இ.பொ. இயக்கத்தின் தொடர்ச்சியில் த.நா.அ.கு-இ.பொ.க. (மா.லெ) தோன்றியது பற்றி கடந்த தொகுப்பில் பார்த்தோம். இந்த அமைப்பின் சார்பில் மனஓசை என்ற இலக்கிய இதழ் மக்கள் கலாச்சாரக் கழகம் சார்பில் வெளி வந்தது. பின்னர் 1986களிலிருந்து கேடயம் என்னும் அரசியல் இதழும் வெளியிடப்பட்டது. கேடயம் இதழுக்கும், புதிய ஜனநாயக இதழுக்கும் நடைபெற்ற அரசியல், தத்துவார்த்த விவாதங்கள் குறிப்பிடத்தக்கது.

1988களில் பல்வேறு மக்கள் திரள் அமைப்புகளைக் கட்டி கட்சி மக்களை அமைப்பாக்கி அணிதிரட்டியது. பாசிச எதிர்ப்பு தேசிய ஜனநாயத் திட்டத்தை நோக்கி முன்னேற பாசிச எதிர்ப்பு இயக்கத்தை கட்டுவதற்கான‌ பூர்வாங்க வேலைகளை 1988ல் நடத்திய பாசிச எதிர்ப்பு இயக்க மாநாட்டின் மூலம் தொடங்கிவைத்தது.

marx angels leninபுதிய வாழ்க்கைக்கு மக்களை அணிதிரட்டும் திசையில் மக்களின் தற்சார்பு, தன்மானம், ஜனநாயகம் ஆகிய கூறுகளை உள்ளடக்கிய முழக்கங்கள் முன்வைக்கப்பட்டு நடவடிக்கைகள் மூலம் மக்கள் புதிய வாழ்க்கை முறைக்கு பயிற்றுவிக்கப்பட்டனர்.

அரசியல் அரங்கில் பாசிச சக்திகளை தனிமைப்படுத்தி புரட்சிகர, ஜனநாயக சக்திகளை அணிதிரட்டும் வகையிலான முழக்க, அமைப்பு, இயக்க நடவடிக்கைகள் இடைவிடாது மேற்கொள்ளப் பட்டன. இதே காலகட்டத்தில் இந்திய அரசியல் அரங்கிலும், தமிழக அரசியல் அரங்கிலும் காசுமீர் விடுதலை, அசாம் விடுதலை, தமிழீழ விடுதலை போன்ற தேசிய இன விடுதலைக் கோரிக்கைகள் முன்னணிக்கு வந்தன‌. இதில் இ.பொ. கட்சிகள் காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளின் முடிவுகளோடு ஒன்றி நின்றன. மா.லெ. குழுக்கள் ஒவ்வொன்றும் சந்தர்ப்பவாத முடிவுகளை மேற்கொண்டு பிளவுபட்டு நின்றன.

இதே போல இந்திய அரசியலையே உலுக்கிய மண்டல் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது நடந்த நிகழ்வுகள், ஆளும் வர்க்கம் மேற்கொள்ளும் நடவடிக்கையை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற நிலையை மட்டுமே மேற்கொள்வதாக இருப்பது உணரப்பட்டது. அரசியல் சமூக நிகழ்வுகளின் மேல் தலைமை தாங்குவது என்பது இல்லாமல் சந்தர்ப்ப வாதமாக முடிவுகள் மேற்கொள்ளும் அரசியல் நெருக்கடி தன்னாய்வாக புரிந்துகொள்ளப்பட்டது.

இந்திய அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்தி வரும் தேசிய இனச்சிக்கல், சாதிய சிக்கல் குறித்து த.நா.அ.கு. வகுத்துக்கொண்ட அரசியல் தீர்மானம் பேசுவதில்லை. கட்சியின் அரசியல் தீர்மானத்திற்கு வெளியில் செல்வாக்கு செலுத்தும் அரசியல், சமூக சிக்கல்களாக உள்ள தேசிய இனச்சிக்கல்கள், சாதியச் சிக்கல்கள் என்பது இந்திய சமூக அமைப்பின் 2000 ஆண்டு காலச் சிக்கலாக உள்ளது. ஆனால் 1947க்குப் பிந்திய அரசியல் நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டே அரசியல் தீர்மானம் வரையப்பட்டுள்ளதை தன்னாய்வாக தோழர் கார்முகில் புரிந்து கொண்டார். இந்திய சமூகத்தின் மூல ஆதாரமாக இருக்கிற பார்ப்பனியத்திற்கும் சாதி, இனச் சிக்கல்களுக்கும் உள்ள உறவையும் இத்தோடு ஜனநாயகப் புரட்சி-உழவர் புரட்சி கொண்டுள்ள உறவையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தோழர் கார்முகில் வந்தடைந்த முடிவுகள் இ.பொ. இயக்க வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

புதிய முடிவுகளும், புதிய நிலைமைகளும்:

1. இந்திய சமூகம் ஒரு தேசிய இன அடிப்படை கொண்ட சமூகம் அல்ல; மாறாக ஒரு அரசு சமூகமாகும். இந்திய தேசியத்தின் அடிப்படையாக இருப்பது பார்ப்பனியமும் சமக்கிருதமயமாக்கப்பட்ட இந்தியுமே ஆகும்.

2. இந்தியா ஒரு பல்தேசிய இனங்களைக் கொண்ட நாடு. இங்கு ஒடுக்கும் தேசிய இனம் என்ற ஒன்று இல்லை. மாறாக ஒடுக்குவது இந்தி மொழி மேலாண்மை கொண்ட பார்ப்பனியமே ஆகும்.

3. பார்ப்பனியம் இரண்டு கூறுகளைக் கொண்டது. ஒன்று, சாதிய ஒடுக்குமுறை; இரண்டு, தேசிய இன ஒடுக்குமுறை.

4. இந்தியாவில் தேசிய இன விடுதலையோடு இணைந்து தான் ஜனநாயகப் புரட்சியை-உழவர் புரட்சியை நிறைவு செய்யமுடியும். தேசிய விடுதலையுடன் இணைந்த ஜனநாயகப் புரட்சி மூலம் மட்டுமே சாதி ஒழிப்பை நிறைவேற்ற முடியும்.

5. இந்தியா என்பது தரகு முதலாளித்துவ பார்ப்பனிய ஏகாதிபத்தியம். இ.பொ.க.வும் சரி இ.பொ.க. (மா. லெ)வும் சரி இந்தியாவை ஒரு தேசம் என்று கருதியே தமது திட்டதை வகுத்துக் கொண்டுள்ளன. மா.லெ. இயக்கம் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் மூலம் தேசிய சூனிய வாதத்தில் அழுந்திவிடுகிறது.

6. ஒடுக்கும் தேசிய இனத்தின் கடமைகளும் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் கடமைகளும் வேறு, வேறானவை.

7. சாதி ஒழிப்புப் போரில் முன்னின்ற அம்பேத்கர், சாதி ஒழிப்புடன் இந்திய தேசிய ஒழிப்பையும் பேசிய பெரியார் ஆகிய இரு பெரும் தலைவர்களின் பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டத்தையும் அதன் வரலாற்றுப் பாத்திரத்தையும் மதிப்பீடு செய்தது.

தமிழ்த் தேசிய விடுதலையை, புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க விரும்பும் யாராக இருந்தாலும் இந்த அரசியல் கோட்பாட்டு நிலைப்பாடுகளை ஒட்டியோ, மறுத்து புதிய நிலைப்பாடுகளை நிறுவியோதான் வேலை செய்ய முடியும்.

சாதி ஒழிப்பில் அக்கறை கொண்டுள்ள அம்பேத்கர், பெரியாரிய இயக்கங்கள் பார்ப்பனியம் பற்றியும், சாதி ஒழிப்பு பற்றியும் கார்முகில் முன்வைத்துள்ள நிலைப்பாடுகளை பரிசீலிக்க வேண்டிய காலக்கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது.

அவதூறுகளும், வாய்ச்சவடால்களும் சமூக மாற்றத்திற்கு எவ்வகையிலும் பயன்படாது

இ. பொ. இயக்கத்தின் தொடர்ச்சியில் த.நா.மா.லெ.க.வின் நிலைபாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடுகள் குர்ரானின் வாசகங்களோ, பைபிளின் போதனைகளோ அல்ல!

மாபெரும் சமூக அறிவியலாக விளங்குகின்ற மார்க்சிய-லெனினிய தத்துவத்தின் துணை கொண்டு இந்திய சமூகத்தை ஆய்வு செய்து முன்வைத்த அரசியல் கோட்பாடுகள். இதன் மீது தமிழ்ச் சமூகம் ஒரு திறந்த விவாதத்தை நடத்துவதே அறிவுநேர்மை கொண்டதாகவும், அரசியல் நேர்மை கொண்டதாகவும் இருக்க முடியும்.

அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் கருத்துப் பரிமாற்றத்தை செய்ய முன்வர வேண்டுகிறோம்!

- கி.வே.பொன்னையன்

Pin It