இந்திய, தமிழக அரசியலில் 1950களிலும் அறுபதுகளிலும் சக்தி வாய்ந்தவராயிருந்த பெருந்தலைவர் காமராசர் (1903-1975) தன்னை ஒரு சோசலிசவாதி என்று அழைத்தார். “பின்தங்கியிருப்போர் முன்னேற வேண்டும். வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு, உறைவிடம், கல்வி, வேலை – இவை கிடைக்க வேண்டும். இதுவே சோஷலிசம்” என்றார் அவர். அடக்குமுறையின்றி, வகுப்புச் சார்பின்றி, அடிப்படை உரிமைகளுக்கு பாதகமின்றி சோசலிச சமுதாயம் அமைக்க முடியுமென்று தான் நம்புவதாக அடித்துச் சொன்னார் காமராசர். காங்கிரசின் சோசலிசக் கொள்கைக்கு எதிராக அறுபதுகளில் இராஜாஜி (1878-1972) நடத்திய சுதந்திரா கட்சி தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றக் கொள்கைகளோடு பெருமுதலாளிகள், முன்னாள் மன்னர்களுக்கு ஆதரவான வலதுசாரி சக்தியாக இந்திய, தமிழக அரசியலில் இயங்கி, பெருமளவு மக்கள் ஆதரவு இன்றி நொண்டிக் கொண்டிருந்தது.
 
திராவிடர் கழகத்தின் தலைவர் தந்தை பெரியார்-மணியம்மை திருமணத்திற்குப் பிறகு, திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் கூட்டம் செப்டம்பர் 17, 1949 அன்று சென்னையில் நடந்தது. அதில் பலரும் பேசிய பிறகு, அறிஞர் அண்ணா ஓர் அறிக்கை வாசித்தார். அதில் இப்படிக் குறிப்பிட்டார்: “திராவிடர் கழகத்திலே இருந்து நாம் பணியாற்றுவதின் நோக்கம், நாட்டிலே அறிவுப் புரட்சி உண்டாக்கி, வைதீக ஆதிக்கத்தை அகற்றி – நல்லாட்சி அமையவும், வட நாட்டு ஏகாதிபத்தியம் குழம்பி, திராவிடத்தைத் தேய வைக்காமல் தடுக்கவுமேயாகும். மற்ற சில அரசியல் கட்சிகள் போல உடனடியான அரசியல் நோக்கம் கொண்டதல்ல நமது பணி. திராவிடச் சமுதாய ஜாதித் தளைகளை நீக்கி மதப் பிடிப்புகளை அகற்றி, பொருளாதாரத் துறையில் சம தர்ம நாடாகவும், அரசியல் துறையில் எந்த அந்நிய நாட்டிற்கும் அடிமைப்படாமலும், தனி உரிமையுடன் விளங்க வேண்டுமென்பதே நமது குறிக்கோள்.”
 
அந்த அறிக்கை நாட்டின் நிலையை தெளிவாக விளக்கியது: “நாட்டின் நிலைமையை நீங்கள் நன்கு அறிவீர்கள். வட நாடு-தென்னாடு என்னும் பேத உணர்ச்சி, டில்லியில் பேசப்படவேண்டிய அளவுக்கு வளர்ந்துவிட்டது. மொழி ஏகாதிபத்தியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாகாண ஆட்சி மன்றங்கள் தில்லியின் சூத்திரக் கயிற்றிலாடும் பதுமைகளாக்கப்பட்டு விட்டன. தொழிலாளரின் பிரச்சினை, யாரும் ஒதுக்கிவிடாத நிலையிலும் வளர்ந்துவிட்டது. பொருளாதார நிலையோ, பஞ்சமும், பட்டினியும், வேலையில்லாக் கொடுமையும் நாட்டிலே கிளம்பிக் கேடு விளைவிக்கும் விதத்தில் கெட்டு வருகிறது. பழமையோ, புதிய பட்டாபிஷேகத்துக்கான நாள் குறித்துக் கொண்டிருக்கிறது.” பக்குவப்பட்டத் தலைவர் என்பதால் அண்ணா தன் தோழர்களை அருமையாக வழிநடத்தினார். திராவிடர் கழகத்தை, அங்கிருக்கும் பணத்தைக் கைப்பற்ற நினைத்தால், மோதல் போக்கு வளரும், பேதப்பேச்சு முன்னணிக்கு வந்து, கலகச் சூழ்நிலை உருவாகி, வெறுப்பே மிச்சமாகும் என்று தனது தோழர்களுக்குப் பக்குவமாக எடுத்துச் சொன்னார். பிறர் கேலி செய்தாலும் பரவாயில்லை, “பகை, பலன் தராது – முடிவு காண முடியாதது – எதிர்ப்புச் சக்திகளுக்கு, பாசிசத்துக்கும் – பழைமைக்கும் இடமளிக்கக் கூடியதாகும். எனவேதான், ஆற்றல் இருந்தும் அடக்கம் வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் – கோழை என்று கேலி செய்யப்படுவதானாலும் சரி, வெறியன் என்ற சொல்லுக்கு இலக்காகக் கூடாது என்று எண்ணுகிறேன்” என்று குறிப்பிட்டார் அண்ணா.
 
செப்டம்பர் 18, 1949 அன்று காலை அமைப்புக் குழு கூட்டம் நடத்திவிட்டு, மாலை சென்னை, இராயபுரம் இராபின்சன் பார்க் மைதானத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துவக்க விழாக் கூட்டம் நடத்தினர். இறுதியாக அண்ணா பேசும்போது, அண்மைக் கால நிகழ்வுகளை, இக்கட்டுகளை, பெரியாரின் போக்கை, புதிய கட்சி தொடங்க வேண்டிய நிர்ப்பந்தத்தைப் பற்றித்தான் அதிகம் பேசினார். புதிய கட்சியின் கொள்கைகள் ஆங்காங்கு குறிப்பிடப்பட்டன. “திராவிடர் கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான், திட்டமும் வேறு அல்ல, என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டு பட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபூரிக்கும், வட நாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வட நாட்டு ஏகாதிபத்யத்தை ஒழித்து, வைதீகக்காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் சிழிக்கச் செய்தல் வேண்டும்” என்றார். “நாட்டிலே ஆற்றி வந்த நல்லறிவுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்துவோம்! பாசீசத்தையும் பழமையையும், நாட்டைப் பாழ்படுத்தும் சக்திகளையும் எதிர்த்துப் போராடுவோம்” என்று கொட்டும் மழைக்கிடையே முழங்கினார் அண்ணா. “முக்கியமாக முதல் வேலையாக எழுத்துரிமை, பேச்சுரிமை எதையும் அடக்கும் சர்க்கார் போக்கை எதிர்த்துப் போரிட திராவிட முன்னேற்றக் கழக முன்னணிப்படை அமைய வேண்டும். ...பேச்சுரிமையைப் பறிக்காதே, எழுத்துரிமையைத் தடுக்காதே, புத்தகங்களைப் பறிமுதல் செய்யாதே என்று போரிடுவோம்!” என்ற வீர முழக்கத்தோடு தனதுப் பேச்சை முடித்தார் அண்ணா.
 
கட்சித் தொடங்கி சுமார் பதினேழு ஆண்டுகள் கழித்து தேர்தலில் பெரும்பான்மை பெற்று, 1967 பெப்ருவரி முதல் 1969 பெப்ருவரி வரை முதல்வராகப் பணியாற்றி, அறிஞர் அண்ணா (1909-1969) அகாலமாக மரணமடைந்ததும், நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால் நாவலரைப் புறந்தள்ளி, எம்.ஜி.ஆர். போன்ற நெருக்கமான நண்பர்கள், முன்னணித் தலைவர்கள் உதவியுடன் கலைஞர் மு. கருணாநிதி முதல்வர் பதவியைப் பிடித்தார். “கருணாநிதியைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு பலசாலிக்குப் பின்னால் தனது பேதங்களை விட்டொழித்து தி.மு.க. ஒன்று சேர்ந்திருக்கிறது” என்று ஸ்டேட்ஸ்மேன் நாளிதழ் தலையங்கம் எழுதியது. பத்திரிகையாளர் ப. திருமாவேலன் குறிப்பிடுவது போல, “கருணாநிதி அளவுக்கு உயரம் தாண்டியவர்கள், தமிழக அரசியலில் இதுவரை எவரும் இல்லை. ஐந்து முறை தமிழ்நாட்டு முதல்வர், தொடர்ச்சியாக 11 முறை சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வென்றவர், 38 வயதில் தி.மு.க. பொருளாளர், 44 ஆண்டுகளாகத் தி.மு.க-வின் தலைவர் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம்.” நேரங்காலம் பார்க்காத உழைப்பு, ரத்த ஓட்டம் மொத்தமும் அரசியலாக ஓடிக் கொண்டிருப்பது, எதிர்ப்பையே பார்த்துப் பார்த்துப் பழகிய தன்மை, மனவலிமை, சுயசிந்தனை என கருணாநிதியின் பலங்களைப் பட்டியலிடுகிறார் திருமாவேலன்.
 
தேர்ந்த நிர்வாகியாக தனது பொறுப்பை துவங்கித் தொடர்ந்தவர், இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையைக் கடுமையாக எதிர்த்தார். சர்வாதிகாரத் தன்மை கொண்ட இந்திரா காந்தி, 1976-ம் ஆண்டு கருணாநிதி அரசை கவிழ்த்து, அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சர்க்காரியா கமிஷன் ஒன்றை நிறுவினார்.

லஞ்சம், ஊழல் போன்ற வார்த்தைகள் தமிழக இல்லங்களில், தெருவோர அளவளாவல்களில், தமிழ் குடிமைச் சமூகத்தில் வந்து புகுந்தன. சர்க்காரியா கமிஷன் தனது அறிக்கையில் கருணாநிதியும், அவரது அமைச்சர்களும் மிக நுட்பமாக, தடயங்கள் ஏதுமின்றி ஊழல் செய்திருப்பதாகக் குறிப்பிட்டு, அதனை “அறிவுபூர்வமான ஊழல்” (scientific corruption) என்றழைத்தது. வெற்றுப்பேச்சும், வாய்ப்பந்தலும், வாய்ச்சொல் வீரமும் மலிந்து கிடந்த தி.மு.க.வின் அரசியலில், கட்சிக் கொள்கைகள் கவர்ச்சி மாத்திரைகள் வடிவில் வழங்கப்பட்டன. “அண்ணா வழியில் அயராது உழைப்போம்,” “ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தேத் தீருவோம்,” “இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்,” “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” போன்ற கவர்ச்சி வாசகங்களின் பின்னால் எந்தவிதமான தெளிவான அரசியல் சித்தாந்தமோ, பொருளாதாரக் கோட்பாடோ, சமூக சிந்தனையோ இருக்கவில்லை. பேருந்து நிலையங்களுக்கும், சாலைகளுக்கும், கட்டிடங்களுக்கும் அண்ணா பெயரை சூட்டுவதுதான் விமரிசையாக நடந்தது.
 
“அண்ணா வழியில் அயராது உழைப்போம்” என்பது கருணாநிதி தி.மு.க.வால் முக்கிய கொள்கையாக வலியுறுத்தப்பட்டாலும், எது அண்ணா வழி, அதனுடைய சிறப்பம்சங்கள் என்ன, அந்த வழி தமிழகத்தை எங்கே இட்டுச் செல்லும் என்றெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எம்.ஜி.ஆரின் சக்திமிக்கப் புகழையும், முக்கியத்துவத்தையும் குறைக்கவும், அவருக்கு தொழிற்போட்டியை ஏற்படுத்தவும், தனது மகன் மு. க. முத்துவை முன்னிலைப்படுத்தவும் கருணாநிதி முயன்றபோது, அவரும் எம்.ஜி.ஆரும் மோதிக்கொண்டனர். தி.மு.க.விலிருந்து 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். விலக்கப்பட்டு தனிக்கட்சி தொடங்கினார். அவரது கட்சியின் கொள்கை என்ன என்று கேட்டபோது, எம்.ஜி.ஆர். “அண்ணாயிசம்” என்று பதிலளித்தார். அண்ணாயிசம் என்றால் என்ன என்று யாரும் அறிந்திருக்கவில்லை. இதை குழப்பம், வெறுமை என்ற அர்த்தங்களில் சித்தரித்து பல நகைச்சுவை உரையாடல்கள் தமிழகமெங்கும் பரவிக்கிடந்தன. எடுத்துக்காட்டாக ‘தங்கப்பதக்கம்’ திரைப்படத்தில் வைகைவளவன் என்ற சோ நடித்த கதாபாத்திரம் சொல்வார்: “அண்ணனுக்கெல்லாம் தம்பி, தம்பிகளுக்கெல்லாம் அண்ணன், அதுதான் அண்ணாயிசம்” என்று.
 
தமிழகத்து கருணாயிசம்
 
இன்றைய தமிழக அரசியலில் ஒரே ஒரு கொள்கைதான் கோலோச்சுகிறது. தமிழீழத்தையும் சேர்த்து சிந்தித்தால், ஒட்டுமொத்த தமிழின அரசியலில்கூட அதே கொள்கைதான் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அந்தக் கொள்கை கருணாயிசம். கருணாயிசம் என்றதும் தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி செய்து வருகிற சமரச அரசியலோ, தமிழீழத்தில் கருணா செய்து வருகிற துரோக அரசியலோ மட்டும் உங்கள் மனத்திரையில் எழுந்தால், கருணாயிசத்தை நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம். கருணாயிசம் என்பதை சுயநலவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் எனும் மும்மையைக் குறிக்கும் ஒற்றைப் பெயராகக் கொண்டால், தமிழினத்தின் பெரும்பான்மை அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் கருணாயிசத்தையே கொள்கையாகக் கொண்டிருப்பது புரியும்.
 
கால் நூற்றாண்டுக்கு முன்னால், என் வயதொத்த தமிழ் இளைஞர்கள் பலரும் கலைஞர் கருணாநிதி மீது மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் கொண்டிருந்தோம். எம்.ஜி.ஆர். தனிக்கட்சி துவங்கி கருணாநிதி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி எதிர்த்தபோதும், என் போன்றோர் தி.மு.க. அனுதாபிகளாகவே இருந்தோம். நாளடைவில் பெருந்தலைவர் காமராசர் சொன்னதுபோல, தி.மு.க., அ.தி.மு.க. எனும் இரண்டு கட்சிகளுமே “ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்” எனும் உண்மை புரிய ஆரம்பித்தது. இந்தக் கட்சிகள் கடைபிடித்த கருணாயிசம் கொள்கை புரியத் துவங்கியபோது, அவற்றிடமிருந்து மெதுவாக விலக ஆரம்பித்தோம். 1999 பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்து, கருணாநிதி வைதீகபூரியோடு கைகோர்த்தபோது, தனது சுயநலத்துக்காக மாறி மாறி காங்கிரசு- பா.ஜ.க. நட்பு என வடநாட்டு ஏகாதிபத்தியத்துக்குத் துணைபோனபோது அவர் மீதிருந்த நம்பிக்கை முழுவதுமாக விலகியது. ஈழத் தமிழர் பிரச்சினையில், குறிப்பாக 2008-2009 காலகட்டத்தில் நடந்த இனப்படுகொலையின்போது அவர் நடத்திய நாடகங்கள், துரோகங்கள், எதிர்ப்புக்களைப் பார்த்தபோது அவர் மீதிருந்த மரியாதையும் முற்றிலுமாக விலகியது. கருணாயிசம் ஆபத்தான கொள்கை மட்டுமல்ல, கடுமையாக எதிர்த்து ஒதுக்கப்பட வேண்டிய கொள்கையும்தான் என்பது தெளிவாகப் புரிந்தது.
 
முன்னர் குறிப்பிட்டதுபோல, கருணாயிசம் என்பது சுயநலவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. தன்னலம், தன் குடும்ப நலம், தன் இயக்கத் தோழர் நலம் மட்டுமே முதன்மைப் படுத்தப்படுவதுதான் கருணாயிசம். எவ்வளவோ ஆண்டு கால பொதுவாழ்வு, எத்தனையோ முறை மத்திய, மாநில அதிகாரம் என்றெல்லாம் பீற்றிக் கொண்டாலும், பெருமை பேசினாலும், பொதுமக்களுக்கு பயன்படாமல் முழுமையாக சுயநல அரசியல் நடத்துவதுதான் கருணாயிசம். பொதுமக்கள் ஒரு போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குப் போய் கண்ணியத்தோடு, மரியாதையோடு, யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல், யாராலும் இம்சைப் படுத்தப்படாமல் தன் வாகனத்துக்கு சாலை வரி கட்டக்கூட முடியாத நிர்வாகம்தான் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலுள்ள ஆட்டோ வாடகையைக்கூட ஒழுங்குபடுத்தாத பொதுவாழ்வுதான் இந்தத் தலைவர்களுடையது. “இந்தியா முழுக்க இதுதானே நிலை?” என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அங்கெல்லாம் யாரும் எழுபத்தைந்து ஆண்டு கால பொதுவாழ்வு என்று பெருமை பேசிக் கொள்வதில்லையே?
 
தேர்தலில் வென்றால் இந்தியனாய் தேசபக்தியில் திளைப்பதும், தேர்தலில் தோற்றால் தமிழனாய் உருப்பெறுவதும் கருணாயிசத்தின் பிழைப்புவாதம். அதிகார வர்க்கச் சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பற்றிய நினைவுகள் ஏதுமின்றி அமைதி காப்பதும், ஆதிக்க சக்திகள் இன்னல் கொடுத்தால், பார்ப்பனீயத்தை எதிர்ப்பதும் இந்தப் பிழைப்புவாதத்தின் தன்மை. மத்திய அரசோடு மோத வேண்டுமானால் மாநில சுயாட்சியை நினைவு கூறுவதும், ஈழத் தமிழர் பாசம் பொங்கி வழிவதும் இயல்பு. ஈழத் தமிழர் பிரச்சினைக்காகவோ, காவிரி நதிநீர் பிரச்சினைக்காகவோ, இவை போன்ற இதர முக்கிய பிரச்சினைகளுக்காகவோ தில்லிக்கு நேரில் போய் வாதாட, போராட விரும்பாத, முடியாத தலைவர், தனது குழந்தைகளுக்கு, பேரனுக்கு, தோழர்களுக்கு பதவிகள் பெறுவதற்காகப் போய் மன்றாடுவது பிழைப்புவாதத்தின் உச்சக்கட்டம். காரிய சித்திக்காக கழுதையின் காலையும் பிடிப்பதுதான் பிழைப்புவாதம்.
 
கொள்கைகள் இருப்பதாகச் சொல்லிக் கொள்வதும், அந்த கொள்கைகளுக்காக உறுதியாக நிற்காமலிருப்பதும், ஆனால் அப்படி இயங்குவதாக ஒரு போலித் தோற்றத்தை உருவாக்குவதும், உருட்டுவதும், புரட்டுவதும் கருணாயிசத்தின் முக்கியமான அம்சங்கள். நேரத்துக்கு, சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றிக் கொள்வதுதான் சந்தர்ப்பவாதம். இந்துத்துவக் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்வது, அவர்கள் அமைச்சரவையில் பங்கேற்று ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பது, அடுத்த தேர்தலில் மதவாதம் பற்றி வகுப்பு எடுப்பது, மதச்சார்பின்மை கொள்கைக்காகவே உயிர் வாழ்வதாக பொய் சொல்வது எல்லாம் சந்தர்ப்பவாதத்தின் உச்சகட்டம். ஈழம் அடைவதே எங்கள் தாகம் என்று இறுமாப்பு பேசுவதும், தில்லிக்கு பயந்து சென்னை ‘டெசோ’ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் “இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு” என்று மாற்றிக்கொள்வதும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடவே கூடாது என்று வெளியே முழங்குவது, ஆனால் நாடாளுமன்றத்தில் அதற்கு ஆதரவாக வாக்களிப்பது இன்னொரு சிறந்த உதாரணம்.
 
சுயநலவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் தவிர இன்னும் பல முக்கியமான குணாதிசயங்கள் கொண்டது கருணாயிசம்:

· தொலைதூர சிந்தனையோ, செயல்பாடோ இன்றி அண்மைக்கால வெற்றிகளை, பலன்களை மட்டுமே கருத்திற்கொண்டு அரசியல் நடத்துவது;

· தீங்கற்ற தமிழ்ச் சமுதாயம் அமைப்பதற்காய் முயல்வதைவிட, வெறும் தீயணைப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுவது;

· மக்கள் பிரச்சினைகளில் தீர்க்கமான நிலைப்பாடு எடுக்காமல், நிரந்தரத் தீர்வுக்கு முயலாமல், கடிதம் எழுதுவது, அறிக்கை விடுவது, நீட்டி முழக்குவது என வறட்டு அரசியல் மட்டுமே செய்வது;

· முக்கியமான பிரச்சினைகளிலிருந்து மக்கள் கவனத்தை முக்கியமற்ற விடயங்களுக்கு திசை திருப்புவது;

· தனது திறமைகளை, சாதனைகளை “பனைத் துணையாய்” கொண்டாடுவது, எதிர்கட்சித் தலைவர்களின் திறமைகளை, சாதனைகளை “தினைத் துணையாய்க்” கொள்வது;

· மானம், ரோசம், வெட்கம் என எதுவுமே இல்லாமல் வெறும் வார்த்தைகளாலேயே உருட்டுவது; இதுதான் அரசியல் சாணக்கியத்தனம் என்று நியாயப்படுத்துவது;

· மக்கள் மீதும், மற்றக் கட்சிகள் மீதும் திடீர் பாசம், திடீர் மறதி எழுந்து மறைவது;

· மலர்க்கிரீடம், வீரவாள், தேர்பவனி, பாராட்டு விழா, சினிமாக்காரர் நிகழ்வுகள் என புகழ் போதையில் திளைப்பது;

· கட்டிடங்கள் கட்டுவது, நினைவுச் சின்னங்கள் எழுப்புவது, தன் பெயரைப் பொறிப்பது என ஒரு வரலாற்றுச் சிந்தையோடும், காலாதீத உணர்வோடும் மட்டுமே இயங்குவது.

இந்த கருணாயிசத்தின் அம்சங்களைப் பற்றி எழுதினால், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
 
இங்கே ஒரு குறிப்பிட்டத் தலைவரை மட்டுமோ, அல்லது அவரது கட்சியை மட்டுமோ பழிக்கவில்லை. முன்னரே குறிப்பிட்டது போல, பெரும்பாலான தலைவர்கள், கட்சிகள் கருணாயிசத்தைத்தான் கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். கருணாயிசம்தான் இன்றையத் தமிழகத்தின் முக்கியமான அரசியல் கொள்கையாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தமது தேவைக்கேற்றபடி, திறமைக்கேற்றபடி அதை மாற்றியமைத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. “காமராஜ் ஆட்சியை அமைப்போம்” என்கிற காங்கிரசுக்காரர்களும், அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்சிகளும், அரசியலில் புதிதாக அடியெடுத்துவைக்கும் பல புதுமுகங்களும் கருணாயிசத்தைத்தான் கடைபிடிக்கிறார்கள். இந்த கொள்கை அத்திவாரத்தை அமைத்துக் கொடுத்தவர் தமிழக அரசியலில் கடந்த அரை நூற்றாண்டு காலம் தனிப்பெரும் சக்தியாக வலம் வரும் கலைஞர் கருணாநிதிதான்.
 
தமிழீழ கருணாயிசம்
 
தமிழகத்து கருணாயிசம் இப்படி வேலை செய்தால், தமிழீழ கருணாயிசம் துரோகத்தின் உச்சத்துக்கே செல்கிறது. இந்த துரோக கருணாயிசம் மனித வரலாற்றில் பல்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. இயேசு நாதரை கைது செய்யத் திட்டமிட்ட ரோமாபுரியின் உயர்பூசாரிகள் அவர் யாரென்று தெரியாமால் திணறிய நிலையில் 30 வெள்ளிக் காசுகளை கூலியாகப் பெற்றுக்கொண்டு இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தார் யூதாஸ். பண ஆசையினால்தான் யூதாஸ் அந்த துரோகத்தைச் செய்ததாகவும், தான் எதிர்பார்த்தபடி ரோமப் பேரரசின் ஆட்சியை இயேசு நாதர் கவிழ்க்காததால் யூதாஸ் கோபம் கொண்டிருந்ததால்தான் காட்டிக்கொடுத்தார் என்றும், கடவுளின் திட்டத்தை நிறைவேற்ற இயேசுதான் தன்னைக் கண்டுணர உதவும்படி கேட்டுக்கொண்டார் என்றும் பல புரிதல்கள், விவாதங்கள் நடக்கின்றன. ஆனாலும் யூதாஸ் காட்டிக் கொடுத்தவர் என்பதை ஒட்டுமொத்த உலகமே ஒத்துக்கொள்கிறது.
 
தமிழ் நாட்டு கலாச்சாரத்தில் யூதாஸ் போன்ற பழிச்சொல் பெற்றவர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த வெங்கடேஸ்வர எட்டப்பன். 1780ஆம் ஆண்டு முதல் எட்டயபுரம் குடும்பத்தார் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் நல்லுறவு பூண்டு, சிறப்பு சலுகைகளைப் பெற்று வந்தனர்; அவ்வப்போது அவர்களுக்கு உளவுத் தகவல்களையும், படையாட்களையும் கொடுத்து வந்தனர். ஆனால் உண்மையில் எட்டப்பன் காட்டிக் கொடுக்கிறவர் அல்ல என்றும், அதிகாரத்தில் இருந்தபோது ஏராளமான மக்கள் நலப் பணிகளை செய்தார், குளங்களை வெட்டி தண்ணீர் வசதி செய்தார், பல கவிஞர்களை, புலவர்களை பாதுகாத்தார் என்றும் சிலர் வாதிடுகின்றனர். மா.பொ.சி. எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம்தான் எட்டப்பனை மோசமானவராக சித்தரித்தது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உண்மையில் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவர் புதுக்கோட்டை விஜயரகுநாதத் தொண்டைமான்தான் என்கின்றனர் அவர்கள்.
 
துரோகம் என்பதற்கு தமிழ் கலாச்சாரத்தில் பல சொல்லாடல்கள் உள்ளன; நம்பிக்கை துரோகம், முதுகில் குத்துவது, (வளர்த்த கடா) மார்பில் பாய்வது, உறவாடிக் கெடுப்பது, காட்டிக் கொடுப்பது என்பன. ஒருவருடன் நெருங்கிப் பழகி, நம்பிக்கையைப் பெற்று, பின்னர் அந்த உறவுக்கு உண்மையாக இல்லாமல், எதிராக நடப்பதுதான் துரோகம். இந்த துரோகம் எந்த உறவிலும் நடக்கலாம். என்னை/எம்மை இதனால் இவர் காப்பார் என்று கருதிக் கொண்டிருக்கும்போது, அந்த எதிர்பார்ப்புக்கு நேர் எதிராக நடந்து கேடு விளைவிப்பதுதான் துரோகம். நட்பு, திருமணம், பொதுவாழ்வு போன்ற உறவுகளில் தனிமையை மதிப்பது, “உடுக்கை இழந்தவன் கை” போல உதவுவது, பொது வெளியில் ஒருவரையொருவர் குறை சொல்லாமல் இருப்பது, இரகசியம் காப்பது, பிறரிடம் அவற்றைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது போன்றவை முக்கியமான கூறுகள். இவற்றில் ஒன்றையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ முறிப்பது துரோகமாகக் கொள்ளப்படுகிறது.
 
யூதாஸ், எட்டப்பன் எனும் அசிங்கமான வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் கருணா என்ற முரளிதரன். கிழக்கு மாகாணம் பட்டிகொல மாவட்டம் கிரண் எனும் கிராமத்தில் பிறந்தவர் இந்த கருணா. 1983-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் சேர்ந்து, பல போர் நடவடிக்கைகளை முன்னெடுத்து, 1990-ஆம் ஆண்டு 900 சிங்கள, முஸ்லீம் காவல்துறை அதிகாரிகளைக் கொன்று, கிழக்கு மாகாணத்தின் தலைமைத் தளபதியாக உயர்ந்தார். தலைவர் பிரபாகரனுக்கு மெய்க்காப்பாளராக இருந்து, புலிகளின் இராணுவப் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் கருணா. விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாண மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டி 2004 மார்ச் மாதம் இயக்கத்திலிருந்து வெளியேறினார். தீவிரவாதத்தைக் கைவிடுவதாகவும், சனநாயக மைய நீரோட்டத்தில் கலப்பதாகவும் சொன்னார். ஆனால் அவர் பணம் கையாடல் செய்ததாகவும், ஒழுக்கமின்றி நடந்ததாகவும் விடுதலைப் புலிகளின் உளவுத்துறை கண்டுபிடித்து அவரை நெருங்கிக்கொண்டிருந்ததுதான் காரணம் என்று இயக்கம் தெரிவித்தது. கருணா தரப்புக்கும் புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து, முன்னவர் பிடித்து வைத்திருந்த இடங்களை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக புலிகள் அறிவித்தனர். எனினும் சில நூறுபேர் கொண்ட படையோடு இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தினார் கருணா. 2006-ஆம் ஆண்டு கருணா படையின் உதவியோடு இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகளை வெளியேற்ற இலங்கை இராணுவம் ஒரு தாக்குதலைத் தொடங்கி, 2007 யூலை மாதம் அதில் வெற்றியும் பெற்றது.
 
இலங்கை அரசின் உதவியுடன் திருட்டுத்தனமாக வெளிநாட்டு தூதர்களால் பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டு பெற்று, கருணா லண்டனுக்குச் சென்றபோது 2007 நவம்பர் 2-ஆம் நாளன்று பிரிட்டனில் கைது செய்யப்பட்டார். அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கொத்தபய ராஜபக்சே அந்த கடவுச்சீட்டைத் தந்ததாக கருணா நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டார். 2008 சனவரி 25 அன்று ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கருணா, யூலை 3 அன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அவரது போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் கோரிக்கை வைத்தும், பிரிட்டிஷ் அரசு அதை ஏற்கவில்லை. இலங்கைக்குத் திரும்பியதும் அரசியலில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆன கருணா, ராஜபக்சே அமைச்சரவையில் மீள்குடியேற்றத் துறை துணை அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஈழத் தமிழர் இயக்கங்களின் மனித உரிமை மீறல் பற்றி விசாரணை கோரும் கருணா, அதன் மூலம் தனது தலையை தற்காத்துக்கொள்ள முயன்று வருகிறார்.
 
கருணாயிசத்தை இனம் காண்போம்
 
நேர்கோடு ஒன்று வரைந்து முக்கியமான தமிழ் அரசியல் கட்சிகளை அவற்றின் கொள்கைகள் அடிப்படையில் அந்த நேர்கோட்டில் அடையாளப்படுத்துங்கள். முற்போக்குச் சிந்தனை, சமத்துவம், சனநாயகம், சமூக நீதி, பெண் விடுதலை, சாதி-மத மறுப்பு, கருத்துச் சுதந்திரம், மனித உரிமை போன்ற கொள்கைகள் கொண்ட இயக்கங்களை இடது கோடியில் நிறுவலாம். சோசலிசம், கம்யூனிசம் பேசும், உண்மையாகவேப் பேணும் இந்தக் கட்சிகளை இடது சாரிகள் (Leftists) எனக் குறிப்பிடுகிறோம்.
 
“சமூகம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது; எந்த மாற்றத்துக்கும் இங்கே இப்போது தேவையே இல்லையே” என்று வாதிட்டு தற்போதைய சமூக நிலையை, அவலங்களை அப்படியே தக்கவைத்துக் கொள்ள நினைக்கும், பாடுபடும் இயக்கங்களை வலது கோடியில் குறிக்கலாம். பழமைவாதிகள், மதவாதிகள், சாதி வெறியர்கள், வெறுப்பு-கோபம் போன்ற கொடும் உணர்வுகளின் அடிப்படையில் வன்முறை அரசியல் நடத்துபவர்கள், ஃபாசிஸ்டுகள் போன்றவர்களை வலது சாரிகள் (Rightists) என்றழைக்கிறோம்.
 
அங்கேயும் இல்லாமல், இங்கேயும் இல்லாமல் மதிற்மேல் பூனையாக இயங்கும் இயக்கங்களை நேர்கோட்டின் மத்தியில் அடையாளப்படுத்தலாம். அவர்களை மையவாதிகள் (Centrists) என்கிறோம். இவர்களில் பெரும்பாலோர் முற்போக்கு கொள்கைகளைப் பேசிக்கொண்டு, பிற்போக்கு செயல்களில் ஈடுபடும் குழப்பவாதிகள், சுயநலவாதிகள், பிழைப்புவாதிகள், சந்தர்ப்பவாதிகள்.
 
இந்த அரசியல் நேர்கோட்டை உற்றுநோக்கினால், இடது பாதியில் வெகு குறைவான சக்திகள், தலைவர்கள் இடம்பெறுவதையும், வலது பாதியில் (அதாவது மையப் புள்ளியிலிருந்து வலதுகோடி வரை) பெரும் கூட்டமேக் குழுமிக்கிடப்பதையும் காணலாம். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலானோர் கருணாயிசத்தைத்தான் கொள்கையாகக் கொள்கின்றனர். ஆகஸ்ட் 17, 2013 அன்று சென்னை பல்கலைக்கழகத்தின் 155-வது பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஜெயலலிதா சொன்னார்: “ஒரு வருடத்துக்கு முன்கூட்டி நீங்கள் சிந்தித்தால், நெல் பயிரிடுங்கள்; பத்து வருடங்களுக்கு முன்கூட்டி நீங்கள் சிந்தித்தால், மரங்களை நடுங்கள்; நூறு வருடங்களுக்கு முன்கூட்டி நீங்கள் சிந்தித்தால், மக்களைக் கற்பியுங்கள் என்பது ஒரு சீனப் பழமொழி. எனது அரசு இவை மூன்றையுமே செய்திருக்கிறது. இப்போதும், இனிவரும் ஆண்டுகளிலும், எதிர்காலத்திலும் நல்லதோர் அரசை தருவதற்கும், தலைமுறைகள் பேசும் சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கும் நான் உறுதி பூண்டிருக்கிறேன்.” அப்படியே நடந்து கொண்டு உண்மையிலேயே ஒரு சமூக-பொருளாதார-அரசியல்-கலாச்சார மாற்றத்தை சாதித்துக் காட்டினால், அவர் கட்சிக்காரர்கள் அதனை “அம்மாயிசம்” என்ற கொள்கையாகவே எதிர்காலத்தில் முன்வைக்கலாம். நேர் எதிராக அடக்குமுறைகள், அவதூறு வழக்குகள், என்கவுண்டர்கள், ‘தலைவா’ வகை விவகாரங்கள் எனத் தொடர்ந்தால், இது அம்மா வகை ஃபாசிசம் எனக்கொண்டு அவரது எதிரிகள் “அம்மாசிசம்” என்றும் அழைக்க நேரலாம்.
 
ஆனால் இப்போதைக்கு தமிழினத்தின் மீது கருணாயிசம்தான் கோலோச்சுக்கிறது. இவர்களின் கருணாயிசம் நம்மை கரைசேர்க்கும் என்று நம்புவது மணல் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலத்தான். தமிழினம் மிக மோசமான நிலையில் இருப்பதால், புது அரசியல் ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்; புதுவகை அரசியல் ஊட்டச்சத்து புகட்டப்பட வேண்டும்; புத்தம்புது அரசியல் பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்; புதியதோர் அரசியல் கலாச்சாரம் உருவாக்கப்பட வேண்டும். பொருளாதாரப் புரிதல், அரசியல் தத்துவங்களை-விழுமியங்களை அறிதல், அரசுக் கொள்கைகளை விவாதித்தல் என ஓர் உயர்நிலை அரசியல் நடத்தப்பட வேண்டும். சினிமாத் திரையில் தலைவனைத் தேடி, அரசியலில் ஹீரோவைத் தேடி சீரழியாது, நடிகர்-தலைவர்களையும், தலைவர்-நடிகர்களையும் வீட்டுக்கு அனுப்பி ஒரு புதிய கலாச்சார மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
 
காமராசரைப் பற்றி புகழ்ந்த கவிஞர் கண்ணதாசன் இப்படிப் பாடினார்:
அந்த மனிதனை அழையுங்கள் உங்கள்
அன்னைக் கோவிலுக் கவனோர் கோபுரம்
...
அந்த மனிதனை அழையுங்கள் உங்கள்
அடுத்த கட்டத்தை அழகுற நடத்த.
 
ஆனால் இன்றைய நிலையில், தமிழகமானாலும் சரி, தமிழீழமானாலும் சரி, ஒரே ஒரு தலைவன் வருவான், ஒரே ஒரு கொள்கை தருவான், நம்மையெல்லாம் சுபிட்சத்துக்கு அழைத்துச் செல்வான் என்று எதிர்பார்ப்பது பெரும் மடமை. தமிழினத்தின் இன்றைய அரசியல் இயலாமைக்குத் தீர்வு “அந்த மனிதனைப்” போன்ற ஆயிரமாயிரம் மனிதரை அடையாளம் காண்பதும், ஆங்காங்கேக்கூடி அளவளாவி ஓர் ஆன்ம சுயபரிசோதனையில் ஈடுபடுவதும், அனைவருமாக சாதி-மதம் கடந்து ஒருவரையொருவர் அரவணைத்துக் கொண்டு நம் இலக்கு நோக்கி நடப்பதும்தான்.
 
உதவிய நூல்கள், கட்டுரைகள்:

[1] டி. எம். பார்த்தசாரதி, தி. மு. க. வரலாறு. சென்னை: பாரதி நிலையம், 1986. பக்கங்கள்: 85-86, 88-89, 92, 109-110, 112, 115.
[2] ப. திருமாவேலன், “கருணாநிதி 90: வரலாறும், தகராறும்!” ஆனந்த விகடன், 5.6.2013.
[3] பல இணைய தளங்கள்.

- சுப. உதயகுமார், இடிந்தகரை

Pin It