இராஜபக்சேவின் வருகை மட்டுமில்லை, அதற்கான எதிர்ப்பும் இந்த முறை கொஞ்சம் சலசலப்புகளை இங்கே ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக, ஈழப் பிரச்சினைக்கான எல்லாப் போராட்டங்களுக்கும் மக்கள் ஆதரவு தந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இராஜபக்சேவின் கொடும்பாவியை எரிப்பது உட்பட. ஆனால், இந்த முறை இராஜபக்சே வருகையை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டங்களை மக்கள் அவ்வளவாக வரவேற்கவில்லை.

Rajapakse and Modi

“தெற்காசிய நாட்டுத் தலைவர்கள் எல்லோரையும் அழைக்கும்பொழுது அவனையும் சேர்த்து அழைத்திருக்கிறார்கள், அவ்வளவுதானே? இதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?” என்பது போன்ற கேள்விகளை இந்த முறை பொதுமக்களிடமிருந்து கேட்க முடிந்தது.

மக்கள் எழுப்பும் இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதில் என்ன? உண்மையிலேயே, இராஜபக்சே வருகைக்கான இந்த எதிர்ப்பு தேவையற்றதா? தமிழ் உணர்வாளர்கள் இந்த விதயத்தில் கொஞ்சம் மிகையாக நடந்து கொண்டு விட்டோமா?

தமிழ்ப் பற்றாளர்கள், தலைவர்கள் ஆகியோரின் முதற்பெரும் கடமை!

எப்பொழுது ஒரு போராட்டத்துக்குப் பொதுமக்களின் ஆதரவு குறைந்து, அது தனிப்பட்ட சிலரின் போராட்டமாக மாறுகிறதோ அப்பொழுதுதான் அதற்குத் ‘தீவிரவாதம்’ எனும் முத்திரை குத்தப்படுகிறது. எனவே, எந்தப் போராட்டமாக இருந்தாலும், அதன் ஒவ்வொரு கட்டத்தின்பொழுதும், ஒவ்வொரு ஆர்ப்பட்டத்தின்பொழுதும் மக்களுக்கு அதிலுள்ள நியாயத்தைத் தெரியப்படுத்துவது இன்றியமையாதது! இதைச் செய்யாமல் எப்பேர்ப்பட்ட தலைவனாலும் போராட்டத்தின் இலக்கை வென்றெடுக்க முடியாது என்பதை இன்றைய தலைவர்களும் நம் தமிழ்ப் பற்றாளர்களும் முதலில் உணர வேண்டும்!

இலங்கைக் கொடுங்கோலனின் வருகைக்கான எதிர்ப்புப் பற்றி மக்கள் சில கேள்விகள் எழுப்புகிறார்கள். அவற்றுக்குப் பதில் கூற வேண்டியது நம் கடமை.

ஒவ்வொரு கேள்வியாகப் பார்க்கலாம்.

கேள்வி – 1: இதற்கு முன் இராஜபக்சே இங்கு வந்ததே இல்லையா? இந்தத் தடவை மட்டும் இவ்வளவு எதிர்ப்பு காட்ட வேண்டிய தேவை என்ன?

இதற்கு முன்பும் இரண்டு மூன்று தடவைக்கு மேல் இராஜபக்சே இங்கு வந்து போயிருக்கிறான்; உண்மைதான். ஆனால் அவையெல்லாம், அவன் நண்பர்களான சோனியா கும்பலின் அழைப்பின் பேரில், திருப்பதியில் வழிபாடு செய்யும் போர்வையில் அமைந்த வருகைகள். ஆனால் இந்த முறை அவன் வருவது நாட்டின் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள! முந்தைய காங்கிரசு ஆட்சியைக் கைக்குள் போட்டுக்கொண்டு, கடந்த பத்தாண்டுகளாக இராஜபக்சே நடத்தி வரும் அட்டூழியங்கள் யாரும் அறியாதவை அல்ல. இந்நிலையில், புதிய பிரதமர் பதவியேற்கும்பொழுதே அவன் இங்கு வருவது இரு தரப்புக்கும் இடையிலான உறவை மீண்டும் பழைய காங்கிரசு – பக்சே உறவு போலவே ஆக்கி விட்டால் அஃது எப்பேர்ப்பட்ட அபாயம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்! மேலும், இதற்கு முன்பும், இராஜபக்சே இங்கு வரும்பொழுதெல்லாம் தமிழ்ப் போராளிகள் அழுத்தமாகவே தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த முறை, பிரதமர் பதவியேற்பு விழா தொடர்பான எதிர்ப்பு என்பதால் இது கொஞ்சம் வலுவானதாக இருப்பதோடு, ஊடகங்களாலும் இது செவ்வனே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான்.

கேள்வி – 2: இராஜபக்சேவை மட்டுமா பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருக்கிறார்கள்? பாகிஸ்தான் அதிபனைக் கூடத்தான் அழைத்திருக்கிறார்கள். எதிர்க் கட்சியினரான சோனியா, ராகுல் ஆகியோரைக் கூடத்தான் அழைத்திருக்கிறார்கள். தெற்காசிய நாட்டுத் தலைவர்கள் அனைவரையும் அழைக்கும்பொழுது இலங்கைத் தலைவன் என்கிற முறையில் அவனையும் அழைத்திருக்கிறார்கள், அவ்வளவுதானே? இதை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?

இராஜபக்சேவோடு சேர்ந்து தமிழினத்தை அழித்தவர்கள் காங்கிரசார். ஆனால், அப்பேர்ப்பட்ட அவன் உயிர்த் தோழர்கள் கூடத் தங்கள் பதவியேற்பு விழாவின்பொழுது அவனை அழைக்கவில்லை. அப்படியிருக்க, தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்பு கிளம்பும் என்று தெரிந்தும் புதிய ஆட்சியினர் அவனை அழைக்க வேண்டிய தேவை என்ன? தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் எல்லோரையும் அழைக்கும்பொழுதுதானே அவனையும் சேர்த்து அழைத்திருக்கிறார்கள் என்கிறீர்களே, முதலில், இத்தனை நாட்டுத் தலைவர்களை அழைத்து, இப்படிப் பிரம்மாண்டமாகப் பதவியேற்பு விழா நடத்த வேண்டிய தேவை என்ன? மோடி என்ன பிரதமராகப் பதவியேற்கிறாரா இந்திய அரசராக அரியணை ஏறுகிறாரா? சோற்றுக்கில்லாமல் மக்கள் சாகிற ஒரு நாட்டில் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? இரண்டில் எந்த ஆர்ப்பாட்டம் தேவையில்லாதது, நாம் நடத்தியதா மோடி நடத்தியதா?

அது மட்டுமில்லை, பாகிஸ்தான் அதிபனின் வருகைக்கு ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்க வேண்டியவர்கள் காஷ்மீர் மக்கள். அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நவாஸ் ஷெரீப்பின் இந்த வருகையால் இரு நாட்டு உறவு வலுப்பட்டால் அது தங்களுக்கு நன்மை என்று அவர்கள் கருதுவதால் இதை அவர்கள் வரவேற்கவே செய்கிறார்கள். பாதிக்கப்படுகிற மக்களே எதிர்ப்பு தெரிவிக்காததால், அவனை அழைத்ததில் சிக்கல் ஏதுமில்லை. ஆனால், இராஜபக்சே வருகைக்கு ஆதரவு தெரிவிப்பதா, எதிர்ப்பு தெரிவிப்பதா என்பதை முடிவெடுக்க உரிமையுள்ளவர்களான தமிழ் மக்கள் அவன் வருகையை விரும்புகிறார்களா என்பதுதான் இங்கே கேள்வி. காஷ்மீரிகளுக்கு மோடி மீது இருந்த அந்த நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இல்லை. இராஜபக்சே இங்கு வந்தால், இரு நாட்டு உறவு வலுப்பட்டால், இலங்கையில் வாழும் தம் மக்களுக்கு அது நல்லதில்லை என இங்கு மக்கள் கருதும் நிலையில், ஒன்று – அவனை அழைக்காமல் விட்டிருக்க வேண்டும்; இல்லாவிட்டால், அவன் வருகையும், அதனால் ஏற்படும் இரு நாட்டு உறவும் ஈழத் தமிழ் மக்களுக்கு நன்மையைத்தான் அளிக்கும் என்கிற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும்! அப்படி நம்பிக்கை அளிக்கும் விதமாக ஓர் அறிக்கையையாவது வெளியிட்டிருக்க வேண்டும்! அப்படியெல்லாம் செய்யாமல், கிடக்கட்டும், வறட்டுத் தவளைகள் அப்படித்தான் கத்தும் என்பது போல, நாம் இங்கே போராடப் போராட அதை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் இராஜபக்சேவை வரவேற்றுச் சிவப்புக் கம்பளம் விரித்தால் என்ன பொருள்? எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதும், தவிர்ப்பதும் ஆளுங்கட்சியின் தனிப்பட்ட உரிமை. ஆனால், இராஜபக்சே போன்றோர் பொது எதிரிகள், மக்கள் விரோதிகள். அவர்களை அழைப்பதா வேண்டாவா என்பதைப் பொதுக் கருத்தின் அடிப்படையில், மக்களுடைய உணர்வுகளின் அடிப்படையில் அல்லவா முடிவெடுக்க வேண்டும்?

கேள்வி-3: இராஜபக்சேவுடன் ஒரு நட்புறவை உருவாக்கிக் கொண்டு, ஈழத் தமிழர் நலன் பற்றிப் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்காகக் கூட மோடி அவனை அழைத்திருக்கலாம் இல்லையா? நாம் ஏன் அதைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்?

இதுதான் இன்றைய மக்களின் சாபக்கேடு! இப்பொழுதெல்லாம் மக்கள் எல்லாவற்றையும் இவர்களாகவே கற்பித்துக் கொள்கிறார்கள். ஒரு நடவடிக்கை தவறானது எனக் கருதப்பட்டால், அந்த நடவடிக்கையை மேற்கொள்பவர்கள்தான் அது பற்றி சமாதானம் சொல்ல வேண்டும்! “தவறாக நினைக்காதீர்கள்! நாங்கள் அப்படிப்பட்ட எண்ணத்தோடு இதைச் செய்யவில்லை; இப்படி ஒரு நல்ல நோக்கத்தில்தான் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம்” என்பதெல்லாம் அந்தச் செயலைச் செய்பவர்கள் சொல்ல வேண்டியது. மாறாக, எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அவர்களாகவே தங்களை சமாதானப்படுத்திக் கொள்வதா? ஒரு செய்கைக்கு நாமாகவே தவறான உள்நோக்கம் கற்பித்துக் கொள்வது எந்த அளவுக்குத் மோசமானதோ, அதே போல, நாமாகவே ஒரு சமாதானத்தைக் கற்பித்துக் கொள்வதும் ஆபத்தானதுதான்! குறிப்பிட்ட அந்தச் செய்கையின் உண்மையான காரணத்தை, அதற்கான விளக்கத்தைச் சம்பந்தப்பட்டவர்தான் தர வேண்டும். அதுவும் அரசாங்கங்களைப் பொறுத்த வரை, இஃது அவர்களின் கடமை!

முன்பெல்லாம், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டில் ஒரு சிறு போராட்டம், எதிர்ப்பு தோன்றினாலும் உடனே அரசுத் தரப்பிலிருந்து அதற்கு விளக்கம் அளிக்கப்படும். எல்லோரின் நன்மைக்காகவும்தான் அரசு அந்த முயற்சியை எடுப்பதாகவும், வேறு எந்த உள்நோக்கமும் இல்லையென்றும், இன்ன பிற வகைகளிலும் மக்களுக்கு சமாதானம் கூறப்படும். ஆனால், கடந்த ஆட்சியில் காங்கிரஸ் அரசு இத்தகைய நாகரிகங்களையெல்லாம் மொத்தமாக ஊற்றி மூடி விட்டது. “எவன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போராடு! தீக்குளி! செத்துத் தொலை! எங்களுக்கு அது பற்றி எந்தக் கவலையும் இல்லை. நாங்கள் செய்வதைத்தான் செய்வோம்” என்று கடந்த அரசு நடந்து கொண்டது. அதே வழியில், எத்தனை பேர் போராடினாலும், எதிர்ப்பு தெரிவித்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் தன் செய்கையில் மட்டுமே கவனமாக இருப்பது புதிய ஆட்சிக்கும் நல்லதில்லை; அரசுகளின் இந்த மக்கள் அவமதிப்புப் போக்கை ஆதரிப்பது நமக்கும் நல்லதில்லை! அரசுகளின் நடவடிக்கைகளுக்குத் தங்களுக்குத் தாங்களே சமாதானம் கற்பித்துக் கொள்ளும் மக்கள் இதைக் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும்! காங்கிரஸ் தலைகுப்புறத் தோற்றதற்கு இதுவும் ஒரு முதன்மைக் காரணம் என்பதை மோடியும் நினைவில் கொள்ள வேண்டும்!

எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழப் பிரச்சினையில் பா.ஜ.க எந்தளவுக்கு நமக்கு ஆதரவாக இருக்கும் என்பது தெரியவில்லை. இந்நிலையில், தொடக்கத்திலேயே, காங்கிரஸ் அரசு கூடப் போகாத உயரத்துக்கு - பதவியேற்கும்பொழுதே இராஜபக்சேவை வரவழைக்கிற அளவுக்கு - அவர்கள் போனால், நாமும் அதற்குத் தொடக்க நிலையிலேயே நம் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்வது இன்றியமையாதது. அப்படியில்லாமல், இரு நாட்டு உறவும் முளைவிட்டு, வேரோடி, விழுது விடுகிற அளவுக்குப் போன பிறகு, அப்புறம் அங்கே மீண்டும் தமிழர்கள் பாதிக்கப்படும்பொழுது நாம் மறுபடியும் முதலிலிருந்து போராடத் தொடங்கினால், நம்மை விடப் பித்துக்குளிகள் யாரும் இருக்க முடியாது. எனவே, புதிய ஆட்சியின் தொடக்கத்திலேயே நாம் இது தொடர்பாக நம் எதிர்ப்பைப் பதிவு செய்தால்தான் இனியாவது இந்த இரு நாடுகளின் உறவு தமிழர்களுக்கு எதிரானதாக இல்லாமல் இருக்கும். அவ்வகையில், இராஜபக்சேவின் வருகைக்கான இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் உண்மையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நம் கடமை! அதை நாம் இந்த முறை தவறாமல் செய்து முடித்து விட்டோம் என மக்கள் உண்மையில் பெருமைப்பட வேண்டும்!

கடைசியாகப் போராட்டக்காரர்களுக்குச் சில வார்த்தைகள்!

எப்படியோ, இராஜபக்சேவின் வருகைக்கு எதிரான நமது இந்தப் போராட்டங்கள் அவன் வருவதைத் தடுக்காவிட்டாலும், பதவியேற்பு விழாவுக்குப் பிறகான பேச்சுவார்த்தையில் ஈழத் தமிழர் நலனை மோடி இராஜபக்சேவிடம் வலியுறுத்தியதாகச் செய்திகள் வெளியிடும் அளவுக்கு இந்திய அரசிடம் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. உண்மையிலேயே வலியுறுத்தப்பட்டதோ இல்லையோ, அஃது அப்புறம். ஆனால் காங்கிரசைப் போல், மக்கள் போராடினாலும் போராட்டத்தை நிறுத்தினாலும், இருந்தாலும் செத்தாலும், எதைப் பற்றியும் கவலைப்படாத ஆட்சியாக இல்லாமல், தனக்குத் தமிழர்கள் மீது அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்ளும் அளவுக்காவது இந்த அரசு இருப்பது நமக்கு ஆறுதல்.

அதுவும், ஆட்சி நடத்த யாருடைய தயவும் தேவைப்படாத நிலையில், குறிப்பாக, மற்ற மாநிலங்கள் அளவுக்குத் தமிழ்நாட்டில் தனக்கு வாக்களிக்கப்படாத நிலையிலும், தமிழர்களுக்காகத் தாங்கள் பேசுவது போல் காட்டிக்கொள்ள மோடி முற்படுவது நல்ல அறிகுறி. இதையே கொழுகொம்பாகக் கொண்டு இந்திய அரசைத் தமிழர் தரப்புக்கு ஆதரவாக மாற்றத் தமிழ்த் தலைவர்களும் அமைப்புகளும் முயல வேண்டும்! ஈழத் தமிழர் பிரச்சினை, அணு உலைப் பிரச்சினை, மீதேன் குழாய் பதித்தல், நியூட்ரினோ ஆய்வு, முல்லைப் பெரியாறு உரிமை, காவிரி நீர் உரிமை என எல்லாவற்றிலும் தமிழர் தரப்பிலுள்ள நியாயங்கள் பற்றி எடுத்துக் கூறி, இந்திய அரசைத் தமிழர் சார்பில் திருப்ப அரசியல்ரீதியான, அமைப்புரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!

தன்னைச் சிறைப்படுத்தியவர்கள் என வை.கோ அவர்கள் எண்ணாமல், தேர்தலில் தன்னால் எதிர்க்கப்பட்டவர்கள் என சீமான் அவர்கள் கருதாமல் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் ஒருமுகமாக இணைந்து தமிழக-இந்திய உறவை வலுப்படுத்த முயல வேண்டும்!

இராஜபக்சே இந்தியாவுடன் நட்புறவு கொண்டுவிட்டால் அஃது ஈழத் தமிழர்களுக்குத் தீங்கானது என்கிற அக்கறை உண்மையிலேயே இருக்குமானால், அவர்கள் இருவரும் நட்புக் கொள்வதைத் தடுப்பதற்கே முயன்று கொண்டிருக்காமல், தாங்கள் இந்திய அரசுடன் நட்பாகி, இரு நாட்டு உறவுநிலையை எப்படிக் கொண்டு செல்லலாம் என நேர்மறையாகச் சிந்திக்கத் தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும்!

- இ.பு.ஞானப்பிரகாசன்

Pin It