இந்தப் பெண்களுக்குத்தான் விடுமுறை என்றால் புதிது புதிதாக ஏதாவது தோன்றுமே! அதே போல் என் அம்மாவுக்கும் அவள் தோழிக்கும் கன்னியாகுமரியில் உள்ள அந்தக் கோவிலுக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றியது போலும். நான் இதுமாதிரியான (பெருந்தெய்வமும் அல்ல, சிறுதெய்வமும் அல்ல……) கோவில்களுக்குச் சென்றதில்லை. ஆகையால் அங்கு அப்படி என்னதான் நடக்கிறது எனக் காணும் ஆவல் எழுந்தது. எனவே கடைசி நிமிடத்தில் அவர்களுடன் நானும் தொற்றிக்கொண்டேன். போகும் வழியில் ஆச்சியையும் சேர்த்துக்கொண்டோம். புதிதாகத் தோன்றிய / தெய்வமாக்கப்பட்ட அந்தச் சாமிக்குப் புதிதாக முளைத்த பக்த கோடிகளில் என் ஆச்சி, தாத்தாவும் அடங்குவர்.

           அந்தக் கோயில்…..இல்லை ! இல்லை ! அந்தக் குட்டி அரண்மனையைப் பார்த்ததுமே தெரிந்தது, அதற்கு வயது மூன்று அல்லது நான்கு வருடங்கள்தாம் என்று. கலைநயம் மிக்க சிற்பங்கள், பெரிய பெரிய கல் தூண்கள், வாவல்களின் வாசம், வாசலில் ஓர் அகன்ற படி, பகலிலும் ஒரு அகல்விளக்குதான் கருவறையின் இருளைப் போக்கும் என கோயிலைப் பற்றிய எனக்கே உரிய வரைமுறைகள் அனைத்தையும் தகர்த்தது இந்தப் புதிய கோயில். நமது பாரம்பரியமிக்க கோயில்களின் வரலாற்றையும் தொழில்நுட்பத்தையும் நாத்திகர்கள் கூட ரசிப்பர். ஆனால் இந்தக் கோயிலில் நாத்திகர்களுக்கு வேலை இல்லை.

           மார்பிள் கற்கள் பதிக்கப் பெற்று கண்களைக் கூசச் செய்யும் வெளிச்சத்தோடு, “ ‘கலைநயம்’ கிலோ எத்தனை ரூபாய்?” எனக் கேட்டது கட்டிடம். நமது மண்ணுக்குரிய கோயில்களில் முதன்மை தெய்வத்திற்கு ஒரே ஒரு சிலைதான்; ஓரிடத்தில்தான் இருப்பார். இங்கு 4 இடங்களில் இருந்தார். எல்லாம் மார்பிளில் வடிக்கப்பட்டவை. முதன்மை தெய்வத்தின் முதற்சிலையை உற்று நோக்கினேன். எனக்கென்னவோ என் ஆச்சி வீட்டில் வேலை பார்க்கும் சங்கரன்பிள்ளை தாத்தவைப் போல்தான் இருந்தது. சொன்னால் அம்மா கடிந்து கொள்வாள். எனக்கேன் வம்பு? சுற்றிச்சுற்றி இந்தச் சிலையே வெவ்வேறு அளவுகளில் இருந்தது! இந்தக் கோயிலில் சம்பந்தமே இல்லாமல் ஒரு பிள்ளையார் சிலை. நமது மக்களை இழுப்பதற்கான ஓர் உத்தியாக இருக்குமோ?

           முதன்மை தெய்வத்தின் பெரிய சிலையின் தரிசனத்திற்காக 30 படிகள் ஏற வேண்டியிருந்தது. கூட்டம் ததும்பித் தள்ளாடியது. வெளியே சாமி தெரியவில்லை என்றாலும், பொருள் தெரியாத சமஸ்கிருதப் பாடல்களைக் கேட்டு தீப ஆராதனை நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து மக்கள் அனிச்சையாகக் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி பக்தியோடு வணங்கினர். வெளியே சாலையில் மாரியம்மன் பாடலைச் சத்தமாக ஒலிக்கவிட்டு ஒரு வண்டி கடந்து சென்றது. டக்கென ஒரு நொடி அனைவரும் திரும்பிப் பார்த்தது, பிடரியில் ஏதோ ஒன்று பொளேர் என அடித்தது போல் இருந்தது.

           கூட்டமே என்னை உள்ளே தூக்கிச் சென்றது. ஒரு கட்டத்தில் நசுங்க ஆரம்பித்துவிட்டதை உணர்ந்து கூட்டத்தில் இருந்து பிரிந்து அறையின் நடுவில் சிலைக்கு நேராக அமர்ந்தேன். அம்மா, அவள் தோழி, ஆச்சி மூவரும் கரும்புச்சாறு இயந்திரத்தினுள் மாட்டிக் கொண்டவர்கள் போல இடித்துப் பிடித்து சிலையின் அருகே செல்ல ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

           அறையினுள் ‘அமைதி காக்கவும்’ என்று கொட்டை எழுத்துக்களில் இருந்த அறிவிப்பை யாருமே கண்டு கொள்ளவில்லை; உரத்த குரலில் மைக்கில் பாடிக் கொண்டிருந்தவர்கள் உட்பட. தேமே என உட்கார்ந்து அங்கு வந்திருந்த ஒவ்வொரு முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்தியமாகச் சொல்கிறேன். ஐந்து வருடம் முன்பு வரை இவர்கள் இசக்கி, அய்யனார், சுடலைமாடன், கருப்பண்ணசாமி ஆகியோரை வணங்கியவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்களுடைய வேர்களைக் கெட்டியாகப் பிடித்து இவர்களின் அடையாளங்களைத் தொலைத்து விடாமல் பாதுகாப்பது நமது மண்ணுக்குரிய தெய்வங்கள். அப்படியிருக்க இந்தக் கோயிலை நோக்கி எப்படி இவ்வளவு பெரிய படையெடுப்பு? கிராம தேவதைகளை விட இந்தத் தெய்வம் மகிமை வாய்ந்தது என்று இவர்களை எண்ண வைத்தது எது? அல்லது யார்?

           இப்படி அடுக்கடுக்காகப் பல கேள்விகள் மனதில் எழ “ஏ! பெண்ணே!” என ஒரு கிழவரின் குரல் ஒலிப்பெருக்கியின் இரைச்சலிலும் தெளிவாகக் கேட்டது. என்னைச் சுற்றிலும் பெண்களே அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்திருந்தனர். ‘யார் நம்மைக் கூப்பிடுவது?’ என சுற்றும் முற்றும் தேடினேன்.

           “இங்கே ! இங்கே பாரும்மா!” என மறுபடியும் குரல் வந்த திசையை உற்று நோக்கினேன்……உண்மைதான்! அந்தச் சிலையேதான்.

           “என்னையா?” என மனதினுள் கேட்டேன்.

           “உன்னையேதான்” என்று சிலையிலிருந்து பதில்.

           “யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்?” – இது நான்.

           “இந்த வெள்ளைப் பளிங்கு சிலைக்கு மேலே என்ன பெயர் போட்டிருக்கிறதோ, அவன்தான் பேசுறேன்” – சிலை.

           “சாமியா?” என வியந்தேன்.

           “அட! இல்லம்மா. நான் உயிரோடு இருந்தப்போ நிறைய சமூக சேவை செஞ்சேன். அவ்வளவுதான். இவனுங்களுக்கு வேற பொழப்பில்லை. என்னையும் சாமியாக்கிக் காசு பாக்குறானுங்க.” என விளக்கம் தந்தார் அந்த கடவுளாக்கப்பட்ட சமூக சேவகர்.

           “ஹா…ஹா…ஹா….நல்லா பேசுற தாத்தா……” என மனதினுள் சிரித்தேன். சுற்றி இருந்தவர்களைக் கருத்தில் கொண்டு முகத்தில் புன்னகையைக் கூட தவிர்த்தேன்.

           “ ‘தாத்தா….!’ எவ்வளவு நாளாச்சு தெரியுமா, இப்படி யாராவது கூப்பிடக் கேட்டு? நல்லா இருக்கு……இவங்களைப் பாரு….பேரைச் சொல்லிக் கூப்பிடுறதை……வயசுக்கு ஒரு மரியாதை வேண்டாம்? இல்லைன்னா ‘சாமி’ன்னுடுவான்…..ப்ச்…” என சலித்துக் கொண்டார் தாத்தா.

           “உன்னைக் கடவுளாக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஏதோ அதிசயம்லாம் செஞ்சியாமே? உடம்பு சரி இல்லாதவங்…..” நான் கேள்வியை முடிக்கும் முன்பே சற்று கோபத்துடன், “என்னை விற்க இவனுங்களுக்குத் தெரிஞ்ச வழி இதுதானே? என்னை மாதிரி தாடி வச்ச, 21 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ஒரு சமூக சேவகரைக் கூட உலக அளவுல வித்துப்புட்டானுங்களே……படுபாவிங்க…” என்று சற்றே உணர்ச்சிவசப்பட்டு மூச்சு வாங்கினார். பின் அவரே தொடர்ந்தார், “ஹூம்……இந்த மண்ணுக்குரிய சாமியை எல்லாம் இவங்களோட பாட்டன் பூட்டன் கும்பிட்டு பயன்படுத்தி பழசாக்கிட்டதால அந்த சாமிகளோட சக்தி குறைஞ்சு போச்சாம். இவங்களே அப்படி நினைச்சுக்குறாங்க. அதனால சந்தையில புது சாமி கிடைக்காதான்னு தேடுறாங்க. அதைப் புரிஞ்சுகிட்ட சில பணப்பேய்கள், வாய்ப்பைச் சரியா பயன்படுத்தி, என்னை மாதிரி ஆட்களுக்கு சில பல சாயம் பூசி சாமியாக்கிடுறாங்க. அதை வேகமா பரப்புறதுக்கு என் பேரில் பக்திப்பாட்டு, CD, புத்தகம், கலர் கலரா கயிறு, பல அளவுகளில் என் உருவச்சிலைகள்…..அது இதுன்னு சந்தையில இறக்குவாங்க. இதப் புரிஞ்சுக்காம, மூளைச்சலவை செய்யப்பட்டு கண்மூடித்தனமா என்னைக் கும்பிட ஆரம்பிக்கிறவங்க, இன்னும் பலரை மூளைச்சலவை செய்து இழுத்திட்டு வந்திடறாங்க. என்ன செய்ய?” என தம் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

           “French Beard styleல அழகா இருக்க….தாத்தா…” என்று பேச்சை மாற்றினேன்.    

           “மண்ணாங்கட்டி…….. சாமி ஆக்கப்பட்ட பொறவு நான் அழகா வசீகரமா தெரியணும்னு இவனுங்களே என்னை வடிவமைச்சுட்டானுங்க. குறிப்பா, என் கண்களை! நான் ரொம்ப சுமாராத்தான் இருந்தேன்.” என உண்மையைப் போட்டு உடைத்தார்.

           “ஆனா…..உன் முகம் ரொம்ப அமைதியா ஒரு தெய்வக்களையோட இருக்கே. உன் black & white photoல பார்த்தேன், தாத்தா…”

           “அட! அசடே! உன் ஆச்சியோட black & white photoவ ஒரு ரெண்டு நிமிஷம் பாரு. நீ சொன்ன அதே தெய்வக்களை அவங்ககிட்டயும் தெரியும். இதெல்லாம் உளவியல் ரீதியா உன்னை முட்டாளாக்குற வேலைதான். சரியா plan பண்ணி இப்போ ஆரம்பிச்சேன்னா இன்னும் ஆறு மாசத்துல உன் ஆச்சியைக் கூட சாமியா காட்டலாம். உன் ஆச்சியும் கோடி கோடியா சம்பாதிக்கலாம்.”

           “அதெல்லாம் இருக்கட்டும். உனக்குத்தான் இந்த ஊரு இல்லையே? வட இந்தியான்னு கேள்விப்பட்டேன். அப்புறம் எப்படி தமிழ்ல பேசுற? அதுவும் வட்டார வழக்குல….” என சந்தேகத்தைக் கேட்டேன்.

           “இதுல என்ன பிரமாதம்? வர்றவன் பூரா அதக் குடு……இதக் குடுன்னு என்னைப் பிச்சுப் புடுங்குறது தமிழ்ல தானே? அப்பிடியே கத்துக்கிட்டேன்.”

           “அவங்க கேட்டதை எல்லாம் எப்படி தாத்தா தருவே?” என அப்பாவியாகக் கேட்டேன்.

           “நான் என்னத்த தர்றது? மடியிலயா கட்டி வச்சிருக்கேன்? ஒரு கல்லுகிட்ட போய் எதையாவது கேட்டா அது குடுக்குமா? அது மொட்டைப் பாறையா இருந்தா என்ன? பளிங்குக் கல்லா இருந்தா என்ன?”

           “இத அப்படியே அவங்ககிட்ட சொல்றதுதானே?”

           “கேக்குறவங்க கிட்ட தானே சொல்ல முடியும். ‘அட! கூறு கெட்டவங்களா! இப்படி கிறுக்குத்தனமா கண்ட கோயிலுக்கும் கூட்டி வந்து பிள்ளைங்களைக் கூட்டத்தில் நசுங்க வைக்காதீங்க. உங்களோட வேர்கள், மரபுகள், பண்பாடு எல்லாம் சொல்லிக் கொடுத்து வளத்துத் தொலைங்கடா’னு ஒவ்வொருத்தங்கிட்டயும் சொல்லிச் சொல்லி மாய்ஞ்சுட்டேன். எவனும் காது கொடுத்து கேக்க மாட்டேங்குறான்”

           “…………………………………………………………………………………………………………………………………………….”

           “அய்யோ! எனக்கு இந்தப் பக்கம் உட்கார்ந்து ‘பக்திப் பாட்டு’ பாடுறேன்னு கத்துறவங்களைக் கொஞ்சம் நிறுத்தச் சொல்லேன். தாங்க முடியல….” என கடுகடுத்தார் தாத்தா.

           “நானா?”          

           “நான் சொன்னேன்னு சொல்லு” என வற்புறுத்தினார்.

           “என்னைப் பைத்தியம்னே முடிவு கட்டிடுவாங்க. சும்மா விளையாடாதே. சரி! சரி! அம்மா வந்துட்டா……..நான் கிளம்புறேன்” என்று நழுவ ஆயத்தமானேன்.

           “அய்யோ! என்னைத் தனியா இந்தக் கூட்டத்துக்கிட்ட விட்டுட்டுப் போறியே!”

           “பின்னே, உன்னையும் அழைச்சிட்டா போக முடியும்?”

           “சீ…..! இந்தக் கொடுமையைப் பாரு. ஒவ்வொருத்தரும் என் காலிலும் மடியிலும் அவங்க தலையை வச்சு அழுத்துறாங்க. எல்லாவனும் என் கையிலும் காலிலும் முத்தங்கொடுத்து……கண்றாவி! நல்லவேளை! நான் உயிரோட இல்லை. இருந்திருந்தேன்னா, கடும் தொற்று வியாதி வந்து கொடுமையா இருந்திருக்கும் என் சாவு. எல்லாரையும் மாதிரி வாழ்ந்தேன்; எல்லாரையும் மாதிரி செத்தேன். என் சாவுக்குக் கூட புது பேரு – ஜீவசமாதியாம்!”

           தாத்தா பேசிக்கொண்டே இருக்க நான் கிளம்பி வந்துவிட்டேன். பாவம்! அவர் ஆதங்கத்தைக் கொஞ்சம் நின்று கேட்டிருக்கலாமோ? காரில் ஏறி வீடு திரும்புகையில் திடீரென்று அருகில் இருக்கும் இதே மாதிரியான இன்னொரு கோவிலுக்குப் போவதென்று முடிவு செய்தார்கள். இன்னொரு தெய்வமாக்கப்பட்ட (இறந்த….மன்னிக்கவும், ஜீவசமாதியடைந்த) மனுஷனா?

           அந்த ‘கோவில்’ புது ‘தெய்வத்தோடு’ சற்றுமுன் கண்ட ‘தெய்வமும் இருந்தது. நல்லதுதான். ஒருவருக்கொருவர் பேச்சுத்துணைக்காச்சு! புது தாத்தா, “அங்கே என் நண்பன் பாதி பேசிட்டு இருக்கும்போதே கிளம்பிட்டியாமே? நான் நினைச்சதெல்லாம் அவனே சொல்லிட்டான். இங்கே மீதியைக் கேளு…..” என்றார்.

           French beard தாத்தாவிடமே சென்றேன்.

           “வாழ்க்கை முழுக்க எளிமையா வாழ்ந்து அதையே போதிச்ச என்னை எப்படி ஆக்கி வச்சிருக்காங்க பாரு….…மாட மாளிகை, மார்பிள் கல், பட்டுத்துணி, ஆபரணம், கிரீடம்…….இந்தக் கிரீடத்தையாவது எடுத்து கீழே வையேன். உனக்குப் புண்ணியமாப் போகும். தலைவலி தாங்க முடியல” என மறுபடியும் புகார் பட்டியல் நீண்டது.

           “சும்மா தொண தொணங்காதே…..எனக்கு நாலு நல்ல வார்த்தை சொல்லி அனுப்புற வழியைப் பாரு, தாத்தா…..”

           “போறியா? எனக்கு ரொம்ப போர் அடிக்குமே!”

           “இன்னொரு நாள் வரேன், தாத்தா” என வாஞ்சையோடு குழந்தையைத் தேற்றுவது போல் சமாதானப்படுத்தினேன்.

           “வேண்டாம். இனி இங்கெல்லாம் வந்து பொழுதை வீணடிக்காதே. நல்லா படிச்சு நாலு பேருக்கு நல்லது பண்ணப் பாரு. தன்னையே ‘சாமி’ன்னு அறிவிச்சு கும்பிடச் சொல்றது, இறந்தவனைச் சாமியாக்குவது – இரண்டும் மக்களை முட்டாளாக்குற வேலை. வலிய முன்வந்து முட்டாளாகுறாங்க சில பேர்….அதைவிடு……..என்னை மாதிரி ஆட்களோட எளிமையையும் சமூக அக்கறையையும் மட்டும் படிச்சுக்கோ. போதும்.”

           மனதுக்குள் டாட்டா காட்டினேன். சிலை மலர்ந்து சிரித்து வழியனுப்பியது.                                                                                                       

-    சோம.அழகு

Pin It