தோழமை மிக்க உலகத் தமிழர் பேரமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அய்யா பழ.நெடுமாறன் அவர்களுக்கு எமது வணக்கம்,

உலகத் தமிழர் பேரமைப்பு ஒருங்கிணைப்பில் தஞ்சையில் நடைபெறவிருக்கிற "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்" திறப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ் கடந்த 23-10-13 அன்று இடிந்தகரை சந்திப்பில் தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு.பரந்தாமன் அவர்கள் எமக்களித்தார். நவம்பர்- 9 அன்று இரண்டாம் நாள் நிகழ்வில் தோழர் நல்லகண்ணு அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள பொது அரங்கில் நானும் பங்கேற்க வாய்ப்பளித்துள்ளீர்கள்.

நவம்பர்- 8 அன்று திறப்பு நிகழ்வில் சிறப்புரைப் பட்டியலில் மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தும் காவிப் படையின் பா.ஜ.கட்சியின் பொன்.இராதாகிருஷ்ணன், நவம்பர்-10 அன்று பொது அரங்கில் இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதால் என்னால் பங்கேற்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நாடாளுமன்றக் கூட்டணி அரசியல்தான் ‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’ போன்ற ஈழத் தமிழ் மக்களின் கண்ணீர்க் கதைகளை, காயங்களை, இழப்புகளை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலைக் கூடத் தீர்மானிக்கும் என்றால் மிகவும் வேதனையாகவுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து செயல்படும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தியாகி இம்மானுவேல் பேரவை அமைப்பின் பொதுச் செயலாளர் தோழர் பூ.சந்திரபோசு, தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க.குணசேகரன், சேவ் தமிழ்ஸ் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் மற்றும் தமிழ்த் தேச மக்கள் கட்சி, தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம், புதுக்கோட்டை தோழர் பாவாணன், மாறுபாடுகளிருந்தாலும் தொடர்ந்து ஈழப்பிரச்சனையில் தமது அமைப்பை முன்னிறுத்தும் தோழர் தொல்.திருமாவளவன் போன்றவர்களை நிகழ்ச்சி நிரலில் இணைக்க முடியாத அளவிற்கு மாறுபாடுள்ள தங்களுக்கு, பொன்.இராதாகிருஷ்ணன், அர்ஜூன் சம்பத் இருவரையும் இணைக்குமளவிற்கு அவர்கள் ஈழத் தமிழர் விடுதலைக்கு களமாடியவர்களா?

2009 முள்ளிவாய்க்கால் காயங்களைத் தொடர்ந்து இன்று வரை தமிழகத்தில் நடந்துவரும் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில், இனப் படுகொலை இலங்கை அரசுக்குத் துணைபோகும் இந்திய அரசுக்கு எதிராக பாரதீய சனதா, இந்து மக்கள் கட்சியின் செயல்பாடுகள் என்ன? உங்களுக்குத் தெரிந்த இரத்த வெறி பிடித்த காவிப் படையின் பயங்கரவாத அரசியலை தங்களுக்கு நினைவூட்ட வேண்டிய தேவையில்லை.

 1982 வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி – ஜெகன் கோரப் படுகொலைகளையொட்டி மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரசிலிருந்து வெளியேறிய தாங்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபொழுது, தங்கள் மீது நம்பிக்கையில்லாமல் தங்களோடு மாறுபட்ட எனது நேரடித் தலையீடு தங்களுக்கு நினைவிருக்கும். அப்போது நான் மதுரை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணிச் செயலாளர்.

 1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்தியத் தொகுதியில் எமது கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தேன். தாங்கள் போட்டியிடுகிறீர்கள் எனத் தெரிந்தவுடன், எமது அமைப்பில் பேசி தங்களுடைய வேண்டுகோளில்லாமலேயே எனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்று தங்களுக்கு எமது அமைப்பு சார்பில் பணியாற்றியதும் தங்களுக்கு நினைவிருக்கும். அப்போது நான் இ.க.க.(மா--லெ) விடுதலை அமைப்பின் வெகுமக்கள் அரசியல் முன்னணியான "இந்திய மக்கள் முன்னணியின்" தமிழ் மாநில இணைச் செயலாளர்.

ஈழப் பிரச்சனையில் இ.க.க.(மா-லெ) விடுதலை அமைப்பின் அரசியல் நிலையிலிருந்து மாறுபட்டு "தமிழ் ஈழத்தை அங்கீகரி! பொது வாக்கெடுப்பு நடத்து!" என வலியுறுத்தி தொடர் செயல்பாடுகளை தமிழ்நாட்டில் கட்டமைத்து வரும் "கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு" அமைப்பின் பொதுச் செயலாளராக உழைக்கும் மக்களுக்கான மாற்று அரசியலை, ஏகாதிபத்திய எதிர்ப்பை, சாதி ஒழிப்பை, பெண் விடுதலையை, மதச்சார்பற்ற அரசியலை, இந்திய விரிவாதிக்க அரசியலுக்கு எதிராக, சுயசார்புத் தமிழகத்திற்காகப் போராடி வருகிறோம்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பில், ஈழ விடுதலை ஆதரவுப் போராட்டங்களில், காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைப் போராட்டங்களில், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பில், மக்களுக்கான சனநாயக மறுப்பில் காங்கிரசும் – பா.ச.க.வும் ஒரே நிலைப்பாடுதான். இந்திய ஆளும் கும்பலின் எடுபிடியான தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்த தமிழக மக்களுக்கான மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்வதற்குக் கேடு விளைவிக்கும் என்பதால் ‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்’ திறப்பு நிகழ்வில் நான் பங்கேற்க இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

தோழமையுடன்,
- மீ.த.பாண்டியன், பொதுச் செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு.
பேச: 9443184051

Pin It