அன்புநிறை தோழமை உறவுகளுக்கு,

வணக்கம். கடந்த ஓராண்டிற்கும் மேலாகவே உங்களுடனான உறவில் பெரும் தொய்வு நேர்ந்துள்ளது. ஈரோட்டை விட்டு நீங்கிய பொழுதே என் அரசியல் செயல்பாடுகளில் சரிவு  நிகழத் தொடங்கி விட்டது. அரசுப் பணியிலிருந்து விடுதலை பெற்றவுடன் சொந்த ஊருக்குச் சென்று அங்கே உழவர் அமைப்பைக் கட்டுவது என்பதே என் விருப்பமாக இருந்தது. என் விருப்பத்தைநான் சார்ந்திருந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தலைமையிடம் தெரிவித்தேன். பார்வைக் குறைபாடுள்ள எனக்கு சிற்றூர்ப் புறத்தில் அதுவும் நான் பிறந்து வளர்ந்த எனக்கு மிகவும் பழகிய சுற்றுப்பகுதியில் இயங்குவது என்பது சிரமமாக இருக்காது என்ற அடிப்படையிலேயே அக்கோரிக்கையை வைத்தேன். ஆனால் தலைமை என்னைத் திருப்பூர்த் தாய்த்தமிழ்ப் பள்ளியில் பணியாற்றப் பணித்தது. அதன்படியே அங்குச் சென்றேன்.

நிர்வாகப் பணி என்று வந்தவனுக்கு ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றது. என் நெஞ்சம் கவர்ந்த பணி என்பதால் கடந்த ஆறாண்டுகளாக முழு ஈடுபாட்டோடு பணி புரிந்தேன். தேவத்தூர் மணிமேகலை இளங்கோ உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றிய அந்தப் பொன்னான நாள்களுக்குப் பிறகு மனநிறைவோடு கழிந்த நாள்கள் இவை எனலாம்.

ஆனால் ஈரோட்டில் பேணிய அரசியல் தொடர்புகளை இங்குப் பேண இயலவில்லை. நகரத்தை விட்டு வெளியே பள்ளி அமைந்திருந்ததால் அதற்கு அருகிலேயே தங்க வேண்டியதாயிற்று. அதனால் அரசியல் நிகழ்வுகளில் முழுமையாய்ப் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. ஈரோட்டைப் போல் என்னை நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்லக்கூடிய தோழமைத் துணை ஒன்றைத் தேடிக் கொள்ளத் தவறி விட்டேன்.

பள்ளிப் பணிகளில் மூழ்கிப் போனது ஒரு காரணம். இன்னொரு காரணம் நான் சார்ந்திருந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் அமைப்பைக் கட்டுவதிலும் அரசியல் செயல்பாடுகளிலும் இயங்காற்றலை இழந்து போயிருந்தது. இந்த உண்மையைச் சொல்லியாக வேண்டும். நான் கடந்து வந்த அரசியல் பாதையைத் தற்திறனாய்வோடு விரிவாகப் பதிவு செய்ய வேண்டும் எனவும் கருதியுள்ளேன், விடுதலை அரசியலுக்கு அது பயன்படக்கூடும் என்ற நம்பிக்கையில்.

இடையில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்திலிருந்து தியாகுவை வெளியேற்றிய பிறகு தோழர் மோகன்ராசு தலைமையில் இயங்கிய காலம் அரசியல் செயல்பாடுகளில் மீண்டும் ஒரு தீவிரத் தன்மையைக் கொணர்ந்தது. ஆனால் அஃது ஒரு குறுகிய காலமே நீடித்தது. எனினும் அச்சமயத்தில் ‘சமூகநீதித் தமிழ்த்தேசம்’ இதழைக் கொண்டு வந்தது ஒரு நிறைவான பணி.

தோழர் மோகன்ராசுவின் படுகொலை எங்கள் அரசியல் வாழ்வைக் குலைத்துப் போட்டது. தோழர் மோகன்ராசு தமிழ்த் தேசிய வரலாற்றில் ஓர் ஆற்றல் மிக்க தலைவராக வளர்ந்திருக்கக் கூடியவர். யாருமே கிஞ்சிற்றும் எதிர்பாராத நிலையில் வானிலிருந்து தலை மீது இடி இறங்கினாற் போல் நேர்ந்த அவரது படுகொலை தனிப்பட்ட முறையில் எங்கள் இயக்கத்திற்கு மட்டுமல்லாது தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது என்பதே உண்மை.

பின்னர் நிகழ்ந்த தமிழ்த் தேசியக் குடியரசு இயக்கத்தின் தோற்றமும் அதனுள் ஏற்பட்ட முரண்பாடுகளும் பெரும் தேக்கத்தைத் தோற்றுவித்தன. அந்தந்தப் பகுதித் தோழர்கள் அவரவர் களநிலைமைகளுக்கு ஏற்ப செயல்படத் தொடங்கினர். என்னைப் பொருத்தவரை பள்ளிப் பணிகளைத் தவிர மற்ற அரசியல் பணிகள் முற்றாக நின்று போயின.

இப்பொழுது நான் விரும்பிய வண்ணமே சொந்த ஊருக்குத் திரும்பி விட்டேன். ஆனால் காலங்கடந்து வந்துள்ளேன் என்பது பெரும் வருத்தத்தைத் தருவதாக உள்ளது. களப்பணிகளுக்கு என் உடல்நிலை பொருந்தி வர வாய்ப்பில்லை. எனினும் ஊர் மக்களோடு விட்டுப் போன உறவுகளைப் புதுப்பித்து என்னால் இயன்ற பணிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளேன். எழுத்துப் பணியைச் சற்று வீறோடு தொடரலாம் எனக் கருதியுள்ளேன்.

அதே சமயத்தில் என் உடல் ஒத்துழைக்கும் இறுதிக் காலம் வரையிலும் அல்லது பள்ளிக்கு நான் சுமையாக மாறாத வரையிலும் பள்ளியுடனான உறவைத் தொடர்ந்து பேணி பள்ளி வளர்ச்சிக்குத் தொடர்ந்து துணை நிற்பேன். இப்பொழுதைய நிலைமையில் எழுத்துப் பணியும் கல்விப் பணியும் என்னால் இயலக் கூடிய செயல்களாக நம்புகிறேன்.

அரசியலில் என்னோடு இணைந்திருந்த தோழர்கள் ஏறத்தாழ அனைவருமே அவரவர் நிலைக்கேற்ப வேறு வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கி விட்டனர். மதுரைத் தோழர்கள் அனைவரும் தமிழ்த்தேசப் பேரியக்கத்தில் இணைந்து விட்டதாகக் கேள்விப்படுகிறேன். தோழர் சிவகாளிதாசன் செந்தமிழ்வாணராகப் புதுப் பிறப்பெடுத்துக் கல்விக் களத்தில் ஆர்வத்தோடு மும்முரமாகப் பணியாற்றி வருகிறார். ஈரோட்டுத் தோழர்கள் தமிழ்த்தேசக் குடியரசு இயக்கத்தில் செயலாற்றுகிறார்கள். எல்லாத் தோழர்களும் பல்வேறு நிலைகளில் தனிவாழ்விலும் அரசியலிலும் எனக்குத் துணை நின்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எப்பொழுதும் நான் நன்றியுடையவனாய் இருப்பேன். அவரவர் தளத்தில் அவரவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள். இணைய முடிந்த தளங்களில் எதிர்காலத்திலும் அவர்களோடு இணைந்து பணியாற்ற முடியும் எனக் நம்புகிறேன்.

பெரும்பாலும் எல்லோரும் நகரத்தை நோக்கி நகரும் காலத்தில் நான் பிறந்த என் சொந்தச் சிற்றூருக்குத் திரும்பியுள்ளேன். நெருங்கிய என் உறவினர்கள் சிலரைத் தவிர மற்றனைவருக்கும் என் நகர்வு ஒரு கேள்விக் குறியாகவே உள்ளது. பள்ளி அறக்கட்டளை (தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை) உறுப்பினர்கள் அனைவரும் என் முடிவை ஏற்றுக் கொண்டுள்ளனரா என்பதும் அய்யமே. நான் திருப்பூரிலேயே தங்கி இறுதிவரை பணியாற்ற வேண்டும் என்பதே அவர்களின் ஆசையாக இருந்தது என்பதை அறிவேன். ஆனால் தொடக்கத்திலிருந்தே அஃது இயலாதது என்பதை அவர்களுக்கு உணர்த்தி வந்துள்ளேன். பொறுப்புகளுக்குப் புதிய இளைஞர்கள் வர வேண்டும். அதுதான் புதிய மாற்றங்களையும் வளர்ச்சியையும் கொண்டு வரும். அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அறக்கட்டளை உறுப்பினர்கள் என்னைப் புரிந்து ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

நான் ஊர் திரும்பியதற்கு வேறு சில குடும்பச் சூழல்கள் காரணமாக இருந்தாலும் என் தனிப்பட்ட புற இயக்கத்திற்கு ஏற்ற இடம் சிற்றூர் என்பதே முதன்மையான காரணமாகும். என் சிற்றூர் தாராபுரம் நகரத்திலிருந்து கிழக்கில் ஏறத்தாழ 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தாராபுரம்-கரூர் சாலையில் அமைந்துள்ள மூலனூர் என்ற பேரூரிலிருந்து தெற்கே எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது. மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. மூலனூர்-பழனி சாலையில் எங்கள் ஊரான வீரப்ப கவுண்டன் வலசே திருப்பூர் மாவட்ட எல்லையாகும். ஊரே சாதிப் பெயரில் அமைந்துள்ள போது அதன் சமூகக் கட்டமைப்பை நீங்கள் புரிந்து கொள்ளலாம். யாரும் எதிர்க்காமலே பேச்சு வழக்கில் அது வீரப்போன வலசாகத் திரிந்து போனது என்பது சுவை நகைமுரண்.

நகரத்தின் இரைச்சல்கள் எதுவும் நெருங்காத ஊர். Far From the Madding Growd என்ற தாமஸ் கார்டியின் கவித்துவ வர்ணணை(இது அவரது புதினங்களின் ஒன்றின் தலைப்பு) எங்கள் பகுதி ஊர்களுக்கு மிகவும் பொருந்தி வரக் கூடியதாகும். நகரத்தின் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடுகள் எதுவும் இங்கே நெருங்கவில்லை என்றாலும் உழவுத்தொழில் முற்றிலும் சந்தை வேளாண்மையாக மாறி விட்டது. இன்னொரு புறம் கந்து வட்டிக்காரர்களைப் பிறப்பிக்கும் கருப்பையாகவும் இப்பகுதி உருமாறியுள்ளது. இது குறித்து ஏற்கனவே தமிழ்த்தேசத்தில் எழுதியுள்ளேன். தமிழ்நாட்டின் ஊர்ப்புற சமூகப் பொருளாதார அரசியல் கட்டமைப்புகளைப் பற்றி இன்னும் போதுமான ஆழமான ஆய்வுகள் இல்லை என்பதே புரட்சி இயக்கங்களின் தேக்கங்களுக்குக்கான காரணிகளில் ஒன்று எனக் கருதுகிறேன். இவை குறித்து பின்னர் விரிவாக எழுதலாம் என்றும் கருதியுள்ளேன்.

இங்கே நகரத்தின் சீர்கேடுகள் இல்லை என்றாலும் நகரத்தில் கிடைக்கக் கூடிய வசதிகள் பலவும் இங்கே இல்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். கல்வி, மருத்துவ ஏந்துகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எல்லாம் நகரத்தை நோக்கியே ஓடியாக வேண்டும். நான் படித்த அரசுப் பள்ளிக்கூடம் இன்று பத்துக்கும் குறைவான தலித் குழந்தைகளோடு இன்றோ நாளையோ மூடும் நிலையில் உள்ளது. கூரியர் வசதி எதுவும் இல்லை. செய்தித்தாள்களை மூலனூரிலிருந்தே பெற வேண்டும். பக்கத்து ஊரான வெள்ளவாவிப்புதூரில் கிளை அஞ்சலகம் உள்ளது. அதன் வழியாகக் கடிதத் தொடர்பு மேற்கொள்வது என்பது செவ்வாய்க் கோளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது போன்றதே ஆகும். 3G வசதி கிடையாது. 2Gயில் ஏர்டெல் மட்டுமே குறைந்தளவு வேகத்தில் கிடைக்கிறது. அதைத்தான் பயன்படுத்தி வருகிறோம். கைபேசி ஒன்றுதான் அனைத்துத் தொடர்புகளுக்குமான ஒரே கருவி. ஆனாலும் சிற்றூர் சிற்றூர்தான். படிப்பதற்கும் எழுதுவதற்குமான அமைதி நிறைந்த ஊர்.

இங்கிருந்து கொண்டுதான் இனி நான் இயங்கப் போகிறேன். ஒரு சில நண்பர்கள் ஊகித்துக் கொண்டது போல் துறவறம் எதுவும் நான் மேற்கொண்டு விடவில்லை. என் அகவைக்கும் உடல் தகுதிக்கும் ஏற்ற வகையில் இம்முடிவிற்கு வந்துள்ளேன். எது இயன்றதோ அதை ஒழுங்காகவும் கோணலின்றியும் செய்வதே அறிவார்ந்த செயல் என்று நம்புகிறேன். அரசியல் களத்தில் முன்னணி வீர்ர்களில் ஒருவனாக இனி என்னால் இயங்க முடியாது. விடுதலைப பாதையை அமைப்பதில் சிறு சரலைக் கல்லாகவாவது பயன்படுவேன் எனத் தோழர்களுக்கு உறுதி கூறுகிறேன். இனி, அடுத்தடுத்து உங்களை என் எழுத்து வழியாகச் சந்திக்கிறேன்.

நன்றி!

என்றும் உங்கள் அன்புத் தோழன்,

வேலிறையன்\கலைவேலு 

Pin It