Anaaroonaaதூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் குறித்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறிய கருத்துக்கள், வழக்கம் போல் ஆசாரக் கள்ளர்களாலும், சிந்தனைக் குள்ளர்களாலும் நாகரிகமற்ற முறையில் கேலிக்கும் கிண்டலுக்கும் இலக்காகியிருக்கின்றன. குடியரசுத் தலைவர் எனும் உயர்ந்த பீடத்தில் இருக்கும் ஒருவர் மனிதாபிமானம், கருணை என்றெல்லாம் பேசலாமா? கருணை, இரக்கம், மன்னிப்பு, மனிதாபிமானம் போன்ற தீயகுணங்கள் ‘சமூக ஒழுங்கை’ச் சீர்குலைத்து விடும் என்று ஆவேசம் கொள்கிறார்கள். மனிதாபிமானத்தின் கறைபடாத சமூகத்தை உருவாக்குவதில் இந்த விபரீத மனிதர்கள் பாசிசத்தின் சகல பரிமாணங்களையும் வலியுறுத்துகிறார்கள்.

19-ஆம் நூற்றாண்டின் இறுதி வரையிலும்கூட உலகின் பெரும் பகுதியில் மன்னராட்சி முறையே இருந்தது. அரசன் என்பவன் தெய்வீக உரிமை பெற்றவனாகவே கருதப்பட்டான். அனைத்துக்கும் அவனே ஆதியும் அந்தமுமாய் இருந்தான். அவனைச் சுற்றிலும் உல்லாசிகளின் கூட்டம். இந்த உல்லாசிகளின் கேளிக்கைகள் மாத்திரமல்ல, தண்டனைகளும்கூட குரூரமாகவே இருந்தன. மன்னன் தனது ராணிகளுக்கும் ஆசை நாயகிகளுக்கும் வேடிக்கை காட்டுவதற்காகவே சிறையிலுள்ள கைதிகளை மோதவிட்டு, ஒருவனை ஒருவன் கொல்லுமாறு உத்தரவிட்டு, சண்டையிலே கொல்லப்படும் கைதியின் மரண வேதனையைக் கைகொட்டி ரசித்த காட்சிகளும் உண்டு. இம்மாதிரியான கொடுமைகளைச் சகிக்க முடியாமல் தான் - “சிரம் அறுத்தல் வேந்தர்க்குப் பொழுதுபோக்கு” என்று புரட்சிக் கவிஞர் நெஞ்செரிந்து பாடினார்.

கொடுமைப்பட்ட மக்களின் கோபாவேசம் பிரெஞ்சுப் புரட்சியாய் வெடித்து, உலகையே குலுக்கியது. அந்தப் புரட்சியினால் புதிய சிந்தனைகள் வீரியம் பெற்றன. முதலாளித்துவ ஜனநாயகமும், சோஷலிச அமைப்பு முறையும் மலர்ந்தன. மன்னராட்சியைத் தூக்கியெறிந்த பல நாடுகள், முதலாளித்துவ ஜனநாயகம் முந்திய சமூக அமைப்புகளையும் அரசு முறைகளையும் விட முற்போக்கானது என்று தம் நாட்டு மக்களை நம்ப வைப்பதற்காவது பழைய சட்டங்கள், நீதி பரிபாலனங்கள், மரபுகள், பண்பாடுகளை மறுபரிசீலனை செய்தன. குறிப்பாக வழக்கு விசாரணைகள், தண்டனை முறைகளில் பல மாற்றங்கள் நேர்ந்தன. முந்திய ஆட்சியின் போது தண்டிக்கப்பட்ட தலைவர்கள் சிறையில் பெற்ற அனுபவங்களால், பிணையில் வருதல், மேல் முறையீடு செய்தல், சிறையில் சில சலுகைகள் என்று பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. மரண தண்டனை கேள்விக்குரியதானது.

Kalamதூக்குத் தண்டனை அல்லது மரண தண்டனை என்பது குற்றத்துக்கான தீர்வோ, குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரமோ ஆகிவிடாது. சமூகத்தில் ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்கு வேண்டுமானால், மரண தண்டனை ஒரு வாய்ப்பாக அமையலாம். ஆனால், அச்சுறுத்தல்களால் ‘தார்மீக’ ஒழுக்கங்களைக் கட்டிக் காக்கவோ, குற்றங்களை ஒழித்துக் கட்டவோ முடியாது. தண்டனை என்பது திருத்தும் முயற்சி அல்லது திருந்துவதற்கான வாய்ப்பு என்கிற முறையில் இருக்க வேண்டும்” என்று பல சமூக ஆர்வலர்களும் சிந்தனையாளர்களும் முன்வைத்த கருத்துக்கள் ஆட்சியாளர்களையும் சிந்திக்க வைத்தன. முதலாளித்துவ ஜனநாயக முறையில் ஆளும் வாய்ப்பு கட்சிகளுக்கிடையே மாறிமாறி வரும். பதவி இழந்த கட்சி பழி வாங்கப்படும். இந்த எதார்த்தத்தை எதிர்கொண்ட போது, தீர்ப்பிலே ‘சந்தேகத்தின் பலன்’ சிறையிலே சீர்திருத்தங்கள் என்று தொடங்கி கருணைமனு, மரண தண்டனை ரத்து என்கிறவரை மாற்றங்கள் நேர்ந்தன. அடிப்படையில், செல்வந்தர்களையும், செல்வாக்குள்ளவர்களையும் பாதுகாக்கும் முயற்சி இது. இதன் பலன் சில நேரங்களில் வறியோர்க்கும் கிடைத்தது.

நோக்கம் எதுவாக இருந்தாலும் இந்த மாற்றங்கள் பண்பட்ட சமூகத்தின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. பல நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருதி இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் தூக்குத் தண்டனையை விலக்க வேண்டும் என்று தமது கருத்துக்களை வெளியிட்டார். ஆரோக்கியமான இதயமும், எண்ணமும் உள்ளவர்களால் குடியரசுத் தலைவரின் கருத்து வரவேற்கப்பட்டது. ‘சோ’ போன்ற பாசிஸ்ட்டுகளால் அது குதர்க்கமான முறையில் விவாதத்துக்குள்ளானது.

“ராஜீவ் கொலையாளிகள், வீரப்பன் கூட்டாளிகள் உள்பட தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை, பல வருட சிறைத் தண்டனை போன்றவற்றைப் பெற்று, சிறையில் இருந்து வரும் சுமார் 40 கைதிகளுக்குக் கருணை காட்டுமாறு மத்திய அரசுக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் சிபாரிசு செய்திருக்கிறார்” என்று பத்திரிகைச் செய்திகள் வெளியாகின. கருணை மனுக்களின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ள சிபாரிசு இது என்றும் அச்செய்திகள் கூறுகின்றன” என்று விஷமத்தனமாக ‘சோ’வானவர் தலையங்கம் எழுதுகிறார்.

ராஜீவ் கொலையாளிகள், வீரப்பன் கூட்டாளிகள் என்றெல்லாம் குடியரசுத் தலைவர் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. உள்நோக்கத்துடனும், அவதூறு கற்பிக்கும் வகையிலும் ‘சோ’ தான் இப்படி எழுதுகிறார் (துக்ளக் 2-11-2005). சோவின் விஷமத்தனத்தில் புழுத்த பகுதிகளை மேலும் பார்ப்போம்.ராஜீவ்காந்தியின் மரணத்தால் பெரிதும் இடிந்து போயிருந்தார் சோனியா காந்தி. சில ஆண்டுகளுக்கு முன் தன் அன்னைபோல் விளங்கிய மாமியார் இந்திரா மறைந்தார். இப்போது கணவரையும் இழந்தாகின்றது. துயரம் அழுத்திய அந்த நேரத்திலும் அவர் இதயத்தில் கருணை மணம் வீசியது.

கொலையாளிகள் என்று கருதப்படுகிறவர்களை நான் வெறுப்பதால் எனக்கு ஆறுதல் கிடைத்து விடுமா? அவர்களை அப்போதே நான் மன்னித்து விட்டேன்!” என்று கூறினார் சோனியா காந்தி. ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து தொழுநோயாளிகளுக்கும்கூட சிகிச்சையும் பணி விடையும் செய்தார் ஒரு பாதிரியார். ஒருநாள் அவரையும் அவருடைய இரு குழந்தைகளையும் அவருடைய காரிலேயே பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொலை செய்தார்கள் இந்து மத வெறியர்கள். அந்த நெருப்பு வேளையிலும் அவருடைய மனைவி, “தொண்டு என்று வரும்போது, சோதனைகளையும் தாங்கித்தானே ஆகவேண்டும். கொலையாளிகளை இறைவன் ஆசிர்வதிக்கட்டும்” என்றார்.

இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் சோவானவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

“பதிபக்தி இல்லாதவர்கள். குற்றவாளிகளை ஆதரிக்கிறவர்கள். அதனால் இவர்களும் குற்றவாளிகளே!” என்றுதான் பாசிச மூளை சிந்திக்கும். ‘கொல்! அது பாவமில்லை. அதுதான் தருமம். வென்றால் ஆஸ்தி; தோற்றால் சொர்க்கம்” என்று போதிப்பதுதானே கீதை! ‘கருணை’யை இவர்கள் அனுமதிப்பார்களா?

“ஜனாதிபதியின் அலுவலகம், எல்லோருக்கும் ஒட்டு மொத்தமாகக் கருணை காட்டுமாறு கூறப்படவில்லை என்று விளக்கம் அளித்திருப்பதாக ஒரு செய்தி வெளியாகியது. ஆக, சிலருக்குக் கருணை காட்டப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறியிருக்கிறார். பொதுவாக இவ்விஷயத்தில் மனிதாபிமானம் காட்டப்படவேண்டும் என்றும், இம்மாதிரி கைதிகளை சமூகத்திற்கு உபயோகமானவர்களாக மாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அவர் தரப்பு விளக்கம் கூறுகிறது. இப்படி நினைப்பது ஜனாதிபதி மட்டும் அல்ல. பல ‘மனிதாபிமானிகள்’ இப்படி அடிக்கடி வலியுறுத்துகிறார்கள். ‘தூக்குத் தண்டனை கொடுப்பது பழிக்குப் பழி வாங்குவதுபோல’ என்பது இவர்கள் கருத்து, அதாவது கொலை செய்தவனை, சட்டம் தூக்கிலிடுவது, பழிக்குப் பழி வாங்குகிற வெறிச் செயல்.

விடுதலைப் புலிகளையே எடுத்துக் கொள்ளலாம். அந்த அப்பாவிகளுக்கு, ராஜீவ் காந்தி மீது கோபம். கோபம் வந்தால் கொலை செய்வதுதானே மனிதர்களின் வழக்கம்! அதனால் கொலை செய்தார்கள். இதற்கு தூக்குத் தண்டனையா? என்ன நியாயம் இது? அதே போல வீரப்பனுக்கு, சந்தன மரம் கடத்துகிற சுதந்திரத்தையும், சிலரைச் சுட்டுத் தள்ளுகிற அடிப்படை உரிமையையும், இந்த ஜனநாயகம் மறுத்ததால் - அவன் பலரைக் கொன்றான்; அவனுடைய கூட்டாளிகளும் கொன்றார்கள். இதற்காக அவர்களை தூக்கிலிடுவதா? அவர்கள் உயிர் என்ன அவ்வளவு மலிவானதா? போலீஸ்காரர்களும், சாதாரண மக்களும் செத்தது, அவர்கள் தலை விதி. அதற்காக வீரப்பன் கூட்டாளிகளுக்குத் தூக்குத் தண்டனையா? ஐயோ! கொடுமை, கொடுமை ஐயா! சரி, அப்படியானால் அம்மாதிரி கொலையாளிகளை என்ன செய்ய வேண்டும்? ஆயுள் தண்டனை கொடுக்கலாமா? சுப்ரீம் கோர்ட் இப்போது விளக்கி இருக்கிற மாதிரியான ‘ஆயுள் முழுதும் தண்டனை’ என்பது இல்லா விட்டாலும் - பதினான்கு வருடம் தண்டனை என்று விதிக்கலாமா? அது மட்டும் எப்படிச் சரியாகும்? பல வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு, அந்த மனிதன் என்ன செய்வான் பாவம்? ஏதோ ஒரு கொலை செய்து விட்டான் என்பதற்காக, ஒரு மனிதனைப் பிடித்து, பல வருடங்கள் சிறையில் அடைப்பது வெறித்தனம் அல்லவா?

Cho. Ramasamyஇது தவிர, இந்த மாதிரி பெரிய குற்றம் அல்லாமல், சாதாரண குற்றங்கள் பலவற்றிற்காக பலர் சிறை தண்டனையை அனுபவிக்கிறார்களே - அவர்களை என்ன செய்வது? அவர்களுக்கு மட்டும் ஜனாதிபதியின் கருணை கிடையாதா? ஏதோ பாவம், ஒரு உணர்ச்சிவசத்தில், ஒருவன் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டால் அவனுக்குப் பல வருடம் சிறைத் தண்டனை அளிப்பதும் கொடுமை தானே! அவனுக்கும் கருணை காட்ட வேண்டியதுதானே! பிக்பாக்கெட்டிலிருந்து, கொலை வரை, கற்பழிப்பு உட்பட, பல குற்றங்கள் நடக்கின்றன. இவர்களை எல்லாம் என்ன செய்யலாம்? தண்டனை என்பது பழி வாங்குதல்; அது கூடாது. சமூகத்திற்குப் பயன் உள்ளவர்களாக இவர்களை மாற்ற வேண்டும்; அதுதான் சரியான வழி.

அதை எப்படிச் செய்வது? ஒரு குற்றம் நடந்தவுடன், போலீஸ் விசாரணை நடத்தி, குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி, வழக்கு நடத்தி, அவன் குற்றவாளிதான் என்று தீர்ப்பு வந்து, ஒரு வழியாக அப்பீல் எல்லாம் முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டது என்ற இறுதித் தீர்ப்பும் வந்த பிறகு, மனிதாபிமானம் தனது வேலையை ஆரம்பிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்ட மனிதர் (குற்றவாளி என்று சொல்வதும்கூட, காட்டு மிராண்டித்தனமோ, என்னவோ!) - அவர் கொலையாளியாக இருந்தாலும் சரி, திருடனானாலும் சரி, கற்பழித்தவர் ஆனாலும் சரி, மோசடி செய்தவரானாலும் சரி - சமூகத்திற்குப் பயனுள்ளவராக மாற்றப்பட வேண்டும். அவருக்கு உபதேசங்கள், அவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் நடக்கும்; அல்லது காந்தியம் கற்பிக்கப்படலாம்; அல்லது தியான முறை சொல்லித் தரப்படலாம்; இந்த வகுப்புகள் முடிந்தபிறகு, அவருக்கு நல்ல, ஒரு அந்தஸ்து உள்ள வேலை தரப்படலாம். ஒரு அந்தஸ்து இருந்தால்தானே சமூகத்திற்குப் பயன் உள்ளவராக அவரால் மாற முடியும்? அவருக்கு ஒரு டாக்டர் பட்டமும் கொடுத்தால், இன்னும் கொஞ்சம் மனிதாபிமானமாக இருக்கும். இப்படிப் பல மனிதர்கள் (குற்றவாளிகள்) நடத்தப்பட்டால், கொலைகள், குற்றங்கள் அறவே ஒழிந்து விடும்!

Ramagopalanஇந்த மாதிரி அசல் வடிகட்டின பித்துக்குளித்தனத்தை என்ன செய்வது? மனிதாபிமான சுவரில் போய் முட்டிக் கொள்ள வேண்டியதுதான். இந்த நோய், ஜனாதிபதியையும் பீடித்ததுதான் இப்போதைய பிரச்னை. நல்ல வேளையாக மத்திய அரசு, இந்த மயக்கத்தில் வீழ்ந்து விடவில்லை. மத்திய அரசை மீறிய மனிதாபிமானத்தைக் காட்ட ஜனாதிபதியால் முடியாது கொலையாளிகள் தப்பிக்க மாட்டார்கள்; சமுதாய ஒழுங்கு தப்பித்தது.”

‘மத்திய அரசை மீறிய மனிதாபிமானத்தைக் காட்ட ஜனாதிபதியால் முடியாது’ என்பதால் சமுதாய ஒழுங்கு தப்பித்தது - என்று சமாதானமடைகிறார், இந்த கண்டிப்பு மிகுந்த ஒழுக்க சீலர்.

‘ஒரு குற்றம் நடந்தவுடன் போலீஸ் விசாரணை நடத்தி, குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி, அவர் குற்றவாளிதான் என்று தீர்ப்பு வந்து, ஒரு வழியாக அப்பீல் எல்லாம் முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டது என்ற இறுதித் தீர்ப்பு வந்த பிறகுதான்’ தண்டனை என்பதை ராஜ முத்திரை பெற்ற மனுதர்மவாதியால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. ஒரு குற்றம் நடந்தால், அதற்குக் காரணமானவர் என்று யார்மீது சந்தேகம் எழுகிறதோ அவரை - குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபருக்கு மரியாதை ஏன்? - அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே அங்கேயே சுட்டுக் கொன்றுவிட வேண்டும். துப்பாக்கிக் குண்டுகளைச் செலவிடுவதுகூட பொருளாதார விரயமாகும். கல்லால் அடித்தோ நாய்களை ஏவிக் கடிக்கவிட்டோ கொன்று விட வேண்டும். ‘சமூக ஒழுக்கத்தின்’ அவசியம் குறித்து நாய்களுக்கு அக்கறை இருக்க முடியாது என்பதால், ‘தர்மத்தின்’ சத்திய ஆவேசம் நாய்களுக்கு ஏற்பட முடியாது என்பதால் சோ போன்றவர்களை விட்டே கடித்துக் குதறுமாறு செய்யலாம். அப்படித் தானா? ‘சமூக ஒழுக்கவாதி’யின் இந்தத் தீர்ப்பை ‘குற்றவாளி’ என்று சந்தேகிக்கப்படும் எவனுக்கும் வழங்கலாமா?

காஞ்சி சங்கராச்சாரியும் குற்றவாளியாகக் கருதப்பட்டு, போலீஸ் விசாரணை நடத்தி, சட்டத்தின்முன் நிறுத்தி, பிணையில் வெளியே விடப்பட்டு, மேல் முறையீடு, (அப்பீல்) அதற்கு மேலும் முறையீடு என்று போய் வழக்கு நடந்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஜனநாயகம் நடத்துகிற கேலிக் கூத்து. இப்படிக் கூத்தடித்தால் சமூக ஒழுங்கு என்ன ஆவது? சங்கராச்சாரியை ஆந்திரத்தில் பார்த்தவுடனேயே அடித்தே கொன்றிருக்க வேண்டும். அப்படித் தானே!

‘ரத யாத்திரை’, ‘கர சேவை’ என்கிற பெயரில் மதவெறியர்களைத் திரட்டி பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கிய நடவடிக்கையில் அத்வானியும், சில ‘சங்கப்பரிவாரத் தலைவர்களும்’ குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, வழக்கு நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. இது அடுக்குமா? ‘சமூக ஒழுக்கவாதியின் தர்மப்படி பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த நிமிடமே அத்வானி கும்பலைக் கொன்று குவித்திருக்க வேண்டும். அப்படித்தானே?

Venkatraman, chandrasekar and Vajpayeeகாஞ்சி சங்கராச்சாரி கைது செய்யப்பட்டவுடன் துக்ளக் ராமசாமியிலிருந்து யோக்கியர் வெங்கட்ராமன் வரையிலுள்ள ‘சமூக ஒழுக்கவாதிகள்’ வீதிக்கு வந்து வெறி கொண்டு துடித்து, ஆட்சியாளர் சூழ்ச்சி, வெளி நாட்டுச் சதி என்று ஆர்ப்பாட்டம் நடத்தி, பிரார்த்தனை செய்து, ‘அப்பீல்’ செய்து பிணையில் வெளியே கொண்டு வந்தது ஏன்? சிறையிலே அவர் மணியாட்டலாம்; பூஜை செய்யலாம்; ஆடுமாடு மேய்த்ததற்கு அடையாளம் மாதிரி குச்சி வைத்துக் கொள்ளலாம்; அருளாசி வழங்கலாம் என்று பல சலுகைகள் வழங்கப்பட்டது ஏன்? ‘சமூகத்தில் அவருக்கு (சங்கராச்சாரிக்கு) உள்ள அந்தஸ்தைக் கருதி அவரைக் கௌரவத்துடன் நடத்த வேண்டும்’ என்று நீதிபதிகள் இதோபதேசம் செய்தது ஏன்?

குற்றவாளிகளுக்கு மனிதாபிமானம் காட்டலாமா என்று குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து - “கொலையாளியாக இருந்தாலும் சரி, திருடனாக இருந்தாலும் சரி, கற்பழித்தவர் ஆனாலும் சரி, மோசடி செய்தவரானாலும் சரி, (இத்தனை பிரிவுகளும் சங்கராச்சாரிக்குப் பொருந்தும்) சமூகத்திற்குப் பயனுள்ளவராக மாற்றப்பட வேண்டும். அவருக்கு உபதேசங்கள் அவர் சார்ந்த மதத்தின் அடிப்படையில் நடக்கும். அல்லது காந்தியம் கற்பிக்கப்படலாம். அல்லது தியான முறை சொல்லித் தரப்படலாம். இந்த வகுப்புகள் முடிந்த பிறகு அவருக்கு நல்ல ஒரு அந்தஸ்து உள்ள வேலை தரப்படலாம். ஒரு அந்தஸ்து இருந்தால்தானே சமூகத்திற்குப் பயன் உள்ளவராக அவரால் மாற முடியும்? அவருக்கு ஒரு டாக்டர் பட்டமும் கொடுத்தால் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானமாக இருக்கும்...” என்று இதற்கு முன் சில நீதிபதிகள் அளித்த தீர்ப்புகளையும் கிண்டலடித்து - நீதித்துறையில் மனிதாபிமானத்தின் கறையே படக் கூடாது என்று கண்டிப்புக் காட்டும் ‘சமூக ஒழுக்கவாதி’கள், சங்கராச்சாரி, அத்வானி கும்பல், நரேந்திரமோடி போன்ற நாடறிந்த குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேசுவது ஏன்?

சங்கராச்சாரிக்கு டாக்டர் பட்டம் தரலாமா அல்லது மரண தண்டனை தரலாமா? ‘சமூக ஒழுக்கவாதி’களின் பதில் என்ன? ‘சமூக ஒழுக்கவாதிகள்’ மனுதர்மத்தைப் புரட்டுகிறார்கள். “கொடுமையான தண்டனைகள் அனைத்தும் சூத்திரர்களுக்கே உரியவை” என்று அவர்களுடைய தர்மம் சொல்கிறது. தர்மம் என்பது ஆளுக்கு ஆள், இடத்துக்கு இடம், இனத்துக்கு இனம், வர்க்கத்துக்கு வர்க்கம் மாறுமா? மாறும்! அதுதான் மனு தர்மம். மனித தர்மம் வேறு; மனுதர்மம் வேறு ‘சமூக ஒழுக்கவாதிகளுக்கு’ மனித தர்மம் தேவையில்லை. மனுதர்ம விதிப்படி, ‘ராஜீவ் கொலையாளிகளும்’ ‘சங்கரராமன் கொலையாளிகளும்’ ஒரே தரத்தவர், நிறத்தவர்’ அல்ல.

ராஜீவ் கொலையாளிகள் தூக்கிலிடப்பட வேண்டும் என்பது ‘சமூக ஒழுங்கு’ காப்பாற்றப்படுவதற்காக. சங்கரராமன் கொலையாளிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது மனு தர்மம் காப்பாற்றப்படுவதற்காக. சரி; மனுதர்மவாதி ‘சமூக ஒழுங்கு’ பற்றிக் கூச்சலிடுவது ஏன்? இங்கே அவர் ‘சமூகம்’ என்று குறிப்பிடுவதே ‘அவருடைய சமூகத்தை’த்தான். அவர் பார்வையில் ‘ஆரிய சமூக ஒழுங்கு’ என்பதும், ‘மனுதர்மம்’ என்பதும் வேறு வேறானவை அல்ல. மனுதர்மப் போதனையின் சாரப் பொருளில் ஊறிய போதை ஏறிய உற்சாகத்தில்தான், ‘வீரப்பனைத் தேடும் முயற்சி’ என்கிற பெயரில் மலைவாழ் மக்கள் மீது காவல்துறை நடத்திய கொடுமைகள், பாலியல் வன்முறைகள், ஆபாச நடத்தைகள் அனைத்தையும் மூடி மறைத்துக் கேலியும் செய்கிறார்.

அவருடைய ‘சமூக ஒழுங்கும்’ மனுதர்மமும் போதிப்பதுபோல், ‘சாதாரண மக்கள்’ என்போர் பாவம் செய்தவர்கள். ஈனப் பிறவிகள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுடைய ‘தலைவிதி’ அதுதான் எனும் போது காவல் துறையைக் குறை கூறலாமா? ‘சாதாரண மக்கள்’ கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்றால் பகவான் அவர்களுடைய பாவங்களைக் கழுவிச் சுத்தப்படுத்துகிறார் என்று பொருள்.

“துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோக ராஜ்யம் அவர்களுடையது” என்று விவிலியம் கூடக் கூறுகிறதே! - இதுதான் ஆதிக்க சக்திகளின் சமூகப் பார்வை; ஆன்மீகப் பார்வை; அரசியல் பார்வை. லூயி மன்னனின் ஆசை நாயகிகூட இப்படித்தான் சிந்தித்தாள்; எளியோரைப் பார்த்துச் சிரித்தாள். அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் ஒருநாள் இரக்கமற்ற மனிதர்களின் உடலிலிருந்து குரூரமான அவர்களுடைய தலைகளை வெட்டி எறிந்தது.

- ஆனாரூனா

Pin It