தண்டகாரன்ய காடுகளில் இருந்து இயற்கை வளங்களைத் தோண்டி எடுத்து பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்க்க மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பசுமை வேட்டை என்று அழைக்கப்படும் ஆப்ரேசன் கிரீன் ஹன்ட் என்ற தாக்குதல் நடவடிக்கை இன்று மோடியின் ஆட்சிக் காலத்திலும் உக்கிரமாகத் தொடர்கின்றது. எப்படியும் அந்த மக்களை காடுகளில் இருந்து அடித்து விரட்டிவிட்டு அந்தக் காடுகளை முழுவதுமாக கபாளிகரம் செய்துவிட வேண்டும் என்பதுதான் ஆளும் வர்க்கத்தின் கொள்கையாக இருக்கின்றது.
ஆளும் வர்க்கம் எப்பொழுதுமே தங்கள் எதிரிகளை அழித்தொழிக்க தாங்களே நேரடியாக களத்தில் இறங்குவது கிடையாது. சாமானிய மக்களுக்கு எதிராக சாமானிய மக்களையே அது களத்தில் இறக்குகின்றது. நீங்கள் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு பார்த்தீர்கள் என்றால் பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களை பாதிப்புக்கு ஆளாக்கிய மக்களும் ஏறக்குறைய ஒரே வர்க்கத்தட்டை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பின் எது அவர்களை தங்களைப் போன்றே மிகவும் மோசமான வாழ்நிலையில் வாழும் சாமானிய மக்களுக்கு எதிராக ஆயுதம் எடுக்க தூண்டுவது? அதுதான் அவர்களின் பிற்போக்குத்தனம். சாதி, மதம், கொடிய வறுமை, தேசியவாதம் போன்றவற்றால் ஆட்கொள்ளப்பட்ட மக்கள் எதற்கும் தயாராகவே இருக்கின்றார்கள். அவர்களைப் பொருத்தவரை தங்களது பிழைப்புக்காக யாரை வேண்டும் என்றாலும் எதிர்ப்பார்கள்.
நீங்கள் குஜராத் கலவரத்துக்கும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கும் பார்ப்பன இந்துமதம் காரணம் என்றால் பசுமை வேட்டைக்குக் காரணம் பன்னாட்டு முதலாளிகளின் லாப வெறியும், கொடிய வறுமையில் வாழும் மக்களும், தேசிய வெறியுமே காரணமாகும். ஆளும் வர்க்கம் தங்களது சுரண்டலை காப்பாற்றிக்கொள்ள உருவாக்கிவைத்திருக்கும் கற்பிதங்கள் சாமானிய மக்களின் மூளைகளில் நங்கூரம் போல இறங்கியுள்ளது. ‘சமூகத்தை ஆளும் கருத்துக்கள் எல்லாம் ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள்’ என்றார் மார்க்ஸ். அது இந்திய சமூகத்திற்கு மிகவும் பொருந்தும்.
பொரும்பான்மையான சாமானிய மக்கள் ‘மாவோயிஸ்டுகள், நக்கசலைட்டுகள் என்றால் தீவிரவாதிகள், அவர்களால் தான் நாட்டில் அனைத்து பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அவர்கள் சாமானிய மக்களுக்கு எதிரானவர்கள்’ என்று ஆளும் வர்க்கம் கற்பித்த கருத்துக்களை எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் அப்படியே தங்களது மூளைகளில் ஏற்றி வைத்திருக்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு நக்சல் பாரி புரட்சியைப் பற்றியோ மாவோவைப் பற்றியோ எதுவுமே தெரியாது. அவர்கள் அதை தெரிந்து கொள்வதற்கு எப்போதுமே முயற்சித்ததும் கிடையாது. நக்சல்பாரிப் புரட்சி என்பது எளிய மனிதர்கள் தங்களுடைய நிலபிரபுக்களுக்கு எதிராக நடத்திய புரட்சி என்பதும், மாவோ என்பவர் சீன நிலபிரபுத்துவத்தையும், ஜப்பானிய ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து சீனப் புரட்சியை தலைமையேற்று நடத்தியவர் என்பதையோ ஒரு வரி செய்தியாகக் கூட அவர்கள் எப்பொழுதும் தெரிந்துகொள்ளப் போவதில்லை
சில தினங்களுக்கு முன்னால் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மிரில் சிஆர்பிஎப் பயிற்சி முடித்த ‘232 மகிளா பட்டாலியனை’ சேர்ந்த 567 பெண்கள் பயிற்சி முடித்து படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது லட்சியமாக நாட்டில் இருந்து நக்சல் வன்முறைகளையும் தீவிரவாதத்தையும் ஒழிப்போம் என சபதம் ஏற்றிருக்கின்றார்கள்.
உண்மையிலேயே காட்டுக்குள் என்ன நடக்கின்றது என்று இவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. தங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள அந்த மண்ணின் பூர்வகுடிகளான பழங்குடி இன மக்கள் வாழ்வா சாவா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றார்கள். ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் அரசு திட்டமிட்டு அவர்களது வாழ்விடங்களை அழித்து அதை வேதாந்தா எஸ்ஸார், ஜிண்டால் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்குத் தாரை வார்க்க துடித்துக் கொண்டிருக்கின்றது. லட்சக்கணக்கான பழங்குடி இன மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் இருந்து வல்லடியாக வெளியேற்றி இருக்கின்றது. வெளியேற மறுத்த மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். உலகில் எந்த இராணுவமும் செய்யத் துணியாத பல கேடுகெட்ட அயோக்கியதனங்களை இந்திய இராணுவம் அங்கு செய்துள்ளது.
இப்படிப்பட்ட இந்திய அரசுக்கு எதிராகவும் , பன்னாட்டு கம்பெனிகளின் நிலப்பறிப்புக்கு எதிராகவும் ஏறக்குறைய 90 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட புரட்சிகர ஆதிவாசி பெண்கள் அமைப்பான கிராந்திகாரி ஆதிவாசி பெண்கள் அமைப்பு போராடிக் கொண்டிருக்கின்றது. தங்களது மண்ணையும், தங்களது உயிரையும் காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருக்கும் அந்த எளிய ஆதிவாசிப் பெண்களுக்கு எதிராக அதே போல வறுமையில் வாழும் சமவெளி இந்தியாவில் உள்ள பெண்கள் இப்போது போரில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள்.
சிறுதும் அரசியல் அறிவு அற்ற ஆண்களும் பெண்களுமாய் லட்சக்கணக்கான வீரர்களை ஆளும்வர்க்கம் தனது லாபவேட்கையை நிறைவேற்றிக் கொள்ள களத்தில் இறக்கி உள்ளது. சாமானிய மக்களுக்கு எதிராக சாமானிய மக்களை. இரண்டுபேரும் தங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள தங்களது உயிரை பணயம் வைத்துப் போராடுகின்றார்கள். பழங்குடி இன மக்கள் தங்களுடை கண்ணுக்குத் தெரிந்த எதிரியை எதிர்த்துப் போராடுகின்றார்கள். ஆனால் இராணுவ வீரர்களோ தங்களது உண்மையான எதிரி யார் என்று தெரியாமல் இந்திய ஆளும்வர்க்கத்தின் நலன்களுக்குத் தான் தாம் போரிடுகின்றோம் என்று தெரியாமல் அந்த அப்பாவி ஆதிவாசி மக்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துகின்றார்கள்.
அப்படி தன்னுடைய உயிரை பணயம் வைத்துத் தங்களது கொள்ளைக்கு ஆதரவாக செயல்படும் அந்த சிஆர்பிஎப் வீரர்களை இந்திய அரசு எவ்வாறு நடத்துகின்றது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. 2008 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டுவரை ஏறக்குறைய 228 வீரர்கள் இறந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் மலேரியா, மாரடைப்பு, மற்றும் சரியான ஆரோக்கியமான உணவு இல்லாதது போன்ற பல காரணங்களால் தான் இறந்துள்ளனர்.
மேலும் இந்த சிஆர்பிஎப் வீரர்களில் பெரும்பாலானவர்கள் குறிப்பாக மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் 37% பேரும் சுயநிர்ணய உரிமைகோரி போராடும் காஷ்மீரிகளின் போராட்டத்தை ஒடுக்க 28% பேரும் தேசிய இனப் போராட்டங்கள் நடைபெறும் மாநிலங்களில் 16 சதவீத பேரும் பணியமர்த்தப்பட்டிருக்கின்றார்கள். எங்கெங்கெல்லாம் தங்களுடைய அதிகாரம் கேள்விக்குள்ளக்காப் படுகின்றதோ அங்கெல்லாம் இந்த சிஆர்பிஎப் வீரர்கள் பெருமளவில் களத்தில் இறக்கிவிடப்படுகின்றார்கள். ஏற்கெனவே தங்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டு சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளைப்போல வாழ தள்ளப்பட்ட அந்த மக்களின் வீரம் செறிந்த போராட்டத்தை ஒடுக்க இந்தியாவின் மற்ற பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்கள் களத்தில் தங்களுடைய உரிமைக்காகப் போராடும் மக்களுடன் மோத விடப்படுகின்றார்கள்.
சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளில் 42 சதவீதம் பேர் மட்டுமே பத்தாம் வகுப்பை முடிக்கின்றார்கள். 11.33 சதவீதமானவர்கள் மட்டுமே கல்லூரிக்குச் செல்கின்றார்கள். அவர்களிலும் 3.54 சதவீதமானவர்கள் மட்டுமே பட்ட மேற்படிப்பைத் தொடருகின்றார்கள் இந்திய ஆளும்வர்க்கத்தின் நலன்களைக் காப்பாற்ற தன் சொந்த நாட்டு வறிய மக்களுக்கு எதிராக போராடும் சிஆர்பிஎப் வீரர்களின் உண்மையான நிலைமை இப்படித்தான் இருக்கின்றது. எப்படி இந்திய ஆளும் வர்க்கம் அந்தச் சாமானிய பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரத்தை சுரண்டி கொள்ளையடிக்கின்றதோ அதே போலத்தான் அவர்களுக்கு எதிராக களத்தில் இறங்கி உயிரை பணயம் வைத்துப் போரிடும் மக்களின் வாழ்க்கையும் சுரண்டுகின்றது. ஆனால் இது எல்லாம் அந்த வீரர்களுக்குத் தெரிவதில்லை. அவர்களில் பலபேர் வறுமையால் வேலைக்குச் சேர்ந்தவர்கள் என்பதுதான் உண்மை.
பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக தன் சொந்த நாட்டு மக்களை மாவோயிஸ்டுகள் என்றும், நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தி அவர்களை கொன்றொழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு இந்திய ஆளும் வர்க்கம் அலைகின்றது. காங்கிரசு அரசு பழங்குடி இன மக்களை நேரடியாக அழித்தொழித்தது. ஆனால் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அந்த மதமற்ற மக்களை கருத்தியல் தளத்தில் ஏமாற்றி காடுகளில் இருந்து வெளியேற்ற வனவாசி கல்யாண் ஆஸ்ரம் என்ற அமைப்பையும் வன்முறைமூலம் வெளியேற்ற பசுமை வேட்டையும் ஒரு சேர நடத்திக் கொண்டுள்ளது.
இப்படி சாமானிய மக்களுக்கு எதிராக போராட சாமானிய மக்களை களத்தில் இறக்கும் ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ளத் திராணியற்ற மூடநம்பிக்கையிலும், பிற்போக்குத்தனத்திலும், கொடிய வறுமையிலும் இந்திய மக்களை பார்ப்பனியமும் அதையே தங்களது கொள்கையாகக் கொண்ட இந்திய ஆளும்வர்க்கமும் வைத்திருக்கின்றது. நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் இந்திய மக்களின் நலனே தன்னுடைய உயிர் என்று சொல்லும் எந்த அரசியல்வாதியின் மகனோ, மகளோ சிஆர்பிஎப் படைப்பிரிவில் பணியாற்றினால் சொல்லுங்கள். உங்களது அரசியல்வாதிகளின் நேர்மையை நாங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்கின்றோம்.
- செ.கார்கி