இந்தியா முழுதும் பிற்போக்குத்தனங்களும், சாதிய மேலாதிக்கமும் நிறைந்திருக்கிறது. ஆரியப் - பார்ப்பனிய  - இந்துத்துவ கும்பல் இந்திய ஒன்றியத்தின் அனைத்துத் தேசிய இனங்களின் வளங்களையும் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. மதத்தின் பெயரால் நாள்தோறும் கலவரங்களும், படுகொலைகளும் இந்தியா முழுவதும் நிகழ்த்தப்படுகின்றன. மாட்டுக் கறி வைத்திருந்தவர்கள் என்று சொல்லி ஒடுக்கப்பட்ட மக்களையும், சிறுபான்மை மக்களையும் காவி வெறிக் கும்பல் அடித்துக் கொலை செய்கிறது. ஆரியப் - பார்ப்பனியத்தின் சூழ்ச்சிப் போக்குகளிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட தன் இறுதி மூச்சு வரை போராடியவர் தந்தை பெரியார்.

ஆனால், அத்தகைய தமிழ்நாட்டினைக் கூறுபோட்டு விற்றிட இன்றைக்கு ஆரியப் - பார்ப்பனிய இந்துத்துவக் கும்பல்களை பெருமளவில் களமிறங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டையும், இயற்கை வளங்களையும், தனித் தன்மைகளையும் இந்தக் கும்பல்களிடமிருந்து காக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டினர்  அனைவருக்கும் இருக்கிறது. தமிழ்நாட்டு வளங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு சுரண்டிக் கொடுக்கும் ஆர்.எஸ்.எஸ். - இந்துத்துவக் கும்பலை அச்சுறுத்தும் பெரு நெருப்புகளுள் தந்தை பெரியார் எனும் ஆயுதம் முதன்மையானது.

தமிழ்நாட்டினை முழுமையாக அடிமைப்படுத்தி ஆக்கிரமிக்க இன்று பார்ப்பனியம் சதி செய்து கொண்டிருக்கிறது.

  • இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டின் மேல் திணித்துக் கொண்டிருக்கிறது.
  • காவிரி கடைமடைப் பகுதியினை மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுத்து பாலைவனமாக்கும் சதி நடக்கிறது.
  • தேனியில் நியூட்ரினோ திட்டத்தினை அமைத்து அறிவியல் அழிவிற்கான சோதனைக் கூடமாகத் தமிழ்நாட்டை மாற்றுகிறார்கள்.
  • தமிழர் கடலை அன்னிய நிறுவனங்களின் வேட்டைக் காடாக மாற்ற, மீனவர்களை வெளியேற்றும் சட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்.
  • நீட் தேர்வினைத் திணித்தும், புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரிலும் தமிழ்நாட்டின் கல்வி உரிமையை முழுமையாய்ப் பறித்து வருகிறார்கள்.
  • ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு என்கிற பெயரினால் தமிழ்நாட்டின் நிதி வலிமை முறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவற்றையெல்லாம் இந்தியப் பார்ப்பனியம் தன் அதிகாரத் திமிரோடு செயல்படுத்திக் கொண்டுள்ளது.

இந்த அநீதிகளையெல்லாம் எதிர்த்து நின்று முறியடிக்காவிட்டால் நம் கண் முன்னே தமிழினம் தமிழ்நாட்டில் வீழ்வதை நாம் பார்க்க நேரிடும்.

  • தமிழினத்தின் எதிரிகளுக்குச் சிம்மசொப்பனமாக இன்றும் இருப்பவர் பெரியார்.
  • அவரின் கருப்புச் சட்டையும் கைத்தடியும் நமக்குப் போர்க் கருவிகள்.
  • கடந்த காலங்களில் கருப்பு சட்டைகள் களம் கண்ட இந்த மண்ணில் இன்று காவிக் கூட்டங்கள் ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கின்றன.
  • “காவி எங்கள் நிறமல்ல! கருப்பே எங்கள் நிறம்” என்பதை உரக்கச் சொல்ல வேண்டிய தேவை நமக்கிருக்கிறது.

தமிழ்நாட்டின் வளங்கள் தமிழருக்கே! தமிழ்நாடு தமிழருக்கே! என்ற பெரியாரின் கொள்கைகளை அடையாளப்படுத்தும், கருப்புச் சட்டையுடன் நாம் திரள வேண்டியது வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. பெரியாரிய உணர்வாளர்கள் தங்கள் வலிமையினைத் திருச்சியில் காட்டுவோம்! பல்லாயிரக்கணக்கில் தோழர்கள் திருச்சி மண்ணில் திரண்டு நிற்போம்!

ஆரியம் மிரள கருப்பர்கள் கூட்டம் திரளட்டும்! சாதி, மதங்களைத் தூக்கியெறிந்திடும் தமிழர்களாய்த் திரள்வோம்! இயக்கம் - கட்சி அடையாளங்களைக் கடந்து கருப்புச் சட்டை திருச்சியை நிரப்பட்டும். பெண்களே! இளைஞர்களே! மாணவர்களே! அனைவரும் வாருங்கள்.

சாதி, மதமற்ற, பெண் அடிமைத்தனம் ஒழித்திடும், வல்லரசியத்தை எதிர்த்திடும் உழைக்கும் தமிழக மக்களுக்கான தமிழ்நாட்டினை மீட்போம்!

- பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு

Pin It