நடுகல் வழிபாடு தமிழ்ப் பண்பாட்டில் மிக முக்கியமான வழிபாடாக விளங்கியது. தன்னலம் இன்றி பொதுநலம் பேணி உயிர் நீக்கும் மனிதனைத் தெய்வத் தன்மைக்கு உயர்த்தி அவனை நினைந்து தொழுது கொள்வதற்கான ஒரு வழி நடுகல் வழிபாடு. தமிழ்ப் பண்பாட்டின் ஒரு கூறு. அதன் தொடர்ச்சியான ஒரு நிலைப்பாடாகவே முள்ளிவாய்க்கால் முற்றத்தினை அவதானிக்க வேண்டும்.

தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் தமிழ்ப் பண்பாட்டின் நீட்சியாக நடுகல் பாவனையாகவே மாவீரர் துயிலகத்தினை அமைத்திருந்தனர். இன்று உலக ஏகாதிபத்தியத்தினாலும் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் உதவியுடனே இப்போரை நடத்தினேன் என்று சொல்லும் இனப் படுகொலை செய்த இலங்கையின் தளபதி ஜெய சூரியா வாயிலாக இலங்கை மண்ணில் இந்நினைவகம் உடைக்கப்பட்டு தமிழ் மக்களின் நெஞ்சினில் ஆறாத காயத்தினை ஏற்படுத்தியது. அதனுடைய தொடர்ச்சியாக காமன்வெல்த் நடைபெற்ற சூழலில் முள்ளிவாய்கால் முற்றத்தினை இந்திய மத்திய, மாநில அரசுகள் கொடூரமாகத் தகர்த்துள்ளன.

முள்ளிவாய்க்கால் முற்றத்தினைச் சிதைப்பதற்கான காரணம் மத்திய அரசுக்கு இருப்பது நமக்கு நன்கு தெரிந்த விஷயம். மத்திய அரசின் இந்திய அரசின் போரை நாங்கள் நடத்தினோம் என்று இனப்படுகொலை அரசான இலங்கையின் ஜனாதிபதி ராஜபக்சேயின் தம்பி கோத்தபய கூறிய கூற்று முக்கியமானது. தான் முன்நின்று நடத்திய இன அழிப்பின் எச்சத்தை இந்திய மண்ணில் நிறுவுவதை இந்திய காங்கிரஸ் அரசு ஏற்காது என்பது நாம் அறிந்ததே. ஈழத் தாயாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் ஜெயலலிதா அரசு காமன்வெல்த் மாநாடு இலங்கை மண்ணில் நடைபெறக் கூடாது என்று சிறப்பு சட்டசபைத் தீர்மானம் கொண்டு வந்த அரசு முள்ளிவாய்க்கால் முற்றத்தினை அழிக்க நினைக்கும் காரணம் என்ன? பொதுவாக அனைவரும் கூறும் காரணமாக முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கும் குழுவில் ஜெயலலிதாவினால் எதிரியாகக் காட்டப்படுகிற புதிய பார்வை நடராஜன் முக்கியமான பொறுப்பெடுத்து நிறைவேற்றியது காரணமாக கருதப்படுகிறது. எனினும் இக்காரணம் மட்டுமே போதுமானதாகத் தெரியவில்லை.

ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் பொழுது போரில் மிகப் பெரிய இன அழிப்பு நடந்தேறப் போகிறது. அதனை ஒன்றுபட்டு தமிழகம் வெளியில் வந்து போராடாவிட்டால் தடுத்து நிறுத்த முடியாது என்று தெளிவாகப் புரிந்து கொண்ட ஈகி முத்துக்குமார் “நான் உயிராயுதம் ஏந்துகிறேன் என்னுடலைக் கொண்டு பெரிய அளவில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை உருவாக்குங்கள்” என்று தமிழக மக்களுக்கு மாணவர்களுக்கு மரண சாசனம் எழுதி தன் உயிரை ஈகம் செய்தார். அப் போராட்டத்தினை முளையிலே கிள்ளி, அரசியல் தலைவர்கள் ஆர்வலர்கள் துணைக் கொண்டே எழுச்சி உருவாகாமல் திட்டமிடப்பட்டு கலைஞர் அரசால் ஒடுக்கப்பட்டது தமிழினத்தின் சோக வரலாறு.

முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் மே 17 இயக்கத்தினரால் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட பொழுது ம.தி.தா. இந்து பள்ளி வளாகத்தில் ஈகி முத்துக்குமாருக்கு நடுகல் நடப்பட்டது. (ம.தி.தா. இந்துப் பள்ளி வளாகத்தை கொடுத்துதவி முத்துக் குமார் குறித்து கலைஞர் கொண்டிருந்த மனப்போக்கை மீறி தன் உள்ளார்ந்த எண்ணங்களை மிகச் சிறப்பாக வெளியிட்ட அந்நாளைய வணக்கத்திற்குரிய மேயர் மறைந்த ஏ.எல்.சுப்பிரமணியன் அவர்களும் தி.மு.க. கட்சிக்கு அப்பாற்பட்டு தமது எண்ணங்களை அழகுற வழங்கிய அன்றைய பாளை மண்டலத் தலைவர் சுப.சீத்தாராமன் அவர்களும் நினைவு கூறத்தக்கவர்கள். தி.மு.க. என்பது கருணாநிதி மட்டுமல்ல என்று எங்களை உணர வைத்த இரண்டு அண்ணா காலத்தைய தி.மு. கழகத்தார்கள் என்பதற்காகவும் இதனை பதிவு செய்ய வேண்டியதிருக்கிறது.)

நினைவேந்தல் நிகழ்ச்சி முடிந்ததும் தற்காலிகமாக முத்துக்குமார் நினைவு நடுகல் அவ்வளாகத்தினுள்ளேயே இருக்கட்டும் என்று முடிவு செய்து அவ்வாறே விடப்பட்டது. நடுகல்லைப் பார்வையிட - வழிபட என்று மக்கள் திரளாக தொடர்ந்து வளாகத்தினுள் வருகிறார்கள் எனவே இதனை அப்புறப்படுத்த வேண்டும் என்ற பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று அக்கல் தோண்டி எடுக்கப்பட்டு படுக்கை நிலையில் வைக்கப்பட்டது.

நினைவு நடுகல்லை வெறுமனே பார்வையாளர்களாக மட்டும் பார்த்து விட்டுச் செல்லாமல் அந்த ஈகியான் நினைவுடன் புது வித உந்து சக்தியால் நிரம்பி அவர்கள் திரும்பிச் சென்றனர். நடுகல் கொடுக்கும் உத்வேகம் அப்படிப்பட்டது.

அதனைப் போன்றே முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்ட இந்த ஒரு வார காலத்தில் இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டுச் சென்றதுடன் இவ்வளவு கொடுமைகள் நிகழ்ந்தனவா? கோரமான முறையில் எம்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனரா? இதனைக் குறித்து எந்தத் தகவலும் எங்களுக்கு தெரிய வரவில்லையே என்ற எண்ணத்தை பார்வையாளர்களின் மனதில் ஏற்படுத்தி தீயை மூட்டிய உணர்வை முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்த்தியுள்ளது.

இதனையடுத்தே முள்ளிவாய்க்கால் முற்றம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்றி வைக்கும் நெருப்பு ஏகாதிபத்திய இந்திய மத்திய மாநில அரசுகளால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம் அல்லவா? அதனைத் தொடர்ந்தே முள்ளிவாய்க்கால் முற்றத்தை முடக்கும் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு தொடங்கியுள்ளன.

தமிழர்கள் குறித்து மொழி வெறி கொண்டவர்கள் சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் நாகரீகம் தெரியாதவர்கள் என்று திட்டமிடப்பட்ட பிரச்சாரம் பார்பன கும்பல்களால் பெருவாரியாக ஊடகங்கள் மூலம் வட இந்தியா முழுவதுமே பரப்பிவிடப்பட்டுள்ளது.

தமிழ்ச் சமூகம் மேன்மையான நாகரீகம் கொண்டு விளங்குவதால்தான் தமிழர்களைத் தரக்குறைவாகச் சித்தரித்து தாறுமாறாகத் திட்டிக் கொண்டிருக்கும் ‘இந்து ராம்’ ‘துக்ளக் சோ’ ‘சுப்பிரமணிய சாமி’ போன்றவர்களால் தமிழ்நாட்டில் சுதந்திரமாக சுற்றித் திரிய முடிகிறது.

இதுவே கேரள. கர்நாடக மண்ணில் அந்த இனத்தைச் பழித்துக் கூறி ஒருவன் இருந்து விட முடியுமா? நம்மைத் தூற்றுபவர்களையும் பொறுத்துக் கொண்டு மிகப் பெரிய நாகரீகத்துடன் ஜனநாயக தன்மையுடன் இருப்பவர்கள் தமிழ் மக்கள்.

இன்றைய மாநில அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில் மத்திய அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுதற்காக ஈழத் தாய்வேடம் புனைந்து கொண்டே எங்கே தமிழ் மக்கள் முழுமையாக உணர்வை அடைந்து ஒன்றாகத் திரண்டு விடுவார்களோ என்று தமிழ் உணர்வாளர்களை ஒடுக்கும் சர்வாதிகாரப் போக்கை கடைபிடித்து இரண்டு வேடமிட்டு களமாடுகிறார்.

காவல்துறையினர் மக்கள் நண்பன் என்று சொல்லிக் கொண்டே ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியினரின் எடுபிடியாக மனநோயாளிகளாகவே மாறி விட்டனர்.

இச்சூழலில் தமிழக மக்கள் ஆளும் கட்சியின் இரட்டை வேடத்தையும் நம்பிக்கைத் துரோகம் செய்த கருணாநிதியையும் ஒரே நிலையில் வைத்தே தங்களது அடுத்த கட்ட நகர்வினைத் தொடங்க வேண்டும். கருணாநிதி மக்களிடம் நம்பிக்கை எதுவும் கொடுக்காமல் தமிழக மக்களுக்கு துரோகத்தை மட்டும் செய்வார். ஜெயலலிதா தமிழ் மக்களிடம் நம்பிக்கை என்ற இனிப்பை கொடுத்து விட்டு அதனை மக்கள் சுவைப்பதற்குள் கடுமையான நஞ்சையளிக்கும் விசித்திரமான இரட்டைப் போக்குடையவர்.

இந்நூற்றாண்டின் மகத்தான இடிந்தகரை மக்கள் போராட்டத்தின் போது உங்களில் ஒருத்தியாக நான் இருப்பேன் என்று கூறிக் கொண்டு இடைத்தேர்தலில் அவரது வெற்றி நிச்சயிக்கப்பட்டதும் 10000 போலீசாரை இடிந்தகரைக்கு அனுப்பி பெண்கள், குழந்தைகள் என்று பார்க்காமல் மூர்க்கத்தனமாகத் தாக்கியதுடன் 60 வயது பெண்மணி வரை அனைத்துத் தரப்பு மக்கள் மீதும் தேசத் துரோ வழக்கினைப் போட்டவரும் அவரே. இன்று ஈழப் பிரச்சனைக்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இந்தியா காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று வெற்று சட்டசபைத் தீர்மானங்களை நிறைவேற்ற காதுகேளாத மத்திய மன்மோகன் அரசிற்கு அனுப்பி அவர் கடன் முடிப்பது. மறுபுறம் தமிழ் உணர்வாளர்களைச் சட்டத்தின் துணைகொண்டு ஒடுக்குவது என்று திறமையாக இரண்டு வேடம் இட்டு நடிக்கிறார்.

கபட வேடமிடும் தி.மு.க. அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கம்யுனிஸ்ட் பா.ஜ.க கட்சிகளை ஒதுக்கி தமிழர்அமைப்புகள் இயக்கங்கள் மாணவர் அமைப்புகளை ஒன்று சேர்த்து பெரிய வாக்கு வங்கிகளைக் கொண்ட கட்சியினரின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டிய தருணமிது.

ஒரு தலைமுறை அரசியல் மயப்படுத்தப் படாததின் விளைவுகளை இன்று தமிழினம் அனுபவித்து வருகிறது. இனி மக்களை அரசியல் மயப்படுத்தி பெரும் மக்கள் திரள் போராட்டங்களை ஏறெடுப்பதே தமிழினத்தின் தேவை.

இதனை தமிழ் அறிவு ஜீவிகளும் (Intellectuals) இலக்கியவாதிகளும் படைப்பாளிகளும் அறிவு இலக்கியத் தளத்தில் மட்டுமின்றி பொது வெளியில் இறங்கிப் போராட வேண்டும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் இலக்கியவாதிகள் அறிவுத்தளத்தில் மட்டுமின்றி களமாடவும் அணிவகுக்கின்றனர்.

தமிழின மக்கள் அனைவரும் வேறுபாடு களைந்து அவரவர் தளத்தில் இயங்கிக் கொண்டே களமிறங்கிப் போராட வேண்டிய தருணமிது. சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் முற்றம் களமாட அனைவரையும் அழைக்கிறது.
 
- லெனாகுமார்

Pin It