up gang rape

சமூகக் கட்டமைப்பின் செயல்பாட்டு முறைகளை விமர்சனம் செய்யாதே. சமூகத்தில் என்ன ஒரு விஷயம் நடக்கிறதோ, அந்த விஷயத்திற்காக மட்டுமே குரல் கொடு; விமர்சனம் செய். அந்த விஷயத்தின் ஒற்றைத் தன்மையை மட்டுமே முன்னிறுத்து. அந்த விஷயத்திற்கும் சமூக அமைப்பிற்கும் உள்ள நுட்பமான உறவை இனங்காணாதே.

அந்த விஷயத்தின் பல்வேறு பரிமாணங்களைத் தோண்டியெடுத்து அதன் வேர்களை நோக்கிப் போகாதே.. என்பதுதான் இன்றைய இந்தியா போன்ற பின் காலனிய நாடுகளின் வெகுஜன ஊடகப்பார்வை.

சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் நடந்த கூட்டுப்பாலியல் பலாத்காரம் சம்பவத்தை முன் வைத்து இப்படியான போக்கை நுட்பமாக அவதானிக்கலாம்.

உ.பி.யின் பாடான் மாவட்டம் கத்ரா கிராமத்தில் இரண்டு தலித் பெண்கள் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டார்கள். இந்தக் கொடூரமான நிகழ்வை சிறுசிறு பதிவுகளாகவும், துணுக்குச் செய்திகளாகவும்தான் எல்லா ஊடகங்களும் முன் வைத்தன.

தேசியளவிலான தொலைக்காட்சி ஊடகங்கள் வெற்று வாதங்கள் புரிவதிலேயே முனைப்பாக இருந்தன. ஊடகப் போராளிகளான அர்னாப் கோஸ்வாமிகளும் இதைக் கண்டு கொள்ளவில்லை.

கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்கள் அமைப்பு, 6 பெண்கள் கொண்ட ஒரு குழுவாகத் திரண்டு இந்தச் செயலைக் கண்டித்து கேரள உயர் நீதிமன்றத்திற்கு முன்பு உடலில் ஒரு துணியை மட்டும் போர்த்திக் கொண்டு கண்டனப் போராட்டம் நடத்தினர். வழக்கம்போல இந்த நிகழ்வையும் பெரும்பான்மையான பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை.

தமிழ் ஊடகங்கள் நடிகை சங்கீதா சம்பந்தப்பட்ட நாய் விவகாரத்திற்கு முன்னுரிமை தந்தன. முன்னால் பிரதமர் ஒருவரின் பெண் ஆலோசகர் வளர்த்து வந்த நாய்களின் அறப்போராட்டம் குறித்து பக்கம் பக்கமாக எழுதின.

நாய்களின் விலங்கின அடிப்படை உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர்கள் இந்த எளிய மக்களின் மனித அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல் போனது எவ்விதம்?

ஏனெனில், அந்த நாயின் உரிமை என்பது உயர்வர்க்கத்தின் அதிகாரக் குறியீடு.

இந்தத் தருணத்தில் ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ் எழுதிய ‘பச்சோந்தி’ சிறுகதை ஞாபகம் வருகிறது.

மார்க்கெட் ஒன்றில் உள்ளே நுழைந்த ஒரு நாயை, காவல் துறை அதிகாரி அடித்துத் துரத்துவார். அருகிலிருக்கும் ஒருவர், ‘அந்த நாய் மேயருடைய நாய்’ என்று சொல்லுவார். உடனே பதறிப் போய், அதற்கு பூரணமரியாதையுடன் மேயரின் வீட்டிற்கு அனுப்பி வைப்பார் அதிகாரி. இந்தக் கதையின் தொடர்ச்சிதான் இன்றும் தொடர்கிறது.

கொடூரமான முறையில் கொல்லப்பட்டவர்கள் எந்த அதிகாரமுமற்ற எளிய தலித்துகள் என்பதனால்தான் இந்த விவகாரம் பெரியளவில் பேசப்படவில்லை என்கிற விமர்சனத்தைத்தான் இங்கு வைக்க வேண்டியிருக்கிறது.

ஏனெனில், இதற்கு முன்பு டெல்லியில் நடந்த ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நிர்பயா என்ற பெண்ணின் விவகாரம் தேசமெங்கும் தீப்பற்றியெரிந்தது. ஊடகங்கள் பொங்கி எழுந்தன. தொண்டு நிறுவனங்கள், அமைப்புகள், மகளிர் குழுக்கள், மாணவர்கள் என்று எல்லாத்தரப்பிலும் போராட்டங்களும் ஊர்வலங்களும் நடந்தேறின. சென்னையில் மெரீனா கடற்கரையில் பெண்ணிய அமைப்பினர் தீச்சுடர் ஏந்தி கண்டனப் பேரணி நடத்தினர்.

இந்த நிகழ்வை மையமாக வைத்து ‘நிர்பயா’ என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டது. அரசாங்கம் நிர்பயா நிதித் திட்டம் கொண்டு வந்தது. 1000 கோடி ரூபாயில் நிர்பயா ஹெல்ப்லைன் சேவையை அறிமுகப் படுத்தியது. நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், இது சம்பந்தமாக செல்பேசியில் sos என்ற எச்சரிக்கை செய்தி அனுப்பும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். எதிர்காலங்களில் மொபைல் உற்பத்தியாளர் கள் sos பட்டனோடு கூடிய தொழில் நுட்பத்தோடு உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இப்படியாக ஒரு பாலியல் பலாத்காரக் கொலை சம்பவம் தேசமெங்கும் கொந்தளித்தெழுந்ததற்கான காரணத்தையும், மற்றொரு பாலியல் பலாத்காரக் கொலை விஷயம் கண்டு கொள்ளாமலேயே போய்விடுவதற்கான பின்னணியும் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

நிர்பயா தேசத்தின் தலைநகரில் மருத்துவக் கல்விகற்கும் உயர்வர்க்க மாணவி. அவர் மீதான பாலியல் பலாத்காரக் கொலை என்பது உயர் மற்றும் மத்தியதர வர்க்க மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியது. எப்போதுமே உயர் மற்றும் மத்திய தரவர்க்க மக்களின் பாதுகாப்பு என்பது தேசத்தின் பாதுகாப்பாகவே இந்தியாவில் குறிக்கப்படுகிறது.

எனவே இந்தியாவின் பாதுகாப்பு குறித்த விஷயமாக மாறியது. தங்களது தோழிகளுடன் வெளியே போய் வரும் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் பாதித்தது கண்டு பொங்கியெழுந்தனர் மாணவர்கள். தாங்கள் கற்பித்து வந்த உயர் வர்க்கத்தின் சுதந்திர உரையாடல்கள் சிதறிப்போவது கண்டு பதறியெழுந்தது ஊடகம்.

இரவு 9 மணிக்கு மேல் ஒரு பெண் தனியாக, பயமின்றி நடந்து போகும் காலம் என்றைக்கு வருகிறதோ அன்றைக்குதான் நாட்டின் சுதந்திரம் பூரணமடைந்தது என்று சொல்லலாம் என்று மகாத்மா காந்தி சொன்ன சுதந்திரத்தின் அர்த்தம் தலைநகரிலேயே பிரச்னையாகும் சூழலினால் அரசாங்கமும் கொதித்தெழுந்தது. அரசு, பொது மக்கள், தொண்டு அமைப்புகள், மாணவர்கள், பெண்ணியவாதிகள், ஊடகங்கள் என்று அனைத்து தரப்பினரும் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது தலைநகர் சார்ந்த உயர்வர்க்கச் சிந்தனை.

ஆனால், உபி.யில் நடந்ததோ மிகப் பெரும் அவலம். வீட்டில் கழிவறை இல்லாத பரிதாபமான தலித் சமூகப் பெண்கள் மலங்கழிக்க வெளியே போனபோது நடந்த கொடுமை அது.

இந்தக் கொடுமை இன்று வரை தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நகரத்தின் பவிஷான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் கனவான்களுக்கு இதன் கொடுமை புரியாது. முன்பெல்லாம் கிராமங்களில் பல்வேறு மறைவிடங்கள் முள் காடுகளாய் புல் பூண்டு அடர்ந்து கிடக்கும். ரியல் எஸ்டேட் வணிகம் மிகப் பெரும் பாய்ச்சலுடன் எல்லா இடங்களையும் கபளீகரம் செய்துவிட்ட சூழலில், மலம் கழித்தல் என்பதே பெரும் சவால் நிறைந்ததாக இருப்பதுதான் கிராமிய வாழ்வு.

குறிப்பிட்ட நேரத்திற்கு மலம் கழிக்க முடியாதது. மலம் கழித்துக் கொண்டிருக்கும்போது யாராவது வந்துவிட்டால் ‘சடக்’ கென்று எழுந்து கொள்ளும் கொடூரம், அடக்கி அடக்கி வைத்திருப்பதால் ஏற்படும் ஒவ்வாமை, மலச்சிக்கல்கள் அதுசார்ந்த நோய்கள் என்று தொடரும் துன்பியல் கொண்டது.

மேலும், இந்த விஷயத்தை ‘காலைக்கடன்’ என்று நாசுக்காக குறித்து வைத்திருக்கிறது சமூக அமைப்பு. ஆனால், வீட்டில் கழிவறை வைத்திருக்கும் உயர் வர்க்கத்தினருக்குத்தான் இது பொருந்தும். பரிதாபமான எளிய மக்களுக்கு ‘இரவுக்கடன்’ தான்.

அதனால், பெண்களுக்கு இயற்கை உபாதைகளுடன் பாலியல் தொந்தரவுகளும் சேர்ந்து கொள்ளும். அவர்கள் ஒவ்வொரு நாளும் இரவுக் கடன்களை முடிப்பதென்பது ஒரு ஆட்டத்திற்கு (Game) நிகரானது. இதிலுள்ள இருண்மையான அங்கதமும் கொடுமையும் கலந்த, அவலத்தை கிராமங்களில் விளையாடும் ஆடு புலி ஆட்டமாக உருவகம் செய்திருப்பதாகக் கிண்டலடிக்கிறார்கள் கிராமத்துக் கதை சொல்லிகள். ஆடு புலி ஆட்டம் என்பது 15 ஆடுகளை மூன்று புலிகள் துரத்தித் துரத்திக் கொல்லும் விளையாட்டு. அதிலிருந்து 15 ஆடுகளும் தப்பிப்பதுதான் ஆட்டம்.

இங்கு, ‘நகரத்தில் சிறுநீர் கழிக்க அவஸ்தைப்படும் வேலை தேடும் இளைஞன் பற்றி‘ நான் எழுதிய ‘நவீன கழிப்பிடம்‘ என்னும் சிறுகதை ஞாபகம் வருகிறது. சிறுநீர் கழிக்க காசு இல்லாததால் மறைவிடம் ஏதுமிருக்கிறதா என்று நகரத்தின் சந்து பொந்துகளிலெல்லாம் தேடி ஓடுவான் அவன். அடக்க முடியாத சிறுநீரை அடக்கிக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளை எதிர்கொள்வான். இறுதியாக ஒரு இடம் கிடைக்கும். தனது குறியை எடுத்து ஆசுவாசமாக நீரை வெளியேற்றுவான். அந்தக் கணத்தில் தேசத்தின் மீது கோபம் பொங்கிப் பெருகும். அப்போது பக்கத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பை கூளங்களில் பள்ளி மாணவனின் வரலாற்றுப் புத்தகத்திலிருந்து கிழிந்துபோன ஒருதாள் கிடக்கும்: அது இந்திய வரைபடம். அதை நோக்கித் தனது குறியைத் திருப்புவான்.

கோவில்கள் கட்டுவதை விட கழிப்பறைகள் கட்டுவதே இன்றைய தேவை என்று பிரதமராவதற்கு முன்பு முழங்கிய திரு.மோடி, இப்போது தனது அரசின் மூலம் வீட்டுக்கொரு கழிப்பறைகள் கட்ட வழிவகை செய்யலாம். எவ்வளவோ இலவசங்கள் தருகின்ற அரசுகள் அடிப்படை தேவைக்கான விஷயத்தையும் பூர்த்தி செய்யலாம்.

அதுமட்டுமல்லாது, உயர் சமூகத்தின் உளவியல் ரீதியாகப் பதிந்துள்ள சிந்தனை என்பது, கழிப்பறை என்பது தீட்டுக்குரியது, கழிப்பறையைச் சுத்தம் செய்வது தலித்துகளின் வேலை. என்பது போன்ற ஆதிக்கச் சிந்தனைகளின் நீட்சிதான் இது போன்ற காரியங்களுக்கு வழிவகுக்கிறது. போகிறபோக்கில் ஏதோ சொல்கிறதாக நினைக்காமல், இந்தக் கருத்தோட்டத்தை விரிவாக்கிப் பார்த்தோமெனில், கழிப்பறை - தீட்டு - கழிப்பறையை சுத்தம் செய்பவர்கள் - சமூக அமைப்பின் கீழ் நிலையில் உள்ளவர்கள் - அதிகாரமற்றவர்கள் - அவர்களைக் கை வைத்தால் எதுவும் நடக்காது...என்ற பல்வேறு பரிமாணங்கள் கொண்ட உளவியல் பார்வைகளைக் கட்டமைக்க முடியும். தூக்கில் கட்டித் தொங்கவிடும் துணிவு இதுபோன்ற பார்வைகளிலிருந்தே தோற்றம் கொள்கிறது.

தனது கழிப்பறையை தானே சுத்தம் செய்யும் மகாத்மா காந்தியின் தொடர்ச்சி இங்கு தொடரப்படவே இல்லாததன் துயர வரலாறுகள்தான் இப்போது எழுதப் படுகின்றன.

ஆனால் இந்தப் பார்வையோட்டத்தை இங்கு இடை வெட்ட வேண்டியிருக்கிறது.

கழிப்பறை இல்லாததால்தான் இதுபோன்ற பாலியல் பலாத்காரங்கள் நடக்கின்றன என்ற திசை திருப்பல்களை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. சமூகக் கட்டமைப்பின் செயல்பாட்டு முறைகளை விமர்சனம் செய்யாமல், அதன் வேர்களை இனங் காட்டாமல், நடந்த ஒரு சம்பவம் சார்ந்த மேலோட்டமான பார்வைகளை முன்வைப்பதும், ஒற்றைப் பார்வையை முன்னிறுத்தும் போக்கையும் தான் இங்கு அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது.

சுலப் இன்டர்நேஷனல் அமைப்புகள் இந்தியாவின் கிராமங்கள் தோறும் கழிப்பறைகள் கட்டி முடித்துவிட்டால் இந்தப் பிரச்னைகள் தீர்ந்து விடுமா?

கழிப்பறைகள் மிக முக்கியம் என்பதையும் அவை கிராமங்கள் தோறும் கட்டப்பட வேண்டும் என்பதையும் நான் மிக மிக ஆதரிக்கிறேன். ஆனால் இப்படியொரு வாதத்தை முன்வைத்து நாட்டின் மிக முக்கியமான பெண் வாழ்வியல் சார்ந்த அடிப்படை பிரச்னைகளை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரமாக இதை உபயோகிப்பதை நான் எதிர்க்கிறேன்.

கடந்த வருடம் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க பெண்ணியவாதியும் எழுத்தாளருமான க்ளோரியா ஸ்டெனிம் என்னும் பெண்மணி முன்வைத்த வாதம் இங்கு முக்கியமானது.

அமெரிக்கா தொடுத்த பயங்கரவாதத்திற்கெதிரான போரினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விடவும், பாலியல் வெற கொண்ட ஆண்களினால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார். பாலியல் வல்லுறவு என்பதன் நுட்பமான அம்சங்களை எடுத்துரைக்கிறார்.

ஆகப் பெரும் சுதந்திரம் இருப்பதாகச் சொல்லப்படும் அமெரிக்கப் பெண்களின் மீதான பாலியல் தாக்குதல்கள் இனரீதியாக (Race) அகதிகள் ரீதியாக (Exile), புலம்பெயர் ரீதியாக (Migration) அதிகார ரீதியாக (power) எவ்வாறெல்லாம் செயல்படுகின்றன என்பதை விவரிக்கிறார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் வரும் பாதுகாப்பற்ற பெண்களின் இருப்பு பாலியல் வல்லுறவிலும் கொலை பாதகத்திலும்தான் முடிகிறது. கறுப்பினப் பெண்கள், புலம் பெயர் பெண்கள், அதிகாரத்திற்குக் கீழ் உள்ள அபலைகள் என்று பெண்களின் மீதான பாலியல் தாக்குதல்கள், உலகின் உயர்ந்த பட்ச சுதந்திரமும், பெண்களுக்கான அடிப்படை உரிமைகளும் இருப்பதாகச் சொல்லப்படும் தேசத்தில், நவீன கழிப்பிடங்கள் நிரம்பி வழியும் தேசத்தில் அரங்கேறுவதன் காரணம் ஆண்களின் ஆதிக்க மனோபாவமும் உயர்வர்க்கச் சிந்தனையும் தான் என்கிறார்.

ஏனெனில், அமெரிக்கப் பெண்ணின் மனம் என்பது, தன சுதந்திரத்தை ஒடுக்கும் ஆதிக்க மனோபாவத்தை, அதிகாரத்தை எதிர்ப்பது. அதனாலேயே பல்வேறு ஒடுக்குமுறைகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வது. இந்த இடத்தில், புகழ் பெற்ற நடிகர்களான டஸ்டின் ஹாப்மன், ராபர்ட் டி நீரோ ஆகியோர் நடித்த Wag the Dog என்ற ஹாலிவுட் படத்தை நினைவு கூறலாம்:

அமெரிக்காவில் பில் கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில், அவரது செயலாளர் மோனிகா லெவின்ஸ்கி யை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என்ற செய்திகள் அமெரிக்க அரசியலில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அவரது பதவி பறிபோய்விடும் சூழலை நோக்கி இந்த வாதப் பிரதிவாதங்கள் அலையடித்துக் கொண்டிருந்தன. அவரது பதவிக்காலம் முடிந்து வேறு ஜனாதிபதி பதவியேற்ற காலகட்டத்தில் வெளியான இத்திரைப்படம் அந்த சர்ச்சையை மையக் கருவாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

அதில் வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு காட்சி மிக மிக நுண்ணரசியல் தன்மை கொண்டது:

அமெரிக்க தேசம் முழுவதும் மோனிகா லெவின்ஸ்கி யைப் பற்றிய பேச்சு சூறாவளியாய் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ஜனாதிபதி, தேசத்தின் அனைத்து தொலைக்காட்சி ஊடகங்களையும் அழைக்கிறார், அல்பேனியா, அமெரிக்கா மீது போர் தொடுப்பதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கிறது, தேசத்தின்மீது போர்மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன, நாட்டின் பாதுகாப்பிற்கு மாபெரும் அபாயம், எல்லைப்பகுதியில் நடந்து கொண்டிருக்கும் போர்ச் சூழல்கள்... என்பது போன்ற செய்திகளையும், கிராபிக்ஸ் முறையில் செயற்கையான போர்ச்சூழலையும் உருவாக்கி தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிக் கொண்டேயிருக்கவேண்டும்.. என்று உத்தரவிடுகிறார்.

இந்த நுண்ணரசியலிலிருந்துதான் வெகுஜன அரசியலுக்கான ஆட்டத்தின் காய்களை நகர்த்துகிறார்கள்.  ஆகவே, கழிப்பறைதான் இதற்கு ஒரே தீர்வு என்று திசை திருப்பும் இந்த ஆட்டத்தைத்தான் நான் எதிர்க்கிறேன். கிராமங்களில் நடக்கும் ஆடுபுலி ஆட்டங்கள் சமூகக் கட்டமைப்பின் கோடுகளில் உயர்சாதிப் புலிகளாகவும், தலித்திய ஆடுகளாகவும் ஆடப்படுகின்றன. கடித்துக் குதறப்படும் ஆடுகளின் குருதி தேசவரைபடத்தின் மீது சிறுநீராய்ப் பீய்ச்சியடிக்கப் படுகிறது.

இந்த ஆட்டம் பல்வேறுவிதமான பார்வைகள் கொண்ட புதிர்வழிக் கோடுகளில் விதவிதமாய் ஆடப்படுகிறது. “முடிவுறாத இந்த ஆட்டத்தின் காய்களை நகர்த்தும் இந்த நுண்ணரசியல் ஆட்டத்தில் ஆட்டக்காரர்கள் ஆடுகளத்துக்கு வெளியேதானிருக்கிறார்கள்...’’ என்கிறான் ப்ளெமிஷ் மொழி நாவலாசிரியரான ஜோஸ் வண்டேலு....

Pin It