தமிழ்நாட்டுல தற்சமயம் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்துல ஈடுபட்டு வர்றாங்க. மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது சந்தோசமான விசயம் தான். ஆனால் இந்தப் போராட்டம் எதுக்கான போராட்டங்கறதுல தான் நாம கொஞ்சம் வேறுபட்ட கருத்து சொல்ல வேண்டியிருக்கு.
ஜல்லிக்கட்டுங்கற பேர்ல நடத்துற விளையாட்டு நாகரிகம் வளர்ந்திருக்கிற இன்னிக்கும் தேவையா? ஜல்லிக்கட்டால வருஷந்தோறும் மனிதர்கள் செத்துப்போறதும், நிறைய பேர் அடிப்பட்டு ஆஸ்பத்திரில நாலு மாசம் ஆறு மாசம்னு இருக்கும்போது, இந்த விளையாட்டு அவசியம் தானா?
இப்படி மனித உயிர்களை நாசம் செய்வதற்குப் பேர் தான் வீர விளையாட்டா? விளையாடறதுக்கு உங்களுக்கு வேற விளையாட்டே இல்லையா? அஞ்சறிவு இருக்கிற மாட்டுக்கு என்னயா தெரியும் இந்த விளையாட்டைப் பத்தி? கொஞ்சமாவது யோசிச்சிப் பார்த்தால் இது காட்டுமிராண்டித்தனம்னு தெரியலையா?
மத்த விளையாட்டுல கூடத்தான் உயிர்போகுதுன்னு சிலர் சொல்றாங்க, ஒன்னு ரெண்டு நடக்குறது உண்மைதான், அதையும் கூட தடுக்க முடியும், மனுஷங்க தன்னுடைய அறிவைப் பயன்படுத்தி குறைக்கலாம். ஆனா, ஜல்லிக்கட்டுல வருஷத்துக்கு நாலஞ்சு பேராவது செத்துப் போறான், இருநூறு, முன்னூறு பேராவது அடிபட்டு ஆஸ்பத்திரில கிடக்க வேண்டியிருக்கு, மத்த விளையாட்டுல ஏதாவது இப்படி நடக்குதா? அப்படி நடந்தா அதையும் தடை செய்யனும்னு தான் சொல்வேன்.
2008லிருந்து 2013 வரைக்கும் நடந்த ஜல்லிக்கட்டில 43 பேர் செத்துட்டதாகவும், 3500 பேர் காயமடைந்ததாகவும் சொல்றாங்க, கொஞ்சம் மூளை இருக்கிறவன் யாராவது இந்த விளையாட்டு வேணும்னு கேட்பானா? இதனால பாதிக்கப்பட்டவங்க குடும்பத்த நெனச்சுப் பாத்தீங்களா? இவங்களோட இந்தத் தியாகம் யாருக்காவது பயன் தருதா? எந்தப் பயனையும் தராத இந்த மனித உயிர் நாசத்துக்கு ஏன் நாம ஆதரவு கொடுக்கனும்?
ஜல்லிக்கட்டு விதிமுறைகள் பத்தி காளைக்கு என்னயா தெரியும்? கூட்டத்தைப் பார்த்து மிரண்டு ஓடுது, அது மேல தாவுறதும், தொங்கறதும் செய்யறதானல, மிரண்டோ இல்ல மூர்க்கம் அதிகமாகியோ கூட்டத்தில இருக்கிறவன் மேல பாயுது. இப்படி அஞ்சறிவு படைச்ச மிருகத்தோட ஆறறிவு படைச்ச நீங்க விளையாட்டுங்கற பேர்ல காட்டுமிராண்டித்தனமா நடந்துக்கிறீங்க. அந்த மாடுகளுக்கு ஏதாவது தெரியுமா? இது வெறும் விளையாட்டுத்தான்னு, நம்மள எதுவும் செய்யமாட்டங்கன்னு.
இப்படி அறிவு கெட்டத்தனமா அஞ்சறிவு படைச்ச மாடுகளோட வீரம்ங்கிற பேர்ல மோதி குத்துப்பட்டு சாகிறது அறிவுள்ள தமிழன் செய்யற செயலா?
நேத்து (22.01.2017) நடந்த ஜல்லிக்கட்டுல கூட ரெண்டு பேர் செத்துட்டதாக செய்தி வந்திருக்கு, 130 பேர் அடிபட்டிருக்கிறதா சொல்றாங்க, இந்த கூறு கெட்ட அரசாங்கம் போராட்டத்தைக் கலைப்பதற்காக அவசர அவசரமா எந்த முன்னேற்பாடும் இல்லாம ஜல்லிக்கட்டு நடத்துனதால மனுஷ உயிர்களுக்கு அதிக சேதமாயிருக்கு. வழக்கமான ஏற்பாடு பண்ணாலும் சேதம் கண்டிப்பா விளையும். அதனால் இந்த ஜல்லிக்கட்டு வேணும்னு கேக்கறத விட்டுட்டு தமிழ் நாட்டு மக்களோட மத்த பிரச்சினைகளுக்கு போராடுனா மக்களுக்காகவது பிரயோஜனப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டி தடைபட்டதால தான் நாட்டு மாடுகள் அழிஞ்சு போயிட்டதா சொல்றாங்க. கொஞ்சமாவது புத்தி இருக்கிறவன் யாராவது இப்படி சொல்வானா? ஜல்லிக்கட்டுக்கு மூணு வருசத்துக்கு முன்னாடி தான் முழுசா தடை போட்டானுங்க, நாட்டு மாடுகள் அழிஞ்சிட்டு வர்றது முப்பது நாப்பது வருசமா கொஞ்சம் கொஞ்சமா நடந்துக்கிட்டிருக்கு. மேல நாட்டில கண்டுபிடிச்ச டிராக்டர், மத்த எந்திரங்களெல்லாம் விவசாயத்துல எப்ப வந்துச்சோ, அப்பவே காளை மாட வளர்க்கிறத நம்மாளுக கொஞ்சம் கொஞ்சமா விட்டுட்டாங்க. அதனால தான் காளை மாடு கொறஞ்சு போச்சே தவிர, ஜல்லிக்கட்டு இல்லாம போனதால இல்ல.
பழைய காலத்துல நம்மாளு கையில என்ன கருவி இருந்ததோ, அத வெச்சி விவசாயம் செஞ்சான். ஏர் கலப்பையும். எருதையும் வெச்சு உழுதான். பாம்பரியங்கிறதுக்காக அதேயே இப்ப செய்ய முடியுமா? விஞ்ஞானத்துல இருக்கிற கண்டுபிடிப்புகளெல்லாம மனுஷனுக்கு எது சரியானதோ அதனைப் பயன்படுத்தலைன்னா நாம இன்னும் அநாகரிக காலத்துலே கெடக்க வேண்டியது தான்.
நாட்டு பசு மாடுகளப் பொருத்த வரைக்கும் பால் எவ்வளவு கொடுக்கறதுங்கற பொருத்து தான் அது குறைஞ்சிட்டு வருது. வெளி நாட்டுல இருக்கிற விஞ்ஞானிகள் அவன் நாட்டுக்கேத்தாப்பல ஜெர்சி போன்ற பசு மாட்டுகள இனவிருத்தி செஞ்சு அதிக பால் உற்பத்தி செஞ்சான். நம்மாளுக எல்லாத்தையும் இறக்குமதி பண்ற மாதிரி இதயும் இறக்குமதி பண்ணாங்க. உள் நாட்டு மாட்டினங்களை இனவிருத்தி செய்ய யாரும் இங்க தயாரா இல்ல. அதனால மக்கள் அதிக பால் தர்ற ஜெர்சி பசுவ வாங்கி வளர்க்க ஆரம்பிச்சிட்டாங்க, காலப் போக்கில அதுவும் நம்ம நாட்டு சூழலுக்கு ஏற்ப வாழவும் தன்னை தயார்படுத்திக்கிச்சி. நாட்டு பசு மாடுகள காப்பத்தறதுக்கு அதிக பால் தர்ற வகையில அத இனவிருத்தி செய்யனும்.
உண்மை இப்படி இருக்க, ஜல்லிக்கட்டு தடைபோட்டதால தான் நாட்டு மாடுகள் அழிஞ்சி போச்சின்னும் யாரோ புத்தியில்லாதவங்க சொன்னத இந்த போராடுற தமிழனுக நம்பறத நினைச்சா தான் வேதனையா இருக்கு.
அது மட்டுமில்லாம, ஜல்லிக்கட்டுக்கு வளக்கிற மாட்ட யாரும், இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தமாட்டங்க, இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்தனா அதோட வீரியம் கொறஞ்சிடும்னு சொல்லிட்டு அத வெளிய விடாம வீட்டிலே வளர்ப்பாங்க.
நம்மோட பாரம்பரியத்த தடுக்கிறதுக்கு மத்திய சர்க்கார் யாரு? அது தப்பில்லையா, அதனால தான் போராடுறம்னு சிலர் கதய கட்டிவிடறாங்க, மத்திய சர்க்கார் கிட்ட இருந்து ஜல்லிக்கட்டு விளையாட்ட போராடி வாங்கறதால ஒரு பைசா பிரயோஜனமாவது உண்டா? நன்மைய விட தீமைகளே அதிகம் இருக்கு. நம்ம நாட்டுல இருந்த நிறைய காட்டுமிராண்டி கலாச்சாரத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் தான் சட்டம் போட்டு தடுத்தான். அதனால நமக்கு அனுகூலங்கள் கிடைத்தே (காட்டுமிராண்டி கலாச்சார விசயத்தில்) தவிர எந்தத் தீமையும் இல்ல. மத்திய சர்க்கார் கிட்ட இருந்து போராடிப் பெற வேண்டிய பிரச்சினைகள் நிறைய இருக்கிறப்போ காட்டுமிராண்டித்தனமான இந்த விளையாட்டுக்கான போராட்டம் அவசியமா?
உங்க போராட்ட குணத்த நெனச்சா ரொம்பப் பெருமையா இருக்கு. ஆனா உங்க போராட்டத்த நல்ல நோக்கத்துக்கு மாத்தனும்னு கேட்டுக்கிறன். மக்களோட வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உங்க போராட்டத்த மாத்துங்க, செத்துப் போன விவசாயிகளுக்கு நியாயம் கேட்டும், இனிமே எந்த விவசாயியும் சாகம இருக்கனும்னு அதற்கு உடனடி நஷ்ட ஈடு வழங்கனும்னு போராடுங்க. நீட் நுழைவுத் தேர்வ எதிர்த்து போராடுங்க, தாய் மொழியில கல்வி வேணும்னு போராடுங்க, பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பை கண்டிச்சிப் போராடுங்க, இங்கு நடக்கிற அத்தன அநியாயங்களையும் அக்கிரமங்களையும் எதிர்த்துப் போராடுங்க.
தமிழர்கள், இனிமேலாவது யோசிச்சி செய்யனும்னு கேட்டுக்கிறன். மனுஷங்கள பலிகொடுக்கிற இந்த மாதிரி ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனத்தையெல்லாம் விட்டுட்டு பகுத்தறிவோட செயல்படனும்னு கேட்டுக்கிறன்.
- குறிஞ்சி