"இந்திக்கு இங்கு ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் நாட்டினரே! செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்தபின்னும் இந்த தேகம் இருந்தும் ஒரு லாபமுண்டோ?" என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற "இன்று ஒரு தகவல்" புகழ் தென்கச்சி கோ.சுவாமிநாதன் "இரண்டிலொன்று பார்த்திடத்தான் வேண்டும்; இன்பத்தமிழ் வாழ்ந்திடத்தான் வேண்டும்" என்கிறார்.
இஷா யோகா மையத்துக்கு மோடி வருவதால் கோவை நெடுஞ்சாலைகளில், மைல் கல்லில் தமிழ் அகற்றப்பட்டு இந்தி எழுதப்பட்டு இருக்கிறது. மோடி ஆட்சிப் பொறுப்பேற்கும் பொழுது “எனது அரசு சாமான்ய மக்களுக்கான அரசு” என்று சொன்னார். ரூபாய் நோட்டுக்களை தடை செய்து சாமான்ய மக்களை என்ன செய்தார் என்பது நாடறிந்தது.
சமஸ்கிருதம்-இந்தி மொழியைத் திணிப்பது பாஜகவுக்கு புதிதல்ல. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இராணி, ஆசிரியர் தினத்தை இனி ‘குரு உத்சவ்’ என்று அழைக்க வேண்டுமென்று கூறியது, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் "அறிவியல் தொழில்நுட்பத்துக்கு மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம்தான்" என்று பேசியது, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐ.நா.வில் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டு வர முயற்சிப்பதாக கூறிய கருத்து, "சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள முடியாமல் போனதற்காக நான் வெட்கப்படுகிறேன். சமஸ்கிருதம் படிக்காததால் அந்த மொழியை என்னால் பேச முடியவில்லை" என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறிய எதையும் புறம்தள்ளி விட முடியாது.
"எனது தாய் மொழி குஜராத்தி என்றாலும், எனக்கு இந்தி தெரியாவிட்டால் என்ன நேர்ந்திருக்கும் என நினைத்து வியப்படைந்திருக்கிறேன்" என்றார் மோடி. போபாலில் நடந்த உலக இந்தி மாநாட்டில் "ஆங்கில, சீன மொழிகளுக்கு நிகராக இந்தி மொழியும் எதிர்கால டிஜிட்டல் உலகில் ஆதிக்கம் படைக்கும்" என்றார்.
மத்திய உள்துறை அமைச்சகமும், அரசும், அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று தெரிவித்த கருத்து மீண்டும் இது இந்தி திணிப்பு முயற்சி என்று கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தனியார் கல்லூரி விழா ஒன்றில் பேசிய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இராணி "மத்திய அரசின் கீழ் வரும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் கட்டாயப் பாடமாக சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்தப்படும்" என்றும், "8ஆம் வகுப்புக்கு மேல் 12ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத கல்வியைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்'' என்று தெரிவித்து கடும் கண்டனங்களை பரிசாகப் பெற்றார்.
"சமஸ்கிருதம் அல்லது இந்தி பரவினால்தான் பார்ப்பான் வாழமுடியும், சுரண்ட முடியும். நம்மை கீழ் சாதி மக்களாக ஆக்க முடியும். அவன் பிராமணனாக இருக்க முடியும். சமஸ்கிருதம்-இந்தி மொழிகளின் நலிவு, பார்ப்பன ஆதிக்கத்தின் நலிவு. அதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ சாக்கிரதையாக காரியம் ஆற்றுகின்றனர்" என்கிறார் பெரியார்.
"பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் பிளாஸ்டிக் சர்ஜரியை கண்டுபிடித்துவிட்டனர் என்பதற்கு விநாயகரே சான்று" என்றும், "ஊழல் பெருகி விட்டதால் நாட்டில் நிலநடுக்கம் வருகிறது" என்றும் ஒரு பிரதமர் கூறுகிறார் என்று சொன்னால், நமக்கு கிடைத்த பிரதமரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் செல்களில் புல்லரிக்கிறது அல்லவா.!
கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாகிவிட முடியாது. இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் கிடையாது. இந்தியை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம். இந்தி மொழி வலிந்து திணிக்கப்பட்டால் வேற்றுமையில் ஒற்றுமை என்பது வெற்று முழக்கமாகவே இருக்கும்.
இந்தி-சமஸ்கிருத திணிப்பு, குரு உத்சவ், பாடத் திட்ட மாற்றம், அகில இந்திய வானொலியில் தமிழ் மொழி செய்தி ஒலிபரப்பு சேவை நிறுத்தம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்.எல்.சி. இந்திய லிமிடெட் என்று பெயர் மாற்றம் என பாஜக எப்பொழுதும் முரணான செயல்களில் ஈடுபடுகிறது. சமஸ்கிருதம் - இந்தி போன்றவை தேவமொழி, மற்ற மொழிகள் நீச மொழிகளா?
நாளை என் தாய்மொழி செத்துப்போகுமானால் இன்றே நான் செத்துப்போவேன் என்கிறான் ருஷ்ய கவிஞன். பார்வையற்றவர்கள் உலகில் ஒற்றைக்கண் கொண்டவரே அரசர் என்பதைப் போல நடந்து கொள்கிறார் பிரதமர் மோடி.
'வரலாற்றில் இந்தியா என்ற நாடு இருந்ததில்லை; எதிர்காலத்தில் இந்தியா என்ற நாடு இருக்கப்போவதுமில்லை' என்கிறார் பெரியார். நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்கிறான். இந்தி இந்தியா வேண்டுமா? முழு இந்தியா வேண்டுமா?
- தங்க.சத்தியமூர்த்தி