"இடது" எனும் பெயரில் இதுவரை வெளிவந்த காலாண்டு இதழின் நீட்சியாகப் "புதுமலர்" எனும் இதழ் தற்பொழுது வெளிவருகிறது.

"புதுமலர்" இதழ், பிரகடனங்கள் எவற்றையும் உரத்து முழங்கப் போவதில்லை.

நேற்று - இன்று - நாளை எனும் காலவெளியில் கருத்தில் கொள்ள வேண்டிய விவரங்களின் கல்வெட்டுப் பதிவாகப் புதுமலர் விளங்கும். தமிழ் விழுமியங்களில் காலூன்றி, உலக வானில் இது சிறகு விரிக்கும்.'

சமூக, அரசியல், கலை, இலக்கியப் பண்பாட்டு இதழாக வருவதுடன், தேவைப்படும் தருணங்களில் முக்கிய ஆளுமைகளின் ஆவணச் சிறப்பிதழாகவும் இவ்விதழ் வெளிவரும். அவ்வகையில், சனவரி 2023 இதழ் வள்ளலாரின் 200-ஆம் ஆண்டுப் பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் பன்முக ஆளுமையை வெளிப்படுத்தும் வண்ணம் ஆவணச்சிறப்பிதழாக வெளி வருகிறது.

இவ்விதழில், வள்ளலார் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது இவ்விதழில் வள்ளலார் குறித்துக் காத்திரமான கட்டுரைகள் வெளிவந்துள்ளன. திருவாளர்கள் பழ.நெடுமாறன் / கொளத்தூர் மணி / பொதிகைச்சித்தர் / கண. குறிஞ்சி / பொழிலன் / விடுதலை இராசேந்திரன்/ வி.தேவேந்திரன் / ரெங்கையா முருகன் / சிவகுமார் கலைவாணன் ஆகியோரது கட்டுரைகள், வள்ளலாரின் பன்முகப் பரிமாணங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

வள்ளலாரது முக்கியப் படைப்பான திருஅருட்பா ஆறு திருமுறைகளைக் கொண்டது. முதல் ஐந்து திருமுறைகளும் அவரது சமய ஈடுபாட்டை எடுத்துரைப்பவை. ஆனால், சமயங்களைப் புறந்தள்ளி, மிகவும் முற்போக்கான கருத்துக்களைக் கொண்டதாகத் திருஅருட்பாவின் ஆறாம் திருமுறை உள்ளது. எனவே இந்த இதழில் வந்துள்ள கட்டுரைகளில் சில கருத்துக்கள், மீண்டும் மீண்டும் வெவ்வேறு கட்டுரைகளில் வந்திருப்பது தவிர்க்க முடியாததாகும். அந்தப் புரிதலில் கட்டுரைகளை அணுகுமாறு வேண்டுகிறோம்.

வள்ளலார் ஏதோ தமிழ்ப்புலவர்களில் ஒருவர் என்பதாக யாரும் ஒதுக்கிவிட முடியாது. சாதி / மதத்தின் பெயரால் நடைபெறும் கொடுமைகளை எதிர்த்து, தன் மென்மையான இயல்புக்கு மாறாக, வெஞ்சினத்தோடு சாட்டையைச் சுழற்றியவர் அவர். "கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக" எனச் சாபமிட்டவர்.

வள்ளலாரது பல்வேறு கூறுகளில் நினைவுகூரத்தக்க ஒரு செய்தி, அவரது அறிவியல் மனப்பான்மையாகும். தனது கருத்துக்கள் அறிவியல் வழியிலானது என அவர் வலியுறுத்தி வந்ததும் இத்தருணத்தில் கருதத் தக்கதாகும். மூடப்பழக்கங்கள் / கருமாதி / திதி போன்ற சடங்குகள் / உருவழிபாடு போன்றவற்றை வாழ்வில் தவிர்க்க வேண்டும் என உரத்துப் பேசியவர் வள்ளலார். சமயத்துறையில் இருந்து வந்த ஒருவர் இத்தகைய அறிவியல் மனப்பான்மையை முன்நிறுத்துவது அரிதினும் அரிதாகும். அதுவும் நிலவுடைமை கோலோச்சிய அவரது காலத்தில் இத்தகைய குரல் தனித்துவமானது.

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால் அரசை நிர்வகிப்பவர்களே இன்றைய காலகட்டத்தில் மூடநம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கின்றனர். பிள்ளையாருக்கு யானைத்தலை இருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்தக் காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என இந்த நாட்டின் பிரதம மந்திரியே விஞ்ஞானிகள் மாநாட்டில் பேசிய கேலிக்கூத்தைப் பார்த்து இந்த நாடே கைகொட்டிச் சிரித்தது. இதன் காரணமாகவே சில அறிவியல் அறிஞர்கள் இனி இந்தியாவில் நடக்கும் அறிவியல் மாநாடுகளில் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என அறிவித்ததையும் மக்கள் கேட்டுக்கொண்டுதான் இருந்தனர்.

அது மட்டுமல்ல, இராமயணக் காலத்திலேயே விமானம் இருந்ததாகவும், மகாபாரதக் காலத்திலேயே தொலைக்காட்சி இருந்ததாகவும் அருள்வாக்குகள் வழங்கப்பட்டன. இப்படிப்பட்ட முட்டாள்தனமான கருத்துக்களைக் கூறியவர்கள் சாதாரண மக்களல்ல. அதிகாரப் பொறுப்பில் இருந்தவர்களே இப்படிக் கூறும் அதிசயத்தை நாம் காண நேர்ந்தது.

புல்புல் பறவையில் ஏறிப் பறந்து சென்று, பிறகு மீண்டும் அந்தமான் சிறைக்குத் திரும்பிய சவார்க்கரின் அதிமானுடச் சக்தியை அறியும் அரிய செய்தியும் இந்நாட்டிற்குக் கிடைத்தது. இத்தகைய சாதனை புரிந்ததால்தான் இப்பொழுது கர்நாடகச் சட்டமன்றத்தில் சவார்க்கர் படம் திறந்து வைக்கப்பட்டது போலும்!

சனாதன தர்மத்தையும், வகுப்புவாதத்தையும் எதிர்த்துச் சமரசமின்றிப் போராடிய எம்.எம்.கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றவர்களைச் சுட்டுப் படுகொலை செய்த கர்நாடகத்தில் இத்தகைய படத்திறப்பு நடந்திருப்பது வியப்பிற்குரியதல்ல!

இவை மட்டுமல்ல! 2014-க்குப் பிறகு இந்தியத் துணைக்கண்டத்தில் நடக்கும் கேலிக்கூத்துக்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இந்தியாவின் சாதி அமைப்பைப் புகழ்ந்து ஆய்வுக்கட்டுரைகள் இந்திய வரலாற்று ஆய்வு மையத்திலிருந்து வெளியானதைச் சகித்துக் கொள்ள முடியாமல், அதில் பணியாற்றிக் கொண்டிருந்த புகழ்பெற்ற ஆய்வறிஞர் ரோமிலா தாபர் அவர்கள் அந்நிறுவனத்திலிருந்தே வெளியேறினார் என்பது சமகால வரலாறாகும்.

அறிவியலுக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களையும், சடங்குகளையும் புனிதப்படுத்தப் படுத்தும் அளவுக்கு இன்று இந்துத்துவ சக்திகள் வளர்ந்து விட்டன. இத்தருணத்தில் மராட்டிய மண்ணின் மைந்தர் நரேந்திர தபோல்கரை நினைவு கூர்கிறோம். தனது வாழ்நாள் முழுவதும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாலேயே, சநாதனச் சதிகாரர்களால் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இருப்பினும் வாழ்நாள் முழுவதும் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதற்காகப் போராடிய காரணத்தால், நரேந்திர தபோல்கர் நினைவாக மகராஷ்டிர அரசு வேறு வழியில்லாமல் அதற்கான சட்டத்தை அவரது நினைவாகக் கொண்டு வந்தது. இதனால், மூடப்பழக்கங்கள் அங்கே சற்றுக் குறைந்துள்ளன என்பது சிறு ஆறுதல்.

அவ்வகையில், இந்தியத் துணைக் கண்டத்திற்கே எடுத்துக்காட்டாக மூட நம்பிக்கைகளை எதிர்த்துச் சமரசமின்றிப் போர் தொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள். எனவே தந்தை பெரியாரின் மண்ணில் மூடப்பழக்கங்களுக்கு எதிராக ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது வள்ளலாரது 200 - ஆவது பிறந்த ஆண்டில், அவருக்குச் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்கும். தமிழக அரசு இக்கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே அனைத்துச் சனநாயக சக்திகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- புதுமலர் ஆசிரியர் குழு

Pin It