்கே திகவில் இருந்து வெளியேறி, திமுக தேர்தல் பாதையைப் பின்பற்றும் கட்சியாக தன்னை அடையாளப்படுத்தியபோது, அதை தமிழக மக்கள் ஆதரித்தார்கள். இன்னமும் அதை ஆதரித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இது தமிழ்நாட்டு மண்ணுக்கே உரிய தனித்தன்மை. இங்கே நீங்கள் யாரிடம் வேண்டும் என்றாலும் நாத்திகம் பேசலாம், இந்துமதக் கடவுள்களை அம்பலப்படுத்தலாம், ஏன் கடவுளின் சிலைகளை செருப்பால் கூட அடிக்கலாம். அதை யாரும் பெரிய செய்தியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இப்படி ஒரு அசாத்தியமான தன்மையை இங்கே ஏற்படுத்தியது பெரியாரும், திராவிட இயக்கங்களும் தான். ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்கியது திராவிட இயக்கங்கள் தான்.

  தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்காக என்னென்னமோ செய்து பார்த்தார்கள். மோடியை அழைத்து வந்து மாநாடு நடத்தினார்கள், அமித்ஷாவை அழைத்து வந்து தலித் இயக்கங்களை ஒருங்கிணைக்கும் வேலையைப் பார்த்தார்கள், தமிழிசை இனி தினம் ஒரு வேளை சாப்பாடு தலித்வீட்டில் தான் சாப்பிடுவேன் என சத்தியம் செய்தார். இன்னும் சில பேர் தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டை போட்டுக் கொண்டு முஸ்லிம் தீவிரவாதிகளின் வெறிச்செயல் என பீதியைக் கிளப்பினார்கள். தவறான பெண்தொடர்புகளால் கொலை செய்யப்பட்டவர்களை எல்லாம் தேச பக்தர்களாக, இஸ்லாமிய தீவிரவாதத்தால் உயிர் இழந்த பாரத மாதாவின் புதல்வர்களாக்க முயன்றார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்ததுடன் அவை அனைத்தும் பிரியாணி திருடர்களின் சதி என்பதும் அம்பலமானது. இனி தமிழ் நாட்டில் பிழைத்திருக்க வேண்டும் என்றால் ஒரே வழி திராவிடம் என்ற சித்தாந்தத்தை அழிப்பதை விட, ஆரியத்துக்குத் திராவிட ஒப்பனை செய்து, அதையே உண்மையான திராவிடம் என கட்டமைப்பதுதான் என முடிவு செய்துவிட்டார்கள். 

 நேற்றுவரை தமிழ்நாட்டு மக்கள் திராவிட கட்சிகளைப் பார்த்து சலித்துவிட்டார்கள், திராவிட பூமி, திராவிடக் கொள்கை என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை, திராவிட கட்சிகளுக்கு நாங்கள் தான் மாற்று என்றும், திராவிட இயக்கத்தை போகியில் எரித்து பொங்கல் கொண்டாட வேண்டும் என்றும் சொல்லி வந்த இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற பார்ப்பன, சூத்திர கேடிகள் இன்று பாஜகதான் உண்மையான திராவிடக் கட்சி என சொல்ல ஆரம்பித்து இருக்கின்றனர். நாளை   ராமகோபாலன் தான் தமிழ்நாட்டின் உண்மையான பெரியார் என்று சொன்னாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. திராவிட சித்தாந்தத்தின் மீதும் திராவிட அரசியலின் மீதும் தனக்கிருக்கும் வரலாற்றுப் பகையை, தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி தீர்த்துக்கொள்ள அது பார்க்கின்றது. அதிமுகவிற்கும் பிஜேபிக்கும் கொள்கையில் பெரிய வேறுபாடு இல்லை என்று வெங்கயா நாயுடு சொன்னார். இதன் மூலம் அது பிஜேபியை அதிமுகவிற்கு மாற்றாக முன்வைக்க முயற்சி செய்தது. இப்போது அதிமுக அழிந்துவிட்டது, திமுக அழிந்து கொண்டிருக்கின்றது என்ற அரிய உண்மையைப் பொன்னார் அவர்கள் கண்டுபிடித்துள்ளார்.

  ஒரு சட்டமன்ற உறுப்பினரைக்கூட பெறத் துப்பில்லாத இந்த அரசியல் அநாதைகளுக்கு தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசை வந்திருக்கின்றது. ஆனால் ஆசை வெட்கம் அறியாது என்பது போல கள நிலவரத்தைச் சுத்தமாக மறந்துவிட்டு, வெறி நாய்களைப் போல காரணமே இல்லாமல் குரைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு போதும் காவி பயங்காரவாதிகளை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த போது, அந்தப் பக்கம் பிஜேபியினர் போனார்களா எனத் தெரியவில்லை. போயிருந்தால் அங்கே பிஜேபிக்கு எதிராக எழுந்த முழக்கங்களைக் கேட்டு நாண்டு கொண்டு செத்திருப்பார்கள். நெடுவாசல் போராட்ட களத்திற்குப் போன எச்சிக்கலை ராஜாவை அந்த ஊர் மக்கள் ஓட ஓட விரட்டி அடித்து இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் பிஜேபிக்கு  இருக்கும் ராஜமரியாதை இவ்வளவுதான். தமிழ்நாட்டு மக்கள் பிஜேபியை ஏதோ மூளை இல்லாதவர்களின் கட்சி என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். அதனால் தான் அது தமிழ்நாட்டில் எங்கு கூட்டம் நடத்தினாலும் ஊரில் சும்மா சுற்றிக்கொண்டு இருக்கும் நாய்கள் மட்டுமே நின்று விநோதமாக வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளது. பத்து பெஞ்சு போட்டு மாநாடு நடத்தினால் கூட அதில் ஒன்பது பெஞ்சு காலியாக இருக்கும் நிலையில், எந்தத் தைரியத்தில் இந்த ஜென்மங்கள் எல்லாம் ஆட்சியைப் பிடிக்க அலைகின்றார்கள் என்று தெரியவில்லை.

ponnar tamizhisai hraja

 தமிழ்நாட்டில் ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருக்கின்றது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்காக மக்கள் பிஜேபியை ஆதரிப்பார்கள் என்று நினைத்து உணர்ச்சிப்பெருக்கில் ‘நாங்கள் தான் உண்மையான திராவிட கட்சி’ என்று சொல்லும் நிலைக்கு செல்வது மனநிலை பிறழ்ந்த நிலையாகும். தமிழ்நாட்டில் உள்ள பாஜக –ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார கேடிகள் எல்லாம் இப்போது இப்படித்தான் மனநிலை பிறழ்ந்த நிலையில் சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இத்தனை ஆண்டுகாலம் திராவிட இயக்கங்களுக்கு எதிராக திட்டமிட்ட முறையில் எவ்வளவோ புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டும், தமிழ் நாட்டில் சீண்டுவார் யாருமின்றி அற்பப் பதர்களாக மக்கள் பார்க்கும் இந்த நிலைமையை எண்ணி, எண்ணி மூளை குழம்பிப் போய், என்ன செய்கின்றோம், என்ன பேசுகின்றோம் என்பது புரியாமல் சுற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இனி தங்களுடைய பேச்சைக் கேட்காத தமிழக மக்களை தமிழிசை, எச்சிக்கலை ராஜா, இல.கணேசன், பொன்னார் போன்றவர்கள் கடித்து வைப்பது மட்டும்தான் பாக்கி. அதனால் தமிழக மக்கள் எவனாவது பிஜேபிகாரனைப் பார்த்தால் கொஞ்சம் உசாராக நடந்துகொள்ளவும். பாம்புக்கு பல்லில் மட்டும்தான் விஷம், இந்த பிஜேபிகாரனுக்கு உடம்பெல்லாம் விஷம்.

 எனவே தமிழ்நாட்டில் அநாதையான ஆரியம் இப்போது திராவிட முகமூடி அணிந்து வருவதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் நன்றாக உற்று பாருங்கள்... ஆரியம் முகமூடி அணிந்து வந்தாலும், அம்மணமாகவே வரும். அதை வைத்து நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். ஆரியத்துக்கு வரலாற்றில் வெட்கம், மானம், சுயமரியாதை  போன்றவை என்றால் என்னவென்றே தெரியாது. அதனால் அதைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமல்ல.

- செ.கார்கி

Pin It