கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள் தோழர்களே... அவதூறுகளால் அல்ல....

தோழர் தியாகுவின் உண்ணாநிலைப் போராட்டம் 'டெசோ' நாடகக் கம்பெனிகளின் முன்னிலையில் முடித்துக் கொள்ளப்பட்ட பிறகு 'மௌனத்தை உடைத்து' தமிழர்களின் போராட்டம் எப்படி மடை மாற்றிவிடப்படுகிறது என்று விமர்சன நோக்கில் ஒரு கட்டுரையை மே பதினேழு இயக்கத் தோழர்கள் எழுதியதற்கு இங்கு வழக்கமான அவதூறு அரசியல் பாணியில் பதில் கட்டுரைகள் எழுதப்படுவதை ஒரு பார்வையாளனாக கடந்துபோக விரும்பாமல் இதை எழுதுகிறேன்.

தோழமை அமைப்புகள் என்ற முறையிலும், காம‌ன்வெல்த் மாநாட்டிற்கு எதிரான போராட்டக் களத்தில் எமது அமைப்பும் தன் சக்திக்கு உட்பட்டு பங்களிப்பு செய்த உரிமையிலும் எனக்கு ஏற்படும் சந்தேகங்களை 'இலங்கையில் காமென்வெல்த் எதிர்ப்பியக்கம்' தோழர்களிடம் வைக்கிறேன்.

"ஆயிரம் கருத்துக்கள் முட்டி மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும்" என்பார் தோழர் மாவோ. அப்படியான விவாத முறைகள் இல்லாமல் ஓர் அமைப்பின் மீது மிக மோசமான விமர்சனத்தை வைப்பது என்பது எந்த வகையான அரசியல் அறம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

முதலில் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் ஓர் அமைப்பின் மீதான தங்களின் மோசமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் பெற விரும்புகிறேன். விமர்சனங்கள் என்பது ஆரோக்கியப் பூர்வமாக இருந்தால் சமூக மாற்றத்திற்கும், மக்களுக்குமான வளர்ச்சியாக இருக்கும். ஆனால் அதைக் கடந்து ஓர் இயக்கத்தின் (மே பதினேழு இயக்கம்) மீது உளவாளி இயக்கம் என்றும், எங்களை நக்சலைட்டுகள் என்று மாணவர்கள் இடத்தில் சொல்லிச் சென்றார்கள் என்றும் பொதுவெளியில் எந்த ஆதாரங்களை முன்வைத்து விமர்சனம் செய்கிறீர்கள் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் இருப்பின் பொதுவெளியில் வைத்துப் பேசுங்கள்.

மே பதினேழு இயக்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் தோழமை அமைப்பு என்ற முறையில் நாங்களும், பல்வேறு தமிழர் நலன் சார்ந்த இயக்கங்கள், அரசியல் கட்சிகள் பங்கு பெற்று இருக்கின்றன‌. அவர்களின் பேச்சுக்களையும், அவர்கள் வைத்திருக்கின்ற ஆவண‌ங்களையும் பார்க்கிறோம். அப்படி இருக்க இந்தியாவை எதிர்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டை எந்த ஆதாரங்களின் அடிப்படையில் சுமத்துகிறீர்கள் என்றும் அறிய விரும்புகிறேன்.

அடுத்தாக கீழ்க்கண்ட கேள்விகளுக்கு தங்களின் நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்.

1. எந்த இயக்கத்தையும் குறிப்பிட்டு அந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. அப்படி இருக்க நீங்களாக‌ ஏன் 'முந்திக்கொண்டு' வண்டியில் ஏறுகிறீர்கள்?

2. இதுவரை தோழர் தியாகு அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொண்ட வழிமுறைகள், அதன் அரசியல், அதில் டெசோவின் பங்கு பற்றி விமர்சனமோ சுயவிமர்சனமோ உங்களிடம் இருந்து வரவில்லை?

3. முதன்மை கோரிக்கை எது, அடுத்த கோரிக்கை எது, அதன் திசைவழியை பக்கம் பக்கமாக குறிப்பிடும் நீங்கள் விவாதத்தை திசை மாற்றுவதின் நோக்கம் என்ன..?

4. எந்த அறத்தின் அடிப்படையில் தி.மு.கவின் முன்னிலையில் இக் கோரிக்கை நிறைவேறியதான தோற்றத்தில் முடிவு பெற்றது....?

5. தி.மு.க.வினரால் 2009 இனப்படுகொலையின் போதும் அதன் பிறகும் கடுமையாக ஒடுக்கப்பட்ட உணர்வாளர்கள் எந்த அறத்தின் அடிப்படையில் தி.மு.க.வை ஏற்றுக்கொண்டு உண்ணாநிலை முடிவு நிகழ்வில் பங்கேற்பார்கள்? தி.மு.க வினர் 2008, 2009, 2010வரை தங்களது ஆட்சிக்காலத்தில் செய்த அடக்குமுறைகள் (கொளத்தூர் மணி, சீமான், மணியரசன் ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது; சுவரொட்டி, துண்டறிக்கை கூட அச்சடிக்க முடியாமல் தடுக்கப்பட்டது; இனப்படுகொலையை தடு என்று குறுஞ்செய்தி அனுப்பியவர்களை கைது செய்தது; இவைகள் அனைத்தையும் மறந்துவிடலாமா...? மன்னித்து தோழர்களாய் இணைத்துக் கொள்ளலாமா...? இதுதான் நீங்கள் புரிந்து வைத்துள்ள மார்க்ஸிய இயங்கியலா...?

காமன்வெல்த் எதிர்ப்பு கூட்டியக்கத்தில் பங்காற்றியவர்களின் அரசியல் என்பது மாற்று என்பதாகவே வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், அதை செயல்தளத்தில் இந்த 15 நாட்கள் பட்டினிப் போராட்டத்தின் முடிவில் வெளிப்படுத்தியதாக தெரியவில்லை. தோழர் தியாகு பட்டினிப் போராட்டத்தினை முடிப்பதற்கு முதல் நாளில் பல்வேறு மாற்று அரசியல்-சமூக-புரட்சிகர இயக்கங்கள், தமிழீழ ஆதரவுக் கட்சிகள், இசுலாமிய இயக்கங்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்ட்த்தில் எடுக்கப்பட்ட முடிவு, தோழர் தியாகுவின் கோரிக்கைகளை அனைவரும் முன்னெடுப்பது என்பதுவும், அதனால் பட்டினிப் போராட்டத்தினை முடித்துக்கொள்ளுங்கள் என்பதாகவும் கோரிக்கை வைக்கப்பட்டதை நான் அறிகிறேன். ஆனால் மறுநாள் இந்த கோரிக்கைகள் கணக்கில் எடுக்கப்படாமல் இந்தியாவின் பிரதமர் கடிதம் கொடுத்ததாக சொன்ன திமுகவின் வாக்குறுதியை ஏற்று பட்டினிப் போராட்டம் முடிவு பெற்றது.

பட்டினிப் போராட்டம் முடிவுபெற்ற அதே தினத்தில், சில மணி நேரங்களுக்குப் பின்னால் தோழர். வேல்முருகன் அவர்களின் தலைமையில் 10,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரள நடைபெற்ற ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த சம்பவங்கள் நிகழ்ந்தத‌ற்கான எந்த சுவடும் இல்லாமல். விவாதங்கள் நடைபெறுவது என்பது எந்த அடிப்படை தர்க்கத்திற்கு உட்பட்டது என்பதை அந்த கூட்டியக்கத்தில் இருந்த தமிழ்நாடு மக்கள் கட்சி, சேவ் தமிழ்ஸ் மற்றும் இதர தோழர்கள் தெளிவுபடுத்தவேண்டும். உங்கள் அவசரம், உங்களுக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம். தமிழ்ச் சமூகத்திற்கு அதை திணிப்பது என்பது கருத்தியல் வன்முறையே.

நீங்கள் எதைச் சொன்னாலும் திமுகவினை எவ்வாறு நட்பு சக்தியாக ஏற்று அவர்கள் முன்னிலையில் பட்டினிப் போராட்டத்தினை முடித்தீர்கள்? இது எந்தவகையில் போராட்ட யுக்தி? திரிபுசக்தியுடனும், காட்டிக் கொடுத்த சக்தியுடனும் இணைந்து நிற்பது என்பது மூலயுக்தியா? அல்லது செயலுக்தியா? அல்லது ”அரசியல் கோரிக்கையில் குறைந்தபட்சம், அதிகபட்சம் எனத் தீர்மானிப்பது, அதற்கான போராட்ட வடிவங்களை முன்வைப்பது, அதில் முன்னேறுவது, தற்காலிகமாகப் பின்வாங்குவது என்பதெல்லாம் அரசியல் இயக்கத்தின் அனுபவம்வாய்ந்த ஒரு தொடர் நடவடிக்கை” என்றால், திமுகவினை இழுத்து வந்து மாற்று இயக்கங்களுக்கு மத்தியில் கொண்டு வந்து நிறுத்தியது தான் தங்களது அனுபவம் வாய்ந்த அரசியல் நடவடிக்கையா? இது தொடர் நடவடிக்கை எனில் அடுத்து காங்கிரஸையும், சிபிஎம் யும் அழைத்து வருவது என்கிற திட்டமிருக்கிறதா? இங்கு எஞ்சி நிற்கின்ற பிரதான கேள்வியே இதுதான். இதற்கு நேரடியாக பதிலளிப்பதே உங்கள் தர்க்கத்திற்கு நேர்மையானதாக இருக்கும். திமுக, அதிமுக, காங்கிரஸ், இறுதியாக உங்களால் முன்வைக்கப்பட்ட உங்களுடைய கோரிக்கை இவை அனைத்தும் ஒரு நேர்க்கோட்டில் வந்து நின்றபொழுது பட்டினிப் போராட்டம் முடிவுபெற்றது.

தோழர். தியாகுவின் கோரிக்கையை கையில் எடுத்து களம் காண்கிறோம் என்று சொன்ன இயக்கங்கள்-கட்சிகள் புறக்கணிக்கப்பட்டு திமுகவினை அழைப்பது அல்லது திமுகவின் முன்னிலையில் முடிப்பது என்பது யார் எடுத்த முடிவு?. தியாகுவா அல்லது போராட்டக்குழுவா அல்லது இருவரும் இணைந்தா என்பதுவே இறுதியும், உறுதியுமான ஒற்றைக்கேள்வி.

குறிப்பு: நான் இங்குவைக்கும் கேள்விகள் தோழர் தியாகுவின் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆதரித்து அப்போராட்டத்திற்கு துணை நின்ற‌ இலங்கையில் காமென்வெல்த் எதிர்ப்பியக்கம் தோழர்கள், அமைப்புகளை நோக்கியே வைக்கிறேன். இக்கேள்விகள் தோழர் தியாகுவின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக அப்போராட்ட நாயகர் தியாகுவின் பெயரால் விவாத முறையை திசை திருப்ப வேண்டாம் என்று வேண்டுகிறேன்.

- சே.ஜெ.உமர்கயான், ஒருங்கிணைப்பாளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்

Pin It